Showing posts with label திரைப்படம். Show all posts
Showing posts with label திரைப்படம். Show all posts

Thursday, December 14, 2017

அருவி - அன்பு உடலுக்கு ஆயுள் அதிகம் (No spoilers)

Share |
திரைப்படங்கள் நம்மை என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பினால் இங்கு நூற்றுக்கணக்கான பதில்கள் வரும். அந்த நூற்றுக்கணக்கில் ஒரு பதிலை கூட பூர்த்தி செய்யாது போன படங்கள் நிறைய உண்டு. எந்த வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் போய் நம்மை சலனப்படுத்திய படங்கள் உண்டு. திரைப்படம் மீதான நம்பிக்கையிலோ (சர்வதேச அங்கீகாரங்கள்) அல்லது அதன் இயக்குனர் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் சென்று, இதுவரை இயக்கிய எல்லா திரைப்படங்களிலும் அந்த நம்பிக்கையை காப்பாற்றியவர் கார்த்திக் சுப்புராஜ். அதில் ஒரு படி மேல் சென்றுவிட்டதாகவே அருவி திரைப்படத்தை உணர்கிறேன். படம் எப்படி இருந்தது என்ற கேள்விக்கு என்னுடைய மனதில் உதித்த உடனடி கேள்வி - எப்படி இது போன்ற ஒரு கதையை யோசிக்க முடியும்? சேது வந்த சமயம் இது போல் நான் யோசித்ததுண்டு. சேது படத்தின் ஓட்டப்படி முதல் பாதிதான் நமக்கு முதல் என்று நினைக்க, இரண்டாம் பாதியின் அடிப்படையில் முதல் பாதி வடிவமைக்கப்பட்டது என்பது பின்னர் தெரிந்துகொண்டேன்.
அருவியும் அப்படி இருக்கக்கூடும். ஆனால் அந்த அடிப்படை புள்ளியின் முன்னும், பின்னும் மிக நேர்த்தியாக கையாளப்பட்டுள்ளது. அந்த முன் - இசையாலும், காட்சிகளாலும் - (குறிப்பாக அருவி அப்பாவின் அன்பு) கோர்க்கப்பட்டு, ஒரு நொடி கூட அதீதமில்லாது கொண்டு செல்லப்பட்டுள்ளது. அந்த அடிப்படை புள்ளி திரையில் விரிந்து, அதற்கு அடுத்தடுத்த நிகழ்வுகளால் பல அதிர்வுகளை உருவாக்கி இடைவெளி தருணத்தில், உண்மையிலேயே உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்பதுபோல், இடைவெளி என்னும் Interval Blockக்கிற்கு திரையரங்கு கைத்தட்டுகிறது. சமீப கால படங்களில் 'Interval Block'க்கிற்கு என மிகுந்த சிரமங்கள் எடுத்துக்கொண்டு பின்னர் மொக்கையாகிபோன படங்களும், சுவாரஸ்யத்தை கூட்டி, 'Intervalன்னா இப்படியில்ல் இருக்கணும்' என்று சொல்லவைத்த ஜிகர்தண்டா போன்ற படங்களும் உண்டு. ஆனால் எனக்கு தெரிந்தவரை இறுதியில் வரும் கைத்தட்டல்கள் Intervalலில் நான் கண்டதில்லை. ஆனால் அந்த அடிப்படை புள்ளியும் ஒரு குறியீடுதான். அந்த குறியீட்டைகொண்டு பல கேள்விகளை எழுப்ப முற்படும் படம் இந்த அருவி. அந்த புள்ளிதான் 'குளிரும், இங்கேயிருந்தே பார்க்கறேன்' என்று சொல்கிறவர்களைகூட அருவிக்குள் இழுத்து செல்கிறது. எங்கோ துவங்கி ஒரு மலையின் மீதேறி, அருவியாக உருமாறியபின் அடுத்த துளி எங்கு விழும் என்று எப்படி கணிக்க முடியாதோ, அப்படி விரியும் ஒவ்வொரு காட்சியும் கணிக்க முடியாது செல்கிறது. அருவியின் வேகம் வசனங்களாய் கொட்டும்போது, அருவியில் வார்த்தைகளிலேயே, 'இந்த குப்பை வாழ்க்கைக்கு, நாம நாக்க பிடுங்கிட்டு சாகலாம்' என்று தோன்றினாலும், அதே அருவி வாழ்க்கைகாக ஏங்கும் தருணங்கள் அழகிய முரண். உண்மையில் மனிதன் என்னும் சிக்கலான நாம் இதைத்தானே தினம் தினம் செய்கிறோம். சுயநலமாக சில சமயம், சிந்தனையற்று சில சமயம் என வாழ்க்கை ஓட்டத்தில் மீது லாவகமாக பழிபோட்டு எதை வேண்டுமானாலும் செய்ய துணியும் நாம்தான், ஆசுவாசப்படுத்தி சிந்திக்கும் தருணங்களில் வெட்கப்படுகிறோம். இல்லை நம்மையே நாம் திரையில் பார்க்கும்போது தலைகுனிகிறோம். இந்த அருவியில் நம்மை நாம் நிச்சயம் காண்போம். அந்த புரிதலுக்கு பின் வெளிப்படும் அந்த சொல்ல முடியாத உணர்வு எது? அன்புதானே?. அந்த அன்புதான் இந்த அருவியின் அடிநாதம். அந்த அன்பு ஏற்படுத்தும் மனமாற்றம் கூட கண்களின் அருவியாகத்தானே வெளிப்படும். நம் கண்களை விட வேறு எந்த உறுப்பால் அன்பை அதிகம் வெளிப்படுத்தமுடியும்? "இதுவே வாழ்க்கை வலியும் கூட அனுபவம் இன்னும் கேட்டால் வரங்கள் கூட வழங்கி அருளும் அன்பு உடலுக்கு ஆயுள் அதிகம்" ஏற்கனவே பல விமர்சனங்களில் சொல்லப்பட்டிருந்தாலும், மீண்டும் மீண்டும் நாம் சொல்லத்தான் வேண்டும். ஒரு விருது விழாவில் சிறந்த நடிகை என்று சொல்லிவிட்டால், பிற விருதுகள் கொடுக்காமலா போய்விடுவார்கள். பெயரில் 'தீ'கொண்டு தண்ணீர்போல வாழ்ந்துள்ளார் அதிதீ. நடித்திருக்கும் எல்லோருமே இனி இயக்கப்படும் திரைப்படங்களில் அதிக வாய்ப்புகள் பெறக்கூடியவர்கள். இசை - படத்தின் மிகப் பெரிய பலம். ஒரு பாடல் கூட தேவையற்றது என்று சொல்ல முடியாத அளவிற்கு இசையும், வரிகளும் அது இடம்பெற்ற இடங்களும். ஒளிப்பதிவு குறித்த அறிவெல்லாம் நமக்கு இல்லையென்றாலும், இயற்கை, தொலைக்காட்சி நிகழ்ச்சி, காவல் நிலையம் என நம் வாழ்வில் நம் கண்முன்னே கண்டவையெல்லாம சரியாகவே இருந்தது. தயாரிப்பு - நல்ல கதைகளைகொண்ட, வளரத் துடிக்கும் இளைஞர்கள் அணுக வேண்டிய இடம் DreamWarrior Pictures. இயக்கம்
1. இறப்பு குறித்த பயம் நமக்கு எப்பொழுது வரும் என்று நீங்கள் சிந்தித்துண்டா? ஒரு மருத்துவமனையில் நம் பக்கத்து படுக்கையில் இருப்பவர் இறந்துபோனால், அடுத்த நொடி அந்த பயம் நம்மை பற்றிகொள்ளும். ஒன்று இறக்க வேண்டும் இல்லையேல் அந்த மருத்துவமனையைவிட்டு ஓட வேண்டும் என்று தோன்றும். 2. இன்று பரவலாக பேசப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று எப்படி நடக்கிறது எனும் காட்சிகள். காட்சி ஊடகம் குறித்து ஓரளவு தெரிந்தவன் என்ற அடிப்படையில், 'கவண்' போன்று படத்தை பார்த்து படம் எடுக்காமல், உண்மையிலேயே யதார்த்தமாக இன்று என்ன நடக்கிறது என்று சொல்லிய இடம். இது சில உதாரணங்கள். இப்படி ஒவ்வொரு காட்சியிலும் 'detailing' மூலம் அசத்துகிறார் இயக்குனர் அருண் பிரபு. தொடர்ந்து நம்பிக்கையை காப்பாற்றுவார் என்று நம்பலாம். தமிழக பெரும்பான்மை சமூகத்திற்காக : மேலே சொன்னது ஒன்னும் பிரியல, லோக்கலா சொல்லுப்பா என்பவர்களுக்கு - சில படம் கட்டிங் சாப்பிட்டுபோனாதான் புரியும், சில படம் பார்த்தபிறகு கண்டிப்பா கட்டிங் போடணும்னு தோணும். இது ரெண்டாவது ரகம்.

Monday, January 11, 2016

'இன்று நீ நாளை நான்'' முதல் ''இறைவி' வரை

Share |
சென்னையில் முதல் மழையிலிருந்து 'சென்னைநெக்ஸ்ட்' நிகழ்வு வரை சரியான ஓய்வு இல்லை. நேற்று சரியாக தூங்க முடியவில்லை. இரவில் இருந்தே தலைவலி... காலை வரை இருந்தது. தொடர்ந்து தூங்கவும் முடியவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு கே.டி.வியில் முதல் முறையாக "இன்று நீ நாளை நான்" திரைப்படம் வேறு சேனல் மாற்றாமல் பார்த்தேன் (துவக்க 15 நிமிடங்கள் தவிர்த்து) . படம் பார்க்க துவங்கியதில் இருந்து சில சினிமாத்தனங்கள் இருந்தாலும், இது நிச்சயம் ஒரு சிறு கதையை தழுவி எடுக்கப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என தோன்றியது. இணையத்தில் தேடும்போது, சி.ஏ.பாலன் எழுதிய 'தூக்குமர நிழல்' நாவலின் ஒரு சிறு அத்தியாயம் இது என தெரிகிறது.மேஜர் சுந்தர்ராஜன் இந்த திரைப்படத்தின் இயக்குனர். இசை - இளையராஜா. 'பொன்வானம் பன்னீர் தூவுது...' பாடல் இந்த படத்தில்தான்.

ஊர் பணக்காரரின் வீட்டில் வேலை செய்யும் ஒரு தொழிலாளியாக சிவக்குமார் இருந்தாலும், அந்த வீட்டு மகன் போல அவன் கருதப்படுகிறான். அந்த ஊர் பணக்காரரின் மகனான ஜெய்சங்கர், சிவக்குமாரை தன் தம்பியாகவே நடத்துகிறார். ஜெய்சங்கர் ஒரு அரசியல்வாதி.



லட்சுமியும், சுலோச்சனாவும் அக்கா, தங்கை போல் பழகும் தோழிகள். லட்சுமியின் தாய் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த இரண்டாம் தாரம்.ஆகையால், 'ஜாதி கெட்ட' லட்சுமிக்கு திருமணம் நடக்காமல் இருக்கிறது. லட்சுமியை பார்த்த மாத்திரத்தில் இருவருக்கும் பரஸ்பரம் ஒரு அபிப்ராயம் வந்தாலும், தன் உடன் பிறவா சகோதரன் ஜெய்சங்கருக்கு அவர் பொறுத்தமானவர் என நினைக்கிறான். ஜெய்சங்கரின் பெற்றோர் சம்மதிக்க மறுக்க, 'சீர்திருத்த' திருமணம் அவர்களுக்கு நடக்கிறது. திருமணமான 2வது தினமே ஜெய்சங்கர் 'கட்சி வேலையாக சென்னை கிளம்ப, அதற்கு நடுவில் சிவக்குமாருக்கும், சுலோச்சனாவிற்கு காதல் ஏற்பட்டு அவர்களின் திருமணமும் நடக்கிறது.

ஒன்றரை மாதம் கழிந்து வந்த ஜெய்சங்கர் அடுத்து நடக்கப்போகும் 'இடைத்தேர்தலுக்காக' தன் தோட்டத்தின் சொத்தை அடமானம் வைத்து 1 லட்சம் கட்சியிடம் கொடுத்து, ஊருக்கு திரும்பி மீண்டும் 'பிஸி' ஆக ஜெய்சங்கர்-லட்சுமியின் தாம்பத்ய வாழ்க்கை மீண்டும் பாதிக்கப்படுகிறது. அதே சமயம் இந்த பக்கம் சுலோச்சனா கற்பமடைகிறாள்.

ஜெய்சங்கரின் கட்சியில் இருந்த அவனின் எதிரி வேறு கட்சி தாவுகிறான். ஜெய்சங்கர் தன் கட்சி தலைவரை மகிழ்விக்க வீட்டிற்கே மது கொண்டுவருகிறான். தானும் குடிகாரனாக மாறுகிறான். தேர்தல் செலவிற்கு தன்னுடைய வீட்டையும் அடமானம் வைத்து தேர்தலில் தோற்று, மேலும் குடிக்கு அடிமையாகி ஒரு சமயம் இறந்தும் போகிறான்.

தனக்கு பிறந்த குழந்தையை கூட பார்க்க செல்லாது, ஜெய்சங்கரின் குடும்பத்திற்கு சிவக்குமார் உழைக்க, வீட்டிற்கு வரும் சுலேச்சனாவின் குழந்தை கணவனை இழந்த லட்சுமியிடமே பெரும்பாலும் வளர்கிறது. சிறிது, சிறிதாக கடன் அடைக்கப்பட்டு, தோட்டத்து வீட்டிலேயே இரண்டு குடும்பமும் வாழ்வது என்று முடிவாகிறது.

சுலோச்சனா மீண்டும் கற்பமடைய, அவளை ஊருக்கு விடப்போகும் சமயம் ஜெய்சங்கரின் எதிரி லட்சுமியிடம் தவறாக நடக்க முயற்சித்து அவளால் துறத்தப்படுகிறான். ஒரு மழை நாளில் லட்சுமி, சிவக்குமாரிடம் தன்னுடைய ஆசையை வெளிப்படுத்துகிறாள். முறையான உறவிற்கு முயற்சி செய்கிறாள். சிவக்குமார் குழப்பத்தோடு சம்மதம் தெரிவிக்க, தன்னுடைய குழந்தையை சுலோச்சனா பங்குபோட அனுமதித்தது போல கணவனையும் அனுமதிப்பாள் என்று தப்பு கணக்கு போடுகிறாள், மீண்டும் மணப்பெண்ணாய் மாறுகிறாள், தன்னுடைய மாமியாரும் லட்சுமி இது வரை வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க, சிவக்குமாரும், லட்சுமியும் கோவிலுக்கு செல்கையில் நடக்கும் ஒரு சம்பவம் இந்த திருமணத்தை நிறுத்துகிறது.



அன்று இரவே சிவக்குமார் சுலோச்சனாவை பார்க்க செல்கையில், அவளுக்கு ஆண் குழந்தை பிறக்க, தன்னுடைய மகள் இந்த திருமணம் குறித்து தன் அன்னையிடம் வெகுளியாக கூற, வெகுண்டெழுந்த சுலோச்சனா ஊருக்கு உடனே திரும்பி லட்சுமியை தாக்க முற்பட, தடுத்த சிவக்குமாரால் காயம் ஏற்பட்டு தற்கொலை செய்துகொள்கிறாள்.சிவக்குமாரின் மீது கொலைப்பழி (தன் மகளே ஒரு முக்கியமான சாட்சியாக மாற) விழுகிறது. அவனுக்கு மரண தண்டனை கிடைக்கிறது.

தன்னுடைய மரண தண்டனைக்கு முந்தைய நாள் சிறைக்கு லட்சுமி, அவன் குழந்தைகள் மற்றும் ஒரு மிலிட்டரிகாரர் வருகிறார். அவரிடம் 'அண்ணே, அவுங்கள நீங்க கல்யாணம் பண்ணிகிட்டு, என் 2 குழந்தைகளுக்கு தாய், தகப்பனா இருங்க' என்று சிவக்குமார் கோரிக்கை வைக்க - சில நிமிடங்களில், 'நீங்க போன பிறகு நான் உயிரோட இருப்பேன்னு நினைச்சீங்களா? நான் எப்படி இன்னொருத்தர கல்யாணம் பண்ணிப்பேன்?' என்று கேட்டு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொள்கிறாள்.

லட்சுமியின் கதாபாத்திரம் நம்மை நிச்சயம் பாதிக்கும். சிறு வயது முதலே ஜாதி கெட்டவள், பின் தான் ஆசைபட்ட ஒருவருடன் சேர முடியாமல், கிடைத்த வாழ்க்கையை வாழலாம் என நினைக்கும்போது கணவனின் அரசியல், குடி அதற்கு தடையாக, இளம் விதவையாக, பின் அதில் ஒரு மாற்றம் வரும்போது மீண்டும் வாழ்க்கையே மாறிப்போக, கடைசி காட்சியில் கூட சிவக்குமாராலும் தன் அன்பை புரிந்துகொள்ள முடியாதவளாக என - ஒரு பெண்ணின் உணர்வுகள் குறித்து அவளின் பிறப்பு முதல் இறப்பு வரை இங்கு பெரும்பாலானவர்களுக்கு அக்கறை இல்லை என்ற உண்மை அவளின் மூலம் உணர்த்தப்படுகிறது.



சமூகத்தில் அந்த சூழல் இன்றும் இருக்கவே செய்கிறது. நிறைய மாற்றங்கள் இன்று ஏற்பட்டு இருந்தாலும், ஒரு பெண்ணின் உணர்வுகள் குறித்து ஒரு தந்தையோ, கணவனோ புரிந்துகொள்ள இன்றும் முயற்சிக்கிறார்களா என்ற கேள்வி எழமால் இல்லை.
'இறைவி' - சில wo'MEN'களின் கதை என்ற வாசகம் இன்றும் அந்த நிலைமை குறித்து பேச வேண்டிய சூழல் இருப்பதை காட்டும் படமாக இருக்குமோ என்றும் தோன்ற செய்கிறது.

Sunday, January 4, 2015

பிசாசு

Share |
முன்னுரை :

முன்னுரையை முகநூலில் ஏற்கனவே படித்தவர்கள் ஒரு 10 பத்தி (Paragraph) தள்ளி இருக்கும் விமர்சனம் செல்லுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

மிஷ்கின் - 'சித்திரம் பேசுதடி' வெளிவந்து சில காட்சிகள், வாள மீனு பாட்டுன்னு பிரபலமடையறதுக்குள்ள படம் தியேட்டர்விட்டு போயிடுச்சேன்னு ரொம்ப வருத்தமா இருந்தது. விகடன் விமர்சனம் வேற ஒரு நல்ல படத்துக்கு இந்த நிலைமையான்னு வருத்தத்த அதிகப்படுத்துச்சு. நல்ல வேலையா படம் மறுபடியும் 'ரிலீஸ்' ஆகி நல்ல ஆதரவு கிடைச்சது. 'மிஷ்கின்' அப்படிங்குற ஒரு நல்ல இயக்குனர் தமிழ் திரையுலகில அறிமுகமானார். 2 தடவ 'தேவில படம் பார்த்தேன்.

அடுத்த வந்த அஞ்சாதே ஒரு 'மிஷ்கின்' Genre உருவாக்குச்சு. மனிதம் பேசும் ஒரு த்ரில்லர் இயக்குனரா உயர்ந்தாரு. USல இருந்ததால இணையத்துலதான் பார்க்க முடிஞ்சது.

நந்தலாலா எப்போ ரிலீஸ் ஆகும்னு காத்து காத்து, படத்தோட 'Style' தெரிஞ்சும், எப்படியும் ஒரு வாரத்துல தூக்கிடுவாங்கன்னு தெரிஞ்சு வாரநாள்லேயே அவசரமா போய் 'சங்கம்ல' பார்த்தோம் (நானும் என் மனைவியும்). படம் எனக்கு பிடிச்சது. தியேட்டர் ஆள் இல்ல.

அடுத்த வந்த 'யுத்தம் செய்', யாரையும் தன்னால நடிக்கவைக்க முடியும்னு சொல்ற படமா, (என்னைப் பொறுத்தவர) அந்த வருடத்தோட சிறந்த படமா இருந்தது. ரசிகர்கள அறிவாளிகளா மாத்த முயற்சித்த படம் அது.


அடுத்து மிஷ்கின் படம் வந்தா முதல் நாளே (வெள்ளிக்கிழமை முதல் காட்சி) பார்க்கணும்னுங்கிற அளவுக்கு ஒரு சிறந்த இயக்குனரா எனக்குபட்டார்.

ஆனா அடுத்து வந்த முகமூடி அந்த நினைப்ப காலிசெஞ்சது. முதல் பாதி நல்லா இருந்தாலும், இரண்டாம் பாதி படு சொதப்பல். நம்பிக்கை போயிடிச்சு.

'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்'  மேல ரிலீஸ் ஆனப்ப பெரிய அபிப்ராயம் இல்ல. படம் வந்த சமயம் ஏதோ விசயமா ஊருக்கு போனேன். 'மூடர் கூடம்' போகலாம்னு போனா படத்த தூக்கிட்டாங்க. சரி 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' போலாம்னு போனேன். ரொம்ப நல்ல படம். வெள்ளிக்கிழமை இரவு காட்சிக்கு மொத்தம் ஒரு 25 பேர்தான் இருந்தாங்க. வருத்தமா இருந்துச்சு. சுத்தமா 'Promo' இல்ல. அடுத்த வாரத்துல திருச்சில மிஷ்கினே வந்து போஸ்டர் ஒட்டிட்டு இருந்தது சிலர் 'ஸ்டண்ட்டுன்னு' சொன்னாலும் எனக்கு வருத்தமாதான் இருந்தது. அடுத்த அதிர்ச்சியா 2 வாரத்துல் தீபாவளிக்கு விஜய் டிவில படத்தபோட்டானுங்க.

பிசாசு - Review Rating நல்லா இருந்துச்சு. போன வாரங்கள்ல டிக்கெட் கிடைக்காம 'PK' போனோம். இந்த வாரம் வெள்ளிக்கிழமை பார்த்தோம்.

எல்லா படங்களின் காட்சிகளுமே படம் பார்த்த கொஞ்ச நேரத்துக்காவது மறுபடி மறுபடி நம்ம நினைவில் வரும். வெள்ளிக்கிழமை இரவு என்ன 'பிசாசு' தூங்கவிடல. உண்மைய சொல்லணும்னா, 'பிசாச' நான் தேட ஆரம்பிச்சிட்டேன்.

முன் கதை சுருக்கம் முடிஞ்சது :).

விமர்சனம் -

ஒரு சாலை விபத்தில் அடிபட்ட பெண்ணை காப்பாற்ற அங்கிருக்கும் ஆட்டோ டிரைவர், மனைவியோடு வரும் இன்னொரு நபர் மற்றும் தன் காரின் பக்கம் நின்றுகொண்டு போன் பேசும் நாயகன் மூவரும் முனைகின்றனர். மருத்துவமனையில் நாயகனின் கையை பிடித்துக்கொண்டு அவனை பார்த்து ஒரு புன்னகையோடு அந்த பெண் இறந்துபோகிறாள். அந்த பெண் அணிந்திருந்த செருப்போடு கிளம்பும் நாயகனை இந்த சம்பவம் வெகுவாக பாதிக்கிறது. தன்னுடைய வயலின் வாசிக்கும் பணியையும் பாதிக்கிறது. மன சாந்தியடைய பார்வையற்றவர்களோடு தன் நேரத்தை செலவிடுகிறான். குடித்தால் மறக்கலாம் என முடிவெடுத்து வீட்டிற்கு வருபவனை அங்கிருக்கும் சக்தி - விபத்தில் இறந்த பெண் பிசாசாக மாறி குடிக்கவிடாமல் செய்கிறது.

பிசாசை விரட்ட வரும் ஏமாற்று கும்பலை துரத்தி அடிக்கிறது. நாயகனின் தாயை இன்னொரு அபார்ட்மெண்ட் முரடன் ஒருவன் அடிக்க அவனை புரட்டி எடுக்கிறது. நாயகனின் தாயை ஒரு விபத்திலிருந்து காப்பாற்றுகிறது. நாயகன் வீட்டில் திருட வரும் 'Genius' ஒருவனை கத்தியால் குத்தி விரட்டுகிறது.


தன் அம்மாவின் விபத்தை தவறாக நினைக்கும் நாயகன் பிசாசை விரட்ட முயற்சித்து, அந்த பெண்ணின் அப்பாவை சந்திக்க, அந்த அப்பாவிற்காக அந்த விபத்து குறித்தும், அந்த விபத்து ஏற்படுத்தியவனை கண்டுபிடிக்க செய்யும் முயற்சிகள், அந்த முயற்சியின் விளைவோடு படம் முடிகிறது.

பிசாசாக 'பிராயாகா மார்டின்' - படம் முழுக்க வரும் கஷ்டமான காட்சிகளில் எல்லாம் உடலை வருத்தி நடித்துள்ளார். பிசாசாக இருந்தாலும் அவர் மீது ஒரு பரிவை, அன்பை ஏற்படுத்துகிறார். அவர் முகம் தோன்றும் ஒரே ஒரு காட்சியிலும் அன்பை பொழிகிறார்.

நாயகன் நாகா - மிஷ்கின் என்ன சொல்லியிருப்பாரோ அதை சரியாக செய்துள்ளார்.


இவரைத் தவிர பிசாசின் அப்பாவாக ராதாரவி, நாயகனின் தாயாக கல்யாணி நடராஜன், கீழ்வீட்டு முரடனாக ஹரீஸ் (தனிப்பட்ட முறையில் ஹரீஸ் அவர்களின் வளர்ச்சி மகிழ்ச்சி தருகிறது), நாயகனின் நண்பர்கள், ஆட்டோ டிரைவர் என எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளார்கள்.

இசை - மிஷ்கின் பட இசை. மிஷ்கின் பட இசையமைப்பாளர்கள் வரிசையில் ஆரால் கோரல்லி சேர்கிறார். பாடலும் அருமை.

ஒளிப்பதிவு - ரவி ராய். படத்திற்கான உழைப்பில் இவருக்கு முக்கிய பங்குண்டு.

மிஷ்கின் - மிஷ்கின் படத்திற்கென இருக்கும் சாயல்கள், சண்டை காட்சி, எல்லா காட்சிகளிலும் இழையோடும் மனிதம் இந்த படத்தில் மிகப் பிராதனமாய், மிகப் பிரமாதமாய் வெளிவந்துள்ளது. ஆட்டோ டிரைவர் 'பச்சை' என்ற ஒரு கதாபாத்திரம்கொண்டு மீண்டும் பார்ப்பவரை அறிவாளியாக மாற்றுகிறார். அவரின் அதீத உழைப்பு மேன்மேலும் வளரவேண்டும்.

தயாரித்த பாலாவிற்கு வாழ்த்துக்கள்.

ஒரு பேய் படத்துக்கு போயிட்டு வந்தா எவ்வளவுதான் நமக்கு வீரம் இருந்தாலும், (படத்துக்கு போயிட்டு வந்த நாள்) ராத்திரி வேலையில நம்ம எந்திரிக்கிறபோ அந்த பேய் எங்கையாவது நம்ம வீட்டுக்குள்ள இருக்கான்னு ஒரு பயத்தோட பார்ப்போம். ஆனா இந்த பேய் நம்ம வீட்டுக்குள்ள வந்திடுதான்னு ஆசையோட நிச்சயமா நாம தேடுவோம். அதுதான் 'பிசாசு'.

'Pisasu' - A ghost that you want to love and live with.

Friday, December 19, 2014

அப்பா வேணாம்ப்பா - நிச்சயம் வேணும்.

Share |
திரையுலகின் மீது வெறி ஏதும் இல்லாவிட்டாலும், ஒவ்வொரு வாரமும் என்ன என்ன படங்கள் வருகிறது என பார்த்து வருபவன்தான் நான். ஆனால் எப்படியோ இப்படி ஒரு படம் வந்தது தெரியாமல் போய்விட்டது. சில சமயம் ஏதோ ஒரு படம் தெரியாமல் போயிருந்தால் அதற்காக பெரிதாக அலட்டிக்கொண்டது கிடையாது. ஆனால் இந்த படத்தை நான் பார்க்காமல் இருந்திருந்தால் நிச்சயம் வருத்தப்பட்டிருப்பேன். அந்தப் படம் - "அப்பா வேணாம்ப்பா."

இரண்டு தினங்களுக்கு முன் நண்பர் ஜெய் 'குடி' சம்பந்தமான படம் என்றும், வெள்ளிக்கிழமை மீண்டும் வெளியிடப்படுகிறது என்று  சொல்லியிருந்தது கூட சரியாக இன்று நினைவில் இல்லை. ஆனால் அப்பொழுதே 'ட்ரெயிலர்' பார்த்தேன் - கருத்துமிக்க படமாக இருக்கும் என தோன்றியது. காலையில் அண்ணன் இளங்கோ அழைத்தபோதுதான் நினைவு வந்து சென்றேன். சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் முயற்சியால் ஓரளவுக்கு ஆட்கள் என்பதை விட ஆர்வலர்கள் வந்திருந்தார்கள். இயக்குனர் வெங்கட்ரமணனும், இசையமைப்பாளர் கண்ணனும் வெளியேதான் காத்திருந்தார்கள்.


இது போன்ற பெரும்பாலான படங்களில் எப்படியும் கதைக்கு வருவதற்குள் ஒரு அறிமுக பாடல், 2 தேவையற்ற டூயட், குறைந்தது 1 சண்டை, மீதம் கதாநாயகனும் அவரின் 4 நண்பர்களும் செய்யும் காமெடி என்று முடிந்து இடைவெளியின் போது, இரண்டாம் பாதியில் பெரிய கதை இருப்பதுபோல் 'பெப்' கொடுப்பார்கள். கமர்ஷியம் சமரசம் என்று நாமும் அதனை ஏற்றுக்கொள்வோம்.இரண்டாம் பாதியில் கதை வரும். படம் முடியும்.

அப்பா..வேணாம்ப்பா நிச்சயம் அப்படிப்பட்ட பலமில்லை. ஒரு துளி கூட சமரசம் ஆகாத படம் இது. இப்படத்தில் வரும் சம்பவங்கள் அனைத்தும் உண்மையே என்று ஒவ்வொரு காட்சியும் நம் சமூகத்தின் கன்னத்தில் அறைகிறது. முதல் காட்சியிலிருந்தே படம் துவங்குகிறது. பேருந்து நிலையத்தில், நம் வாழ்க்கையில் நாம் ஒரு முறையாவது பார்த்த காட்சி அது - ஒரு குடும்பமோ அல்லது ஒரு மனைவியோ பணம் சில்லறை வாங்க சென்ற கணவனுக்காக காத்திருக்கும் காட்சி. சில்லறை வாங்க சென்றவன் மதுக்கடைக்கு செல்கிறான். குடியோ குடி என குடிக்கிறான். வீட்டிற்கு வந்து உங்கள போய் நான் பஸ் ஸ்டாண்டில் தேடினேன், நீங்க ஏன் வீட்டிற்கு வந்தீங்க என்று இரவில் வந்து குடிகாரன் பாசை பேசுகிறான்.

காலை முதல் இரவு வரை குடி ஒன்றையே செய்து வரும் நாயகன்; தினம் தினம் நம் கணவன் திருந்திவிடுவான் என நம்பிக்கை கொண்டு அவனுடன் வாழும் நாயகி; அவர்களின் மூத்த பெண் மற்றும் இளைய மகன்; அந்த குடும்பத்திற்கு உதவி செய்யும் நாயகியின் அண்ணன் - இவர்கள்தான் கதாபாத்திரங்கள்.


குடிகாரனின் அத்தனை சேட்டைகளையும் (தன் நீண்ட நாள் நண்பன் வேறு வழியில்லாமல் சரக்கு வாங்கித் தர அவனையே சைட்-டிஷ்ஷாக தொட்டுக்கொள்வது ஒரு சிறு துளி) திரையில் கொண்டுவந்துள்ளார் இயக்குனர். அதே போல் குடிக்காமல் அவன் படும் சிரமங்களையும் (காலை எழுந்தவுடன் அவனுக்கு ஏற்படும் படபடப்பு) மிக நேர்த்தியாக காண்பித்துள்ளார். குடி என்பது ஒரு பழக்கத்திலிருந்து அவனுக்கு நோயாக மாற, மாற அவனுக்கு ஏற்படும் மறதி (Black-out), அவனுக்கு ஏற்படும் பயம், அவனுக்கு ஏற்படும் சந்தேகம் எல்லாமே அநாசயமாக வெளிப்பட்டுள்ளது. அவனுடைய தினசரி வேலை குடி என்றாலும், எந்த ஒரு காட்சியும் 'ரிபீட்' ஆகவில்லை. எந்த ஒரு காட்சியும் நம்மை சளிப்படையவைக்கவில்லை.

குடி நோய் முற்றி வீதிகளில் அவன் புரள, அவன் வெளியே சென்று அவமானப்பட வேண்டாம் என முடிவெடுத்து வீட்டிலேயே சரக்கு வாங்கி தரும் மனைவியை குடிக்க சொல்லி கட்டாயப்படுத்தி, தொடர்ந்து மனிதப் பண்புகள் அனைத்தையும் இழக்கிறான். தாங்க முடியாத மனைவி குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

மேலும் குடிக்கிறான். தன் மானம் இழந்து ஒரு தெரு நாயை விட கேவலமாக ஆகிறான். நோய் முற்றி இரத்த வாந்தி எடுக்கிறான். இடைவேளை.

இரண்டாம் பாதி - குடி நோயால் முற்றியவர்களுக்கான ஒரு வகுப்பு. குடி நோயிலிருந்து தப்பிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு பள்ளிகூடமாக மாறுகிறது. ஒரு குடி நோயாளி பாதி திருந்திய பின் அவனுக்கு தேவையான ஆதரவை, அது கிடைக்காமல் ஏமாறும்போது அவன் எடுக்கும் முடிவை, குடியை ஒழிப்பது என்பது முதலில் சிரமமாக துவங்கி பின்னர் எப்படி எளிமையானது என்பதை விளக்குகிறது. சுபம்.

நாயகன் - இயக்குனர் வெங்கட்ரமணன் நாயகனாக நடித்துள்ளார் என்பதை விட வாழ்ந்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். சாக்கடையில் புரள்வதை பற்றியோ அல்லது குடிகாரனாக உள்ளாடையோடு அழைவது பற்றியோ கவலைகொள்ளாமல் ஒரு மாபெரும் சமூக பணிக்காக அவரை அர்ப்பணித்துள்ளார். அதே சமயம் குடிகாரனாக அவர் படம் முடுக்க பேசும் தெளிவற்ற பேச்சு, சபரிமலைக்கு மாலை போட்டதும் பேசும் தெளிவான பேச்சு என  பிரமாதப்படுத்துகிறார். உங்கள் சமூக அக்கறைக்காக கோடி வந்தனங்கள் அய்யா.

நாயகி - இது போன்ற கதாபாத்திரங்கள் தேவையிருந்தாலும் சில நேரங்களில் அதிகமாக அழுது அவர்களே ஒரு நோயாளி போன்று இருப்பார்கள். ஆனால் இவர் ஒரு நடுத்தர வர்க்கத்து, 2 குழந்தைகளின் தாய் என்ன செய்வாரோ அதை சிறப்பாக செய்துள்ளார்.

இரண்டாம் பாதியில் வரும் டி.டி.கே மருத்துவர்களும் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர். 

பாடல் வரிகள் - 'விதியே', 'எங்கேதான் வாழ்வது' சிறப்பு.

இசை - கண்ணன். பிண்ணனி இசையை விட பாடல்கள் மிகச் சிறப்பாக இருந்தது. குடி பாடலில் குதூகலித்து, சோக பாடலில் நம்மையும் வருத்தம்கொள்ள செய்கிறது.

ஒளிப்பதிவு - தேவையான காட்சிகளை தேவையான அளவு படம்பிடித்திருந்தது.

இயக்கம் மற்றும் இதர பணிகள் செய்த வெங்கட்ரமணன் - வாழ்க்கையில் 10 படங்கள் எடுத்து வணிக ரீதியாக வெற்றியோ/தோல்வியோ அடைவதை விட, சமூகத்திற்காக இது போன்ற ஒரே ஒரு படம் எடுத்து தன் காலம் வரை மார்தட்டிகொள்ளலாம். வரலாற்றில் நிச்சயம் உங்களுக்கு இரு இடம் உண்டு.

//11.45க்கு உள்ளே சென்றபோது டிக்கெட் கிழிக்க வேண்டிய பையன் 12 மணிக்குதான் படம், எல்லோரும் வெளியே போங்க என (இயக்குனர் உட்பட - அவர் இயக்குனர் என தெரிந்திருக்க வாய்ப்பில்லை) சொன்னான். அவன் மட்டும் இல்லை திரைத்துறையும் கூட இது போன்ற நல்ல திரைப்படங்களை, இயக்குனர்களை கண்டுகொள்வதில்லை.வெளியே துறத்தவே பார்க்கிறது

இந்த நல்ல படத்தை வாங்க ஆள் இல்லாமல் இயக்குனரே திரையரங்குகளை வாடகைக்கு எடுத்துள்ளார். முதல் வாரம் அண்ணா மற்றும் எம்.எம். திரையரங்கத்திலும், அடுத்த வார வியாழன் (டிசம்பர் 25) வரை விருகம்பாக்கம் தேவி கருமாரி திரையரங்கத்தில் - http://www.devikarumaritheatres.com/ பகல் காட்சி (11.30) மட்டும் எடுக்கப்பட்டுள்ளது.

இது போன்ற நல்ல திரைப்படங்கள் ஜெயிக்க வேண்டும் என நினைத்தால் நீங்கள் செய்ய வேண்டியது இதுவே - வரும் வியாழன் வரை தேவி கருமாரியில் பகல் காட்சி 'அரங்கள் நிறைந்த காட்சியாக' இருக்க வேண்டும். நம்மால் சாத்தியமா?//

Monday, September 29, 2014

ஜீவா

Share |
திரைப்படங்களில் நிதர்சனம் அல்லது யதார்தத்தை பற்றி பேசும்பொழுது எதிர்மறை முடிவுகள் இயல்பானது. அப்படியான நிதர்சன முடிவுகளில் அந்த முடிவை தாங்கும் கதாபாத்திரத்தோடு அந்த கதாபாத்திரம் பட்ட கஷ்டங்களும் முடிவுக்கு வந்துவிடும். அப்பொழுது உண்மையான உழைப்புக்கான பலன்?

மேலே சொன்ன 2 விசயங்களையும் மிக அழகாக தாங்கி வந்துள்ள படம் ஜீவா. சுசீந்திரன் இயக்கத்தில் இமான் இசையில் விஷ்ணு, ஸ்ரீ திவ்யா, லஷ்மண் நாராயண், சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வயது வித்தியாசம் இன்றி கிரிக்கெட மட்டையை தொட்ட எவருக்கும் இந்த படம் பிடிக்கக்கூடிய வாய்ப்புண்டு. குறிப்பாக சிறு வயதில் தெரு கிரிக்கெட்டில் துவங்கி நாமும் ஒரு நாள் பெரிய கிரிக்கெட்டராக வருவோம் என்று ஏதாவது ஒரு தருணத்தில் நினைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த படம் பிடிக்கும்.


ஜீவாவாக வரும் விஷ்ணுவிற்கும் கிரிக்கெட் மீது தீராத காதல். சச்சின் மேல் மற்றவர்கள் கொண்ட பற்று அவரையும் கனவை நோக்கி ஓடச் செய்கிறது. அந்த கனவிற்கு பெரிய துணையாக தன் சொந்த அப்பா இல்லாவிட்டாலும், அவனின் பக்கத்து வீட்டு அருள் அப்பா அதற்கு பள்ளி காலம் தொட்டு துணையாக இருக்கிறார். பள்ளி கால காதலி ஜென்னியாக ஸ்ரீ திவ்யா - சென்னையில் படிக்கும் மாணவியின் குறும்புகளோடு. பள்ளி குறித்த காதல் காட்டப்பட்டிருந்தாலும், தங்கள் பெற்றோரின் வார்த்தைக்கு ஜென்னி மதிப்பு கொடுத்து காதலை துறக்கும்போது ஈர்க்கிறார். ஆனால் அதே காதல் விஷ்ணு மனதில் ரணமாகிறது.

ஒரு விசயத்தை மறக்க இன்னொரு நல்ல விசயம் தேவை என்ற அடிப்படையில் ஜீவாவின் அப்பா அவனின் தீவிர கிரிக்கெட் பயிற்சிக்கு சம்மதிக்க, அதற்கு பிறகு வரும் கிரிக்கெட் வளர்ச்சி, பயிற்சி, கிரிக்கெட் விளையாடுபவர்களுக்குள் வரும் ஈகோ சண்டைகள், Team work, காதல், நட்பு, கலாய்ப்புகள்தான் பெரும்பாலான படம். சிரிப்பு மூட்ட சூரி.

கிரிக்கெட்டின் உச்ச கட்டத்தை அடைவதற்கு ஒவ்வொருவரும் கடக்க வேண்டிய பாதை மற்றும் Process சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது. அந்த உச்சத்தை அடைய ஜீவா மற்றும் மற்றொரு கிரிக்கெட்டர் ரஞ்சித் ஆகிய இருவருக்கும் தகுதி, திறமை இருந்தும், நம் நாட்டின் சாபக் கேடான சாதி அரசியல் இவர்களை தோற்கடிக்கிறது.'வாய்ப்பு வழங்கப்படாமலேயே இவர்கள் தோற்கும் நிலைமையும் வருகிறது.

பள்ளி மாணவனாக ஜீவாவை பார்ப்பது கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் படம் முழுக்க சிறப்பாக நடித்துள்ளார். இன்னொரு முறை சரியான படங்களை தேர்வு செய்து நடித்துள்ளதிலும் ஜெயித்துள்ளார். பள்ளி காதலியாக ஜீவாவை காதலிப்பதும், பின்னர் அவரை விட்டு விலக நினைப்பதும் என ஸ்ரீ திவ்யாவிடமும் சிறந்த நடிப்பு. ரஞ்சித்தாக வரும் லஷ்மண் நாராயண் கிரிக்கெட்டராகவே தெரிகிறார். தோற்கும்போது காட்டும் வலியில் ஈர்க்கிறார். அவர்களை தாண்டி ஜீவாவின் அப்பா, சார்லி, ரஞ்சித் நண்பர்கள், 'கதற கதற காதலிக்கும்' பி.பி.சேகர், சிறு வயது ஜீவா என அனைவருமே தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளார்கள்.


இமானின் இசையில் 'ஒவ்வொன்றாய் திருடுகிறாய்' மற்றும் 'ஒருத்தி மேலே' சிறப்பு. ஆனால் ஒன்று இளையராஜாவையும், மற்றொன்று பரத்வாஜையும் ஞாபகப்படுத்துகிறது.

மதியின் ஒளிப்பதிவு பாராட்டுக்குரியது. 'ஒவ்வொன்றாய் திருடுகிறாய்' பாடலில் வரும் மிக சாதாரண அமைவிடங்களை வித்தியாசமாய காட்டியது ஆகட்டும், கிரிக்கெட் போட்டிகளை படம் பிடித்தது ஆகட்டும், இல்லை கடைசியில் வரும் பிரம்மாண்ட 'IPL' போட்டி போன்ற ஒன்றை காட்டியதாகட்டும் மிக நிறைவான பணி.

சுசீந்திரன் - இப்படிபட்ட ஒரு கதை களத்தை தேர்வு செய்ததற்கும், துணிச்சலாக கிரிக்கெட்டில் நடக்கும் ஜாதி அரசியலை பேசியதற்கும் மனப்பூர்வ வாழ்த்துக்கள். உறவுகளை கையாள்வதில் அவர் ஒரு வித்தகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். முதலில் காட்டப்படும்பொழுது தேவையற்ற டாஸ்மாக காட்சியிலும் பின்னர் ஒரு நெகிழ்வை கொண்டுவருகிறார்.வாழ்த்துக்கள் சுசீந்திரன்.

நான் முதலில் சொன்னதுபோல தமிழ்நாட்டில் இருக்கும் அநேகமானவர்கள் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்புள்ளது. இந்த படத்தை நிச்சயம் பார்க்க வேண்டியவர்கள் பார்த்து இதனால் ஒரு சிறு மனமாற்றம் ஏற்பட்டாலும் அதுவும் ஒரு வெற்றியே.

Saturday, September 20, 2014

சிகரம் தொடு

Share |
தமிழ் திரைப்படங்கள் என்றால் 2 மணி நேரத்திற்கு அதிகமாக இருக்க வேண்டும் என்ற இலக்கணம் உடைக்கப்பட வேண்டும் என நினைக்கிறேன். 1 மணி நேரத்திற்குதான் தன்னிடம் கதை உள்ளது எனும்போது தேவையில்லாத நகைச்சுவை, பாடல்கள் ஆகியவை இடைச்செருகல்களாக தேவைப்படுகிறது. முதல் பாதியை எப்படியாவது ஓட்டிவிட்டு, Interval Block-ல் கதையை துவங்கிகொள்ளலாம் என்ற போக்கு பல படங்களில் தொடர்கிறது. ஆனால் முதல் பாதியில் இயக்குனர் நம்பும் காமெடி காட்சிகள் கைகொடுக்காத போது அவை மொத்த படத்திற்குமான ஒரு சறுக்கலாகவே இருக்கிறது. சத்யராஜ், விக்ரம் பிரபு, புதுமுகம் மோனல் கஜ்ஜார் ஆகியோர் நடித்து கடந்த வாரம் வெளியான 'சிகரம் தொடு' இந்த ரகமே.



முன்னாள் போலீசான, ஒரு போராட்டத்தை அடக்கும்பொழுது தன் ஒரு காலை இழந்த அப்பா, தன் மகனையும் போலீசாக உருவாக்கி தான் சாதிக்க நினைத்ததை மகன் மூலம் சாதிக்க துடிப்பதும், எந்த போலீஸ் வேலை தன் குடும்பத்தை சிதைத்ததோ, அந்த போலீஸ் வேலையில் எப்படியும் சேரக்கூடாது என்று மகன் முடிவெடுப்பதும்தான் ஒரு வரிக் கதை. ஆனால் அதை அப்பாவின் மனம் நோகாதவாறு செய்ய வேண்டும் என நாயகன் நினைக்கிறார். அவரின் 'லட்சியத்திற்கேற்ப' நாயகியும் அமைகிறார். அந்த லட்சிய குழப்பங்களில் சிறு பங்கு வகித்து, 2 பாடல்களுக்கும் வந்து போகிறார்.

ஆனால் எப்படியும் நாயகன் தன் அப்பாவிற்கு ஒரு பாதிப்பு ஏற்படும்பொழுது போலீசாக உருவாக வேண்டிய கட்டாயம் வரும் என்பது எளிதில் கணிக்ககூடிய கதைக்கரு. ( 'அன்புள்ள அப்பா' பாடல் இசையை கேட்டவர்களுக்கு அப்பா-மகன் அறிமுக காட்சியில் இருந்து வரும் இசையும் இதனை உறுதிப்படுத்தும்). அந்த பாதிப்பென்பது  ATM கொள்ளை ரூபத்தில் படத்தில் தொடர்ந்து வருகிறது.


ATM கொள்ளை குறித்து அறிவுப்பூர்வமான காட்சிகள் மட்டுமே படத்திற்கு பலம். முன்பு சொன்னது போல் முதல் பாதியில் காமெடியை கையில் எடுத்த சதீஷ் கடிக்கிறார். இரண்டாம் பாதியில் வரும் 'ஈரோடு' மகேஷ் எவ்வளவோ பரவாயில்லை. டாஸ்மாக கடை காட்டப்படாத படம் என்ற வகையில் ஆறுதல்.

விஜய் உலகநாதனின் ஒளிப்பதிவு மிகச் சிறப்பு - குறிப்பாக இந்தியா முழுக்க பயணித்து வரும் காட்சிகள் செம்ம. இமானின் இசையில் 'அன்புள்ள அப்பா' - யேசுதாசின் மென்மையான குரலில் 'பிடிக்குதே' சிறப்பு. 'டக்கு டக்கு' என்ற முதல் பாடல் காட்சிபடுத்திய விதம் வித்தியாசமாக இருந்தாலும், அந்த பாடலும், முதல் பாதியுமே எதற்கு என்ற கேள்வி எழுகிறது. முன்பு 'தூங்கா நகரம்' தந்த கவுரவ் இயக்கி நடித்துமிருக்கிறார்.

எல்லாம் சரி, இந்த படத்திற்கு 'சிகரம் தொடு'ன்னு எதுக்கு பெயர் வெச்சாங்க?

Friday, October 26, 2012

பீட்சா

Share |

முதல் முறை, முதல் காட்சி படம் பார்த்தவுடன் எழுத நினைத்த திறனாய்வு. இரண்டாவது முறை பார்த்த பிறகாவது எழுதியிருக்க வேண்டும். ‘பீட்சா’ என்ற ஒரு ஆவியுடன் ஒரு வாரம் வாழ்ந்த பிறகு எழுதுகிறேன்J

முதல் நன்றி - இந்த திரைப்படத்தை நம்பிய தயாரிப்பாளர் திருக்குமரனுக்கு. இவருடைய நம்பிக்கை ஒன்று மட்டும் பலருக்கு வாழ்வு தரும்

படத்தின் கதையை யாரும் இதுவரை சொல்லவில்லை என்பதே படத்தின் முழு வெற்றி. திரைப்படத்தை பற்றி யாரும் அதிகம் எழுதாத, பேசாத விசயங்களையே இங்கே தர முயற்சி செய்கிறேன். நாயகனுக்கும், நாயகிக்கும் ஒரு சின்ன சண்டை. நாயகியின் மன நிலையை காட்சிகளால் மட்டுமே சொல்லப்பட வேண்டும். ஒரு மழையில் அவள் சோகம் தெரியலாம், ஆனால் அவள் சொல்ல நினைப்பதை அவள் தேனீர் குடிக்கும் கோப்பையில் “Bring Back the Joy” என மிக அழகாக சொல்லியிருப்பார். இப்படி அங்கங்கே சின்ன சின்ன ஹைக்கூக்கள்.



இந்தப் படம் ஒரு த்ரில்லர், ஹாரர் என்று பலவகையில் சொல்லப்பட்டாலும், படம் பார்த்துமுடிக்கும்பொழுது நீங்கள் பயம்கொண்ட அளவு நிச்சயம் சிரிக்கவும் செய்திருப்பீர்கள்.

படத்தின் ‘props’ – இதைப்பற்றி நாம் தனியாகவே பேசலாம். நாம் இதுவரை பார்த்த பேய் படங்களில் பார்த்த எந்தவொரு ‘பொருளையும்’ இந்த படத்தில் பார்க்க முடியாது. இருந்தாலும் ஒரு குழந்தையின் பொம்மை கூட உங்களை பயம்கொள்ள வைக்கும். அப்படிப்பட்ட ஒரு சிறப்பான திரைக்கதை.

விஜய் சேதுபதி – போஸ்டர்கள் எல்லாம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு அதற்கான மெனக்கெடல் நிச்சயம் உள்ளது. நாயகன் விஜய் சேதுபதியின் படம் (நிழற்படம்) ஒரு போஸ்டரில் கூட இல்லை. அவரின் நடிப்புக்கு ஒரு ஆளுயர கட்-அவுட்டே வைக்கலாம். ‘டேய் திரும்பாதடா.. பின்னாடி பேய் இருக்கு’ என்று படம் பார்ப்பவர்கள் அவருக்கு உதவி செய்ய துடிப்பதே இதற்கு சான்று.

மழை தூரலில் காபியை ‘எரிவதாகட்டும்’, நாயகன் நாயகி மழைக்குள் ஒளிவதாகட்டும், ஒரே ஒரு ‘டார்ச்’ கொண்டு படத்தின் பாதியை பயணிப்பதாகட்டும் ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத் நம்மையும் திரைக்குள் பயணிக்கவைக்கிறார்.

இசை – படத்தின் இயக்குனர் ஒரு பேட்டியில் சொன்னது இது – “என்கிட்ட சந்தோஷ் ஒரு டியுன் போட்டு இது என்னன்னு தெரியுதான்னு கேட்டார். 80% பேய் படங்கள்ள வற்ர டியுன் அது. இது கண்டிப்பா நம்ம படத்துல இருக்காதுன்னார்”. சாதித்தும் காட்டியுள்ளார். ‘மோகத்திரை’, ‘எங்கோ ஓடுகின்றான்’, பிண்ணனி இசை அசத்தல்.

இயக்குனர் – கார்த்திக் சுப்புராஜ் செய்திருப்பது ஒரு சின்ன வகையான புரட்சி. ’16 வயதினிலே’ இன்றும் பேசப்படுவதற்கு காரணம் கிராமத்து மனிதர்களை, அவர்களின் வாழ்க்கையை அவர் உண்மையாக பதிவு செய்த விதம். திரைப்படம் என்பது ஒரு பதிவு. கற்பனை கதையாக இருந்தாலும், உருவாக்கப்படும் சூழ்நிலையில் உங்களை என்னை போன்ற மனிதர்கள் எப்படி எதிர்வினையாற்றுவோம் என்பதின் பதிவு. அப்படி உருவாக்கும் பதிவுகளின் எல்லாம் தர்க்க ரீதியாக மட்டுமே இருக்கும் – பீட்சாவை போல. முழுமையாக தர்க்கத்தை மீறி தரம் கெட்டு போன சினிமாவை கையை பிடித்து தொடங்கிய இடத்திற்கு கூட்டிவர முயற்சிக்கும் ஒரு சின்ன புரட்சி இது.

இது கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனம் அல்லது ஆர்வ மிகுதியான கேள்வி – ‘உங்களின் அடுத்த படம் என்ன?’ கார்த்திக் சுப்புராஜின் குறும்படங்கள் பார்த்திருப்பவர்களுக்கு தெரியும் – எந்த ஒரு குறிப்பிட்ட வகையிலும் (genre) அவரை அடக்க முடியாது. எந்த ஒரு வகையிலும் தரமான தர்க்கமான சினிமா அவரால் கொடுக்க முடியும். காத்திருக்கிறோம்.....

Sunday, December 5, 2010

தா

Share |
பெண் பார்த்து வந்த தருணம் முதல் ஒவ்வொரு நொடியையும் அவளுக்காகவே அவன் வாழ்கிறான். தன்னை முழுவதும் மாற்றிக்கொள்கிறான். மிகுந்த சிரமப்பட்டு அவளுக்காக ஏற்படுத்திய இப்படிபட்ட காதலை தன்னுடைய தவறான செயலினால் அவன் இழக்க நேரிடுகிறது. இனி எப்பொழுதும் அவள் இல்லை என்று உறுதியாகிறது. துக்கங்களை போக்கும் மருந்தான கண்ணீர் கூட விட முடியாத சூழலில் தன் குடும்பத்தோடு பயணம் செய்ய நேரிடுகிறது. இப்படிபட்ட ஒரு சமயத்தில் தன் நண்பர்களோடு செல்வதே சரியென அவன் தந்தை நினைக்கிறார். நடந்து செல்லும் வழியில் யாரோ ஒருவரின் வீட்டில் ஒப்பாரி சத்தம் கேட்க அங்கே இருக்கும் சடலத்தை பார்த்து அவன் உடைந்து கதறுகிறான். சோகத்தை சொல்ல இப்படிப்பட்ட ஒரு கவித்துவமான காட்சியை நான் எந்த திரைப்படத்திலும் கண்டதில்லை.

தன் நண்பர்களில் ஒருவன் நாயகனை 'தண்ணி அடிக்க' காலையிலே வந்து அழைக்கிறான். அப்பொழுது வீட்டிற்கு வந்த ஒரு குடும்ப நண்பர் தன் மகளுக்கு நாயகனை திருமணம் செய்ய கேட்டு செல்கிறார். நாயகன் நண்பனுடன் செல்கிறான். அவர்கள் மது அருந்துகிறார்கள். அவன் இரவு வீடு திரும்புகிறான். அவன் தாய் அவனிடம் திருமணம் சம்பந்தமான பேச்சை துவங்குகிறார். இது ஒரு மிக சாதாரணமான காட்சி. திரைப்படங்களில் continuity என்று சொல்லப்படும் 'தொடர்சியான நிலை' படம் நெடுக வருவதற்கு இது ஒரு சிறந்த சாட்சி.அந்த continuityயே நம்மை திரைப்படத்துடன் படம் நெடுக ஒன்ற வைக்கிறது.



இவ்வளவு அறிமுகங்களுடன் (நடிகர்கள் - 'நாடோடிகளில் வருபவரை தவிர எல்லோரும், இசை, பாடிய அனைத்து பாடகர்கள், நடனம், சண்டை பயிற்சி, ஒளிப்பதிவு, இயக்கம்) வந்த படம் என்பது பார்ப்பவரை மலைக்க வைக்கிறது. குறிப்பாக நாயகனின் நடிப்பு. நாயகன் ஸ்ரீஹரி படத்தின் இறுதியில் அவரும் கலங்கி நம்மையும் கண் கலங்க வைக்கிறார். நாயகனின் நண்பர்களாக வரும் நடிகர்களான பெனிட்டோ, மதன், சண்முகம், வெற்றிவேல் மற்றும் கோவிந்தன் நிறைவான நடிப்பை தந்துள்ளனர். நாயகனின் தாய் வசந்தி ஒரு நல்ல தேர்வு.

இசை அமைப்பாளர் ஸ்ரீவிஜய் அவர்களை பற்றி கூற வேண்டிய அவசியமில்லை. அவரின் 'ஏதோ ஒரு ஏக்கமோ', 'என்னை தொட்டுபுட்டா'. 'இமை திறந்தேன்' அவரை பற்றி பேசும்.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் மற்றும் இயக்கம் - சூர்ய பிரபாகர். எத்தனையோ துறைகளில் எவ்வளவோ திறமைசாலிகள் இருந்தாலும் வெளிச்சத்திற்கு அதிகமாகய் நாம் கொண்டுவருவது திரைத்துரையினரைதான். இந்த படம் பார்த்த பிறகு அதில் ஒன்றும் தவறு இருப்பதாய் தோன்றவில்லை.

படத்தின் பெயர் - 'தா'

நான் இதுவரை எந்த படத்தையும் 'திறனாய்வு' செய்தததில்லை. அது தவறான விசயம் என்று கூட நினைத்துள்ளேன். (திறனாய்வு என்ற பெயரில் திரைப்படத்தின் கதையை சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுவதே காரணம்). ஆனால் விமர்சனம் போன்ற விசயங்களே பலராலும் அறியப்படாத படத்தை பலரும் அறிய உதவுகிறது என்பதை புரிந்துகொண்டதால் இந்த விமர்சனம்.