Wednesday, November 19, 2014

உலக கழிப்பறை தினம்

Share |
சேவை பெறும் உரிமைக்காக தமிழகம் முழுக்க பயணம் என்றவுடன் என் மனதில் எழுந்த முதல் பயம் - கழிவறை.  ஊரை விட்டு, கல்லூரியை விட்டு, நண்பர்கள் அறையை விட்டு, உறவினர் வீட்டில் இருந்துகொண்டு வேலைக்கு சென்ற நாட்கள் தொட்டே நான் 'Western' கழிப்பறைக்கு மாறிவிட்டேன். வேலை விசயமாக சென்ற வெளிநாட்டில் கேட்கவா வேண்டும்?

அமெரிக்காவிலிருந்து திரும்பிய பிறகும் 'Western' கழிப்பறைதான் தொடர்ந்தது. எப்பொழுதாவது ஊருக்கோ இல்லை நம்மூர் கழிப்பறை இருக்கும் வீட்டிற்கு செல்ல நேர்ந்தாலோ என் மனமும், உடலும் படும்பாடு எனக்கு மட்டுமே தெரியும்.

என் மனைவியின் கிராமத்தில், திருவிழா சமயத்தில் அவர்கள் வீட்டிற்கு நான் வரவேண்டும் என்பதற்காகவே 'Western' கழிப்பறை கட்டினாள் என் மனைவி.

அப்படிப்பட்டவன் எல்லா மாவட்டங்களிலும் என்ன பாடுபடுவேனோ என்ற பயம் எனக்கு நிச்சயம் இருந்தது. சென்ற முதல் நாள் திருவள்ளூர் மாவட்டத்தில் சமூக சேவகர் அண்ணன் 'குத்தாம்பாக்கம்' இளங்கோ அவர்களின் அலுவலகத்தில் தங்கினோம். நம்மூர் கழிப்பறைதான். ஒரு வழியாக அனுசரித்தேன். இரண்டாம் நாள் அதே மாவட்டத்தில் கொல்லகுப்பம். இன்றுவரை நான் முகம் பார்த்திராத நண்பர் கோகுல் அவர்களின் வீட்டில். இங்கும் அதேதான். சமாளித்தேன்.

மூன்றாவது நாள் காஞ்சிபுரம் கிராமத்தில் புதுப்பாக்கம் என்ற கிராமம். சமூகத்திற்காக பணியாற்றும் திரு.அன்பு அவர்களின் அணியிலிருந்த தம்பி ஸ்ரீதர் தன் தாத்தா வீட்டில் தங்கவைத்தான். வீட்டை சுற்றிப் பார்த்தேன். கழிப்பறை கட்டப்பட்டு அதில் சிமெண்ட் மூட்டைகளை அடுக்கிவைத்திருந்தார்கள்.

'என்ன இது?' என்றேன்.
'தாத்தா எப்போதும் வெளியதான் போவாங்க'.
தண்ணீர் தொட்டியை எட்டிப்பார்த்தேன். ஒரு உடும்பு படுத்திருந்தது. இதே வேற காலைல சமாளிக்கணுமா?
'நீங்க கவலைபடாதீங்க..தண்ணி எடுத்துக்கலாம். நான் காலைல எழுப்பிவிடறேன்'

தம்பி ஒரு 4.30 மணிக்கெல்லாம் எழுப்பினான். கொஞ்ச தூரம் அழைத்து சென்றான்.

கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. சென்னையிலிருந்து 60 கி.மீ தொலைவு. சுகாதாரம் பல்லிக்கிறது. அவன் ஒரு பொறியியல் பட்டதாரி. சமூக பணிகள் செய்பவன். திறந்த வெளி கழித்தல் தவறென அவனுக்கு தெரியவில்லை."ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் உங்க ஊர்ல இல்லையா?"
"இருக்கு..ரொம்ப தூரம் போகணும்.போனாலும் பெண்கள் மட்டும்தான் போவாங்க"
"பரவாயில்ல..பெண்கள் பயன்படுத்துவாங்கள்ல.."
"இல்ல....தண்ணி இல்லாததால அவுங்களும் பயன்படுத்தமாட்டாங்க"

அடுத்தது காஞ்சிபுரம் திருக்கழுக்குன்றம் தாலுக்கா - வள்ளிபுரம் கிராமம். குப்பைகள் நிறைந்த, கூட்டி பல காலம் ஆன சமூக கூடத்தில் தங்கினோம். ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் பக்கத்திலேயே இருந்தது. காலை ஜெய் உள்ளே சென்றார்.

'Pipe Connection இருக்கு, Tap இல்ல'
பரவாயில்லை வெளியில் தண்ணீர் பிடித்துக்கொள்ளலாம் என முடிவெடுத்தார். உள்ளே நுழைந்தவரால் உட்கார முடியவில்லை. அவ்வளவு சின்ன இடம் .சிறப்பான கட்டுமானம்.

அருகிலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம் சென்று நான் என் பணியை முடித்தேன். அடுத்து விழுப்புரம். கிள்ளியூர் கிராமம். காலை 4.30 மணி. சூடான தேனீர் கொடுத்து அழைத்து சென்றார் கட்சி உறுப்பினர் கோவிந்தராஜன். ஒரு பெரிய திறந்த வெளி மலக்காடு. திரும்பி வரும்போது ஊருக்குள் நுழையும் வரை மலம், மலம், மலம். தற்பொழுதே புதுப்பிக்கப்பட்டு முக்கியஸ்தர் ஒருவரின் வருகைக்காக காத்துகிடந்தது ஒருங்கிணைந்த சுகாதார வளாகம்.அடுத்து கடலூர், கிள்ளை - ஒருங்கிணைந்த சுகாதார வளாகமும் இல்லாத கிராமம். கடல் தண்ணீரை மாசுபடுத்தும் அவலம். இராமேஸ்வரம் நிரபராதி கூட்டமைப்பின் அய்யா திரு.அருளானந்தம் சொன்னது நினைவுக்கு வந்தது. "நிகோபார்ல இருக்கிற காட்டுவாசிகள் கடல அசுத்தம் செய்றதில்ல..அவுங்கள பொறுத்த வறை கடல் அவுங்க அம்மா".

அவன் காட்டுவாசி, நாம் நாட்டுவாசி.

அடுத்து ஜெய்யின் நண்பர் வீடு. நெய்வேலி. அடுத்து கடலூர் பென்னாடம். சமூக சேவகர் திரு.ஜோதி அவர்களின் வீடு. அடுத்து அரியலூர் மாவட்டம் ஆதனங்குறிச்சியில் 'உன்னால் முடியும் தம்பி' குழுவுடன். காலை அரியலூர் சிமெண்ட தொழிற்சாலைகளை பார்த்தவாறு திறந்த வெளி கழித்தல். ஒருங்கிணைந்த வளாகம் இருந்தும் பயன்படுத்த முடியாத கிராமம்.

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை (கீச்சாங்குப்பம் - கடற்கரை கிராமம்) - தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களிலும் திறந்தவெளி மலம் கழித்தல் மட்டுமே நடக்கிறது என்பதை சத்தியமாக சொல்ல முடியும்.

இதற்கு என்னதான் தீர்வு?
முதலில் பிரச்சனை(கள்) :

1. பெரும்பாலான அரசு விசயங்களில் இருக்கும் லஞ்சம் மற்றும் ஊழல். வளாகம் கட்டுவதில் அரசு அதிகாரி முதல் ஒப்பந்தாரர் வரை ஊழல். சரியாக கட்டப்பட்டுள்ளதா என்ற கண்காணிப்பு அறவே இல்லாதது.

2. தண்ணீர் பிரச்சனை.

முதல் பிரச்சனைக்கான தீர்வு :

கிராம பஞ்சாயத்துகளுக்கு முழு அதிகாரம். பஞ்சாயத்து தலைவர்களை கவனிக்கும் மாவட்ட நிர்வாகம் (ஆட்சியர்). அதிகார பரவலாக்கல். திறந்த வெளி கழிப்பிடம் ஒழிக்கும் கிராம பஞ்சாயத்திற்கு வருடந்தோறும் ஊக்கத்தொகை.

இரண்டாம் பிரச்சனைக்கான தீர்வு :

இதற்கான பதிலும் எங்கள் பயணத்திலேயே இருந்தது. பெரம்பலூர் மாவட்டம் தேனூர் கிராமத்தில் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுவரும் சூ.மே.சு எனும் சூழல் மேம்பாட்டு சுகாதார திட்டம். தேனூர் கிராமம் தெரிந்தவர்களுக்கு திரு.செந்திலை தெரிந்திருக்க வாய்ப்புண்டு. தேனூர் மாவட்டத்தில் அவர் செய்து வரும் அளப்பரிய பணிகளுக்காக தேனூர் 'சிவாஜி' (ஆம், ரஜினி படம்தான்) எனும் தலைப்பில் பிரபலமான வார இதழ் கட்டுரை எழுதியது.

அவரிடம் திறந்தவெளி கழிப்பிடம் குறித்து பேசினேன். (சூ.மே.சு திட்டம் குறித்து அவர் எங்களுக்கு அறிமுகப்படுத்தும் முன்).

"நீங்க ஏன் மலத்த அசிங்கமா பாக்குறீங்க?" என்றார் அவர்.
எனக்கு ஒரு மாதிரியாய் இருந்தது.
"மலம் ஒரு உரம்" என்று அவர் இந்த இடத்திற்கு அழைத்து சென்றார்.

(நிறைய படிக்க நினைப்பவர்கள் 'Compost'. 'Ecosan' போன்ற வார்த்தைகளை google செய்யவும்).

இந்த நடைமுறையை நான் சொல்வதைவிட இந்த புகைப்படங்கள் சிறப்பாக சொல்லும். மனித கழிவை உரமாக மாற்றி அவர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள்.இது வேறு எங்காவது உண்டா என்ற கேள்விக்கு, இது முதன் முதலில் முசிறியில் துவங்கப்பட்டது என்றார்.அப்பொழுது வந்த செய்தியின் இணைப்பு - Pilot project for eco-san toilets at Musiri

காவேரி அசுத்தாமவதை தடுக்க 2005ஆம் ஆண்டே இந்த திட்டம் துவங்கியுள்ளது. ஆனால் இத்தனை ஆண்டுகளில் அரசாங்கம் இதனை பெரிதாக ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என்பது கேள்விக்குறியாக உள்ளது. பிரச்சனைகளுக்கான தீர்வுகள் உண்டு. நடைமுறை..?

என்னதான் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் இருந்தாலும் அவற்றை மக்கள் பயன்படுத்த அரசு மேற்கொள்ளும் பணி ஏதேனும் உண்டா? எனக்கு தெரிந்தவரை "சீ........திறந்தவெளியில் மலம் கழிப்பவரை கண்டால்...சீ...." சொல்லுவோம் என்ற ஒரு ஓவியத்தோடு அரசு தன் கடமையை முடித்துக்கொள்கிறது. எப்படி "இந்த இடத்தில் புகைப்பிடிப்பது குற்றம் " என்ற வாசகம் தாங்கிய இடம் புகைப்பிடிப்பிற்கான இடமோ அதே போல் ஓவியம் உள்ள இடம் மலம் கழிக்க ஏதுவான இடமாக மாறிப்போகிறது.

மிக முக்கியமான இன்று - ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் நிச்சயம் நீண்ட கால தீர்வில்லை. ஒவ்வொருவரும் அவர்வர் வீட்டில் கழிப்பிடம் கட்டுவதுதான் சரியான தீர்வு. கட்டிய பிறகு அதனை பயன்படுத்துவது அவசியம்.

இதற்கான ஒரு நிகழ்வையும் திண்டுக்கல்லில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டோம். மக்கள் தங்களது வீடுகளிலேயே கழிப்பறை கட்ட அரசு மானியம் தருகிறது. பயனாளிகளை எவ்வாறு தேர்ந்தெடுத்தார்கள் தெரியுமா? - 100 நாள் வேலை பார்ப்பவர் மட்டுமே பயனாளி. அவரும் கட்டி முடித்து கிராம நிர்வாக அலுலவரிடம் சென்று அந்த பணத்தை பெற வேண்டும். இது உருப்படுமா?

திறந்தவெளியில் கழிப்பது என்பது கிராமத்தோடு நின்றுவிடுவதில்லை. இன்றும் சிங்கார சென்னையின் கூவ நதியோரம் மக்கள் திறந்த வெளியில்தான் கழிக்கிறார்கள். எங்கு வேண்டுமானாலும் ஆண்கள் சிறுநீர் கழிக்கலாம் என்ற நிலை. இதில் பெண்கள்பாடு?

போராட்டங்களின் போதும், முக்கியஸ்தர் பாதுகாப்பிற்காகவும் ஒரு நாள் முழுக்க வீதியில் நிற்கும் பெண் காவலர்களின் துன்ப நிலை அறிவோமா நாம்? எந்த அரசிற்கு அவர்கள் பாதுகாப்பு தருகிறார்களோ அந்த அரசிற்கு அவர்களின் அவல நிலை புரியுமா?

தமிழகத்தின் சுற்றுலா பகுதிகளில் (தேவிப்பட்டிணம், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம், சேதுக்கரை....) ஏதாவது ஒரு இடத்திலாவது பெண்களுக்கான கழிப்பறையோ அல்லது அவர்களுக்கான உடை மாற்றும் அறையோ செயல்படுகிறதா?

அரசோ அல்லது தனியாரோ - பள்ளிகளின் கழிப்பறைகள் லட்சணத்தை உச்சநீதிமன்றம் எவ்வளவு கிழித்தாலும் சிறிது அளவேனும் நம் அரசாங்களுக்கு வெட்கம் உண்டா?கேள்விகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம்...

உலக கழிப்பறை தினம் கொண்டாடும் உலக கழிப்பறை அமைப்பு சொல்லும் 4 விசயங்களோடு இந்த கட்டுரையை முடிப்பது சரியாக இருக்கும்.

1. ஒவ்வொரு தினமும் 1000 குழந்தைகள் சுகாதார குறைப்பாட்டால் உலகம் முழுக்க இறக்கிறார்கள்.
2. சுத்தமான மற்றும் பாதுகாப்பான கழிவறைகள் இல்லாததால், பாடசாலைகளுக்கு பெண் குழந்தைகளின் வருகை தொடர்ந்து குறைகிறது.
3. நிர்ணயிக்கப்பட்ட "புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகளில்" சுகாதாரத் துறையில் நாம் இதுவரை அறவே முன்னேற்றம் காணாமல் இருக்கிறோம். உலகத்தில் 15% மக்கள் இன்னும் திறந்தவெளியில்தான் கழிக்கிறார்கள்.
4. சுகாதாரத்திற்கு நாம் செலவு செய்யும் 1 டாலர் நமக்கு 8 டாலருக்கான நன்மைகளை பயக்கிறது என்பதை புரிந்துகொள்ளாமல் இருக்கிறோம்.