Tuesday, March 31, 2009

கதை - 1

Share |
அவளிடமிருந்து ஒரு மின்னஞ்சல். கூடவே சில ஆஃப்லைன் தகவல்கள்.
"என்னை கூப்பிடு"
"எப்படி இருக்கிறாய்"
"ஏன் தொலைபேசவில்லை"
"எனக்கு திருமணம்."

மின்னஞ்சலிலும் வரும் ஜூன் மாதம் தனக்கு திருமணம் என்றும் நேரம் கிடைக்கும்போது தொலைபேசிக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தாள்.நான் சரியாக சாப்பிடுகிறேனா, நல்ல படியாக உடம்பை கவனித்துகொள்கிறேனா என்றும் கேட்டிருந்தாள்.

சத்யா. என் எல்.கே.ஜி முதல் ஆறாம் வகுப்பு வரை என்னுடன் படித்த தோழி. நாங்கள் அப்பொழுது மூன்றாம் வகுப்பு படித்து கொண்டிருந்தோம். எங்கள் பள்ளியில் ஆங்கில வழி கல்வி என்பதால் அங்கு எப்பொழுதுமே ஆங்கிலத்தில்தான் உரையாற்ற வேண்டும் என்பது எழுதப்பட்ட விதி. குறிப்பாக ஆசிரியை பாடம் எடுக்கும் சமயங்களில். அவ்வாறு ஆங்கிலத்தில் பேசாமல் தமிழில் பேசினால் நிட்சயம் தண்டனை உண்டு.

நாங்கள் மூன்றாம் வகுப்பே படிப்பதால் எங்களின் தண்டனை கொஞ்சம் வித்தியாசமாய் அமைந்தது. சிறுவன் ஒருவன் மாட்டிக்கொண்டால் அவன் ஒரு வாரம் முழுவதும் ஒரு சிறுமி பக்கத்தில் உட்கார வேண்டும். அதேதான் அவர்களுக்கும். வேடிக்கையான தண்டனை என்றாலும் பலருக்கு அது மான பிரச்சனையாகவும், சில விஷமம் பிடித்த சிறுவர்களின் விளையாட்டகவும் அது அமைந்தது.

அப்படி ஒரு சமயம் சத்யா தமிழில் பேச அவள் என் பக்கத்தில் உட்காரவைக்கப்பட்டாள். சத்யாவிற்கு மிகுந்த கூட்சமாய் போனது. நான் அதனை எப்படி எடுத்துகொண்டேன் என்பதை அறியாவிட்டாலும், அந்த நிகழ்ச்சி இன்று வரை ஞாபகத்தில் இருக்கிறது.

முதல் நாள் சத்யா ஒன்றும் பேசவில்லை. இரண்டாம் மூன்றாம் நாள் சில கேள்விகள் கேட்டாள். நான்காம் ஐந்தாம் நாள் அவள் கொண்டு வந்த தின்பண்டங்களை எனக்கும் கொடுத்தாள். கடைசி நாள் நாங்கள் இருவரும் தமிழிலேயே பேசிக்கொண்டிருந்தோம்.

அதன் பிறகு சத்யா எனக்கு ஒரு நல்ல தோழியாகவும், என்னுடைய சில தோழர்களுக்கு 'என் ஆளாகவும்' ஆனாள்.


ஏழாம் வகுப்பு. நான் வேறு ஒரு பள்ளிக்கு மாறினேன். சத்யா அங்கேயே தொடர்ந்தாள். தொடக்கத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. பிறகு பழகிப் போனது. ஒவ்வொரு ஆண்டும் என் பழைய பள்ளியில் இருந்து என் பள்ளிக்கு வருபவர்களிடம் சத்யாவைப் பற்றி கேட்டு தெரிந்துகொள்வேன். .
காலங்கள் உருண்டோடியது. கடமை, கல்வி என்று ஒரு சமயத்தில் நான் சத்யாவை மறந்தே போயிருந்தேன். சென்ற முறை பள்ளிப் பிரிவை விட இம்முறை பிரிவில் கொஞ்சம் வலி இருந்தது.


கல்லூரி..... புதிய நண்பர்கள், புதிய தேடல்கள், புதிய மாற்றங்கள். முதலாம் ஆண்டு முடிவில் பள்ளி நண்பர்கள் எல்லோரும் மீண்டும் ஒன்று கூடினோம். ஒவ்வொருவரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள,
கார்த்தி
"டேய், உனக்கு சத்யாங்குற பொண்ண தெரியுமா..?"
"தெரியும் கார்த்தி. ஏன் கேட்குற..?"

"அவ உன்ன பத்தி கேட்டா. நீ அவகூடதான் படிச்சியாம்ள. ஏன்டா இப்படி தாய புள்ளைய பழகிட்டு என்கிட்டே ஒரு வார்த்த சொல்லல பார்த்தியா...."
"டேய், என்னடா வேணும் உனக்கு .?"

"என்ன மாப்ள. உனக்காக உயிரையே கொடுப்பா போலதெரியுது.." - இது ரவி.
"ஆகா ஆரம்பிசிடீங்கலாடா...??. ஆள விடுங்கடா சாமி. எனக்கு யாரையும் தெரியாது"

என் உயிர் தோழன் ராஜேஷ் வந்தான்.
'டேய், அவன விடுங்க. மாப்ள என்ன சொல்ற..?"

"என்ன..? என்ன சொல்ற..?"
"ம்ம்-நு....ஒரு வார்த்தை சொல்லு....."

எங்கள் கேளிக்கைகளில் நான் சத்யாவை பற்றி ஒன்றும் பெரிதாய் கேட்டுக்கொள்ளவில்லை.

ஒவ்வொரு முறை கார்த்தியோடு பேசும்போதெல்லாம் சத்யாவை பற்றி ஏதாவது சொல்லுவான்.

கல்லூரியும் முடிந்தது. எனக்கும் மற்ற பல கல்லூரி, பள்ளி நண்பர்களுக்கும் சென்னையில் வேலை கிடைத்தது.நாங்கள் எல்லோரும் வண்டி, கைபேசி என ஒவ்வொன்றாய் வாங்கினோம்.


ஒரு முறை கார்த்தி யாரிடமோ கைபேசியில் பேசிக்கொண்டே என் அறைக்கு வந்தான்.

"கொஞ்சம் இரு அவன் ரூமுக்குதான் வந்திருக்கேன்".
"யார்ட்டடா பேசுற..? ராஜேஷ்-ஆ..?"

பேசச் சொல்லி, என்னிடம் நீட்டினான்.
"மாப்ள...."
"ஜெகன்...."

"சாரி. யாரு நீங்க....?"
"என்னபா என் குரல் எல்லாம் மறந்து போச்சா..? ஆமா கேட்டு எவ்ளோ நாள் இருக்கும்..."
சத்யா..?!

"சத்யா...."
"பரவா இல்ல கண்டுபிடிச்சிட்டியே....."
".......
".....

அவள் அண்ணனுக்கு திருமணம் என்றும் நான் கண்டிப்பாக வர வேண்டும் என்றும் கேட்டுகொண்டாள். எனக்கும் நீண்ட நாட்கள் பிறகு ஒரு தோழியை சந்திப்பது குதூகலமாய் இருந்தது.

நானும் கார்த்தியும் சென்றோம்.
"வா ஜெகன். எப்படி இருக்க...? அப்பா ஆள் எவ்வளவு மாறிப்போயிட்ட?"
"ம்ம்.....நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க..??"

அதற்குள் அங்கிருந்து சத்யா என குரல் கேட்க "இரு ஜெகன் வந்திடறேன்" என போனாள். பிறகு அங்கு அங்கு பார்க்க முடிந்ததே தவிர நாங்கள் கிளம்பும்வரை அவளால் பேச முடியவில்லை. உணவரயிலும் உட்கார வைத்துவிட்டு போய்விட்டாள்.

"சாரி ஜெகன். ஒரே வேல"
"ம்ம்...பார்த்தேன்."
"நல்லா சாப்ட்டியா?"
"ம்ம்....சாப்ட்டேன். சரிப்பா நான் கிளம்புறேன்....நீயும் பொய் ரெஸ்ட் எடு...."

அடுத்த இரண்டு மாதங்களில் அவளிடம் இருந்து நிறைய தொலைபேசி அழைப்புகள் வந்தது. ஒவ்வொரு முறையும் நான் ஏன் அழைப்பதில்லை என கோவித்துகொள்வாள். அப்பொழுதுதான் என் நிறுவனம் என்னை ஜெர்மனி அனுப்ப முடிவு செய்தது.


"என்ன ஜெர்மனி-யா..? எவ்ளோ நாள்பா..?" அவசரம்.
"நாள் இல்ல.."

"அப்டீனா...??" பதஷ்டம்.
"அப்டீனா.....நாள் இல்ல வருஷம்-நு அர்த்தம்...."

"ஜெகன்.....நான் உன்ட்ட பேசணும்.." தயக்கம்.
"பேசிட்டுதானே இருக்க இப்போ...."

"இல்ல ஜெகன் உன்ட்ட ஒண்ணு கேட்கணும்..." தவிப்பு.
"ஏன் ஒண்ணு கேட்குற....நெறைய கேளு......."

"I am serious" கோபம்.
"அய்யயோ என்ன ஆச்சு...??"

"எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியல......உன்ன நான் எப்பவும் மறந்ததே இல்ல. நீ ஸ்கூல் விட்டு போனதுக்கு அப்பறமும் சரி. நீ காலேஜ்ல படிக்கும்போதும் சரி."
"சரி"

"இல்ல ஜெகன். உன் கல்யாணத்த பத்தி என்ன நெனச்சிருக்க..?"
"இப்போ என்ன அவசரம் அதுக்கு..?"

அவள் எங்கு வருகிறாள் என்பதை ஊகிக்க முடிந்தாலும், நான் அதற்கு தயாராக இல்லை.

"இல்லபா.....எதாவது….. லவ் பண்றியா..??" அவளின் தயக்கம் இப்பொழுது அதிகமானது.....

"உனக்கு என்ன வேணும் இப்போ..??"

"ஜெகன் நான் எப்பவும் உன்னோட இருக்கணும்னு ஆசை படறேன். உன்னோட சேர்ந்து வாழணும்னு....."

"ஓகே...நீ சொல்ல வந்தது புரியுது....."

"தேங்க்ஸ் ஜெகன்."

தேங்க்ஸ்-ஆ என என் மனம் பதறியது......எனக்கு காதலில் விருப்பம் இல்லையா இல்லை இவள் மேல் விருப்பம் இல்லையா என யோசிக்க தோன்றவில்லை. அனால் இவள் மனதை புண்படுத்தும் எண்ணம் துளிகூட இல்லை.

"சத்யா. ஒரு நிமிஷம். உண்மைய சொல்லனும்னா என்ன சொல்றதுன்னு தெரியல. இத பத்தி நான் யோசிச்சது கூட கிடையாது. இத எப்டி எடுத்துகறதுன்னு கூட என்னால யோசிக்க முடியல. ஆனா காதலுக்கான வயசெல்லாம் தாண்டி நான் ரொம்ப தூரம் வந்துட்ட மாதிரிதான் நெனைக்கிறேன்...."

"ஜெகன். நானும் இத அந்த மாதிரி பாக்கல... ரெண்டு பேறும் இப்போ ஒரு நல்ல வேலையில இருக்கோம். மெச்சூர்டா இருக்கோம். நம்ம வாழ்கைய நம்ம சூஸ் பண்ற இடத்தில இருக்கோம்."

"இல்ல. கொஞ்சம் வீட்ட பத்தியெல்லாம் யோசிச்சுப்பாரு. அவங்களுக்கு இது கஷ்டம்ங்கரத விட இது தேவையில்லாத வேலையா தோணுது எனக்கு. எங்க அப்பா அம்மாவ கஷ்டப்படுத்துற எண்ணமும் எனக்கில...."

"இல்ல ஜெகன். நாம பேசலாம். நாம பேசி புரிய வைக்கலாம்...."
எனக்கு கோபம் வந்தது. ஆனாலும் பொறுமையாய் எடுத்துரைத்தேன்.

"எனக்கே இது தேவையான்னு தோனுறபோது.... நாம எதுக்கு வீட்ல பேசணும்..? நான் சொல்றத புரிஞ்சுக்க...."

ஒரு வழியாய் பேசி முடித்தேன். அவளுக்கு புரிந்தது போல் தோன்றவில்லை.

என் கைபேசியில் ஒரு தகவல்.
"ஜெகன். சாரி. உங்க அப்பா அம்மா என் அப்பா அம்மா மாதிரிதான். என்னால உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கொடுக்க முடியும்னு தோணுது. ஒவ்வொரு தடவ உனக்கு கால் பண்ணும்போதும் நான் இத சொல்லனும்னு நெனப்பேன். நீயும் எனக்கு ஒரு நல்ல துணையா இருப்ப....ப்ளீஸ் யோசி..."

எனக்கு இப்பொழுது கோபம் தலைக்கேறியது. அவளை அழைத்தேன். அவள் எடுக்கவில்லை. ஒரு பத்து நிமிடம் கழித்து அவளே கூப்பிட்டால்....
"சொல்லு ஜெகன்."

"உனக்கு சொன்னாதான் புரிய மாட்டிங்குதே. அப்புறம் என்ன சொல்றது..?
இப்போ தெளிவா சொல்றேன் கேட்டுக்க. நான் உன்ன காதலிக்க முடியாது....எனக்கு உன் மேல விருப்பம் இல்ல....புரியுதா..?"

"சாரி பா...." அவளால் பேச முடியவில்லை.......எனக்கு கஷ்டமாய் போனது...ஆனால் அவளுக்கு ஆறுதல் சொல்லும் நேரம் இதுவல்ல....

"சரி....நான் வேணும்னா அப்புறம் கூப்பிடறேன்..."

"இல்லபா நீ பேசு. நீ என்ன கூப்பிடாம இருந்துடுவியோன்னு எனக்கு பயமா இருக்கு...."

"சீ....ஏன் போட்டு கொழபிக்கிற..? "

"சாரி ஜெகன்."

"சரி....விடு...."

இந்த முறை அவளுக்கு புரிந்திருக்கும் என நம்பினேன். நான் செய்தது எனக்கு தவறாய் தோன்றவில்லை.

ஜெர்மனி கிளம்பும் முன் வீட்டுக்கு வர சொன்னால். எனக்கு நேரமும், விருப்பமும் அதிகமாய் இல்லை.


நான் ஜெர்மனி வந்தேன். தினம் ஒரு காலை வணக்கம், சில நகைச்சுவை, காதல் பற்றி எதாவது ஒரு செய்தி என் மின்னஞ்சல் பெட்டியில் இருக்கும். நேரம் கிடைக்கும்போது அழைக்க சொன்னால்.

ஆரம்பத்தில் தவிர்த்து வந்தேன். "இன்னும் என் மேல கோபமா"....போன்ற மின்னஞ்சல்கள் என்னை பேச வைத்தது....

அவள் அம்மாவிற்கு என் அம்மாவையும், என் மாமாவையும் நன்றாய் தெரியும் என சொன்னால்....என் அம்மாவும், அவளின் அம்மாவும் பள்ளி தோழிகளாம். மேலும் அவர்கள் இருவரும் பக்க பக்கமான வீட்டில்தான் குடி இருந்தார்களாம்....

நான் கேட்டுகொண்டேன்......காதல் பற்றி ஏதாவது பேச்சு எழுந்தால் நான் மௌனம் கடைப்பிடித்தேன்.

வேலை பளு, நேரமின்மை......அவளுடன் பேசி நிறைய நாட்கள் ஆகின.
இப்பொழுது அவளுக்கு திருமணமாம்......



"ஹே.....வாழ்த்துக்கள்..."

"அப்பா ...கல்யாணம்னு தெரிஞ்ச உடனே கூப்பிடற..? உனக்கு இப்போ சந்தோசமா..?"
நான் அதற்கு இடம் கொடுக்க தயாராக இல்லை.

"கண்டிப்பா.....என் தோழிக்கு கல்யாணம்னா சந்தோசம் இல்லையா..?? சரி அவர் என்ன பண்றார்..? எங்க இருக்கார்..?"

"இங்கதான் சென்னை-ல. பேங்க்-ல வேல செய்றார்."

"என்னவா இருக்காரு...நமக்கு எதாவது கடன் கெடைக்குமா..??

"அதெல்லாம் தெரியாது.......உனக்கு எப்போ கல்யாணம்.....அதான் ஒரு தொல்லை ஒளிஞ்சதே...."

"தினம் கூப்பிடராரா..?? எப்பவாவது சந்திச்சீங்களா..?"

"ம்ம்...கூப்டார். எனக்கு என்ன பேசுறதுன்னு தெரியல....ரெண்டு தடவ திட்டிவிட்டேன்....அவங்க வீட்ல பேசுனாங்க....ஏன் போன் பேச மாடிங்கிரன்னு கேட்டாங்க...."

"பேசு.....இதுல என்ன தப்பு இருக்கு....?"

"அப்புறம் வேலையெல்லாம் எப்டி போது..?"

"ம்ம்..போது.....பத்திரிகை அடிச்சாச்சா..?"

"அதெல்லாம் எனக்கு தெரியாது.......ஏன் கேட்குற..??

"இல்ல உனக்கு எங்க அம்மாவ தெரியும்ல....?"

"அட பாவி.....அதான் ஏற்கனவே சொன்னேன்-ல......உங்க அம்மா பேரு தேவகி. எங்க அம்மா பேரு இந்திரா. ரெண்டு பேரும் ஒன்னா படிச்சாங்க. உங்க மாமாவையும் எங்க அம்மாக்கு நல்லா தெரியும். ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்து வீட்ல இருந்தாங்க.....இப்போ போய் கேட்குறியே எல்லாம் முடிஞ்சப்புறம்...."

"இல்ல....பத்திரிக்கை அம்மாட்ட கொடுன்னு சொல்ல வந்தேன்...."

"..............."

"சத்யா....."

"சாரி......."

"சரி அம்மாவ நான் கல்யாணத்துக்கு வர சொல்றேன்...நான் சென்னை வந்ததும் உங்க வீட்டுக்கு வந்து சாப்பிடறேன்....அதுக்குள்ள அவருக்கு கத்து கொடுத்துருவியா..??"

"நான் கூப்பிடபோதெல்லாம் வராத.....இப்போ வா..??"

"ஏன் கோவிச்சுக்குற, நான் கண்டிப்பா வந்து சாப்பிடுவேன்.....சரியா..??"

"தனியா வருவியா...இல்ல உன் கல்யாணத்துக்கு அப்புறம் வருவியா..??"
"
ஆமா வந்து இறங்கின உடனே கல்யாணம்தான்.....அதனால.....ஆளப்பாரு...."

"அதான் பாக்க மாட்டேன்னு சொல்லிட்டியே....அப்புறம் என்ன..?"

கடைசியில், "இனிமேலாவது அடிக்கடி பேசு.....இப்போ பேசுறதுல ஒன்னும் பிரச்சனை இல்லையே"....என்றாள்.

நான் ஓர் பெண்ணிடம் பேசுகிறேன் என ஊகித்த நண்பன், "ஆகையால் காதல் செய்வீர் உலகத்தீரே" என்றான்.