Friday, October 26, 2012

பீட்சா

Share |

முதல் முறை, முதல் காட்சி படம் பார்த்தவுடன் எழுத நினைத்த திறனாய்வு. இரண்டாவது முறை பார்த்த பிறகாவது எழுதியிருக்க வேண்டும். ‘பீட்சா’ என்ற ஒரு ஆவியுடன் ஒரு வாரம் வாழ்ந்த பிறகு எழுதுகிறேன்J

முதல் நன்றி - இந்த திரைப்படத்தை நம்பிய தயாரிப்பாளர் திருக்குமரனுக்கு. இவருடைய நம்பிக்கை ஒன்று மட்டும் பலருக்கு வாழ்வு தரும்

படத்தின் கதையை யாரும் இதுவரை சொல்லவில்லை என்பதே படத்தின் முழு வெற்றி. திரைப்படத்தை பற்றி யாரும் அதிகம் எழுதாத, பேசாத விசயங்களையே இங்கே தர முயற்சி செய்கிறேன். நாயகனுக்கும், நாயகிக்கும் ஒரு சின்ன சண்டை. நாயகியின் மன நிலையை காட்சிகளால் மட்டுமே சொல்லப்பட வேண்டும். ஒரு மழையில் அவள் சோகம் தெரியலாம், ஆனால் அவள் சொல்ல நினைப்பதை அவள் தேனீர் குடிக்கும் கோப்பையில் “Bring Back the Joy” என மிக அழகாக சொல்லியிருப்பார். இப்படி அங்கங்கே சின்ன சின்ன ஹைக்கூக்கள்.



இந்தப் படம் ஒரு த்ரில்லர், ஹாரர் என்று பலவகையில் சொல்லப்பட்டாலும், படம் பார்த்துமுடிக்கும்பொழுது நீங்கள் பயம்கொண்ட அளவு நிச்சயம் சிரிக்கவும் செய்திருப்பீர்கள்.

படத்தின் ‘props’ – இதைப்பற்றி நாம் தனியாகவே பேசலாம். நாம் இதுவரை பார்த்த பேய் படங்களில் பார்த்த எந்தவொரு ‘பொருளையும்’ இந்த படத்தில் பார்க்க முடியாது. இருந்தாலும் ஒரு குழந்தையின் பொம்மை கூட உங்களை பயம்கொள்ள வைக்கும். அப்படிப்பட்ட ஒரு சிறப்பான திரைக்கதை.

விஜய் சேதுபதி – போஸ்டர்கள் எல்லாம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு அதற்கான மெனக்கெடல் நிச்சயம் உள்ளது. நாயகன் விஜய் சேதுபதியின் படம் (நிழற்படம்) ஒரு போஸ்டரில் கூட இல்லை. அவரின் நடிப்புக்கு ஒரு ஆளுயர கட்-அவுட்டே வைக்கலாம். ‘டேய் திரும்பாதடா.. பின்னாடி பேய் இருக்கு’ என்று படம் பார்ப்பவர்கள் அவருக்கு உதவி செய்ய துடிப்பதே இதற்கு சான்று.

மழை தூரலில் காபியை ‘எரிவதாகட்டும்’, நாயகன் நாயகி மழைக்குள் ஒளிவதாகட்டும், ஒரே ஒரு ‘டார்ச்’ கொண்டு படத்தின் பாதியை பயணிப்பதாகட்டும் ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத் நம்மையும் திரைக்குள் பயணிக்கவைக்கிறார்.

இசை – படத்தின் இயக்குனர் ஒரு பேட்டியில் சொன்னது இது – “என்கிட்ட சந்தோஷ் ஒரு டியுன் போட்டு இது என்னன்னு தெரியுதான்னு கேட்டார். 80% பேய் படங்கள்ள வற்ர டியுன் அது. இது கண்டிப்பா நம்ம படத்துல இருக்காதுன்னார்”. சாதித்தும் காட்டியுள்ளார். ‘மோகத்திரை’, ‘எங்கோ ஓடுகின்றான்’, பிண்ணனி இசை அசத்தல்.

இயக்குனர் – கார்த்திக் சுப்புராஜ் செய்திருப்பது ஒரு சின்ன வகையான புரட்சி. ’16 வயதினிலே’ இன்றும் பேசப்படுவதற்கு காரணம் கிராமத்து மனிதர்களை, அவர்களின் வாழ்க்கையை அவர் உண்மையாக பதிவு செய்த விதம். திரைப்படம் என்பது ஒரு பதிவு. கற்பனை கதையாக இருந்தாலும், உருவாக்கப்படும் சூழ்நிலையில் உங்களை என்னை போன்ற மனிதர்கள் எப்படி எதிர்வினையாற்றுவோம் என்பதின் பதிவு. அப்படி உருவாக்கும் பதிவுகளின் எல்லாம் தர்க்க ரீதியாக மட்டுமே இருக்கும் – பீட்சாவை போல. முழுமையாக தர்க்கத்தை மீறி தரம் கெட்டு போன சினிமாவை கையை பிடித்து தொடங்கிய இடத்திற்கு கூட்டிவர முயற்சிக்கும் ஒரு சின்ன புரட்சி இது.

இது கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனம் அல்லது ஆர்வ மிகுதியான கேள்வி – ‘உங்களின் அடுத்த படம் என்ன?’ கார்த்திக் சுப்புராஜின் குறும்படங்கள் பார்த்திருப்பவர்களுக்கு தெரியும் – எந்த ஒரு குறிப்பிட்ட வகையிலும் (genre) அவரை அடக்க முடியாது. எந்த ஒரு வகையிலும் தரமான தர்க்கமான சினிமா அவரால் கொடுக்க முடியும். காத்திருக்கிறோம்.....

Wednesday, December 22, 2010

அது ஒரு புறவழிச் சாலை!

Share |
அது ஒரு புறவழிச் சாலை!

வேகத்தடை ஏதுமில்லா
புறவழிச் சாலை!

முகப்பு விளக்குதான்
எங்கள் முகவரி

முகப்பு விளக்கு வெளிச்சமே
எங்கள் தொடர் இருட்டு


இரு கண்களை நானும்
ஒரு கண்ணை அவனும்
ஊடுருவும் தருணம்!

ஊடல்
கூடல் முன்
ஊடுருவலே பிரதானம்!

ஆணா,
பெண்ணா,
என்னா என்பதில்
படியும் பேரம்

இருட்டில்
திருட்டில்
எல்லாம் முடியும்


வெளிச்சம் கண்டு
வெகு நாளானது

வெய்யில் வாராது
போய்விடுமோ?

வெய்யில் இல்லாத
தேசத்தில் மழை வருமோ?

ஐயோ வேண்டாம்
மழை வரும் வேளையில்தான்
மானம் அதிகமாய்
பரிபோகிறது!

நெடு நாட்களுக்கு பிறகான கவிதை முயற்சி இது. என்னை பாதிக்காத எந்த ஒரு விசயத்தையும் என்னால் கவிதையாய் உருவாக்க முடிவதில்லை. நான் தினம் செல்லும் புறவழி சாலையில் பார்க்கிற நிகழ்வு இது. மிருகங்கள் கூட மழைக்கு ஒதுங்கிவிடுகிறது. மழையில் இவர்கள் படும் துயரம்....

Sunday, December 5, 2010

தா

Share |
பெண் பார்த்து வந்த தருணம் முதல் ஒவ்வொரு நொடியையும் அவளுக்காகவே அவன் வாழ்கிறான். தன்னை முழுவதும் மாற்றிக்கொள்கிறான். மிகுந்த சிரமப்பட்டு அவளுக்காக ஏற்படுத்திய இப்படிபட்ட காதலை தன்னுடைய தவறான செயலினால் அவன் இழக்க நேரிடுகிறது. இனி எப்பொழுதும் அவள் இல்லை என்று உறுதியாகிறது. துக்கங்களை போக்கும் மருந்தான கண்ணீர் கூட விட முடியாத சூழலில் தன் குடும்பத்தோடு பயணம் செய்ய நேரிடுகிறது. இப்படிபட்ட ஒரு சமயத்தில் தன் நண்பர்களோடு செல்வதே சரியென அவன் தந்தை நினைக்கிறார். நடந்து செல்லும் வழியில் யாரோ ஒருவரின் வீட்டில் ஒப்பாரி சத்தம் கேட்க அங்கே இருக்கும் சடலத்தை பார்த்து அவன் உடைந்து கதறுகிறான். சோகத்தை சொல்ல இப்படிப்பட்ட ஒரு கவித்துவமான காட்சியை நான் எந்த திரைப்படத்திலும் கண்டதில்லை.

தன் நண்பர்களில் ஒருவன் நாயகனை 'தண்ணி அடிக்க' காலையிலே வந்து அழைக்கிறான். அப்பொழுது வீட்டிற்கு வந்த ஒரு குடும்ப நண்பர் தன் மகளுக்கு நாயகனை திருமணம் செய்ய கேட்டு செல்கிறார். நாயகன் நண்பனுடன் செல்கிறான். அவர்கள் மது அருந்துகிறார்கள். அவன் இரவு வீடு திரும்புகிறான். அவன் தாய் அவனிடம் திருமணம் சம்பந்தமான பேச்சை துவங்குகிறார். இது ஒரு மிக சாதாரணமான காட்சி. திரைப்படங்களில் continuity என்று சொல்லப்படும் 'தொடர்சியான நிலை' படம் நெடுக வருவதற்கு இது ஒரு சிறந்த சாட்சி.அந்த continuityயே நம்மை திரைப்படத்துடன் படம் நெடுக ஒன்ற வைக்கிறது.



இவ்வளவு அறிமுகங்களுடன் (நடிகர்கள் - 'நாடோடிகளில் வருபவரை தவிர எல்லோரும், இசை, பாடிய அனைத்து பாடகர்கள், நடனம், சண்டை பயிற்சி, ஒளிப்பதிவு, இயக்கம்) வந்த படம் என்பது பார்ப்பவரை மலைக்க வைக்கிறது. குறிப்பாக நாயகனின் நடிப்பு. நாயகன் ஸ்ரீஹரி படத்தின் இறுதியில் அவரும் கலங்கி நம்மையும் கண் கலங்க வைக்கிறார். நாயகனின் நண்பர்களாக வரும் நடிகர்களான பெனிட்டோ, மதன், சண்முகம், வெற்றிவேல் மற்றும் கோவிந்தன் நிறைவான நடிப்பை தந்துள்ளனர். நாயகனின் தாய் வசந்தி ஒரு நல்ல தேர்வு.

இசை அமைப்பாளர் ஸ்ரீவிஜய் அவர்களை பற்றி கூற வேண்டிய அவசியமில்லை. அவரின் 'ஏதோ ஒரு ஏக்கமோ', 'என்னை தொட்டுபுட்டா'. 'இமை திறந்தேன்' அவரை பற்றி பேசும்.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் மற்றும் இயக்கம் - சூர்ய பிரபாகர். எத்தனையோ துறைகளில் எவ்வளவோ திறமைசாலிகள் இருந்தாலும் வெளிச்சத்திற்கு அதிகமாகய் நாம் கொண்டுவருவது திரைத்துரையினரைதான். இந்த படம் பார்த்த பிறகு அதில் ஒன்றும் தவறு இருப்பதாய் தோன்றவில்லை.

படத்தின் பெயர் - 'தா'

நான் இதுவரை எந்த படத்தையும் 'திறனாய்வு' செய்தததில்லை. அது தவறான விசயம் என்று கூட நினைத்துள்ளேன். (திறனாய்வு என்ற பெயரில் திரைப்படத்தின் கதையை சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுவதே காரணம்). ஆனால் விமர்சனம் போன்ற விசயங்களே பலராலும் அறியப்படாத படத்தை பலரும் அறிய உதவுகிறது என்பதை புரிந்துகொண்டதால் இந்த விமர்சனம்.

Saturday, October 23, 2010

நம் நெடுநாளைய கனவு - பட்டதாரி வேட்பாளர்

Share |
இவர் பெயர் சந்திரன். இவர் பிறந்த ஆண்டு 1920. இவர் பட்டம் பெற்ற ஆண்டு 1940. தன்னுடைய 90வது வயதில் இவரை நாங்கள் சந்தித்த இடம் ஈகா திரையரங்கின் எதிர் உள்ள சென்னை 5வது மண்டல அலுவலகத்தில். இந்த வயதில் கீழ்பாக் கார்டனில் அமைந்திருக்கும் தன்னுடைய வீட்டில் இருந்து நடந்தே வந்திருந்தார் அவர்.

திரு சந்திரன் அவர்களின் பட்ட சான்றிதழை பார்த்த ஒரு நண்பர், 'அந்த காலத்துல பட்டம் வாங்குறதெல்லாம் சாதாரண காரியம் இல்ல' என்றார்.1940ஆம் ஆண்டு பட்டதாரி ஆனது நிட்சயம் பெரிய காரியம். ஆனாலும் அதனை விட சிறப்பான காரியம் அவர் இன்று ஆற்ற வந்திருக்கும் தன் ஜனநாயக கடமை.

என்ன அந்த ஜனநாயக கடமை? எதற்காக அவர் இவ்வளவு சிரமப்படுகிறார்?
தமிழக அரசால் தற்பொழுது அறிவிக்கப்பட்ட மேலவை தொகுதிக்கு தன்னை வாக்களானாக இணைத்துக்கொள்வதே அந்த ஜனநாயக கடமை.

மேலவை - ஒரு பார்வை - மேலவை பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கு:
மேலவையில் மொத்தம் இருக்க வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை - 78. (26 - சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்தடுக்கபடுபவர்கள், 26 - கவுன்சிலர்கலாள் தேர்ந்தடுக்கபடுபவர்கள், 12 - ஆளுனரால் சட்டசபையின் பரிந்துரையில் தேர்ந்தடுக்கபடுபவர்கள், 7 - ஆசிரியர்கள் தொகுதியில் தேர்ந்தடுக்கபடுபவர்கள், 7 - பட்டதாரிகள் தொகுதியில் தேர்ந்தடுக்கபடுபவர்கள்).

ஒரு பட்டதாரியோ/பட்டயப் படிப்பு வாங்கியவரோதான் நம்மை ஆள வேண்டும் என்ற நம் கனவின் ஆரம்பமே இந்த பட்டதாரிகள் தொகுதி.

பட்டதாரிகள் தொகுதியில் தங்களை இணைக்க ஒரே தகுதி:
தங்களுடைய பட்ட/பட்டய படிப்பை நவம்பர் 2007 முன்னதாக முடித்திருக்க வேண்டும்.

பட்டதாரிகள் தொகுதியில் இணைத்துகொள்ள:
1. இங்கு இணைக்கப்பட்ட படிவம் - 18 பூர்த்தி செய்யுங்கள்.

2. பட்டம் பெற்றதர்கான சான்றின் அசல் மற்றும் நகல் (பட்டப்படிப்பு சான்றிதழ், மதிப்பெண் தாள், ...... - ஏதேனும் ஒன்று)
3. தற்போது தங்கியிருக்கும் இடத்திற்கான இருப்பு சான்று அசல் மற்றும் நகல். ரேசன் அட்டை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

மேற்கண்ட படிவங்களை உங்களுடைய தாலுக்காவிலோ அல்லது உங்கள் வசிப்பிடத்தின் மண்டல அலுவலகத்திலோ தாக்கல் செய்ய வேண்டும்.
பட்டதாரிகளின் தினசரி அலுவல்களை மனதில் வைத்து சனி, ஞாயிறான இந்த வாரம் 23, 24 மற்றும் அடுத்த வாரம் 30,31 ஆகிய தினங்களில் இந்த அலுவலகங்கள் திறந்திருக்கும்.

90 வயதில் எத்துனை அடி வேண்டுனமானாலும் எடுத்து வைக்க ஒருவர் தயாராக உள்ளார். ஒரு அடி எடுத்துனவைக்க நாம் தயாராக உள்ளோமா?

தங்களின் மண்டல அலுவலகம் எதுவென தெரிந்துகொள்ள இங்கே சுட்டவும் -
http://changesociety.org/frm/viewtopic.php?id=22

தொடர் விபரங்களுக்கும், கேள்விகளுக்கும் -
http://changesociety.org/frm/viewforum.php?id=4

-இது ஒரு மாற்றம் சமூகத்தின் முயற்சி.

http://changesociety.org/

எங்கள் முயற்சி தொடர இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிரவும்.

Thursday, October 7, 2010

மாங்கல்யம் தந்துனானே

Share |
"என்ன தேதி இன்னைக்கு..?"
கேள்வி கேட்டு சுவரின் மேல் மாட்டப்பட்டிருந்த நாட்காட்டி பார்த்தார். அது புது வருட தேதியிலேயே இருந்தது.


"ரொம்ப மேல இருக்கா அதான்...." என தலையை சொரிந்தார்.
அவர் சம்மனமிட்டு உட்கார்ந்து எழுதுவதற்கு ஏதுவாக அந்த பலகை அமைந்திருந்தது. அந்த பலகையின் முன் புறம் 'கோயில் கணக்கர்' என எழுதியிருந்தது. அந்த நாட்காட்டியின் பக்கத்திலேயே இருந்த ஒரு பச்சை நிற பலகை அர்ச்சனையில் ஆரம்பித்து மிருக காணிக்கை வரைக்கான அனுமதி சீட்டுக்கு எவ்வளவென பறைசாற்றியது.


பக்கத்தில் நின்றிருந்த எங்கள் அலுவலக நண்பர் குமார், "இன்னைக்கு தேதி...." என்று தொடங்கும்போது என் கண்கள் பார்த்த அவன், "சுபா, ஸ்ரீய கூட்டிட்டு முன்னாடி போ..அய்யர் எல்லா ஏற்பாட்டயும் செய்திட்டாரான்னு கொஞ்சம் பாரு. நாங்க ரஷீது வாங்கிட்டு வறோம்" என்றான்.


நான் அவன் கண்கள் பார்த்துக்கொண்டே அங்கிருந்து கிளம்பினேன். கொஞ்சமும் கலங்கமில்லாத கண்கள். இப்பொழுதும் பெரிதாய் சலனப்படவில்லை.


தூரத்தில் குமார் "தேதி 8/8/2008 சாமி" என்பது கேட்டது.


8/8/2007
அன்று பயங்கர மழை. ஆகஸ்ட் மாதம் இவ்வளவு மழை யாரும் எதிர்பார்க்காத ஒன்று. நான் வேலை பார்த்து வந்தது ஆவடி பக்கம் இருக்கும் ஒரு கால் செண்டரில். என்னுடய ஷிஃப்ட் நேரம் மாலை 4.30 முதல் இரவு 12.30 வரை. என்னுடைய விடுதி இருப்பது நுங்கம்பாக்கத்தில். விடுதியில் வந்து ஏற்றிக்கொள்ளவும், இறக்கிவிடவும் எங்கள் நிறுவனத்தில் ஒரு மாருதி வேன் ஏற்பாடு செய்திருந்தார்கள். நான் வேலைக்கு சேர்ந்து மூன்று ஆண்டுகள் ஆனதால் வேலை நேரம் நிறையவே பழகிவிட்டது. மாதம் ஒரு முறை அம்மாவையும், தங்கைகளையும் பார்க்க போகும்பொழுது கூட இந்த நேரம் வீட்டில் தூங்கி விடுவேன்.


என்னுடய விடுதிக்கு பக்கத்தில்தான் எங்கள் நிறுவனம் ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்தது. அப்பொழுதும் கார் சேவைகள் இருந்தாலும் நடந்தே விடுதிக்கு சென்று விடுவேன்.இரவு நேர அமைதி எனக்கு மிகப்பிடித்த ஒன்று.
சென்ற வருடம் இங்கு மாற்றியப்பின்தான் வேறு வழியில்லாமல் காரில் வருகிறேன். தூரத்தின் காரணமாக நாந்தான் முதல் ஆளாய் ஏற்றப்படுவேன், நாந்தான் கடைசியாக இறக்கிவிடப்படுவேன். என்னுடன் வரும் இருவர் இறங்கிய பிறகு, ஒரு அரை மணி நேரம் பயணம் செய்தால்தான் என்னுடய விடுதி வரும்.


பயண நேரத்தை உபயோகமாக செலவழிக்க சில நாவல்கள் வாசிக்க தொடங்கினேன். கி.ராவும், ஜெயகாந்தனும் என்னுடைய உலகத்திற்கு முழுமையாக வந்தனர். என்னுடய பயண நேரம் எனக்கு மிகச்சிறப்பாக அமைந்தது. கூட வரும் இருவரும் நிறைய பேசக் கூடியவர்கள் இல்லை என்றாலும், ஏதோ கொஞ்சம் பேசுவார்கள். அது இப்பொழுது அவர்களுக்குள்ளே நின்றுபோனது. வண்டி ஓட்டுனரை சரியாக கூட பார்த்ததில்லை. "போலாமா மேடம்", "குட் நைட் மேடம்" என்பதை தவிர வேறு எதும் பேசிக்கேட்டதில்லை.


அன்று மழை காரணமாக வண்டி கொஞ்சம் நேரம் கழித்தே வந்தது. வந்தபோதே ஓட்டுனர் நனைந்து இருந்தார். "போலாமா மேடம்?". வண்டியை மிக மெதுவாய்தான் ஓட்டி சென்றார். வண்டி திடீர் என நின்றது. "சாரி மேடம்...மழைனால படுத்துது..." வண்டியை விட்டு கீழே இறங்கினார். மாருதி வேனின் பின் பக்கம் வந்து ஏதோ தேடினார்.


அந்த இருவரில் ஒருத்தி, "மழைன்னு தெரியிதில்ல, வேற வண்டி எடுத்துட்டு வந்திருக்கலாம்ல..வந்து சேறானுங்க பாரு" என்றாள்.


'பாவம் அவரும் என்ன பன்னுவாரு..மழை இப்படி இருக்கும்னு அவருக்கு தெரியுமா' என நான் நினைத்துக்கொண்டேன். அவள் மீண்டும் ஏதும் பேசவில்லை.


ஒரு பத்து நிமிடத்தில் வண்டி கிளம்பியது. அவர்கள் இருவரும் இறங்கிய பிறகு வண்டி கிளம்பியது. மீண்டும் நின்றது. அவர்கள் அதை பார்த்தும் அவர்களின் விடுதிக்குள் சென்றனர்.


அவர் மீண்டும் இறங்கினார். மீண்டும் பின் வந்தார். ஏதோ தேடினார்.
"மேடம் உங்க சீட் கீழே ஒரு ஸ்க்ரெவ் ட்ரிவெர் இருக்கான்னு கொஞ்சம் பாருங்களேன். நான் கீழே குனிந்தேன். என் முதுகுக்கு பின் ஒரு பாரம் அழுத்தியது.


"ஏய்...என்ன செய்றீங்க..?"
"விட்றா..."
"அம்மா......கடவுளே...."
என் ஆடைகள் கிழிக்கப்பட்டன. அவனின் கைகள் எனக்கு அருவருப்பு உண்டு செய்தது.


அதன் பின் எப்படி நான் விடுதிக்கு வந்தேன் என்பதும், எப்படி நான் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தேன் என்பது இன்று வரை தெரியவில்லை.ஒவ்வொரு இரவும் நரகமாய் இருந்தது.


ஆனால் நானாகத்தான் காவல் துறைக்கு சென்றேன். அவனைப் பற்றி புகார் செய்தேன். அவன் சிறையில் அடைக்கப்பட்டான். காவல் துறை விசயத்தை நல்ல விதத்தில் கையாண்டது. இருந்தும் நான் பாதிக்கப்பட்டது ஊர் முழுக்க தெரிந்தது. என் சொந்த ஊருக்கு செல்வதிலேயே நிறைய சிக்கல் இருந்தது.


எங்களுக்கு தெரியாத சொந்தம் எல்லாம் வந்து நலம் விசாரித்து சென்றது.
"அவள சென்னயிலேயே தங்க சொல்லு... இங்க நீ தனியா இருக்க....ரெண்டு பொண்ணுங்கள வச்சிட்டு..."




நான் சென்னையிலேயே தங்கினேன். ஒரு மூன்று மாதம் கழித்து என் பழைய அலுவலகம் சென்றேன். நிறைய அனுதாபங்கள்.....மேலாளர் அழைத்தார்.


நலம் விசாரித்து முடித்து, "ஸ்ரீநிதி, சொல்றேன்னு தப்பா நெனசுக்காத, உனக்கு 3 மாசம் சம்பளம் தர்றோம். நீ வேலய விட்டு நின்னுக்கிரியா....உன்ன பாக்குற ஒவ்வொருத்தொரும் இந்த சூழ்நிலை அவ்வளவு பாதுகாப்பில்லாத மாதிரியே உணருவாங்க...அது எங்களுக்கு அவ்வளவு நல்லதில்லமா..."


வெளியே வந்தேன். என்னுடன் காரில் வரும் இருவரும் என்னுடய பழைய இருக்கையில் நின்றிருந்தனர்.
"ஒரு நிமிடம் எங்க கூட வர முடியும்மா?"

பெண்கள் கழிப்பறை கூட்டி சென்று இருவரும் என் காலில் விழுந்தனர். "அன்னைக்கு நாங்க மட்டும் கதவ சாத்தாம போயிருந்தா..எங்கள மன்னிச்சிடு ஸ்ரீ...."


அவர்களிடம் விடைபெற்றேன். நான் நிறுவனத்தை விட்டு வெளியே செல்வதை கேட்டு அவர்கள் முன்னர் வேலை செய்த பெங்களூர் கால் சென்டர் தொடர்புகள் தந்தனர்.


பெங்களூர்
இங்கு பகலில்தான் வேலை.என்னை பற்றி இங்கு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. யாருடனும் எனக்கு பேசவும் பிடிக்கவில்லை. மதிய வேலைகளில் கூட நாவல் படித்துக்கொண்டே சாப்பிடுவேன்.


என்னுடைய அனுபவத்திற்கு எனக்கு டீம் லீட் வேலை கிடைத்தது. என்னுடய ப்ரொஜெக்ட் லீட்தான் முரளி. அலுவல் காரணமாக நான் பேச வேண்டிய குமார், ப்ரேம், சுபா ஆகிய நால்வரில் இவனிடம்தான் நான் அதிகம் பேச வேண்டும். எல்லோரிடத்திலும் சகஜமாய் பழகுவான். தனக்கு மேலே வேலை செய்பவர்கள் கீழே இருப்பவர்கள் என்ற எந்த பாரபட்சமும் இல்லாமல் எல்லோரிடத்திலும் ஒரே மாதிரியாய் பழகுவான். எந்த இக்கட்டான சூல்நிலையிலும் அவனால் மட்டும் சிரிக்க முடியும்.வேலை தவிர்த்து அவன் கேட்கும் எந்த கேள்விக்கும் நான் பதில் சொன்னதில்லை.


எங்கள் அலுவலகத்தில் யாருக்கு பிறந்தநாள் வந்தாலும் அதை வெகு சிறப்பாக கொண்டாடுவர். என்னுடய பிறந்தனாளும் வந்தது. வேலை முடித்து எனக்காக என் குழுவில் இருந்த மூவரும், முரளியும் ஒரு கேக் வாங்கி காத்திருக்க, நான் விடுதிக்கு கிளம்பிவிட்டேன்.


அடுத்த தினம் எல்லோரும் என்னை திட்ட முரளி வந்து ஒரு பரிசுப்பொருள் வைத்துவிட்டு சென்றான். ஜெயகாந்தனின், “சில நேரங்களில் சில மனிதர்கள்”


உள்ளே “இனிய பிறந்தனாள் வாழ்த்து” என எழுதி இருந்தது.


அவனுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். “மன்னிக்கவும். நன்றி”


உடனே என் இடத்திற்கு வந்தான்.
“எல்லாரும் அத கொண்டு வாங்க....”
கேக் வந்தது.


நீண்ட நாட்கள் கழித்து சிரித்தேன். “ஸ்ரீ...உங்களுக்கு இது கூட தெரியுமா..?”
“எது ..?!”
“அதான் இப்போ எதோ ஒன்னு வாயில செஞ்சீங்களே.”
மீண்டும் சிரித்தேன்.


எல்லோருக்கும் நன்றி சொன்னேன்.
“தோடா..நன்றிக்குதான் இவ்வளவும் செஞ்சோம்னு நினைக்கிறீங்களா..? உங்களுக்கு சின்ன மீனு போட்டு, பெரிய மீனு பிடிக்கிற வித்தை தெரியுமா..?”
“அப்டீனா..?”
“பசங்களா...கொஞ்சம் சொல்லுங்கப்பா..”
“என்ன ஸ்ரீ இது கூட தெரியாம..ஆமா நீங்க வெஜ்ஜா..இல்ல நான்-வெஜ்ஜா..?”


எல்லொரும் வெளியே சென்று சாப்பிட்டோம். திரும்ப வரும்பொழுது எல்லோருடய வீடு பற்றியும் விசாரித்தேன். நாந்தான் கடைசியாக இறங்குவேன் என தோன்றியது.


அந்த பயம் என்னை கவ்விக்கொண்டது. ‘என்ன செய்வேன்’? எல்லொரும் ஒவ்வொருவராக இறங்கினார்கள். வண்டி நிற்பது போல தோன்றினால் நாமும் கீழே இறங்கிவிடலாம்.


“என்ன ஸ்ரீ பலமான யோசனை..?”
“ம்ம்...ஒன்னுமில்ல முரளி..”
“இருட்டு பார்த்தா பயமா..?”
“அதெல்லாம் இல்ல முரளி”
“நான் உங்கள்ட ஒன்னு கேட்கலாமா..?”
“என்ன முரளி..?”
“நேரடியா விசயத்துக்கு வரேன். நான் உன்ன காதலிக்கிரேன் ஸ்ரீ....”
“என்ன சொன்னீங்க..?”


அதற்கு பிறகு இருவரும் ஒன்றுமே பேசவில்லை. என் விடுதி வந்தது.
முரளி பேசினான்....”அப்பா... இப்போ பயம் இல்லாம வந்தீங்களா..? “
“என்ன சொல்றீங்க முரளி?”
“எங்கடா இவன் நம்மள லவ் பண்றானோன்னுங்ற நெனப்புல, மத்ததெல்லாம் மறந்து போச்சா..?”
“அப்போ...?” சிரித்துவிட்டேன்.
என்னை கேட்காதவன் போல், “என்ன இதுக்காக அவசரபட்டு என் காதல சொல்ல வேண்டியதா போச்சு..என் பிறந்தநால்ள சொல்லலாம்னு நெனச்சிருந்தேன். உன் பிறந்தநாளுக்கு சொல்லிட்டேன்.”
நான் அவனை முறைத்தேன்.
“நாளைக்கு ஆபிஸ்ல பாக்கலாமா..?” கார் பறந்தது.


அடுத்த தினம்.
அவன் இடத்திற்கு சென்றேன்.
“உங்கள்ட கொஞ்சம் பேசனும்..”


அலுவலக உணவகம் சென்றோம்.
நான் தொடங்குவதரற்குள் அவன், “உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா..? நேத்துதான் காதல சொன்னென், கனவுல வந்து எப்ப கல்யாணத்த வச்சிக்கலாம்னு இப்டியா தொல்ல பன்னுவ..? எனக்கு கொஞ்சம் டயம் குடும்மா..”
நான் மீண்டும் முறைத்தேன்.
“இப்ப என்னடான்னா ஆபிஷ் வந்த உடனே இங்க கூட்டிட்டு வர...காதலன் மேல ஆசை இருக்கலாம்..அதுக்காக இப்டியா..?”
“முரளி...உங்கள்ட நான் கொஞ்சம் சீரியசா பேசனும்..”
“ம்ம்..சொல்லு ஸ்ரீ..”
எல்லாம் சொன்னென்.


“எப்போ கல்யாணம் வச்சுக்கலாம்..?”
“என்ன முரளி....நான் சொன்னதெல்லாம் கேட்டப்புறம்....”
“உனக்கு ஆட்சேபனை இல்லன்னா அதே ஆகஸ்ட் 8 வச்சிக்கலாமா..?”
“முரளி எல்லாம் புரிஞ்சுதான் பேசுறியா..?”
“என்ன தேவயில்லாம சீரியசான ஆளா ஆக்குற நீ......சரி நீ உடம்பால கெட்டுபொய்ட்ட....உன் மனசு உண்டதானே இருக்கு...அத யாரும் ஒன்னும் பண்ணிடலயே..? எனக்கு உன் உடம்பு வேணாம்...உன் மனச மட்டும் கொடு.. சரியா..? இன்னும் ஒன்னு சொல்லவா...எனக்கு இந்த விசயம் எல்லாம் எப்பவோ தெரியும்."
எனக்கு பேரதிர்ச்சியாய் இருந்தது.
"உன்ன பார்த்த உடனே நான் உன்ன காதலிக்க ஆரம்பிச்சுட்டேன். சரி மொதல்ல உங்க வீட்ல போய் பேசிடுவோம்னு உன் பைல புரட்டுனேன். உன் அட்ரஸ் எடுத்து உங்க வீட்டுக்கு போனேன். உன் தையிரத்த, தன்னம்பிக்கைய தெரிஞ்சுக்கிட்டேன். அப்பதான் உன்ன நிறைய காதலிக்க ஆரம்பிச்சேன்.எத்தன பேருக்கு வரும் இந்த துணிச்சல்...நேத்து உன் பயம் போக நான் ஒன்னு சொன்னேன்..நீ கார் இறங்குர வரை பழச பத்தி நெனைக்கல....அதே மாதிரி அந்த சம்பவம் முழுக்க நீ மறக்கனும்னுதான் கல்யாணத்த கூட அதே நாள்ல வச்சிக்கலாம்மன்னு கேட்டேன்”


என் கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது.




முரளி கோவிலுக்குள் வந்தான். அய்யர் எல்லாம் தயார் செய்துவைத்திருந்தார்.
முரளி என்னிடம், “என்ன ஸ்ரீ தேதி நெனச்சு கண் கலங்குரியா..?”
“ஆமா....ஆனா பழைய தேதி நென்னசில்ல, புதுசு நெனச்சு...”
முரளி முகத்தில் ஆனந்த ரேகைகள்.


அய்யர், “தம்பி, வீட்ல போய் காதல் பண்ணலாம். இப்போ தாலிய கட்டுடா என்றார். மாங்கல்யம் தந்துனானே இருக்கா உங்க போன்ல”
ப்ரேம், “இருக்கு சாமி என்று....ரஹ்மானின் ‘மாங்கல்யம் தந்துனானே’ அலைபேசியில் போட்டான்.

Wednesday, October 28, 2009

ராகுல் தினகரன் - ஒரு அறிமுகம்

Share |
நீண்ட நாட்களாகவே எழுத நினைத்த பதிவு இது. இன்றைய தேதிக்கு இதை விட ஒரு சிறந்த சந்தர்ப்பம் அமையாது.
ராகுல் தினகரன் - கல்கி நிறுவனத்தின் (Kalki Mechanical Prototypes Pvt Ltd) நிர்வாக இயக்குனர். பொறியியல் படித்த ஒவ்வொருவரும் தங்களுக்கான வேலையே வேறு ஒரு இடத்திலே தேடிக் கொண்டிருக்கையில், தனக்கான சுயத்தை தானாகவே தோண்டி எடுத்தவர். எத்துனை சோதனைகள் வந்தபோதும், தன்னுடைய முடிவில் உறுதியாக நின்று, உழைப்பை மட்டுமே உரமாக விதைத்து இன்று ஒரு சிறந்த தொழிலதிபராக உருவெடுத்திருக்கிறார்.

2005 ஆம் ஆண்டு மதுரையில் தொடங்கப்பட்ட கல்கி நிறுவனம் இயந்திர வடிவைமப்பு, (machine design) இயந்திர கட்டுமானம் (machine building), நுகர்வோர் உற்பத்தி, (consumer products) தானியங்கி உபகரணங்கள் (Automotive Systems) என்று பல இயந்திர பிரிவுகளில் சிறப்பானதொரு பங்கு அளித்து வருகிறது. இதில் மற்றுமொரு குறிப்பிடித்தக்க அம்சம் இவர் செய்யும் ஊனமுற்றோருக்கான உபகரணங்கள். தொழில் என்றால் பணம், அதிகமான விருப்பு தவிர்த்து இப்படியொரு தொழில் சார்ந்த சமுதாய எண்ணம் இருப்பது பாரட்டத்தக்க அம்சமாக விளங்குகிறது.

கல்லூரியில் படிக்கும்பொழுது எல்லோரும் அவர்களின் எதிர் பாலரை காதலிக்க இவரின் காதல் மட்டும் வாகனங்களின் மீது இருந்துள்ளது. பந்தய வாகனங்கள் (Motor Car) இவரை வசீகரித்தது போல வேறு ஏதும் இவரை வசீகரிக்கவில்லை.அந்த காதலே தன்னுடைய நிறுவனத்தில் பந்தய வாகனங்களுக்கென ஒரு தனி துரையையும் வளர்க்க வைத்துள்ளது.

தன்னுடைய அறிவை பிறருக்கு அளிப்பவனே அடுத்த தலைமுறையின் ஒரு சிறந்த தலைவன். அவ்வகையில் கல்லூரியில் சொல்லி தரும் பாடங்களை விடுத்து ஒருவன் ஒரு இயந்திர துறையில் வெற்றி பெற அவனுக்கான முழு பயிற்சியையும் ராகுல் கொடுத்து வருகிறார். இவருடைய பயிற்சி துறை மற்ற முக்கியமான இயந்திர துறையை சேர்ந்த CAD மென்பொருளையும் கற்பித்து வருகிறது.

அவரின் உழைப்பை பற்றி நான் இங்கு அவ்வளவாக கூறவில்லை என சிலர் கருதலாம். நான் சொல்வதை விட நீங்களே அவரின் உழைப்பு அவரை எங்கே கொண்டு சென்றுள்ளது என பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.



CNBC தொலைக்காட்சியும், லுப்தான்சா நிறுவனமும் ஒரு வளர்ந்த தொழில் அதிபரையும், உலகு அறியாத ஒரு வளர்ந்து வரும் தொழில் அதிபரையும் உலகுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியே நீங்கள் மேலே பார்த்தது. TVS நிறுவனத்தை சேர்ந்த வேணு ஸ்ரீநிவாசன் அவர்களை கல்கி நிறுவன நிர்வாக இயக்குனர் ராகுல் தினகரன் காணும் நேர்காணல்.

ராகுல் அவர்களை வேறு ஒரு வளர்ந்து வரும் தொழில் அதிபர் நேர்முகம் காணும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது திண்ணம்.
அவரை பற்றி மேலும் அறிய :
http://www.kalkimechanicalprototypes.com

Monday, August 31, 2009

ராஜேஷும் பில் கேட்சும் (கதை - 13)

Share |
"டேய் ஜெகதீஸ் எங்க இருக்க..?"

ராஜேஷ் கூப்பிட்ட தொனியிலே ஒரு பதட்டம் இருந்தது. பல தமிழ் திரைப்படங்களில் காட்டப்படுவது போல, அப்பொழுதே நான் சாப்பிட அமர்ந்து முதல் உருண்டையை கையில் எடுத்திருந்தேன். முதல் உருண்டையை என்பதை விட முதல் சிக்கன் பீஸ் என்று சொல்வதே சாலச் சிறந்தது.

"வீட்லதாண்டா...ஏன்..? வந்து உன்ன பிக்-அப் பண்ணனுமா..?"

"பிக்-அப்பா....டேய் அப்ளிகேசன் பாரம் பில்-அப் பண்ணனும்டா...உடனே வா..."
அப்ளிகேசன் பாரம்?!.....என்னால் அதிர்ச்சியை தாங்க முடியவில்லை.

"அப்போ மொத ரவுண்டு முடிஞ்சதா..?"

"முடிஞ்சதுடா.....ப்ளீஸ் டா...உடனே வா....சீக்கிரம் கூப்ட்ருவாங்க ..."

அப்ளிகேசன் பாரம் பில்-அப் செய்வதை விட ராஜேஷ் தேர்வாகிவிட்டான் என்ற பேரதிர்ச்சியிலே கைகளை அளம்பினேன். போன இரண்டு வாரமும் இதே போல் சாப்பிடுவதற்கு முன்போ இல்லை , சாப்பிடும் வேலையிலோ தொலைபேசி அழைப்பு வந்து கிளம்பியது அம்மா திட்டும்போதுதான் தெரிந்தது. சென்ற ஜென்மத்தில் இதை விட அதிக கோழிகளை கொன்று குவித்திருப்பேனோ..?

நான் என்னுடைய இரு சக்கர வாகனத்தில் கிளம்பினேன். நான் அங்கு போய் சேர்வதற்குள் கொசுவத்தியை சுற்றுவதே கதை படிப்பவர்களுக்கு நலம்.


ராஜேஷ். என் கல்லூரி நண்பன். பார்ப்பதற்கு பீமன் போல (மகாபாரத பீமன் - தமிழ் படம் அல்ல) காட்சி அளிப்பான். அவனுடைய உடல் வாகினாலும், அவனுடைய அப்பா அரிசி மண்டி வைத்திருந்ததாலும் அவனை எல்லோரும் "அரிசி மூட்டை" என செல்லமாக அழைப்பர்.

நாங்கள் படித்தது மெக்கானிக்கல் என்றாலும் எங்களுடைய இரண்டாம் ஆண்டு பாடத்தில் C++ என்னும் கணிப்பொறி சார்ந்த ஒரு பாடமும் இருந்தது. அதுவரை கணிப்பொறியை கண்ணாடி வழியாக மட்டுமே பார்த்த நாங்கள் அதனுடன் நெருங்கி பழக வேண்டிய இக்கட்டு ஏற்பட்டது. எல்லோரும் தட்டு தடுமாறி அந்த பாடத்தில் தேர்ச்சி பெற்றோம். ஆனால் ராஜேஷ் தேர்வாக கொஞ்சம் நேரம் பிடித்தது. மூன்றாம் பருவத்தில் 3 மதிப்பெண்ணில் தொடங்கி எட்டாம் மற்றும் இறுதி பருவத்தில் ஒரு வழியாக தேர்ச்சி அடைந்தான்.

கல்லூரி முடியும்போது ராஜேஷின் ஆட்டோகிராப் புத்தகத்தில் எல்லோரும் வைத்த விண்ணப்பம், வேண்டுகோள், ஆணை எல்லாம் ஒன்றே ஒன்றுதான் - "தயவு பண்ணி ஈமெயில் id கிரியேட் பண்ண முயற்சி பண்ணாத. எல்லோரும் எல்லோரோடயும் டச்-ல இருக்க மெயில் id வெச்சுக்குவாங்க. அதே ஆசை உனக்கும் வரலாம். ஆனா அப்பிடி ஒரு ஆசை இந்த கணிப்பொறி துறை முழுக்க பாதிக்க கூடிய வாய்ப்பு இருக்கு. நீ எப்ப வேணும்னாலும் எங்களுக்கு கடுதாசி எழுதலாம்." என்பதோடு எல்லோரும் அவர்களின் முகவரியை அவனுக்கு மட்டும் கொடுத்தார்கள்.

இன்று வரை யாரேனும் எங்கே இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள நாங்கள் ராஜேஷிடம் அவர்களுக்கு கடிதம் எழுத சொல்லுவோம். அவன் எழுதினால் யார் எங்கு இருந்தாலும் உடனடி பதில் வரும். அவர்களால் முடியவில்லை என்றால், நண்பர்கள் அவர்களின் பெற்றோர்கள் மூலியமாக கடிதம் எழுதுவர்.

ஆனால் விதி வலியதல்லவா..?? ராஜேஷின் அப்பா அவன் படிப்பு முடிந்தவுடன் ஒரு பெருஞ்செயல் செய்தார். அவருடைய நண்பரின் ஆலோசனைப்படி, அவனை ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸில் சேர்த்துவிட்டார். ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டிவிட்டால் போதும், அந்த கோர்ஸில் தற்பொழுது வேலை வாங்கி தரக்கூடிய பாடங்கள் எடுத்து, அவர்களே குறைந்தபட்சம் 1 வருடத்திற்கு வேலையும் தருவார்கள்.அதற்கான மாத சம்பளம் 6,000 ரூபாய் தரப்படும்.

'போட்ட காச இப்டி எடுத்தாதான் உண்டு' என்ற அவரின் வியாபார தந்திரம் எங்களை மெய் சிலிர்க்க வைத்தாலும், இதனால் கணிப்பொறி துறைக்கு ஏற்பட போகும் தீங்கை எங்களால் சிந்திக்கக்கூட முடியவில்லை.

ராஜேஷ் அங்கு சேர்ந்தான். இவனை போலவே இன்னும் சிலர் சேர்ந்தனர் போல. அங்கு நடக்கும் பரிட்சைகளில் இவனையும் சேர்த்து ஒரு ஆறு பேர் குறைந்த மதிப்பெண்ணே வாங்கி வந்தனர்.

"கவலைபடாதடா, எல்லாத்தையும் உங்க அப்பா பார்த்துக்குவாரு.."

"போடா...செருப்ப கழட்டி அடிப்பாரு....இவ்ளோ காசு போட்டுட்டு, சரியா மார்க் வங்காளன்னா..."

"அந்த எடத்துலதான் உங்க அப்பாவ நீ சரியாய் புரிஞ்சிக்கல. இப்போ இவனுங்க என்ன சொல்லி இருக்காங்க.....ஒரு வருசத்துக்கு வேல உண்டுன்னு சொல்லி இருக்காங்க இல்லையா..."

"ஆமாண்டா..ஆனா இப்போ சரியாய் மார்க் வாங்காட்டி நல்ல ப்ராஜெக்ட் கொடுக்க மாட்டங்க..நான் அப்புறம் எப்டி ஒரு வருஷம் கழிச்சு நல்ல கம்பெனி போறது..."

"பெர்பெக்ட்" அதுவரை ஏதோ சிந்தித்து கொண்டிருந்த இன்னொரு நண்பன்.

"என்னடா பெர்பெக்ட்..?"

"உங்க அப்பாக்கு இது தெரியுமா...??"

"ம்ம்.."

"பார்த்தியா....இப்போ உன்ன நேரடியா அரிசி மண்டிக்கு கூப்பிட்டா போவியா..?போகமாட்ட ..ஆனா ஒரு வருஷம் கழிச்சு அரிசி மண்டிக்குதான் போவ.....இதுக்கு பேர்தான் பெர்பெக்ட் ப்லன்னிங்-நு சொல்றது..."

ஒரு வழியாக படிப்பு முடிந்து ராஜேஷ் வேலை தொடங்கினான். இவனுடன் படித்தவர்களில் சிலருக்கு வேறு இடங்களில் படிப்பு முடித்தவுடனேயே வேலை கிடைத்தது. சிலர் மலேசியா எல்லாம் சென்றார்கள்.

ஒரு வருட வேலையும் முடிந்து இவனையும் சேர்த்து நால்வர் மட்டுமே வேறு ஏதேனும் வேலை கிடைக்காமல் இருந்தனர். கம்பெனி என்ன நினைத்தோ ராஜேஷை இன்னொரு வருடம் கூட தேவைப்பட்டால் வேலையை தொடரலாம் என்றனர்.

கம்பெனி முதலாளி செய்த பாவத்துக்கு பிராயச்சித்தம் தேடினார் போல.ராஜேஷ் மிக்க மகிழ்ச்சி அடைந்தான்.

நானும், என் நண்பர்களும் ராஜேஷைவிட நிறையவே ஊதியம் வாங்கினோம். நானும் ஒரு புகழ் பெற்ற மென்பொருள் நிறுவனத்தில்தான் வேலை பார்த்து வந்தேன். நாங்கள் அனைவரும் அவனை வேறு நிறுவனத்திற்கு மாறுமாறு வற்புறுத்தினோம். அவன் ஒவ்வொரு முறையும், "கொஞ்சம் படிச்சிகிறேண்டா. இண்டர்வியுலே கேள்வி எல்லாம் கேட்பாங்க இல்ல.." என்பான்.

எங்களில் ஒரு நண்பன், உண்மையான அக்கறையுடன், "உனக்கு winamp ல பாட்டு போட தெரியுமில்ல..?"

"ம்ம்"

"மீடியா பிளேயர்ல படம் ..?"

"ம்ம்.."

"அது போதும். விடு பார்த்துக்கலாம்."

"ஆனா நான் வேல பாக்குறது டாட்.நெட் டா. அதுலதான் கேள்வி கேட்பாங்க."

"விட்ரா. winamp தெரியுது, டாட்.நெட் தெரியாமலா இருக்கும்..?" .

நான் அவனை இடைமறித்து, "என்னடா இன்னும் படிக்கிற...நீ போற மொத இண்டர்வியுவே கிளியர் பண்ணனும்னு அவசியம் இல்லே...மொதல்ல முயற்சி பண்ணு...அப்புறம் பார்ப்போம் " என்று சொல்லி ஒரு வழியாக இரண்டாம் ஆண்டு முடிவில் நான் என் நிறுவனத்திலேயே அவனை பரிந்துரை செய்தேன்.

அதற்கான நேர்முகம்தான் இன்று. கொசுவத்தியை அணைத்துவிடலாம்.

நான் என் நிறுவனத்தின் உள்ளே சென்றேன். இரண்டாம் மாடியில் ராஜேஷ் அமர்ந்து இருந்தான். "என்னடா ஆச்சு..?"

"இந்த பாரம் மொதல்ல எப்பிடி பில்-அப் பண்றதுன்னு சொல்டா..நானே கொஞ்சம் பண்ண ஆரம்பிச்சிட்டேன்."

"அதுக்குள்ள மொத ரவுண்டு முடிஞ்சதா..?"

தொழில் சார்ந்த கேள்விகள் முதல் சுற்றில் இருக்கும். அதில் தேர்வு பெற்றவர்கள் மட்டுமே இந்த விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும். அடுத்தது மனித வள சுற்று. அதில் பொதுவாக கொஞ்சம் பேசி, மனித வள பணியாளரிடம் சம்பள பேரம் பேச வேண்டும்.

"டேய்...நான் பில்-அப் பண்றேன். மொதல்ல என்ன நடந்ததுன்னு சொல்லு.."

"சொல்றேன்-டா.....இத முடிச்சிட்டு வந்திடறேன்.."

விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்கிறேன் என்று அங்கு அங்கு அடித்து திருத்தியிருந்தான், அவன் பெயர் உட்பட. "டேய், இதென்ன உன்னோட கணக்கு பரீட்சைத் தாளா..உன் பெயரக்கூட உனக்கு சரியா எழுத தெரியாதா..?"

"இல்லடா.... மொதல்ல இனிசியல் தானே போடனும்னு போட்டேன். அப்புறம்தான் பச்ட் நேம், லாஸ்ட் நேம் ..." தலையை சொரிந்தான்.

"HR ரவுண்டு-ல அவ்வளவு சுலபமா வேலை போகாது....நான் இத பார்த்ததுக்கு அப்புறம் அத மாத்திக்கனும்னு தோணுது..."

"என்னடா சொல்ற..?"

"அத விடு. உனக்கு என்ன பதில் வேணும்னு கேளு. நான் சொல்றேன்."

தொடங்கினான்.
"காரியார் கோலா..அப்டீனா..? "என்னடா என் strength..?"

"ம்ம்..ஒரே நேரத்துல 40 இட்லி சாப்பிடுவேன்னு போடு.."

"டேய்...ப்ளீஸ் டா.." நான் ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாக பதில் சொன்னேன்.

"டேய், எவ்ளோடா சம்பளம் கேட்கலாம்..?"

"கூச்சமே படறதில்ல......கேளு ஒரு 5 லட்ச ரூவா கேளு..."

"ரொம்ப ஜாச்தியிள்ள....?"

"நீ பாக்குற வேலைக்கு நியாயப்படி நீதான் அவங்களுக்கு கொடுக்கணும்.....பரவா இல்ல....கேட்டுப்பாரு.."

உள்ளே போய் வந்தான். "என்னடா இவன், 4.75 தான் கொடுப்பேன்னு சொல்லிட்டான்."

"அட நாயே...உண்மையிலே உனக்கு வேல கெடைச்சிருச்சா..?"

"ஆமா ஜகதீசு உனக்கு எவ்ளோ சம்பளம் இங்க....என்னோட ஜாஸ்தியா..." நக்கல் கலந்த தொனியில் கேட்டான்.

யோசித்து பார்த்தால் எனக்கு இதை விட குறைவுதான் என்பது தெரிந்தது.

"ஒழுங்கு மரியாதையா மொத ரவுண்டு என்ன நடந்துச்சுன்னு சொல்லு..."

"இதுதான் நடந்தது...நான் மொதல்ல உள்ளே போனேன். அவரு டாட்.நெட் கேள்வி ஒன்னு கேட்டாரு. நான் சரியாய் தப்பான்ன பதில் சொன்னேன். அவரு சரிபன்னாரு. இன்னொரு கேள்வி கேட்டாரு, நாமதான் தப்பா சொல்றேமேன்னு, இந்த தடவ சொல்லவே இல்லை. அவரு என்ன தயவு பண்ணி வெளிய போக சொல்லிட்டார். நான் வந்துட்டேன்."

"என்னடா சொல்ற...அப்புறம் எப்டி ரெண்டாவது ரவுண்டு.."

"இருடா கத இன்னும் முடியல....எனக்கு அடுத்து இன்னொருத்தன் போனான். நானாவது 5 நிமிஷம் இருந்தேன். அவன் சரியா 3 நிமிஷம். வெளிய வந்துட்டான்.அவனே பார்த்து நான் சிரிச்சிட்டு இருக்கும்போதே அவரே வெளிய வந்தார். என்ட்ட எங்க மத்தவங்கன்னு கேட்டாரு."

"ம்ம்....எங்க போயிருந்தாங்க அவங்க எல்லாம்..? ஒரு நிமிஷம் இரு. இதே மாடிலதான் உனக்கு மொத ரவுண்டு நடந்ததா..?"

"மத்தவங்களா.....வந்தது மொத்தம் ரெண்டுபேர்தாண்டா..."

"என்னது...?"

"ஆமா....இதே அதிர்ச்சிதான் அவரு முகத்துலையும். சரின்னு நான் கிளம்பினேன்...என்ன திரும்ப கூப்பிட்டு மறுபடியும் உள்ள வர சொன்னாரு. மறுபடியும் கேள்வி கேட்டாரு. அவரே பதிலும் சொன்னாரு. இப்படியே ஒரு பத்து கேள்வி. பத்து பதில். இதெல்லாம் படிக்க எவ்ளோ நாள் ஆகும்னு கேட்டாரு. நான் ஒரு 3 வாரம் சொன்னேன்."

"என்ன சொன்ன..? அந்த கேள்வியாவது உனக்கு ஞாபகம் இருக்கா..?"

"அவர பாக்க பாவமா இருந்துச்சுடா...அதான் சொன்னேன்."

"அட நாசமா போனவனே...."

"சரிடா, அதான் வேல கிடைச்சிடுச்சே , உனக்கு ட்ரீட் வேணுமா..?"

"இந்த கருமத்த கேட்டபுரம் கொஞ்சம் விஷம் இருந்தா வாங்கிக் கொடு.."


இதெல்லாம் நடந்து ஒரு வருடம் ஆனது. என்னுடைய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த ராஜேஷ் ஒரு வருடம் பல பல ப்ராஜெக்ட்ஸ் மாற்றப்பட்டான். கடைசியாக நேற்று மைக்ரோசாப்ட் ப்ராஜெக்ட் ஒன்றில் சேர்ந்திருப்பதாக சொன்னான். இன்று அதிகாலை செய்தித்தாள் எடுத்தேன். முதல் பக்கத்தில் இருந்த செய்தி இது: "Bill Gates retired today".