Wednesday, December 22, 2010

அது ஒரு புறவழிச் சாலை!

Share |
அது ஒரு புறவழிச் சாலை!

வேகத்தடை ஏதுமில்லா
புறவழிச் சாலை!

முகப்பு விளக்குதான்
எங்கள் முகவரி

முகப்பு விளக்கு வெளிச்சமே
எங்கள் தொடர் இருட்டு


இரு கண்களை நானும்
ஒரு கண்ணை அவனும்
ஊடுருவும் தருணம்!

ஊடல்
கூடல் முன்
ஊடுருவலே பிரதானம்!

ஆணா,
பெண்ணா,
என்னா என்பதில்
படியும் பேரம்

இருட்டில்
திருட்டில்
எல்லாம் முடியும்


வெளிச்சம் கண்டு
வெகு நாளானது

வெய்யில் வாராது
போய்விடுமோ?

வெய்யில் இல்லாத
தேசத்தில் மழை வருமோ?

ஐயோ வேண்டாம்
மழை வரும் வேளையில்தான்
மானம் அதிகமாய்
பரிபோகிறது!

நெடு நாட்களுக்கு பிறகான கவிதை முயற்சி இது. என்னை பாதிக்காத எந்த ஒரு விசயத்தையும் என்னால் கவிதையாய் உருவாக்க முடிவதில்லை. நான் தினம் செல்லும் புறவழி சாலையில் பார்க்கிற நிகழ்வு இது. மிருகங்கள் கூட மழைக்கு ஒதுங்கிவிடுகிறது. மழையில் இவர்கள் படும் துயரம்....

Sunday, December 5, 2010

தா

Share |
பெண் பார்த்து வந்த தருணம் முதல் ஒவ்வொரு நொடியையும் அவளுக்காகவே அவன் வாழ்கிறான். தன்னை முழுவதும் மாற்றிக்கொள்கிறான். மிகுந்த சிரமப்பட்டு அவளுக்காக ஏற்படுத்திய இப்படிபட்ட காதலை தன்னுடைய தவறான செயலினால் அவன் இழக்க நேரிடுகிறது. இனி எப்பொழுதும் அவள் இல்லை என்று உறுதியாகிறது. துக்கங்களை போக்கும் மருந்தான கண்ணீர் கூட விட முடியாத சூழலில் தன் குடும்பத்தோடு பயணம் செய்ய நேரிடுகிறது. இப்படிபட்ட ஒரு சமயத்தில் தன் நண்பர்களோடு செல்வதே சரியென அவன் தந்தை நினைக்கிறார். நடந்து செல்லும் வழியில் யாரோ ஒருவரின் வீட்டில் ஒப்பாரி சத்தம் கேட்க அங்கே இருக்கும் சடலத்தை பார்த்து அவன் உடைந்து கதறுகிறான். சோகத்தை சொல்ல இப்படிப்பட்ட ஒரு கவித்துவமான காட்சியை நான் எந்த திரைப்படத்திலும் கண்டதில்லை.

தன் நண்பர்களில் ஒருவன் நாயகனை 'தண்ணி அடிக்க' காலையிலே வந்து அழைக்கிறான். அப்பொழுது வீட்டிற்கு வந்த ஒரு குடும்ப நண்பர் தன் மகளுக்கு நாயகனை திருமணம் செய்ய கேட்டு செல்கிறார். நாயகன் நண்பனுடன் செல்கிறான். அவர்கள் மது அருந்துகிறார்கள். அவன் இரவு வீடு திரும்புகிறான். அவன் தாய் அவனிடம் திருமணம் சம்பந்தமான பேச்சை துவங்குகிறார். இது ஒரு மிக சாதாரணமான காட்சி. திரைப்படங்களில் continuity என்று சொல்லப்படும் 'தொடர்சியான நிலை' படம் நெடுக வருவதற்கு இது ஒரு சிறந்த சாட்சி.அந்த continuityயே நம்மை திரைப்படத்துடன் படம் நெடுக ஒன்ற வைக்கிறது.இவ்வளவு அறிமுகங்களுடன் (நடிகர்கள் - 'நாடோடிகளில் வருபவரை தவிர எல்லோரும், இசை, பாடிய அனைத்து பாடகர்கள், நடனம், சண்டை பயிற்சி, ஒளிப்பதிவு, இயக்கம்) வந்த படம் என்பது பார்ப்பவரை மலைக்க வைக்கிறது. குறிப்பாக நாயகனின் நடிப்பு. நாயகன் ஸ்ரீஹரி படத்தின் இறுதியில் அவரும் கலங்கி நம்மையும் கண் கலங்க வைக்கிறார். நாயகனின் நண்பர்களாக வரும் நடிகர்களான பெனிட்டோ, மதன், சண்முகம், வெற்றிவேல் மற்றும் கோவிந்தன் நிறைவான நடிப்பை தந்துள்ளனர். நாயகனின் தாய் வசந்தி ஒரு நல்ல தேர்வு.

இசை அமைப்பாளர் ஸ்ரீவிஜய் அவர்களை பற்றி கூற வேண்டிய அவசியமில்லை. அவரின் 'ஏதோ ஒரு ஏக்கமோ', 'என்னை தொட்டுபுட்டா'. 'இமை திறந்தேன்' அவரை பற்றி பேசும்.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் மற்றும் இயக்கம் - சூர்ய பிரபாகர். எத்தனையோ துறைகளில் எவ்வளவோ திறமைசாலிகள் இருந்தாலும் வெளிச்சத்திற்கு அதிகமாகய் நாம் கொண்டுவருவது திரைத்துரையினரைதான். இந்த படம் பார்த்த பிறகு அதில் ஒன்றும் தவறு இருப்பதாய் தோன்றவில்லை.

படத்தின் பெயர் - 'தா'

நான் இதுவரை எந்த படத்தையும் 'திறனாய்வு' செய்தததில்லை. அது தவறான விசயம் என்று கூட நினைத்துள்ளேன். (திறனாய்வு என்ற பெயரில் திரைப்படத்தின் கதையை சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுவதே காரணம்). ஆனால் விமர்சனம் போன்ற விசயங்களே பலராலும் அறியப்படாத படத்தை பலரும் அறிய உதவுகிறது என்பதை புரிந்துகொண்டதால் இந்த விமர்சனம்.

Saturday, October 23, 2010

நம் நெடுநாளைய கனவு - பட்டதாரி வேட்பாளர்

Share |
இவர் பெயர் சந்திரன். இவர் பிறந்த ஆண்டு 1920. இவர் பட்டம் பெற்ற ஆண்டு 1940. தன்னுடைய 90வது வயதில் இவரை நாங்கள் சந்தித்த இடம் ஈகா திரையரங்கின் எதிர் உள்ள சென்னை 5வது மண்டல அலுவலகத்தில். இந்த வயதில் கீழ்பாக் கார்டனில் அமைந்திருக்கும் தன்னுடைய வீட்டில் இருந்து நடந்தே வந்திருந்தார் அவர்.

திரு சந்திரன் அவர்களின் பட்ட சான்றிதழை பார்த்த ஒரு நண்பர், 'அந்த காலத்துல பட்டம் வாங்குறதெல்லாம் சாதாரண காரியம் இல்ல' என்றார்.1940ஆம் ஆண்டு பட்டதாரி ஆனது நிட்சயம் பெரிய காரியம். ஆனாலும் அதனை விட சிறப்பான காரியம் அவர் இன்று ஆற்ற வந்திருக்கும் தன் ஜனநாயக கடமை.

என்ன அந்த ஜனநாயக கடமை? எதற்காக அவர் இவ்வளவு சிரமப்படுகிறார்?
தமிழக அரசால் தற்பொழுது அறிவிக்கப்பட்ட மேலவை தொகுதிக்கு தன்னை வாக்களானாக இணைத்துக்கொள்வதே அந்த ஜனநாயக கடமை.

மேலவை - ஒரு பார்வை - மேலவை பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கு:
மேலவையில் மொத்தம் இருக்க வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை - 78. (26 - சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்தடுக்கபடுபவர்கள், 26 - கவுன்சிலர்கலாள் தேர்ந்தடுக்கபடுபவர்கள், 12 - ஆளுனரால் சட்டசபையின் பரிந்துரையில் தேர்ந்தடுக்கபடுபவர்கள், 7 - ஆசிரியர்கள் தொகுதியில் தேர்ந்தடுக்கபடுபவர்கள், 7 - பட்டதாரிகள் தொகுதியில் தேர்ந்தடுக்கபடுபவர்கள்).

ஒரு பட்டதாரியோ/பட்டயப் படிப்பு வாங்கியவரோதான் நம்மை ஆள வேண்டும் என்ற நம் கனவின் ஆரம்பமே இந்த பட்டதாரிகள் தொகுதி.

பட்டதாரிகள் தொகுதியில் தங்களை இணைக்க ஒரே தகுதி:
தங்களுடைய பட்ட/பட்டய படிப்பை நவம்பர் 2007 முன்னதாக முடித்திருக்க வேண்டும்.

பட்டதாரிகள் தொகுதியில் இணைத்துகொள்ள:
1. இங்கு இணைக்கப்பட்ட படிவம் - 18 பூர்த்தி செய்யுங்கள்.

2. பட்டம் பெற்றதர்கான சான்றின் அசல் மற்றும் நகல் (பட்டப்படிப்பு சான்றிதழ், மதிப்பெண் தாள், ...... - ஏதேனும் ஒன்று)
3. தற்போது தங்கியிருக்கும் இடத்திற்கான இருப்பு சான்று அசல் மற்றும் நகல். ரேசன் அட்டை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

மேற்கண்ட படிவங்களை உங்களுடைய தாலுக்காவிலோ அல்லது உங்கள் வசிப்பிடத்தின் மண்டல அலுவலகத்திலோ தாக்கல் செய்ய வேண்டும்.
பட்டதாரிகளின் தினசரி அலுவல்களை மனதில் வைத்து சனி, ஞாயிறான இந்த வாரம் 23, 24 மற்றும் அடுத்த வாரம் 30,31 ஆகிய தினங்களில் இந்த அலுவலகங்கள் திறந்திருக்கும்.

90 வயதில் எத்துனை அடி வேண்டுனமானாலும் எடுத்து வைக்க ஒருவர் தயாராக உள்ளார். ஒரு அடி எடுத்துனவைக்க நாம் தயாராக உள்ளோமா?

தங்களின் மண்டல அலுவலகம் எதுவென தெரிந்துகொள்ள இங்கே சுட்டவும் -
http://changesociety.org/frm/viewtopic.php?id=22

தொடர் விபரங்களுக்கும், கேள்விகளுக்கும் -
http://changesociety.org/frm/viewforum.php?id=4

-இது ஒரு மாற்றம் சமூகத்தின் முயற்சி.

http://changesociety.org/

எங்கள் முயற்சி தொடர இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிரவும்.

Thursday, October 7, 2010

மாங்கல்யம் தந்துனானே

Share |
"என்ன தேதி இன்னைக்கு..?"
கேள்வி கேட்டு சுவரின் மேல் மாட்டப்பட்டிருந்த நாட்காட்டி பார்த்தார். அது புது வருட தேதியிலேயே இருந்தது.


"ரொம்ப மேல இருக்கா அதான்...." என தலையை சொரிந்தார்.
அவர் சம்மனமிட்டு உட்கார்ந்து எழுதுவதற்கு ஏதுவாக அந்த பலகை அமைந்திருந்தது. அந்த பலகையின் முன் புறம் 'கோயில் கணக்கர்' என எழுதியிருந்தது. அந்த நாட்காட்டியின் பக்கத்திலேயே இருந்த ஒரு பச்சை நிற பலகை அர்ச்சனையில் ஆரம்பித்து மிருக காணிக்கை வரைக்கான அனுமதி சீட்டுக்கு எவ்வளவென பறைசாற்றியது.


பக்கத்தில் நின்றிருந்த எங்கள் அலுவலக நண்பர் குமார், "இன்னைக்கு தேதி...." என்று தொடங்கும்போது என் கண்கள் பார்த்த அவன், "சுபா, ஸ்ரீய கூட்டிட்டு முன்னாடி போ..அய்யர் எல்லா ஏற்பாட்டயும் செய்திட்டாரான்னு கொஞ்சம் பாரு. நாங்க ரஷீது வாங்கிட்டு வறோம்" என்றான்.


நான் அவன் கண்கள் பார்த்துக்கொண்டே அங்கிருந்து கிளம்பினேன். கொஞ்சமும் கலங்கமில்லாத கண்கள். இப்பொழுதும் பெரிதாய் சலனப்படவில்லை.


தூரத்தில் குமார் "தேதி 8/8/2008 சாமி" என்பது கேட்டது.


8/8/2007
அன்று பயங்கர மழை. ஆகஸ்ட் மாதம் இவ்வளவு மழை யாரும் எதிர்பார்க்காத ஒன்று. நான் வேலை பார்த்து வந்தது ஆவடி பக்கம் இருக்கும் ஒரு கால் செண்டரில். என்னுடய ஷிஃப்ட் நேரம் மாலை 4.30 முதல் இரவு 12.30 வரை. என்னுடைய விடுதி இருப்பது நுங்கம்பாக்கத்தில். விடுதியில் வந்து ஏற்றிக்கொள்ளவும், இறக்கிவிடவும் எங்கள் நிறுவனத்தில் ஒரு மாருதி வேன் ஏற்பாடு செய்திருந்தார்கள். நான் வேலைக்கு சேர்ந்து மூன்று ஆண்டுகள் ஆனதால் வேலை நேரம் நிறையவே பழகிவிட்டது. மாதம் ஒரு முறை அம்மாவையும், தங்கைகளையும் பார்க்க போகும்பொழுது கூட இந்த நேரம் வீட்டில் தூங்கி விடுவேன்.


என்னுடய விடுதிக்கு பக்கத்தில்தான் எங்கள் நிறுவனம் ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்தது. அப்பொழுதும் கார் சேவைகள் இருந்தாலும் நடந்தே விடுதிக்கு சென்று விடுவேன்.இரவு நேர அமைதி எனக்கு மிகப்பிடித்த ஒன்று.
சென்ற வருடம் இங்கு மாற்றியப்பின்தான் வேறு வழியில்லாமல் காரில் வருகிறேன். தூரத்தின் காரணமாக நாந்தான் முதல் ஆளாய் ஏற்றப்படுவேன், நாந்தான் கடைசியாக இறக்கிவிடப்படுவேன். என்னுடன் வரும் இருவர் இறங்கிய பிறகு, ஒரு அரை மணி நேரம் பயணம் செய்தால்தான் என்னுடய விடுதி வரும்.


பயண நேரத்தை உபயோகமாக செலவழிக்க சில நாவல்கள் வாசிக்க தொடங்கினேன். கி.ராவும், ஜெயகாந்தனும் என்னுடைய உலகத்திற்கு முழுமையாக வந்தனர். என்னுடய பயண நேரம் எனக்கு மிகச்சிறப்பாக அமைந்தது. கூட வரும் இருவரும் நிறைய பேசக் கூடியவர்கள் இல்லை என்றாலும், ஏதோ கொஞ்சம் பேசுவார்கள். அது இப்பொழுது அவர்களுக்குள்ளே நின்றுபோனது. வண்டி ஓட்டுனரை சரியாக கூட பார்த்ததில்லை. "போலாமா மேடம்", "குட் நைட் மேடம்" என்பதை தவிர வேறு எதும் பேசிக்கேட்டதில்லை.


அன்று மழை காரணமாக வண்டி கொஞ்சம் நேரம் கழித்தே வந்தது. வந்தபோதே ஓட்டுனர் நனைந்து இருந்தார். "போலாமா மேடம்?". வண்டியை மிக மெதுவாய்தான் ஓட்டி சென்றார். வண்டி திடீர் என நின்றது. "சாரி மேடம்...மழைனால படுத்துது..." வண்டியை விட்டு கீழே இறங்கினார். மாருதி வேனின் பின் பக்கம் வந்து ஏதோ தேடினார்.


அந்த இருவரில் ஒருத்தி, "மழைன்னு தெரியிதில்ல, வேற வண்டி எடுத்துட்டு வந்திருக்கலாம்ல..வந்து சேறானுங்க பாரு" என்றாள்.


'பாவம் அவரும் என்ன பன்னுவாரு..மழை இப்படி இருக்கும்னு அவருக்கு தெரியுமா' என நான் நினைத்துக்கொண்டேன். அவள் மீண்டும் ஏதும் பேசவில்லை.


ஒரு பத்து நிமிடத்தில் வண்டி கிளம்பியது. அவர்கள் இருவரும் இறங்கிய பிறகு வண்டி கிளம்பியது. மீண்டும் நின்றது. அவர்கள் அதை பார்த்தும் அவர்களின் விடுதிக்குள் சென்றனர்.


அவர் மீண்டும் இறங்கினார். மீண்டும் பின் வந்தார். ஏதோ தேடினார்.
"மேடம் உங்க சீட் கீழே ஒரு ஸ்க்ரெவ் ட்ரிவெர் இருக்கான்னு கொஞ்சம் பாருங்களேன். நான் கீழே குனிந்தேன். என் முதுகுக்கு பின் ஒரு பாரம் அழுத்தியது.


"ஏய்...என்ன செய்றீங்க..?"
"விட்றா..."
"அம்மா......கடவுளே...."
என் ஆடைகள் கிழிக்கப்பட்டன. அவனின் கைகள் எனக்கு அருவருப்பு உண்டு செய்தது.


அதன் பின் எப்படி நான் விடுதிக்கு வந்தேன் என்பதும், எப்படி நான் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தேன் என்பது இன்று வரை தெரியவில்லை.ஒவ்வொரு இரவும் நரகமாய் இருந்தது.


ஆனால் நானாகத்தான் காவல் துறைக்கு சென்றேன். அவனைப் பற்றி புகார் செய்தேன். அவன் சிறையில் அடைக்கப்பட்டான். காவல் துறை விசயத்தை நல்ல விதத்தில் கையாண்டது. இருந்தும் நான் பாதிக்கப்பட்டது ஊர் முழுக்க தெரிந்தது. என் சொந்த ஊருக்கு செல்வதிலேயே நிறைய சிக்கல் இருந்தது.


எங்களுக்கு தெரியாத சொந்தம் எல்லாம் வந்து நலம் விசாரித்து சென்றது.
"அவள சென்னயிலேயே தங்க சொல்லு... இங்க நீ தனியா இருக்க....ரெண்டு பொண்ணுங்கள வச்சிட்டு..."
நான் சென்னையிலேயே தங்கினேன். ஒரு மூன்று மாதம் கழித்து என் பழைய அலுவலகம் சென்றேன். நிறைய அனுதாபங்கள்.....மேலாளர் அழைத்தார்.


நலம் விசாரித்து முடித்து, "ஸ்ரீநிதி, சொல்றேன்னு தப்பா நெனசுக்காத, உனக்கு 3 மாசம் சம்பளம் தர்றோம். நீ வேலய விட்டு நின்னுக்கிரியா....உன்ன பாக்குற ஒவ்வொருத்தொரும் இந்த சூழ்நிலை அவ்வளவு பாதுகாப்பில்லாத மாதிரியே உணருவாங்க...அது எங்களுக்கு அவ்வளவு நல்லதில்லமா..."


வெளியே வந்தேன். என்னுடன் காரில் வரும் இருவரும் என்னுடய பழைய இருக்கையில் நின்றிருந்தனர்.
"ஒரு நிமிடம் எங்க கூட வர முடியும்மா?"

பெண்கள் கழிப்பறை கூட்டி சென்று இருவரும் என் காலில் விழுந்தனர். "அன்னைக்கு நாங்க மட்டும் கதவ சாத்தாம போயிருந்தா..எங்கள மன்னிச்சிடு ஸ்ரீ...."


அவர்களிடம் விடைபெற்றேன். நான் நிறுவனத்தை விட்டு வெளியே செல்வதை கேட்டு அவர்கள் முன்னர் வேலை செய்த பெங்களூர் கால் சென்டர் தொடர்புகள் தந்தனர்.


பெங்களூர்
இங்கு பகலில்தான் வேலை.என்னை பற்றி இங்கு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. யாருடனும் எனக்கு பேசவும் பிடிக்கவில்லை. மதிய வேலைகளில் கூட நாவல் படித்துக்கொண்டே சாப்பிடுவேன்.


என்னுடைய அனுபவத்திற்கு எனக்கு டீம் லீட் வேலை கிடைத்தது. என்னுடய ப்ரொஜெக்ட் லீட்தான் முரளி. அலுவல் காரணமாக நான் பேச வேண்டிய குமார், ப்ரேம், சுபா ஆகிய நால்வரில் இவனிடம்தான் நான் அதிகம் பேச வேண்டும். எல்லோரிடத்திலும் சகஜமாய் பழகுவான். தனக்கு மேலே வேலை செய்பவர்கள் கீழே இருப்பவர்கள் என்ற எந்த பாரபட்சமும் இல்லாமல் எல்லோரிடத்திலும் ஒரே மாதிரியாய் பழகுவான். எந்த இக்கட்டான சூல்நிலையிலும் அவனால் மட்டும் சிரிக்க முடியும்.வேலை தவிர்த்து அவன் கேட்கும் எந்த கேள்விக்கும் நான் பதில் சொன்னதில்லை.


எங்கள் அலுவலகத்தில் யாருக்கு பிறந்தநாள் வந்தாலும் அதை வெகு சிறப்பாக கொண்டாடுவர். என்னுடய பிறந்தனாளும் வந்தது. வேலை முடித்து எனக்காக என் குழுவில் இருந்த மூவரும், முரளியும் ஒரு கேக் வாங்கி காத்திருக்க, நான் விடுதிக்கு கிளம்பிவிட்டேன்.


அடுத்த தினம் எல்லோரும் என்னை திட்ட முரளி வந்து ஒரு பரிசுப்பொருள் வைத்துவிட்டு சென்றான். ஜெயகாந்தனின், “சில நேரங்களில் சில மனிதர்கள்”


உள்ளே “இனிய பிறந்தனாள் வாழ்த்து” என எழுதி இருந்தது.


அவனுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். “மன்னிக்கவும். நன்றி”


உடனே என் இடத்திற்கு வந்தான்.
“எல்லாரும் அத கொண்டு வாங்க....”
கேக் வந்தது.


நீண்ட நாட்கள் கழித்து சிரித்தேன். “ஸ்ரீ...உங்களுக்கு இது கூட தெரியுமா..?”
“எது ..?!”
“அதான் இப்போ எதோ ஒன்னு வாயில செஞ்சீங்களே.”
மீண்டும் சிரித்தேன்.


எல்லோருக்கும் நன்றி சொன்னேன்.
“தோடா..நன்றிக்குதான் இவ்வளவும் செஞ்சோம்னு நினைக்கிறீங்களா..? உங்களுக்கு சின்ன மீனு போட்டு, பெரிய மீனு பிடிக்கிற வித்தை தெரியுமா..?”
“அப்டீனா..?”
“பசங்களா...கொஞ்சம் சொல்லுங்கப்பா..”
“என்ன ஸ்ரீ இது கூட தெரியாம..ஆமா நீங்க வெஜ்ஜா..இல்ல நான்-வெஜ்ஜா..?”


எல்லொரும் வெளியே சென்று சாப்பிட்டோம். திரும்ப வரும்பொழுது எல்லோருடய வீடு பற்றியும் விசாரித்தேன். நாந்தான் கடைசியாக இறங்குவேன் என தோன்றியது.


அந்த பயம் என்னை கவ்விக்கொண்டது. ‘என்ன செய்வேன்’? எல்லொரும் ஒவ்வொருவராக இறங்கினார்கள். வண்டி நிற்பது போல தோன்றினால் நாமும் கீழே இறங்கிவிடலாம்.


“என்ன ஸ்ரீ பலமான யோசனை..?”
“ம்ம்...ஒன்னுமில்ல முரளி..”
“இருட்டு பார்த்தா பயமா..?”
“அதெல்லாம் இல்ல முரளி”
“நான் உங்கள்ட ஒன்னு கேட்கலாமா..?”
“என்ன முரளி..?”
“நேரடியா விசயத்துக்கு வரேன். நான் உன்ன காதலிக்கிரேன் ஸ்ரீ....”
“என்ன சொன்னீங்க..?”


அதற்கு பிறகு இருவரும் ஒன்றுமே பேசவில்லை. என் விடுதி வந்தது.
முரளி பேசினான்....”அப்பா... இப்போ பயம் இல்லாம வந்தீங்களா..? “
“என்ன சொல்றீங்க முரளி?”
“எங்கடா இவன் நம்மள லவ் பண்றானோன்னுங்ற நெனப்புல, மத்ததெல்லாம் மறந்து போச்சா..?”
“அப்போ...?” சிரித்துவிட்டேன்.
என்னை கேட்காதவன் போல், “என்ன இதுக்காக அவசரபட்டு என் காதல சொல்ல வேண்டியதா போச்சு..என் பிறந்தநால்ள சொல்லலாம்னு நெனச்சிருந்தேன். உன் பிறந்தநாளுக்கு சொல்லிட்டேன்.”
நான் அவனை முறைத்தேன்.
“நாளைக்கு ஆபிஸ்ல பாக்கலாமா..?” கார் பறந்தது.


அடுத்த தினம்.
அவன் இடத்திற்கு சென்றேன்.
“உங்கள்ட கொஞ்சம் பேசனும்..”


அலுவலக உணவகம் சென்றோம்.
நான் தொடங்குவதரற்குள் அவன், “உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா..? நேத்துதான் காதல சொன்னென், கனவுல வந்து எப்ப கல்யாணத்த வச்சிக்கலாம்னு இப்டியா தொல்ல பன்னுவ..? எனக்கு கொஞ்சம் டயம் குடும்மா..”
நான் மீண்டும் முறைத்தேன்.
“இப்ப என்னடான்னா ஆபிஷ் வந்த உடனே இங்க கூட்டிட்டு வர...காதலன் மேல ஆசை இருக்கலாம்..அதுக்காக இப்டியா..?”
“முரளி...உங்கள்ட நான் கொஞ்சம் சீரியசா பேசனும்..”
“ம்ம்..சொல்லு ஸ்ரீ..”
எல்லாம் சொன்னென்.


“எப்போ கல்யாணம் வச்சுக்கலாம்..?”
“என்ன முரளி....நான் சொன்னதெல்லாம் கேட்டப்புறம்....”
“உனக்கு ஆட்சேபனை இல்லன்னா அதே ஆகஸ்ட் 8 வச்சிக்கலாமா..?”
“முரளி எல்லாம் புரிஞ்சுதான் பேசுறியா..?”
“என்ன தேவயில்லாம சீரியசான ஆளா ஆக்குற நீ......சரி நீ உடம்பால கெட்டுபொய்ட்ட....உன் மனசு உண்டதானே இருக்கு...அத யாரும் ஒன்னும் பண்ணிடலயே..? எனக்கு உன் உடம்பு வேணாம்...உன் மனச மட்டும் கொடு.. சரியா..? இன்னும் ஒன்னு சொல்லவா...எனக்கு இந்த விசயம் எல்லாம் எப்பவோ தெரியும்."
எனக்கு பேரதிர்ச்சியாய் இருந்தது.
"உன்ன பார்த்த உடனே நான் உன்ன காதலிக்க ஆரம்பிச்சுட்டேன். சரி மொதல்ல உங்க வீட்ல போய் பேசிடுவோம்னு உன் பைல புரட்டுனேன். உன் அட்ரஸ் எடுத்து உங்க வீட்டுக்கு போனேன். உன் தையிரத்த, தன்னம்பிக்கைய தெரிஞ்சுக்கிட்டேன். அப்பதான் உன்ன நிறைய காதலிக்க ஆரம்பிச்சேன்.எத்தன பேருக்கு வரும் இந்த துணிச்சல்...நேத்து உன் பயம் போக நான் ஒன்னு சொன்னேன்..நீ கார் இறங்குர வரை பழச பத்தி நெனைக்கல....அதே மாதிரி அந்த சம்பவம் முழுக்க நீ மறக்கனும்னுதான் கல்யாணத்த கூட அதே நாள்ல வச்சிக்கலாம்மன்னு கேட்டேன்”


என் கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது.
முரளி கோவிலுக்குள் வந்தான். அய்யர் எல்லாம் தயார் செய்துவைத்திருந்தார்.
முரளி என்னிடம், “என்ன ஸ்ரீ தேதி நெனச்சு கண் கலங்குரியா..?”
“ஆமா....ஆனா பழைய தேதி நென்னசில்ல, புதுசு நெனச்சு...”
முரளி முகத்தில் ஆனந்த ரேகைகள்.


அய்யர், “தம்பி, வீட்ல போய் காதல் பண்ணலாம். இப்போ தாலிய கட்டுடா என்றார். மாங்கல்யம் தந்துனானே இருக்கா உங்க போன்ல”
ப்ரேம், “இருக்கு சாமி என்று....ரஹ்மானின் ‘மாங்கல்யம் தந்துனானே’ அலைபேசியில் போட்டான்.