Wednesday, February 3, 2016

கதை - 16. வெறிபிடித்த நாய் சட்டம்

Share |
ஒரு ஊரில் வெறி பிடித்த நாய்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. அந்த வெறி பிடித்த நாய்களிலும் உயர் ரக நாய்கள், தெரு நாய்கள் என வகை பிரிக்கப்பட்டு இருக்கிறது.
நாய்கள் கடித்தால் அதற்கு ஏற்றவாறு மக்கள் மருந்துண்டார்கள். ஊசி போட்டுக்கொண்டார்கள். சிலர் மற்ற மனிதர்களை கூட கடித்துவைத்தார்கள். ஆனால் வெறிப்பிடித்த நாய்களின் கடி குறித்து பெரும்பாலும் யாரும் புகார் சொல்லவில்லை.
அதனையும் மீறி கடித்தாங்காமல் யாராவது புகார் சொன்னால் - உயர் ரக நாய்களை மாநகராட்சி பிடிப்பதற்கு அரசாங்கத்திடம் நிச்சயம் அனுமதி வாங்க வேண்டும். அரசாங்கத்திடம் அனுமதி பெற்று அந்த உயர் ரக நாய்கள் மீது புகார் கொடுப்பதற்கு பேசாமல் இன்னும் இரண்டு கடியே வாங்கிக்கொள்ளலாம் போல இருந்தது.
கடி பொறுக்க முடியாத ஒருவர் நீதிமன்றத்தை நாடினார். அய்யா இந்த உயர் ரக நாய்கள் கடித்தால் அரசாங்கத்தின் அனுமதி தேவையில்லை என சட்டம் போடுங்கள் என்றார்.
நீதிமன்றம் அரசாங்கத்திடம் பதில் கேட்டது. எந்த நாய் கடித்தாலும் மக்களுக்கு துன்பம்தானே, பின் ஏன் உயர் ரக நாய்களுக்கு விலக்கு என்றது. அனைத்து வெறிப் பிடித்த நாய்களுக்கும் பொதுவான நீதி வேண்டும் என்றது.
அரசாங்கம் - "அய்யா நீங்கள் சொல்வது 100% சரி. இனி உயர் ரக நாய் மட்டுமில்லாது எந்த வெறிப்பிடித்த நாய் கடித்தாலும், அரசாங்க அனுமதி பெற வேண்டும் என்று நாங்கள் சட்டம் இயற்றுகிறோம். இதன் மூலம் நீதி அனைத்து வெறி பிடித்த நாய்களுக்கும் சமமாகும் என்றது."
வழக்கு தொடுத்த நபர் அடுத்த பிறவியிலாவது நான் ஒரு நாயாகவோ இல்லை நாய்களை காப்பாற்றும் அரசாங்கத்தின் அங்கமாகவோ இருக்க வேண்டும் என்று சொல்லி மாண்டார்.
இந்த கதையை எழுத தூண்டிய செய்தி -http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=194118