Tuesday, December 29, 2015

சகாயம், இளைஞர் அரசியல், சட்டமன்ற தேர்தல் இன்ன பிற

Share |
மு.கு : பல நாட்களுக்கு முன் எழுத நினைத்த பதிவு இது. நேரமின்மையால் எழுத முடியவில்லை.

பொறுப்பு துறப்பு  : இந்த கட்டுரை சிலருக்கு - அரசியலுக்கு புதிதான சிலருக்கு - சோர்வடையவைப்பதாகவும், சிலருக்கு நடைமுறையை உணர்த்தும் யதார்த்த பதிவாகவும் தெரியலாம்.

இளைஞர்களால் நிகழ்த்தப்பட்ட 2 அரசியல் முன்னெடுப்பு கூட்டங்களுக்கு செல்லும் வாய்ப்பு அமைந்தது. முதலில் மிகப் பெரிய வாழ்த்துக்கள் அவர்களுக்கு. தீய அரசியலுக்கு மாற்று நல்ல அரசியலே என்ற உணர்வு வரவேற்கக்கூடிய ஒன்று. போற்றுதலுக்குரியது.

அரசியலுக்கு வரும் பலரும் இந்த சமயத்தில் வர 2 முக்கிய காரணிகள். 1) பேரிடரில் அரசின் மீதான கோபம். 2) அந்த பேரிடர் ஏற்படுத்தியிருக்கும் அரசியல் வெற்றிடம் - அதற்கு தோதாக சட்டமன்ற தேர்தல்.

முதலில் நல்லவங்க எல்லோரும் ஒன்னு சேர முடியாதா? என்கிற கேள்வி பல வருடங்களாக கேட்டுக்கொண்டே இருக்கும் ஒன்றுதான். புதியவர்களுக்கு இது புது கேள்வி. அவ்வளவுதான். அதற்கான முயற்சிகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதா என்றால் அதற்கும் பதில் ஆம் என்பதே. சமீபத்திய உதாரணம் என்றால் அய்யா எஸ்.எம். அரசு அவர்களின் முயற்சியில் 'மக்கள் நல்வாழ்வு இணையம்' 2014 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டதை சொல்லலாம்.

இது போன்ற முயற்சிகளில் வரும் சவால்கள் என்ன?

1) கொள்கை - அட என்ன சார் நீங்க, யாருகிட்ட கொள்கை இருக்கு, காம்ரேடுகளே அவுங்க கொள்கைய பலர்ட்ட அடமானம் வெச்ச பிறகு என்ன கொள்கை வெங்காயம்?

கொள்கை குறித்த இன்று விவாதங்கள் கிடையாது என்பது உண்மைதான். எல்லோரும் தொங்கும் தே.மு.தி.கவிடம் என்ன கொள்கை உள்ளது. மக்கள் நல கூட்டணியில் உள்ளவர்கள் கம்யூனிச கொள்கைகளை ஏற்றுக்கொண்டார்கள் என்று சொல்ல முடியுமா?

சரி கொள்கை என்று சொல்ல வேண்டாம். சில பிரச்சனைகளுக்கான தீர்வு வேண்டாமா? பின் எதனை இந்த புதிய இயக்கங்கள் தங்களின் தேர்தல் பிரச்சாரமாக முன்னிறுத்தும். கூடங்குளத்தையும், ஈழத்தையும் தொடாமல் போக முடியுமா? மதுக்கொள்கையில் பூரண மதுவிலக்குதான் வேண்டும் என்று எல்லோரும் ஏற்றுக்கொள்வார்களா இல்லை அது எங்கும் தோல்வியானதால் மது கட்டுப்பாடு போதும் என்று சொல்வார்களா?

அதெல்லாம் எதுமே தேவையில்லை சார் - ஊழல ஒழிச்சா போதும் என்று ஒற்றை வரிதான் கொள்கை என்றால் - அதனை சேவை பெறும் உரிமை சட்டம், லோக்அயுக்தா போன்ற அமைப்பு ரீதியான மாற்றங்கள் கொண்டு செய்வார்களா இல்லை லஞ்சம் என்பது தனி மனித பிரச்சனை என்று பரைசாற்றுவார்களா?

2) கட்டமைப்பு - திமுக், அதிமுகவின் கோட்டையை இன்று வரை உடைக்க முடியாத காரணம் - இந்த கட்டமைப்பு. விஜயகாந்த துப்பினாலும் 'என் மேலே படலியே' என்று பல தலைவர்களும் அவர் பின் செல்ல முக்கிய காரணம் தே.மு.தி.கவின் கட்டமைப்பு. (சில இடங்களில் திமுக, அதிமுகவை விட தே.மு.திகவின் கட்டமைப்பு ஆச்சர்யப்படுத்தும்).

இந்த கட்டமைப்பு என்பது சில நாட்களோ இல்லை சில மாதங்களிலோ உருவான ஒன்றல்ல. பல வருடங்கள்.

இல்லை கட்டமைப்பு எல்லாம் வேண்டாம் - அதற்கு மாற்று 'கூட்டமைப்பு' என்று சொல்வது வார்த்தை ஜாலத்திற்கு ஒத்துவருமே தவிர பூத் முகவர், ஓட்டு எண்ணும் முகவர் என்ற கட்டம் வரும்போது மூச்சு முட்டிப்போகும். அவ்வளவு ஏன்? வார நாளில் உங்களுடன் பிரச்சாரம் செய்ய பலர் கூட வருவதற்கே நீங்கள் பிரயத்தனப்பட வேண்டியிருக்கும்.

3) ஈகோ - ஆயிரம் குற்றங்கள் வைத்தாலும், இப்பொழுது இருக்கும் கட்சிகளுக்கு (எல்லா கட்சிகளும் இல்லை) இருக்கும் நற்பண்பு - தலைமை சொல்வது சரியோ, தவறோ அதனை செய்து முடிக்கும் 'கீழ்ப்படிதல்'.

ஆனால் புதிய இயக்கங்கள், கட்சிகள் 'ஈகோ கூடாது, ஈகோ கூடாது' என்று எவ்வளவு சொன்னாலும், அதை விட்டு அவர்களுக்குள்ளே ட்விஸ்ட் ஆகும் போக்குதான் இன்றுவரை உள்ளது.

4) ஊடக ஆதரவு - இதனை நான் சொல்லத்தேவையில்லை. டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றி பெற ஒரு முக்கிய காரணியாக ஊடகம் இருந்தது. 'நிர்பயா' போராட்டம் வலுப் பெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட மகத்தான பங்கு வகித்தது. இங்கு? எந்த ஒரு ஊடகமும் இளைஞர்களை, புதியவர்களை ஆதரிக்க முன் வராது. அதற்கான காரணமும் வெளிப்படை. சமூக வளைத்தளம் கொண்டு பல மக்களை சென்றடையலாம். ஆனால் சமூக வலைத்தளம் இல்லாதவர்களை?

எல்லாவற்றையும் தாண்டி இன்று களத்திற்கு வரும் பலர் - தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்பவர் - 'நாம நின்னா நம்ம பக்கத்து வீட்டுக்காரர் ஓட்டுப்போடுவாரா? இது வரைக்கும் நம்ம தொகுதிக்கு (நீங்கள் பல சமுதாய வேலைகள் செய்தவராய் இருக்கலாம்) என்ன செய்துள்ளோம்' என யோசியுங்கள்

அப்போ நாங்க என்னதான் செய்றது?

Start with Small - சின்னதில் இருந்து துவங்குங்கள். நடிச்சா ஹூரோதான் என்ற போக்கை விட்டு, அமெரிக்க மாப்பிள்ளை, ஹீரோவின் நண்பன் என்ற கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர் போன்ற இடங்களுக்கான வெற்றி பெறுவதற்கான பணியை இப்பொழுதே துவக்குங்கள் - இன்னும் சரியாக 10 மாதம் உள்ளது. சுமார் லட்சக்கணக்கான பதவிகள் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ளது. மறுபடியும் சொல்கிறேன் - பணியை இப்பொழுதே துவக்குங்கள் - அதுவே உங்கள் மூலதனம்.

அப்போ சட்டமன்றம் ?

இன்னும் 5 வருடம் சிக்கி, சீரழிந்து சின்னாபின்னாமாக போகட்டும். நம் ஊரில் செயற்கை பேரிடர்களுக்கும், பிரச்சனைகளுக்கும் பஞ்சமா என்ன?

அடுத்த 5 வருடத்தில் பிரச்சனைகளை தெரிந்துகொள்ளுங்கள். உண்மையை தேடுங்கள். தீர்வுகளை முன்வையுங்கள். அறிவுப்பூர்வமான அரசியலுக்கு உங்களை தயார் செய்துகொள்ளுங்கள்.

கடைசியாக, அது என்னடா சகாயம்னு தலைப்பு போட்டு, இது வரை அவரை பற்றி ஒன்னும் சொல்லலியே என்பவர்களுக்காக -

நான் பாடிக்குப்பம் என்ற என் பகுதியில் தொடர்ந்து வேலை செய்து வருகிறேன். அங்கிருக்கும் மிகத் தெளிவான ஒரு இளைஞன் கொண்டுதான் ஒவ்வொரு நிவாரண உதவியையும் திட்டமிடுவோம். அவன் படிப்பது லயோலாவில். அவனுடைய ஆசை IAS ஆவது. அவனிடம் சென்ற வாரம் (சகாயம் அவர்களுக்காக நடந்த பேரணிக்கு முந்தைய நாள்) 'நாளைக்கு சகாயம் அரசியலுக்கு வரணும்னு ஒரு கூட்டம் நடக்குதுபா' என்றேன்.

அவன் சொன்ன பதில் - 'சகாயம்னா யாரு சார்?'

அதிர்ச்சி அடையாதீர்கள். சென்னையின் குப்பம், குடிசை பகுதிகளில் சகாயம் அவர்களும், நடிகர் தனுஷும் போட்டியிட்டால் தனுஷ் மிகப்பெரிய வெற்றிவடைவார்.

இவர்கள்தான் உண்மையான (காசு வாங்கினாலும், இல்லாவிட்டாலும்) வாக்காளர்கள் என்றும், இவர்கள் ஏன் மற்ற கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்குவதில்லை என்றும் சொல்லித்தான் புரிய வேண்டுமோ?