Friday, December 19, 2014

அப்பா வேணாம்ப்பா - நிச்சயம் வேணும்.

Share |
திரையுலகின் மீது வெறி ஏதும் இல்லாவிட்டாலும், ஒவ்வொரு வாரமும் என்ன என்ன படங்கள் வருகிறது என பார்த்து வருபவன்தான் நான். ஆனால் எப்படியோ இப்படி ஒரு படம் வந்தது தெரியாமல் போய்விட்டது. சில சமயம் ஏதோ ஒரு படம் தெரியாமல் போயிருந்தால் அதற்காக பெரிதாக அலட்டிக்கொண்டது கிடையாது. ஆனால் இந்த படத்தை நான் பார்க்காமல் இருந்திருந்தால் நிச்சயம் வருத்தப்பட்டிருப்பேன். அந்தப் படம் - "அப்பா வேணாம்ப்பா."

இரண்டு தினங்களுக்கு முன் நண்பர் ஜெய் 'குடி' சம்பந்தமான படம் என்றும், வெள்ளிக்கிழமை மீண்டும் வெளியிடப்படுகிறது என்று  சொல்லியிருந்தது கூட சரியாக இன்று நினைவில் இல்லை. ஆனால் அப்பொழுதே 'ட்ரெயிலர்' பார்த்தேன் - கருத்துமிக்க படமாக இருக்கும் என தோன்றியது. காலையில் அண்ணன் இளங்கோ அழைத்தபோதுதான் நினைவு வந்து சென்றேன். சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் முயற்சியால் ஓரளவுக்கு ஆட்கள் என்பதை விட ஆர்வலர்கள் வந்திருந்தார்கள். இயக்குனர் வெங்கட்ரமணனும், இசையமைப்பாளர் கண்ணனும் வெளியேதான் காத்திருந்தார்கள்.


இது போன்ற பெரும்பாலான படங்களில் எப்படியும் கதைக்கு வருவதற்குள் ஒரு அறிமுக பாடல், 2 தேவையற்ற டூயட், குறைந்தது 1 சண்டை, மீதம் கதாநாயகனும் அவரின் 4 நண்பர்களும் செய்யும் காமெடி என்று முடிந்து இடைவெளியின் போது, இரண்டாம் பாதியில் பெரிய கதை இருப்பதுபோல் 'பெப்' கொடுப்பார்கள். கமர்ஷியம் சமரசம் என்று நாமும் அதனை ஏற்றுக்கொள்வோம்.இரண்டாம் பாதியில் கதை வரும். படம் முடியும்.

அப்பா..வேணாம்ப்பா நிச்சயம் அப்படிப்பட்ட பலமில்லை. ஒரு துளி கூட சமரசம் ஆகாத படம் இது. இப்படத்தில் வரும் சம்பவங்கள் அனைத்தும் உண்மையே என்று ஒவ்வொரு காட்சியும் நம் சமூகத்தின் கன்னத்தில் அறைகிறது. முதல் காட்சியிலிருந்தே படம் துவங்குகிறது. பேருந்து நிலையத்தில், நம் வாழ்க்கையில் நாம் ஒரு முறையாவது பார்த்த காட்சி அது - ஒரு குடும்பமோ அல்லது ஒரு மனைவியோ பணம் சில்லறை வாங்க சென்ற கணவனுக்காக காத்திருக்கும் காட்சி. சில்லறை வாங்க சென்றவன் மதுக்கடைக்கு செல்கிறான். குடியோ குடி என குடிக்கிறான். வீட்டிற்கு வந்து உங்கள போய் நான் பஸ் ஸ்டாண்டில் தேடினேன், நீங்க ஏன் வீட்டிற்கு வந்தீங்க என்று இரவில் வந்து குடிகாரன் பாசை பேசுகிறான்.

காலை முதல் இரவு வரை குடி ஒன்றையே செய்து வரும் நாயகன்; தினம் தினம் நம் கணவன் திருந்திவிடுவான் என நம்பிக்கை கொண்டு அவனுடன் வாழும் நாயகி; அவர்களின் மூத்த பெண் மற்றும் இளைய மகன்; அந்த குடும்பத்திற்கு உதவி செய்யும் நாயகியின் அண்ணன் - இவர்கள்தான் கதாபாத்திரங்கள்.


குடிகாரனின் அத்தனை சேட்டைகளையும் (தன் நீண்ட நாள் நண்பன் வேறு வழியில்லாமல் சரக்கு வாங்கித் தர அவனையே சைட்-டிஷ்ஷாக தொட்டுக்கொள்வது ஒரு சிறு துளி) திரையில் கொண்டுவந்துள்ளார் இயக்குனர். அதே போல் குடிக்காமல் அவன் படும் சிரமங்களையும் (காலை எழுந்தவுடன் அவனுக்கு ஏற்படும் படபடப்பு) மிக நேர்த்தியாக காண்பித்துள்ளார். குடி என்பது ஒரு பழக்கத்திலிருந்து அவனுக்கு நோயாக மாற, மாற அவனுக்கு ஏற்படும் மறதி (Black-out), அவனுக்கு ஏற்படும் பயம், அவனுக்கு ஏற்படும் சந்தேகம் எல்லாமே அநாசயமாக வெளிப்பட்டுள்ளது. அவனுடைய தினசரி வேலை குடி என்றாலும், எந்த ஒரு காட்சியும் 'ரிபீட்' ஆகவில்லை. எந்த ஒரு காட்சியும் நம்மை சளிப்படையவைக்கவில்லை.

குடி நோய் முற்றி வீதிகளில் அவன் புரள, அவன் வெளியே சென்று அவமானப்பட வேண்டாம் என முடிவெடுத்து வீட்டிலேயே சரக்கு வாங்கி தரும் மனைவியை குடிக்க சொல்லி கட்டாயப்படுத்தி, தொடர்ந்து மனிதப் பண்புகள் அனைத்தையும் இழக்கிறான். தாங்க முடியாத மனைவி குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

மேலும் குடிக்கிறான். தன் மானம் இழந்து ஒரு தெரு நாயை விட கேவலமாக ஆகிறான். நோய் முற்றி இரத்த வாந்தி எடுக்கிறான். இடைவேளை.

இரண்டாம் பாதி - குடி நோயால் முற்றியவர்களுக்கான ஒரு வகுப்பு. குடி நோயிலிருந்து தப்பிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு பள்ளிகூடமாக மாறுகிறது. ஒரு குடி நோயாளி பாதி திருந்திய பின் அவனுக்கு தேவையான ஆதரவை, அது கிடைக்காமல் ஏமாறும்போது அவன் எடுக்கும் முடிவை, குடியை ஒழிப்பது என்பது முதலில் சிரமமாக துவங்கி பின்னர் எப்படி எளிமையானது என்பதை விளக்குகிறது. சுபம்.

நாயகன் - இயக்குனர் வெங்கட்ரமணன் நாயகனாக நடித்துள்ளார் என்பதை விட வாழ்ந்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். சாக்கடையில் புரள்வதை பற்றியோ அல்லது குடிகாரனாக உள்ளாடையோடு அழைவது பற்றியோ கவலைகொள்ளாமல் ஒரு மாபெரும் சமூக பணிக்காக அவரை அர்ப்பணித்துள்ளார். அதே சமயம் குடிகாரனாக அவர் படம் முடுக்க பேசும் தெளிவற்ற பேச்சு, சபரிமலைக்கு மாலை போட்டதும் பேசும் தெளிவான பேச்சு என  பிரமாதப்படுத்துகிறார். உங்கள் சமூக அக்கறைக்காக கோடி வந்தனங்கள் அய்யா.

நாயகி - இது போன்ற கதாபாத்திரங்கள் தேவையிருந்தாலும் சில நேரங்களில் அதிகமாக அழுது அவர்களே ஒரு நோயாளி போன்று இருப்பார்கள். ஆனால் இவர் ஒரு நடுத்தர வர்க்கத்து, 2 குழந்தைகளின் தாய் என்ன செய்வாரோ அதை சிறப்பாக செய்துள்ளார்.

இரண்டாம் பாதியில் வரும் டி.டி.கே மருத்துவர்களும் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர். 

பாடல் வரிகள் - 'விதியே', 'எங்கேதான் வாழ்வது' சிறப்பு.

இசை - கண்ணன். பிண்ணனி இசையை விட பாடல்கள் மிகச் சிறப்பாக இருந்தது. குடி பாடலில் குதூகலித்து, சோக பாடலில் நம்மையும் வருத்தம்கொள்ள செய்கிறது.

ஒளிப்பதிவு - தேவையான காட்சிகளை தேவையான அளவு படம்பிடித்திருந்தது.

இயக்கம் மற்றும் இதர பணிகள் செய்த வெங்கட்ரமணன் - வாழ்க்கையில் 10 படங்கள் எடுத்து வணிக ரீதியாக வெற்றியோ/தோல்வியோ அடைவதை விட, சமூகத்திற்காக இது போன்ற ஒரே ஒரு படம் எடுத்து தன் காலம் வரை மார்தட்டிகொள்ளலாம். வரலாற்றில் நிச்சயம் உங்களுக்கு இரு இடம் உண்டு.

//11.45க்கு உள்ளே சென்றபோது டிக்கெட் கிழிக்க வேண்டிய பையன் 12 மணிக்குதான் படம், எல்லோரும் வெளியே போங்க என (இயக்குனர் உட்பட - அவர் இயக்குனர் என தெரிந்திருக்க வாய்ப்பில்லை) சொன்னான். அவன் மட்டும் இல்லை திரைத்துறையும் கூட இது போன்ற நல்ல திரைப்படங்களை, இயக்குனர்களை கண்டுகொள்வதில்லை.வெளியே துறத்தவே பார்க்கிறது

இந்த நல்ல படத்தை வாங்க ஆள் இல்லாமல் இயக்குனரே திரையரங்குகளை வாடகைக்கு எடுத்துள்ளார். முதல் வாரம் அண்ணா மற்றும் எம்.எம். திரையரங்கத்திலும், அடுத்த வார வியாழன் (டிசம்பர் 25) வரை விருகம்பாக்கம் தேவி கருமாரி திரையரங்கத்தில் - http://www.devikarumaritheatres.com/ பகல் காட்சி (11.30) மட்டும் எடுக்கப்பட்டுள்ளது.

இது போன்ற நல்ல திரைப்படங்கள் ஜெயிக்க வேண்டும் என நினைத்தால் நீங்கள் செய்ய வேண்டியது இதுவே - வரும் வியாழன் வரை தேவி கருமாரியில் பகல் காட்சி 'அரங்கள் நிறைந்த காட்சியாக' இருக்க வேண்டும். நம்மால் சாத்தியமா?//