Wednesday, May 30, 2018

ஏன் இந்த குழப்பம் ரஜினி?

Share |
உங்களுடைய டிசம்பர் 31 அரசியல் பிரவேச அறிவிப்புக்குப் பின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போரட்டாம் குறித்துதான் நீங்கள் இது வரை அதிகம் பேசியிருக்கிறீர்கள். நீங்கள் பேசவே மாட்டீர்கள் என்று சொன்ன காவிரி குறித்து அதற்கு அடுத்தபடியாக பேசியிருந்தீர்கள். எல்லா பிரச்சனைகளுக்கும், எல்லா சமயங்களிலும்  கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை என்ற உங்கள் நிலைப்பாட்டை நான் வரவேற்கிறேன்.

உங்களுடைய அரசியல் வருகைக்கான, அதன் பிறகான எல்லா விமர்சனங்களுக்கும் தேவைப்பட்ட இடத்தில் தகுந்த பதிலடியும் கொடுத்தீர்கள். எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் உங்களுடைய பேச்சு, உங்கள் ரசிகர்களை தாண்டி சாமானிய மக்கள் பலரை கவர்ந்தது. உங்களுடைய எதிரிகள் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், அவர்களின் வாயை அடைத்தது.

ஒரு ஒற்றைக் கேள்வி மட்டும் நீங்கள் எத்தனை விளக்கங்கள் கொடுத்தாலும் பின் தொடரத்தான் போகிறது. நீங்கள் பிஜேபியின் ஆளா? உங்களை வைத்து தங்களுடைய சித்தாந்தத்தை வளர்க்க நினைக்கும் பிஜேபி ஆட்கள் இருக்கும்வரை அதற்கான விளக்கத்தை நீங்கள் எத்தனை முறை கொடுத்தாலும், அதனை வைத்து அரசியல் செய்பவர்கள் செய்யத்தான் போகிறார்கள். அது குறித்து நீங்கள் தெளிவாக இருப்பதாகவே உணர்கிறேன்.

இப்பொழுது தூத்துக்குடிக்கு வருவோம். மார்ச் 31 அன்றுதான் முதன்முதலாக போராட்டம் குறித்து உங்கள் பார்வையை வெளிப்படையாக அறிவித்தீர்கள். 



இந்த அரசாங்கம் ஏன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது என கேள்வி எழுப்பினீர்கள். அதற்கு அடுத்தபடியாக நேரடியாக இல்லாமல், புத்தாண்டு வாழ்த்து செய்தியிலும் தூத்துக்குடி போராட்டம் குறித்து கருத்து தெரிவித்தீர்கள்.

"உழும் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை, அருந்தும் நீரைக் காக்க, நீதியை நிலைநாட்டி நம் உரிமையைப் பெறக்கூட போராட்டம் என வாழ்க்கையே போராட்டமாகிவிட்ட நிலையில்...."

ரஜினிகாந்த மக்கள் பிரச்சனைகளை தொடர்ந்து கவனித்து வருகிறார் என்று மக்கள் தெரிந்துகொண்டார்கள்.

துப்பாக்கி சூடு நடந்தேறியது. படுகொலைகள் நிகழ்ந்தது. "காவலர் சீருடையில் இருப்பவர்களை தாக்கக்கூடாதுன்னு சொன்னவரு இப்ப மட்டும் என்ன மக்களுக்கு ஆதரவாவா பேசிடுவாரு...." என்று ஏளனம் செய்தார்கள், முன்பு அது எந்த தருணத்தில் பேசப்பட்டது என புரிந்துகொள்ளாதவர்கள்.

துப்பாக்கி சூடு நடந்த அன்று மாலையே நீங்கள் மிகச் சரியாக அரசை சாடினீர்கள். தமிழக அரசை முழுப் பொறுப்பாக்கினீர்கள். அதற்கு அடுத்த தினம் இன்னும் ஒரு படி மேலே சென்று, "காவல்துறையின் சட்டத்திற்கு புறம்பான, வரம்பு மீறிய, மிருகத்தனமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன்" என்று மக்களிடம் பேசினீர்கள். உங்களின் எதிரிகள் மறுபடியும் வாயடைத்துபோனார்கள்.



அவர்களின் அடுத்த ஆயுதம் - "ஏசி ரூமுக்குள்ள உட்காந்துகிட்டு கருத்து சொல்றதெல்லாம்...யார் வேணா பண்ணலாம்.." என்றார்கள். அதனையும் உடைக்க முடிவெடுத்து, உடைத்தும் காட்டினீர்கள். என்னடா இந்த ஆளு களத்துக்கும் கிளம்பிட்டான் என்றவர்களுக்கு உங்களின் "என்னை பார்த்தா அந்த மக்கள் கொஞ்சம் சந்தோசப்படுவார்கள்" என்பதை வைத்து அரசியல் செய்ய பார்த்தார்கள். அதுவும் உடைந்தது. நீங்கள் கண்டித்த காவல்துறையும் உங்களை இன்முகத்துடன் வரவேற்று மருத்துவமனைக்குள் அழைத்து சென்றது. போராட்டத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த மக்கள் உண்மையில் மகிழ்ந்தார்கள். அவர்களின் வலியை மறந்து கொஞ்சம் சிரித்தார்கள்.

பின்னர் துவங்கியது செய்தியாளர்கள் சந்திப்பு. அரசை கடுமையாக விமர்சித்த ரஜினி, மக்களின் கோரிக்கையாக 'எடப்பாடி பதவி விலகு' என்ற அரசியல் ரீதியான நிலையெடுப்பார் என சிலர் நினைத்தார்கள். படுகொலை செய்த காவல்துறையின் மீது என்ன நடவடிக்கை என்று கேட்பார் என்று நினைத்தார்கள். ஏன் அரசாணையால் உபயோகம் இல்லை, அரசின் கொள்கை முடிவுதான் வலுவானது என்று நாளை அரசாங்கத்தை ஆள நினைப்பவராக தெளிந்து சொல்வார் என்று நினைத்தார்கள். கடைசியாக சமூக விரோதிகள் என்று போராடியவர்களை கொச்சைப்படுத்துபவரை கண்டிப்பார் என்று நினைத்தார்கள். ஆனால் நடந்ததெல்லாம தலைகீழ் என்பதவிட குழப்பம். அந்த இளைஞன் கேட்ட கேள்வி உங்களை காயப்படுத்தியிருக்கலாம். நியாயமற்ற பல கேள்விகளைகூட சந்திக்க வேண்டிய களத்தில், அவர் கேட்ட கேள்வி ஒன்றும் அவ்வளவு நியாயமற்றது அல்ல. வேறு ஒரு தலைவர் தன்னுடைய பதிலால் அந்த இளைஞனையும் கவர்ந்திருக்கலாம்.



புனித போராட்டம் என்றவர் அடுத்த கேள்வியில் போராடவே கூடாது என்றீர்கள். நீதிமன்றத்தில் வெகு நாட்களாக வழக்கிருப்பதாலும், 'விரிவாக்கம்' என்ற பெயரில் ஸ்டெர்லைட் இன்னொரு புதிய கட்டுமானத்தை எழுப்புவதாலும்தான் இந்த போராட்டமே என நீங்கள் புரிந்துகொண்டீர்களா என தெரியவில்லை. நீதிமன்றத்தில் அரசுக்கு எதிராக 40000க்கு மேற்பட்ட வழக்குகள் உள்ளது என உங்களுக்கு தெரியுமா என்றும் தெரியவில்லை. நீதிமன்றம், அரசாங்கம் எல்லாம் கைவிட்ட பிறகு மக்கள் போராட்டம் ஒன்றுதான் ஜல்லிக்கட்டை கொண்டுவந்தது என்பதை நீங்கள் பார்த்தவர்தானே?.

போலீசாரை தாக்கியதால்தான் வன்முறை என ஆதாரப்பூர்வமாக சொன்ன நீங்கள், காவல்துறை அதற்கு படுகொலை செய்யலாமா என அந்த இடத்தில் கேட்க தவறினீர்கள். காவல்துறை தனது உடுப்பில் இருக்கும்போது அவர்களை தாக்கக்கூடாது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது, தண்டிக்கப்பட வேண்டியது எனும்போதும், திரைப்படங்களில் ஹீரோ ஒருவர், 'நீ போட்டிருக்க uniformனால உன்ன விடறேன்' என்பதை போன்று அலுப்பு தட்டுகிறது. இறந்தவர்களின் வீட்டிலும், காயம்பட்டவர்களின் வீட்டிலும் காலவ்துறை உறவினர்கள், நண்பர்கள் உண்டு. அவர்களே கையறு நிலையில் இருக்கிறார்கள். முதலில் நாம் மனிதர்கள். அடுத்துதான் இந்த உடுப்பெல்லாம்.

நியூஸ் 7 தொலைக்காட்சியின் கேள்வி நேரத்தில் பத்திரிக்கையாளர் லக்ஷ்மணன் 3 விசயங்களை மிகத்தெளிவாக ரஜினி செய்ததையும், செய்யத்தவறியதையும் தோலுரித்துகாட்டினார். ரஜினி அதனை பார்ப்பார் என்று நம்புகிறேன். எடப்பாடி அரசு பதவி விலகவேண்டாம் என்பது கூட ரஜினிக்கு அரசியல் ரீதியான பின்னடைவுதான்.



IPL போட்டிகள் போதும் சரி, இப்பொழுதும் சரி, ரஜினியை எதிர்ப்பவர்கள் 1 1/2 சதவீத வாக்குகள் வைத்திருப்பவர்கள். அவர்களுக்கு ரஜினியை எதிர்த்தால்தான் தங்களுடைய வாக்கு வங்கி இருக்கும் என்று நம்புகிறார்கள். துணை வட்டாட்சியர் அறிக்கையில் 3 இயக்கங்களை சுட்டிக்காட்டிய அரசு கூட, சட்டமன்றத்தில் திமுகதான் இந்த வன்முறைக்கு பொறுப்பு என்று சொல்வது எடப்பாடிக்கு கூட தன்னுடைய எதிரி யார் என்று தெரியும் என்பதை காட்டுகிறது. அந்த 1 1/2 சதவீத வாக்குகள் வைத்திருப்பவர்களுடன் போட்டிபோட அவசியம் உங்களுக்கில்லை ரஜினி.

ஊடகத்தை கையாளுவதோ இல்லை சில அரசியல் நிலைப்பாடுகள் எடுப்பதிலோ நீங்கள் ஜெயலலிதா Style of Politics பின்பற்ற முயற்சி செய்கிறீர்கள். அது சரியாக கூட இருக்கலாம். ஆனால் ஜெயலலிதா ஒரு சர்வாதிகாரி என்பதை மறந்துவிடாதீர்கள் ரஜினி. ஜெயலலிதாவிவிடமும், அரசியலுக்கு வந்த பின் பலருக்கும் மறந்துபோகும் மனித நேயம் உங்களிடம் இருக்கும் என நினைக்கும் மக்களை ஏமாற்றிவிடாதீர்கள்.

எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக பேச்சிற்கு முன் பேனருக்காக மன்னிப்பு கேட்டீர்கள். நேற்றைய செயல்களுக்காகவும் வருந்தி, தெளிந்து மன்னிப்பு கேட்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்....

இது ரஜினி ரசிகர்களுக்காக - 'அதிமுக, திமுகல இருக்க பய பூரா அடிமைங்க என்று சொல்லிவிட்டு, ரஜினி சொல்லிவிட்டார் என்ற ஒற்றை காரணத்திற்காகவே நீங்களும் அதற்கு சப்பை கட்டு கட்டுவதை விடுங்கள். நீங்கள் எதிர்ப்பார்க்கும் மாற்றம் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள் - இது அறிவாளிகளுக்கும் பொருந்தும்.




Monday, March 19, 2018

அங்கன்வாடி சத்துணவு பணியாளர் - விண்ணப்ப படிவம் - Anganwadi worker Application Form

Share |

அங்கன்வாடி பணியாளர்கள் - உதவியாளர் மற்றும் அமைப்பாளர் பதவிகளுக்கான விண்ணப்ப படிவம் இணைத்துள்ளேன்.

PDF Links


Thursday, December 14, 2017

அருவி - அன்பு உடலுக்கு ஆயுள் அதிகம் (No spoilers)

Share |
திரைப்படங்கள் நம்மை என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பினால் இங்கு நூற்றுக்கணக்கான பதில்கள் வரும். அந்த நூற்றுக்கணக்கில் ஒரு பதிலை கூட பூர்த்தி செய்யாது போன படங்கள் நிறைய உண்டு. எந்த வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் போய் நம்மை சலனப்படுத்திய படங்கள் உண்டு. திரைப்படம் மீதான நம்பிக்கையிலோ (சர்வதேச அங்கீகாரங்கள்) அல்லது அதன் இயக்குனர் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் சென்று, இதுவரை இயக்கிய எல்லா திரைப்படங்களிலும் அந்த நம்பிக்கையை காப்பாற்றியவர் கார்த்திக் சுப்புராஜ். அதில் ஒரு படி மேல் சென்றுவிட்டதாகவே அருவி திரைப்படத்தை உணர்கிறேன். படம் எப்படி இருந்தது என்ற கேள்விக்கு என்னுடைய மனதில் உதித்த உடனடி கேள்வி - எப்படி இது போன்ற ஒரு கதையை யோசிக்க முடியும்? சேது வந்த சமயம் இது போல் நான் யோசித்ததுண்டு. சேது படத்தின் ஓட்டப்படி முதல் பாதிதான் நமக்கு முதல் என்று நினைக்க, இரண்டாம் பாதியின் அடிப்படையில் முதல் பாதி வடிவமைக்கப்பட்டது என்பது பின்னர் தெரிந்துகொண்டேன்.
அருவியும் அப்படி இருக்கக்கூடும். ஆனால் அந்த அடிப்படை புள்ளியின் முன்னும், பின்னும் மிக நேர்த்தியாக கையாளப்பட்டுள்ளது. அந்த முன் - இசையாலும், காட்சிகளாலும் - (குறிப்பாக அருவி அப்பாவின் அன்பு) கோர்க்கப்பட்டு, ஒரு நொடி கூட அதீதமில்லாது கொண்டு செல்லப்பட்டுள்ளது. அந்த அடிப்படை புள்ளி திரையில் விரிந்து, அதற்கு அடுத்தடுத்த நிகழ்வுகளால் பல அதிர்வுகளை உருவாக்கி இடைவெளி தருணத்தில், உண்மையிலேயே உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்பதுபோல், இடைவெளி என்னும் Interval Blockக்கிற்கு திரையரங்கு கைத்தட்டுகிறது. சமீப கால படங்களில் 'Interval Block'க்கிற்கு என மிகுந்த சிரமங்கள் எடுத்துக்கொண்டு பின்னர் மொக்கையாகிபோன படங்களும், சுவாரஸ்யத்தை கூட்டி, 'Intervalன்னா இப்படியில்ல் இருக்கணும்' என்று சொல்லவைத்த ஜிகர்தண்டா போன்ற படங்களும் உண்டு. ஆனால் எனக்கு தெரிந்தவரை இறுதியில் வரும் கைத்தட்டல்கள் Intervalலில் நான் கண்டதில்லை. ஆனால் அந்த அடிப்படை புள்ளியும் ஒரு குறியீடுதான். அந்த குறியீட்டைகொண்டு பல கேள்விகளை எழுப்ப முற்படும் படம் இந்த அருவி. அந்த புள்ளிதான் 'குளிரும், இங்கேயிருந்தே பார்க்கறேன்' என்று சொல்கிறவர்களைகூட அருவிக்குள் இழுத்து செல்கிறது. எங்கோ துவங்கி ஒரு மலையின் மீதேறி, அருவியாக உருமாறியபின் அடுத்த துளி எங்கு விழும் என்று எப்படி கணிக்க முடியாதோ, அப்படி விரியும் ஒவ்வொரு காட்சியும் கணிக்க முடியாது செல்கிறது. அருவியின் வேகம் வசனங்களாய் கொட்டும்போது, அருவியில் வார்த்தைகளிலேயே, 'இந்த குப்பை வாழ்க்கைக்கு, நாம நாக்க பிடுங்கிட்டு சாகலாம்' என்று தோன்றினாலும், அதே அருவி வாழ்க்கைகாக ஏங்கும் தருணங்கள் அழகிய முரண். உண்மையில் மனிதன் என்னும் சிக்கலான நாம் இதைத்தானே தினம் தினம் செய்கிறோம். சுயநலமாக சில சமயம், சிந்தனையற்று சில சமயம் என வாழ்க்கை ஓட்டத்தில் மீது லாவகமாக பழிபோட்டு எதை வேண்டுமானாலும் செய்ய துணியும் நாம்தான், ஆசுவாசப்படுத்தி சிந்திக்கும் தருணங்களில் வெட்கப்படுகிறோம். இல்லை நம்மையே நாம் திரையில் பார்க்கும்போது தலைகுனிகிறோம். இந்த அருவியில் நம்மை நாம் நிச்சயம் காண்போம். அந்த புரிதலுக்கு பின் வெளிப்படும் அந்த சொல்ல முடியாத உணர்வு எது? அன்புதானே?. அந்த அன்புதான் இந்த அருவியின் அடிநாதம். அந்த அன்பு ஏற்படுத்தும் மனமாற்றம் கூட கண்களின் அருவியாகத்தானே வெளிப்படும். நம் கண்களை விட வேறு எந்த உறுப்பால் அன்பை அதிகம் வெளிப்படுத்தமுடியும்? "இதுவே வாழ்க்கை வலியும் கூட அனுபவம் இன்னும் கேட்டால் வரங்கள் கூட வழங்கி அருளும் அன்பு உடலுக்கு ஆயுள் அதிகம்" ஏற்கனவே பல விமர்சனங்களில் சொல்லப்பட்டிருந்தாலும், மீண்டும் மீண்டும் நாம் சொல்லத்தான் வேண்டும். ஒரு விருது விழாவில் சிறந்த நடிகை என்று சொல்லிவிட்டால், பிற விருதுகள் கொடுக்காமலா போய்விடுவார்கள். பெயரில் 'தீ'கொண்டு தண்ணீர்போல வாழ்ந்துள்ளார் அதிதீ. நடித்திருக்கும் எல்லோருமே இனி இயக்கப்படும் திரைப்படங்களில் அதிக வாய்ப்புகள் பெறக்கூடியவர்கள். இசை - படத்தின் மிகப் பெரிய பலம். ஒரு பாடல் கூட தேவையற்றது என்று சொல்ல முடியாத அளவிற்கு இசையும், வரிகளும் அது இடம்பெற்ற இடங்களும். ஒளிப்பதிவு குறித்த அறிவெல்லாம் நமக்கு இல்லையென்றாலும், இயற்கை, தொலைக்காட்சி நிகழ்ச்சி, காவல் நிலையம் என நம் வாழ்வில் நம் கண்முன்னே கண்டவையெல்லாம சரியாகவே இருந்தது. தயாரிப்பு - நல்ல கதைகளைகொண்ட, வளரத் துடிக்கும் இளைஞர்கள் அணுக வேண்டிய இடம் DreamWarrior Pictures. இயக்கம்
1. இறப்பு குறித்த பயம் நமக்கு எப்பொழுது வரும் என்று நீங்கள் சிந்தித்துண்டா? ஒரு மருத்துவமனையில் நம் பக்கத்து படுக்கையில் இருப்பவர் இறந்துபோனால், அடுத்த நொடி அந்த பயம் நம்மை பற்றிகொள்ளும். ஒன்று இறக்க வேண்டும் இல்லையேல் அந்த மருத்துவமனையைவிட்டு ஓட வேண்டும் என்று தோன்றும். 2. இன்று பரவலாக பேசப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று எப்படி நடக்கிறது எனும் காட்சிகள். காட்சி ஊடகம் குறித்து ஓரளவு தெரிந்தவன் என்ற அடிப்படையில், 'கவண்' போன்று படத்தை பார்த்து படம் எடுக்காமல், உண்மையிலேயே யதார்த்தமாக இன்று என்ன நடக்கிறது என்று சொல்லிய இடம். இது சில உதாரணங்கள். இப்படி ஒவ்வொரு காட்சியிலும் 'detailing' மூலம் அசத்துகிறார் இயக்குனர் அருண் பிரபு. தொடர்ந்து நம்பிக்கையை காப்பாற்றுவார் என்று நம்பலாம். தமிழக பெரும்பான்மை சமூகத்திற்காக : மேலே சொன்னது ஒன்னும் பிரியல, லோக்கலா சொல்லுப்பா என்பவர்களுக்கு - சில படம் கட்டிங் சாப்பிட்டுபோனாதான் புரியும், சில படம் பார்த்தபிறகு கண்டிப்பா கட்டிங் போடணும்னு தோணும். இது ரெண்டாவது ரகம்.

Friday, December 1, 2017

கூவம் ஆக்கிரமிப்பாளர்கள்

Share |
முன் குறிப்பு - கூவம் மட்டுமல்லாது எந்த ஒரு நீர்நிலையிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்துமில்லை.

2015 வெள்ளத்திற்கு பிறகு, கூவம் நதியின் நடுவில் ஒரு 'Channel' உருவாக்கப்பட்டு, கூவத்தில் (திருவள்ளூர் மாவட்டம்) துவங்கும் தண்ணீர்,, அந்த Channel வழியாக மட்டும் வந்துகொண்டிருந்தது. சரி..இன்னொரு ஊழல் திட்டம் போல இது என்று நினைத்துக்கொண்டேன். வார்டு அதிகாரிகளுக்கும் பெரிதாக தெரிந்திருக்கவில்லை. இணையத்தில் படித்தபோது 1900 கோடிக்கு 'கூவம் சீரமைப்பு' நடந்துகொண்டிருப்பதை தெரிந்துகொண்டேன். மே மாதம் 'சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை' நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. கூவம் சீரமைப்பு குறித்த ஒரு விரிவான திட்டத்தை வழங்கியதோடு, வந்திருந்தவர்களின் குறைகளையும், அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களையும் பொறுமையாக கேட்டுக்கொண்டார்கள்.



சீரமைப்பின் ஒரு பகுதியாக, மொத்தம் 14,450 வீடுகள் இடிக்கப்படும் என்றும், அவர்களுக்கு மாற்று வீடுகள் பெரும்பாக்கம் பகுதியில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் துரதிரஷ்டவசமாக, இடிக்கப்படும் வீடுகளில் இருந்தோ அந்த பகுதியில் இருந்தோ ஒருவர் கூட அந்த நிகழ்ச்சியில் இல்லை. கேள்வி- பதில் பகுதியில் நான் எழுப்பிய ஒரு முக்கிய கேள்வி, 'மாற்று வீடுகள் ஏன் பெரும்பாக்கம் பகுதியில் வழங்கவேண்டும்' என்பதாக இருந்தது. அவர்களின் வாழ்வாதாரம், கல்வி குறித்து கவலை தெரிவித்த நான், இதற்கு சரியான மாற்று ஏற்பாடு செய்யாமல்  பாடிக்குப்பம் பகுதியில் வீடுகள் இடிக்க வந்தால், நானே எதிர்க்க வேண்டியது வரும் என்றும் தெரிவித்தேன்.

அறக்கட்டளை நிர்வாகிகளுடன் பேசுகையில், பெரும்பாக்கம் பகுதி தவிர்த்து, மற்ற 4 இடங்களில் கூட வீடுகள் உண்டென்று தெரிவித்தார்கள். அவை - கூடப்பாக்கம், நாவலூர் - ஒரகடம் (படப்பை), திருவொற்றியூர் மற்றும் செம்மஞ்சேரி. இவை அனைத்துமே குடிசை மாற்று வாரியம் கட்டிய வீடுகள் என்றும், இந்த பகுதியில் இருக்கும் வசதிகள்; தூரம் ஆகியவை கொண்டு இவற்றில் ஒன்றை கூட தேர்வு செய்யலாம் என்று சொன்னார்கள். இது அந்த 14,450 வீடுகளுக்கும் பொருந்தும்.

குடிசையை தாண்டி மற்ற கட்டிடங்கள் பற்றி நான் கேள்வி எழுப்புகையில், 'நீதிமன்ற வழக்கில் இல்லாத எல்லா கட்டிடங்களும் இடிக்கப்படும்' என்றே தெரிவித்தனர்.

பிரச்சனையின் வீரியம் எனக்கு முழுவதும் புரிந்தாலும், மக்களுக்கு அந்த வீரியம் புரியவில்லை. நான் பேச முயற்சித்த சிலர், '40 வருசமா இருக்கோம், ஏற்கனவே 4 தடவ சொன்னாங்க, ஆனா எடுக்கல.. இந்த வாட்டியும் அதுதான் நடக்கும்' என்றார்கள்.

அடுத்த 2 மாதத்தில் (ஜூலை), திருவேற்காட்டில் நடந்த இன்னொரு நிகழ்ச்சிக்கு பாடிக்குப்பம் பகுதியை சேர்ந்த சிலரை அழைத்து சென்றேன். நிகழ்ச்சியை பார்த்த அனைவருக்கும், இந்த முறை வீடுகள் தப்பாது என்பது புரிந்தது. நிகழ்ச்சி முடிந்த அடுத்த நொடி, குடிசை மாற்று வாரியத்திற்கு அருகில் ஏதேனும் வீடுகள் உண்டா என்று தேடத் துவங்கி, அத்திப்பட்டில் வீடுகள் இருப்பது கண்டுபிடித்து அதற்கான மனு கொடுத்தோம். இந்த மனுவின் ஒரு நகலை 'சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளைக்கும்' வழங்கி, அவர்கள் சொன்ன மற்ற 4 இடங்களில் திருவொற்றியூர் நீங்கலாக மற்ற இடங்களை சென்று பார்த்து, அங்கு ஏற்கனவே இருக்கும் மக்களையும் சந்தித்து பேசினோம்.

ஒவ்வொரு இடத்திலும் இருக்கும் நிறை, குறைகளை பட்டியலிடும் முன் - குடிசைகளில் உள்ள மக்களை, சேரியில் வாழும் மக்களை கட்டிட வீடுகளுக்கு மாற்ற வேண்டும் என்பது குடிசை மாற்று வாரியத்தின் பணி. சுனாமிக்கு பிறகு இது கொஞ்சம் வேகம் பிடித்தது. இந்த வீடுகளில் அளவு - 310 சதுர அடி. பல நேரங்களில் இப்படி மாற்றப்படும் மக்களில் சிலர், 'அம்மாவிற்கு நன்றி' என்று பேட்டி கொடுத்த கையோடு, அடுத்த பேருந்து பிடித்து, தங்களின் பழைய குடிசைக்கே வந்த கதைகளும் உண்டு. (தற்பொழுது மக்கள் அகற்றப்பட்ட அடுத்த கணம், வீடு சின்னதாக முதலில் இடிக்கப்பட்டு, 1 வாரத்தில் மொத்தமாக இடிக்கப்படுகிறது). தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை 65,000 ரூபாய்க்கு ஆரம்ப காலத்திலும், பின் 2, 3 லட்சங்களுக்கு விற்றதும் உண்டு. ஆனால் இதற்கான அடிப்படை காரணம் - வாழ்வாதாரம். பாடிக்குப்பத்தில் நான் பழகிய இந்த 2 வருடங்களில் நான் தெரிந்துகொண்ட ஒரு விசயம் - சென்னையில் இருக்கும் ஒவ்வொரு சேரியும் ஒரு கிராமம்தான். அரை கி.மீ இருக்கும் கோயம்பேடு அவர்களுக்கு வேறு ஒரு நகரம். குறிப்பாக பெண்களுக்கு அந்தந்த குப்பமே அவர்களின் சொந்த ஊர். அவர்களுக்கென்று ஒரு கோவில், ஒரு திருவிழா, ஒரு சுடுகாடு, இன்னபிற. ஆகையால் ஒரு குப்பத்தில் இருந்து வேறு ஒரு இடத்திற்கு அவர்கள் மாற்றப்பட்டாலும், அவர்கள் பாத்திரம் துலக்கிய, வீட்டு வேலைகள் செய்த, துணி துவைத்த பழைய எஜமானர்கள்தான் அவர்களுக்கான வாழ்வாதாரம். ஆகவே மிக இயற்கையாகவே அவர்கள் அகற்றப்பட்ட இடத்திற்கே ஓடிவந்தார்கள். மீறி இருந்தவர்கள் என்ன ஆனார்கள் என்பதற்கு 'கண்ணகி நகர்' ஒரு மிகச் சிறந்த உதாரணம்.  கஞ்சா, செயின் அறுப்பது, கொலை என்ன குற்ற எண்ணிக்கைகள் அதிகம் கொண்ட இடமான கண்ணகி நகர் மாறிப்போனது. அரசாங்கத்தை பொறுத்தவரை, 'ஒண்ணுமில்லாத உங்களுக்கு நாங்க வீடு கொடுக்கறோம்..அத வெச்சு வாழு' என்பதோடு கடமை முடிந்தாகிவிட்டது. ஆரம்ப காலங்களில் கல்வி, மருத்துவம் எல்லாமே கவலையான நிலையில்தான்.

மாற்று வீடுகள்

இன்றைய பிரச்சனைக்கு வருவோம். தற்பொழுது இருக்கும் இடங்களில் உள்ள நிறை, குறை -

கூடப்பாக்கம் - திருமழிசைக்கு அருகில் இருக்கும் இந்த குடியிருப்பில் 1024 வீடுகள். துவக்கத்தில் காவல்துறைக்காக கட்டப்பட்டதால் அங்கு மட்டும் டைல்ஸ் ஒட்டப்பட்டு இருந்தது. அளவும் 380 சதுர அடி. (இவ்வளவு சின்ன வீட்டில் எப்படி இருப்பது என்று காவல்துறை நினைத்திருக்கலாம்.)  நாங்கள் அங்கு செல்லும்போதே மற்ற பகுதிகளில் இருந்து வந்தவர்கள் இருந்தார்கள். வாழ்வாதாரம் - ஒன்றுமே கிடையாது. அரசாங்கம் கொடுத்த மாத உதவி தொகை 1000 கொண்டு (இந்த திட்டத்தில் 1 வருடத்திற்கு இது வழங்கப்படும்) சமாளிக்கிறார்கள். சமூக ரீதியான பிரச்சனை - இது புதிய பாரதம் கட்சியின் கட்டப்பஞ்சாயத்து இடங்களுள் ஒன்று.



நாவலூர் - ஓரகடம் - படப்பைக்கு அருகில் இருக்கும் இந்த இடம் மிக அமைதியான இடம். சிமெண்ட் தரை. சுற்றி இருக்கும் தொழிற்சாலைகளால், நாளை வாழ்வாதாரம் காக்கப்படலாம். ஆனால் இந்த தொழிற்சாலைகளுடன் பேசி, அந்த வேலைவாய்ப்பு முகாம்ளை உருவாக்க வேண்டும். குறை - மெயின் ரோடிற்கு வருவதற்கு 2 கி.மீ நடக்க வேண்டும். 1 மணி நேரத்திற்கு 1 முறை மின் பஸ் மட்டும் உண்டு. 5ம் வகுப்பு வரை குடியிருப்பிற்கு அருகிலும், அதற்கு மேல் படிக்க இந்த 2 கி.மீ நடந்தும் வரவேண்டும்.

பெரும்பாக்கம் / செம்மஞ்சேரி - சில ஆண்டுகளுக்கு முன் பார்த்ததற்கும், இப்பொழுது பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடு. போக்குவரத்து வசதி பரவலாக உள்ளது. கண்ணகி நகர் பகுதி பிரச்சனைகள் இங்கில்லை. ஆனால் வீடு சிறியது. 7 மாடிகள் என்றாலும் Lift இருந்தது. வாழ்வாதாரத்தை பொறுத்தவரை House keeping, வீட்டு வேலைகள் இருந்தாலும், அதிகமான supply இருப்பதால் அவர்களுக்கான சம்பளம் மற்ற இடங்களை விட பாதிதான். இன்னொரு பிரச்சனை மாதம் 750ரூ maintenance. (Lift இருக்கும் காரணத்தால்). மேற்சொன்ன 2 இடங்களில் 250 ரூ.

மக்களிடம் இந்த மாற்று இடங்களை பற்றி பேசும்போது ஆரம்பத்தில் அவர்களும் அலட்சியமாகவே இருந்தார்கள்.

பின்னர் ஒரு நாள் மாநகராட்சியில் இருந்து அதிகாரிகள் வந்து கணக்கெடுக்கும்போதுதான் மக்களுக்கு பிரச்சனையின் வீரியம் கொஞ்சம் புரிந்தது. இனிமேலும் காத்திருக்க கூடாது என்று மக்களே களத்தில் இறங்கினார்கள். எல்லோரும் சேர்ந்து வண்டி பிடித்து மேலே சொன்ன 4 இடங்களுக்கு போய் வந்தார்கள். மேலே சொன்ன நிறை, குறைகள் யாவும் அவர்களின் அனுபவம்.

சிலருக்கு கூடப்பாக்கம் பிடித்தது, சிலர் ஒரகடம் என்றார்கள். ஆனால் தூரம் கருதி பெரும்பாக்கமோ, செம்மஞ்சேரியோ வேண்டாம் என்று பாடிக்குப்பம் மக்கள் உறுதியாக இருந்தார்கள். மறுபடியும் இந்த விசயம் பிரதானம் இழந்து, மறுபடியும் அத்திப்பட்டுக்காக பல்வேறு மனு, போராட்டம் ஆகியவை நடந்துகொண்டு வருவது குறித்து உங்களுக்கு தெரிந்திருக்கக்கூடும்.

இப்பொழுது பொதுவான விளைவுகளுக்கு வருவோம்.

விளைவுகள்

கூவம் ஓரம் இருக்கும் அனைத்து பகுதிகளிலும் வீடுகள் எடுக்கப்படுவதால் தற்பொழுது அல்லது எதிர்காலத்தில் நடக்கும் விளைவுகள் குறித்து இங்கு ஒரு சின்ன விவாதம் கூட எழவில்லை. இடிக்கப்படும் அன்று மட்டும் மக்களின் ஆதங்கம் செய்தியாக்கப்பட்டு அதோடுவிடப்படுகிறது.

வாழ்வாதாரம்

கடந்த 5 மாதங்களாக மக்களை அப்புறப்படுப்படுத்தப்படும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மிக அடிப்படையானது இவர்களின் வாழ்வாதார பிரச்சனை. நான் முன்னரே சொன்னதுபோல், பெரும்பாக்கம் பகுதியில் மட்டும் 20000 வீடுகளில் மக்கள். இந்த குடும்பத்தில் உள்ள பெண்களில் பெரும்பாலனவர்கள் House keeping, வீட்டு வேலைகள் செய்தவர்கள். குடிக்கும் தன் கணவர்களிடமிருந்து குடும்பத்தை காப்பாற்றுபவர்கள். இவர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்குமா?

நாவலூர் - ஒரகடத்தில் இருக்கும் 2048 குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் வேலைவாய்ப்பு உண்டாக்கப்படுமா? அங்கு வீட்டு வேலைகள் செய்ய 5 கி.மீக்கு வீடுகளே கிடையாது.

கூடப்பாக்கத்தில் இருக்கும் மக்களுக்கு என்ன வாழ்வாதாரம்?



கல்வி

நேற்று இரவு வரை உங்கள் மகனோ, மகளோ சென்ற பள்ளி வேறு. நாளை வேறு. பழைய நண்பர்கள் கிடையாது..பழைய ஆசிரியர்கள் கிடையாது. இன்னும் 3 மாதத்தில் முழுப் பரீட்சை. மன ரீதியான அதிர்வுகளை இது ஏற்படுத்தாதா? இந்த குழந்தைகள் மட்டுமின்றி எல்லா மக்களுக்கான ஒரு Counselling கொடுக்கப்பட வேண்டுமா இல்லையா?

போக்குவரத்து

பெரும்பாக்கத்தில் மிக சிறந்த போக்குவரத்து வசதிகள் இருந்தாலும், கிழக்கு கடற்கரை சாலை நெரிசல் குறித்து தனியாக சொல்ல வேண்டுமா? இவர்களால் பழைய இடங்களுக்கு எப்படி போகமுடியும்?  கூடப்பாக்கத்திற்கும், ஒரகடத்திற்கும் அந்த குடியிருப்பில் இருந்து முக்கிய சாலைக்கு பேருந்து வசதிகள் ஏற்படுத்தி தரப்படுமா?

மருத்துவம்

இத்தனை வீடுகள் கட்டும் ஒரு அரசாங்கத்தால், அந்த குடியிருப்பிலேயே அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தாதது, மக்கள் மீதான அக்கறையை வெளிச்சம்போட்டு காட்டுகிறது.

தேர்தல்

இன்றைய தேதியில் தமிழ்நாடின் மிகப் பெரிய தொகுதி சோழிங்கநல்லூர். ஏற்கனவே 624405 வாக்காளர்கள். இது இன்னும் பெரிதாக போகிறது. இவர்களுக்கான் தேவைகளும் அதிகம். இவர்கள் கண்டுகொள்ளப்படுவார்களா?

அதனை விட,  அப்புறப்படுத்தப்படும் மக்கள்தான் எல்லா தேர்தல்களிலும், உள்ளாட்சி தேர்தலில் கூட வாக்களித்தவர்கள். அரசியல் ரீதியாக ஒரு தாக்கத்தை இது ஏற்படுத்தாதா? முக்கிய அரசியல் கட்சிகள் இது குறித்து பெரிதாக வாயே திறக்காதது புரிந்துகொள்ள கூடியதாக இருந்தாலும், தாங்கள் செய்த தவறுக்கு ஏதாவது ஒரு வகையில் பிராயசித்தம் செய்திருக்க வேண்டுமா இல்லையா?

'ஆக்கிரமிப்பாளார்களுக்கு அதற்காக அங்கேயே பட்டா கேட்கிறீர்களா?' என்ற உங்கள் கேள்வி எனக்கு கேட்கிறது. நிச்சயமாக இல்லை. ஒவ்வொரு பகுதியிலும் அரசாங்கத்திற்கு சொந்தமான இடமோ அல்லது தனியாரிடமிருந்து வாங்கக்கூடிய வசதியோ உண்டு. அப்படியெனில் கொள்கை ரீதியாகவே இது குறித்த ஒரு விவாதத்தை முன்னெடுத்திருக்க வேண்டாமா?



சேரியில் பிறந்த ஒரே காரணத்திற்காக சில ஆயிரக்கணக்கானவர்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டுமா? அரசாங்கம் யோசனைகளின்றி ஒரு இடத்தில், ஏழைகளுக்காகவே வெறும் 310 சதுர அடியில், 20000 வீடுகள் கட்டிவிட்ட காரணத்திற்காக அவர்களை அங்கு அடைக்க வேண்டுமா? அவர்கள் இருக்கும் பகுதிக்கு குறைந்த்பட்சம் ஒரு 10 கி.மீக்குள் அவர்களுக்கான மாற்று வீடுகள் அரசாங்கத்தால் கட்டியிருக்க முடியாதா? அப்படி கட்டப்பட்டிருந்தால் இந்த பிரச்சனைகளுக்கான தேவை ஏற்படுமா?

இன்று காலை குடிசை மாற்று வாரியத்தில் ஒரு அதிகாரியை சந்தித்தேன். 'இவ்வளவு நாள் ஆக்கிரமிச்சிட்டு இருந்தீங்க..இப்போ அரசாங்கமா பார்த்து கொடுக்கறது வாங்கிட்டு போகவேண்டியதுதானே. அதுவும் பெரும்பாக்கத்தில எல்லாம் வீடு கிடைக்குதுன்னு சும்மாவா? எத்தனை லட்சம் பெறும்?' என்றார். அவரை பொறுத்தவரை அரசாங்கம் போடும் பிச்சையை பொறுக்கி எடுத்துக்கொள்ளுங்கள் என்கிறார். இந்த மக்கள்தான் முறைசாரா தொழில்கள் மூலம் நம்முடைய உள்நாட்டு உற்பத்திக்கு உதவுகிறார்கள் என்பது குறித்தோ அல்லது அவருக்கு மற்ற எந்த பிரச்சனை குறித்தும் அக்கறை இல்லை. அவரை பொறுத்தவரை குடிசை மாற்று வாரியம் தன்னுடைய தாரக மந்திரமான 'ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டுவிட்டது'. கூவம் காய்ந்தாலும் அந்த ஏழையின் கண்ணீர் கூவத்தில் நிரந்தரமாக இருக்கப்போவது அவருக்கு தெரியாது.

Wednesday, February 3, 2016

கதை - 16. வெறிபிடித்த நாய் சட்டம்

Share |
ஒரு ஊரில் வெறி பிடித்த நாய்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. அந்த வெறி பிடித்த நாய்களிலும் உயர் ரக நாய்கள், தெரு நாய்கள் என வகை பிரிக்கப்பட்டு இருக்கிறது.
நாய்கள் கடித்தால் அதற்கு ஏற்றவாறு மக்கள் மருந்துண்டார்கள். ஊசி போட்டுக்கொண்டார்கள். சிலர் மற்ற மனிதர்களை கூட கடித்துவைத்தார்கள். ஆனால் வெறிப்பிடித்த நாய்களின் கடி குறித்து பெரும்பாலும் யாரும் புகார் சொல்லவில்லை.
அதனையும் மீறி கடித்தாங்காமல் யாராவது புகார் சொன்னால் - உயர் ரக நாய்களை மாநகராட்சி பிடிப்பதற்கு அரசாங்கத்திடம் நிச்சயம் அனுமதி வாங்க வேண்டும். அரசாங்கத்திடம் அனுமதி பெற்று அந்த உயர் ரக நாய்கள் மீது புகார் கொடுப்பதற்கு பேசாமல் இன்னும் இரண்டு கடியே வாங்கிக்கொள்ளலாம் போல இருந்தது.
கடி பொறுக்க முடியாத ஒருவர் நீதிமன்றத்தை நாடினார். அய்யா இந்த உயர் ரக நாய்கள் கடித்தால் அரசாங்கத்தின் அனுமதி தேவையில்லை என சட்டம் போடுங்கள் என்றார்.
நீதிமன்றம் அரசாங்கத்திடம் பதில் கேட்டது. எந்த நாய் கடித்தாலும் மக்களுக்கு துன்பம்தானே, பின் ஏன் உயர் ரக நாய்களுக்கு விலக்கு என்றது. அனைத்து வெறிப் பிடித்த நாய்களுக்கும் பொதுவான நீதி வேண்டும் என்றது.
அரசாங்கம் - "அய்யா நீங்கள் சொல்வது 100% சரி. இனி உயர் ரக நாய் மட்டுமில்லாது எந்த வெறிப்பிடித்த நாய் கடித்தாலும், அரசாங்க அனுமதி பெற வேண்டும் என்று நாங்கள் சட்டம் இயற்றுகிறோம். இதன் மூலம் நீதி அனைத்து வெறி பிடித்த நாய்களுக்கும் சமமாகும் என்றது."
வழக்கு தொடுத்த நபர் அடுத்த பிறவியிலாவது நான் ஒரு நாயாகவோ இல்லை நாய்களை காப்பாற்றும் அரசாங்கத்தின் அங்கமாகவோ இருக்க வேண்டும் என்று சொல்லி மாண்டார்.
இந்த கதையை எழுத தூண்டிய செய்தி -http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=194118

Monday, January 11, 2016

'இன்று நீ நாளை நான்'' முதல் ''இறைவி' வரை

Share |
சென்னையில் முதல் மழையிலிருந்து 'சென்னைநெக்ஸ்ட்' நிகழ்வு வரை சரியான ஓய்வு இல்லை. நேற்று சரியாக தூங்க முடியவில்லை. இரவில் இருந்தே தலைவலி... காலை வரை இருந்தது. தொடர்ந்து தூங்கவும் முடியவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு கே.டி.வியில் முதல் முறையாக "இன்று நீ நாளை நான்" திரைப்படம் வேறு சேனல் மாற்றாமல் பார்த்தேன் (துவக்க 15 நிமிடங்கள் தவிர்த்து) . படம் பார்க்க துவங்கியதில் இருந்து சில சினிமாத்தனங்கள் இருந்தாலும், இது நிச்சயம் ஒரு சிறு கதையை தழுவி எடுக்கப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என தோன்றியது. இணையத்தில் தேடும்போது, சி.ஏ.பாலன் எழுதிய 'தூக்குமர நிழல்' நாவலின் ஒரு சிறு அத்தியாயம் இது என தெரிகிறது.மேஜர் சுந்தர்ராஜன் இந்த திரைப்படத்தின் இயக்குனர். இசை - இளையராஜா. 'பொன்வானம் பன்னீர் தூவுது...' பாடல் இந்த படத்தில்தான்.

ஊர் பணக்காரரின் வீட்டில் வேலை செய்யும் ஒரு தொழிலாளியாக சிவக்குமார் இருந்தாலும், அந்த வீட்டு மகன் போல அவன் கருதப்படுகிறான். அந்த ஊர் பணக்காரரின் மகனான ஜெய்சங்கர், சிவக்குமாரை தன் தம்பியாகவே நடத்துகிறார். ஜெய்சங்கர் ஒரு அரசியல்வாதி.



லட்சுமியும், சுலோச்சனாவும் அக்கா, தங்கை போல் பழகும் தோழிகள். லட்சுமியின் தாய் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த இரண்டாம் தாரம்.ஆகையால், 'ஜாதி கெட்ட' லட்சுமிக்கு திருமணம் நடக்காமல் இருக்கிறது. லட்சுமியை பார்த்த மாத்திரத்தில் இருவருக்கும் பரஸ்பரம் ஒரு அபிப்ராயம் வந்தாலும், தன் உடன் பிறவா சகோதரன் ஜெய்சங்கருக்கு அவர் பொறுத்தமானவர் என நினைக்கிறான். ஜெய்சங்கரின் பெற்றோர் சம்மதிக்க மறுக்க, 'சீர்திருத்த' திருமணம் அவர்களுக்கு நடக்கிறது. திருமணமான 2வது தினமே ஜெய்சங்கர் 'கட்சி வேலையாக சென்னை கிளம்ப, அதற்கு நடுவில் சிவக்குமாருக்கும், சுலோச்சனாவிற்கு காதல் ஏற்பட்டு அவர்களின் திருமணமும் நடக்கிறது.

ஒன்றரை மாதம் கழிந்து வந்த ஜெய்சங்கர் அடுத்து நடக்கப்போகும் 'இடைத்தேர்தலுக்காக' தன் தோட்டத்தின் சொத்தை அடமானம் வைத்து 1 லட்சம் கட்சியிடம் கொடுத்து, ஊருக்கு திரும்பி மீண்டும் 'பிஸி' ஆக ஜெய்சங்கர்-லட்சுமியின் தாம்பத்ய வாழ்க்கை மீண்டும் பாதிக்கப்படுகிறது. அதே சமயம் இந்த பக்கம் சுலோச்சனா கற்பமடைகிறாள்.

ஜெய்சங்கரின் கட்சியில் இருந்த அவனின் எதிரி வேறு கட்சி தாவுகிறான். ஜெய்சங்கர் தன் கட்சி தலைவரை மகிழ்விக்க வீட்டிற்கே மது கொண்டுவருகிறான். தானும் குடிகாரனாக மாறுகிறான். தேர்தல் செலவிற்கு தன்னுடைய வீட்டையும் அடமானம் வைத்து தேர்தலில் தோற்று, மேலும் குடிக்கு அடிமையாகி ஒரு சமயம் இறந்தும் போகிறான்.

தனக்கு பிறந்த குழந்தையை கூட பார்க்க செல்லாது, ஜெய்சங்கரின் குடும்பத்திற்கு சிவக்குமார் உழைக்க, வீட்டிற்கு வரும் சுலேச்சனாவின் குழந்தை கணவனை இழந்த லட்சுமியிடமே பெரும்பாலும் வளர்கிறது. சிறிது, சிறிதாக கடன் அடைக்கப்பட்டு, தோட்டத்து வீட்டிலேயே இரண்டு குடும்பமும் வாழ்வது என்று முடிவாகிறது.

சுலோச்சனா மீண்டும் கற்பமடைய, அவளை ஊருக்கு விடப்போகும் சமயம் ஜெய்சங்கரின் எதிரி லட்சுமியிடம் தவறாக நடக்க முயற்சித்து அவளால் துறத்தப்படுகிறான். ஒரு மழை நாளில் லட்சுமி, சிவக்குமாரிடம் தன்னுடைய ஆசையை வெளிப்படுத்துகிறாள். முறையான உறவிற்கு முயற்சி செய்கிறாள். சிவக்குமார் குழப்பத்தோடு சம்மதம் தெரிவிக்க, தன்னுடைய குழந்தையை சுலோச்சனா பங்குபோட அனுமதித்தது போல கணவனையும் அனுமதிப்பாள் என்று தப்பு கணக்கு போடுகிறாள், மீண்டும் மணப்பெண்ணாய் மாறுகிறாள், தன்னுடைய மாமியாரும் லட்சுமி இது வரை வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க, சிவக்குமாரும், லட்சுமியும் கோவிலுக்கு செல்கையில் நடக்கும் ஒரு சம்பவம் இந்த திருமணத்தை நிறுத்துகிறது.



அன்று இரவே சிவக்குமார் சுலோச்சனாவை பார்க்க செல்கையில், அவளுக்கு ஆண் குழந்தை பிறக்க, தன்னுடைய மகள் இந்த திருமணம் குறித்து தன் அன்னையிடம் வெகுளியாக கூற, வெகுண்டெழுந்த சுலோச்சனா ஊருக்கு உடனே திரும்பி லட்சுமியை தாக்க முற்பட, தடுத்த சிவக்குமாரால் காயம் ஏற்பட்டு தற்கொலை செய்துகொள்கிறாள்.சிவக்குமாரின் மீது கொலைப்பழி (தன் மகளே ஒரு முக்கியமான சாட்சியாக மாற) விழுகிறது. அவனுக்கு மரண தண்டனை கிடைக்கிறது.

தன்னுடைய மரண தண்டனைக்கு முந்தைய நாள் சிறைக்கு லட்சுமி, அவன் குழந்தைகள் மற்றும் ஒரு மிலிட்டரிகாரர் வருகிறார். அவரிடம் 'அண்ணே, அவுங்கள நீங்க கல்யாணம் பண்ணிகிட்டு, என் 2 குழந்தைகளுக்கு தாய், தகப்பனா இருங்க' என்று சிவக்குமார் கோரிக்கை வைக்க - சில நிமிடங்களில், 'நீங்க போன பிறகு நான் உயிரோட இருப்பேன்னு நினைச்சீங்களா? நான் எப்படி இன்னொருத்தர கல்யாணம் பண்ணிப்பேன்?' என்று கேட்டு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொள்கிறாள்.

லட்சுமியின் கதாபாத்திரம் நம்மை நிச்சயம் பாதிக்கும். சிறு வயது முதலே ஜாதி கெட்டவள், பின் தான் ஆசைபட்ட ஒருவருடன் சேர முடியாமல், கிடைத்த வாழ்க்கையை வாழலாம் என நினைக்கும்போது கணவனின் அரசியல், குடி அதற்கு தடையாக, இளம் விதவையாக, பின் அதில் ஒரு மாற்றம் வரும்போது மீண்டும் வாழ்க்கையே மாறிப்போக, கடைசி காட்சியில் கூட சிவக்குமாராலும் தன் அன்பை புரிந்துகொள்ள முடியாதவளாக என - ஒரு பெண்ணின் உணர்வுகள் குறித்து அவளின் பிறப்பு முதல் இறப்பு வரை இங்கு பெரும்பாலானவர்களுக்கு அக்கறை இல்லை என்ற உண்மை அவளின் மூலம் உணர்த்தப்படுகிறது.



சமூகத்தில் அந்த சூழல் இன்றும் இருக்கவே செய்கிறது. நிறைய மாற்றங்கள் இன்று ஏற்பட்டு இருந்தாலும், ஒரு பெண்ணின் உணர்வுகள் குறித்து ஒரு தந்தையோ, கணவனோ புரிந்துகொள்ள இன்றும் முயற்சிக்கிறார்களா என்ற கேள்வி எழமால் இல்லை.
'இறைவி' - சில wo'MEN'களின் கதை என்ற வாசகம் இன்றும் அந்த நிலைமை குறித்து பேச வேண்டிய சூழல் இருப்பதை காட்டும் படமாக இருக்குமோ என்றும் தோன்ற செய்கிறது.

Tuesday, December 29, 2015

சகாயம், இளைஞர் அரசியல், சட்டமன்ற தேர்தல் இன்ன பிற

Share |
மு.கு : பல நாட்களுக்கு முன் எழுத நினைத்த பதிவு இது. நேரமின்மையால் எழுத முடியவில்லை.

பொறுப்பு துறப்பு  : இந்த கட்டுரை சிலருக்கு - அரசியலுக்கு புதிதான சிலருக்கு - சோர்வடையவைப்பதாகவும், சிலருக்கு நடைமுறையை உணர்த்தும் யதார்த்த பதிவாகவும் தெரியலாம்.

இளைஞர்களால் நிகழ்த்தப்பட்ட 2 அரசியல் முன்னெடுப்பு கூட்டங்களுக்கு செல்லும் வாய்ப்பு அமைந்தது. முதலில் மிகப் பெரிய வாழ்த்துக்கள் அவர்களுக்கு. தீய அரசியலுக்கு மாற்று நல்ல அரசியலே என்ற உணர்வு வரவேற்கக்கூடிய ஒன்று. போற்றுதலுக்குரியது.

அரசியலுக்கு வரும் பலரும் இந்த சமயத்தில் வர 2 முக்கிய காரணிகள். 1) பேரிடரில் அரசின் மீதான கோபம். 2) அந்த பேரிடர் ஏற்படுத்தியிருக்கும் அரசியல் வெற்றிடம் - அதற்கு தோதாக சட்டமன்ற தேர்தல்.

முதலில் நல்லவங்க எல்லோரும் ஒன்னு சேர முடியாதா? என்கிற கேள்வி பல வருடங்களாக கேட்டுக்கொண்டே இருக்கும் ஒன்றுதான். புதியவர்களுக்கு இது புது கேள்வி. அவ்வளவுதான். அதற்கான முயற்சிகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதா என்றால் அதற்கும் பதில் ஆம் என்பதே. சமீபத்திய உதாரணம் என்றால் அய்யா எஸ்.எம். அரசு அவர்களின் முயற்சியில் 'மக்கள் நல்வாழ்வு இணையம்' 2014 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டதை சொல்லலாம்.

இது போன்ற முயற்சிகளில் வரும் சவால்கள் என்ன?

1) கொள்கை - அட என்ன சார் நீங்க, யாருகிட்ட கொள்கை இருக்கு, காம்ரேடுகளே அவுங்க கொள்கைய பலர்ட்ட அடமானம் வெச்ச பிறகு என்ன கொள்கை வெங்காயம்?

கொள்கை குறித்த இன்று விவாதங்கள் கிடையாது என்பது உண்மைதான். எல்லோரும் தொங்கும் தே.மு.தி.கவிடம் என்ன கொள்கை உள்ளது. மக்கள் நல கூட்டணியில் உள்ளவர்கள் கம்யூனிச கொள்கைகளை ஏற்றுக்கொண்டார்கள் என்று சொல்ல முடியுமா?

சரி கொள்கை என்று சொல்ல வேண்டாம். சில பிரச்சனைகளுக்கான தீர்வு வேண்டாமா? பின் எதனை இந்த புதிய இயக்கங்கள் தங்களின் தேர்தல் பிரச்சாரமாக முன்னிறுத்தும். கூடங்குளத்தையும், ஈழத்தையும் தொடாமல் போக முடியுமா? மதுக்கொள்கையில் பூரண மதுவிலக்குதான் வேண்டும் என்று எல்லோரும் ஏற்றுக்கொள்வார்களா இல்லை அது எங்கும் தோல்வியானதால் மது கட்டுப்பாடு போதும் என்று சொல்வார்களா?

அதெல்லாம் எதுமே தேவையில்லை சார் - ஊழல ஒழிச்சா போதும் என்று ஒற்றை வரிதான் கொள்கை என்றால் - அதனை சேவை பெறும் உரிமை சட்டம், லோக்அயுக்தா போன்ற அமைப்பு ரீதியான மாற்றங்கள் கொண்டு செய்வார்களா இல்லை லஞ்சம் என்பது தனி மனித பிரச்சனை என்று பரைசாற்றுவார்களா?

2) கட்டமைப்பு - திமுக், அதிமுகவின் கோட்டையை இன்று வரை உடைக்க முடியாத காரணம் - இந்த கட்டமைப்பு. விஜயகாந்த துப்பினாலும் 'என் மேலே படலியே' என்று பல தலைவர்களும் அவர் பின் செல்ல முக்கிய காரணம் தே.மு.தி.கவின் கட்டமைப்பு. (சில இடங்களில் திமுக, அதிமுகவை விட தே.மு.திகவின் கட்டமைப்பு ஆச்சர்யப்படுத்தும்).

இந்த கட்டமைப்பு என்பது சில நாட்களோ இல்லை சில மாதங்களிலோ உருவான ஒன்றல்ல. பல வருடங்கள்.

இல்லை கட்டமைப்பு எல்லாம் வேண்டாம் - அதற்கு மாற்று 'கூட்டமைப்பு' என்று சொல்வது வார்த்தை ஜாலத்திற்கு ஒத்துவருமே தவிர பூத் முகவர், ஓட்டு எண்ணும் முகவர் என்ற கட்டம் வரும்போது மூச்சு முட்டிப்போகும். அவ்வளவு ஏன்? வார நாளில் உங்களுடன் பிரச்சாரம் செய்ய பலர் கூட வருவதற்கே நீங்கள் பிரயத்தனப்பட வேண்டியிருக்கும்.

3) ஈகோ - ஆயிரம் குற்றங்கள் வைத்தாலும், இப்பொழுது இருக்கும் கட்சிகளுக்கு (எல்லா கட்சிகளும் இல்லை) இருக்கும் நற்பண்பு - தலைமை சொல்வது சரியோ, தவறோ அதனை செய்து முடிக்கும் 'கீழ்ப்படிதல்'.

ஆனால் புதிய இயக்கங்கள், கட்சிகள் 'ஈகோ கூடாது, ஈகோ கூடாது' என்று எவ்வளவு சொன்னாலும், அதை விட்டு அவர்களுக்குள்ளே ட்விஸ்ட் ஆகும் போக்குதான் இன்றுவரை உள்ளது.

4) ஊடக ஆதரவு - இதனை நான் சொல்லத்தேவையில்லை. டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றி பெற ஒரு முக்கிய காரணியாக ஊடகம் இருந்தது. 'நிர்பயா' போராட்டம் வலுப் பெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட மகத்தான பங்கு வகித்தது. இங்கு? எந்த ஒரு ஊடகமும் இளைஞர்களை, புதியவர்களை ஆதரிக்க முன் வராது. அதற்கான காரணமும் வெளிப்படை. சமூக வளைத்தளம் கொண்டு பல மக்களை சென்றடையலாம். ஆனால் சமூக வலைத்தளம் இல்லாதவர்களை?

எல்லாவற்றையும் தாண்டி இன்று களத்திற்கு வரும் பலர் - தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்பவர் - 'நாம நின்னா நம்ம பக்கத்து வீட்டுக்காரர் ஓட்டுப்போடுவாரா? இது வரைக்கும் நம்ம தொகுதிக்கு (நீங்கள் பல சமுதாய வேலைகள் செய்தவராய் இருக்கலாம்) என்ன செய்துள்ளோம்' என யோசியுங்கள்

அப்போ நாங்க என்னதான் செய்றது?

Start with Small - சின்னதில் இருந்து துவங்குங்கள். நடிச்சா ஹூரோதான் என்ற போக்கை விட்டு, அமெரிக்க மாப்பிள்ளை, ஹீரோவின் நண்பன் என்ற கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர் போன்ற இடங்களுக்கான வெற்றி பெறுவதற்கான பணியை இப்பொழுதே துவக்குங்கள் - இன்னும் சரியாக 10 மாதம் உள்ளது. சுமார் லட்சக்கணக்கான பதவிகள் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ளது. மறுபடியும் சொல்கிறேன் - பணியை இப்பொழுதே துவக்குங்கள் - அதுவே உங்கள் மூலதனம்.

அப்போ சட்டமன்றம் ?

இன்னும் 5 வருடம் சிக்கி, சீரழிந்து சின்னாபின்னாமாக போகட்டும். நம் ஊரில் செயற்கை பேரிடர்களுக்கும், பிரச்சனைகளுக்கும் பஞ்சமா என்ன?

அடுத்த 5 வருடத்தில் பிரச்சனைகளை தெரிந்துகொள்ளுங்கள். உண்மையை தேடுங்கள். தீர்வுகளை முன்வையுங்கள். அறிவுப்பூர்வமான அரசியலுக்கு உங்களை தயார் செய்துகொள்ளுங்கள்.

கடைசியாக, அது என்னடா சகாயம்னு தலைப்பு போட்டு, இது வரை அவரை பற்றி ஒன்னும் சொல்லலியே என்பவர்களுக்காக -

நான் பாடிக்குப்பம் என்ற என் பகுதியில் தொடர்ந்து வேலை செய்து வருகிறேன். அங்கிருக்கும் மிகத் தெளிவான ஒரு இளைஞன் கொண்டுதான் ஒவ்வொரு நிவாரண உதவியையும் திட்டமிடுவோம். அவன் படிப்பது லயோலாவில். அவனுடைய ஆசை IAS ஆவது. அவனிடம் சென்ற வாரம் (சகாயம் அவர்களுக்காக நடந்த பேரணிக்கு முந்தைய நாள்) 'நாளைக்கு சகாயம் அரசியலுக்கு வரணும்னு ஒரு கூட்டம் நடக்குதுபா' என்றேன்.

அவன் சொன்ன பதில் - 'சகாயம்னா யாரு சார்?'

அதிர்ச்சி அடையாதீர்கள். சென்னையின் குப்பம், குடிசை பகுதிகளில் சகாயம் அவர்களும், நடிகர் தனுஷும் போட்டியிட்டால் தனுஷ் மிகப்பெரிய வெற்றிவடைவார்.

இவர்கள்தான் உண்மையான (காசு வாங்கினாலும், இல்லாவிட்டாலும்) வாக்காளர்கள் என்றும், இவர்கள் ஏன் மற்ற கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்குவதில்லை என்றும் சொல்லித்தான் புரிய வேண்டுமோ?