Friday, October 26, 2012

பீட்சா

Share |

முதல் முறை, முதல் காட்சி படம் பார்த்தவுடன் எழுத நினைத்த திறனாய்வு. இரண்டாவது முறை பார்த்த பிறகாவது எழுதியிருக்க வேண்டும். ‘பீட்சா’ என்ற ஒரு ஆவியுடன் ஒரு வாரம் வாழ்ந்த பிறகு எழுதுகிறேன்J

முதல் நன்றி - இந்த திரைப்படத்தை நம்பிய தயாரிப்பாளர் திருக்குமரனுக்கு. இவருடைய நம்பிக்கை ஒன்று மட்டும் பலருக்கு வாழ்வு தரும்

படத்தின் கதையை யாரும் இதுவரை சொல்லவில்லை என்பதே படத்தின் முழு வெற்றி. திரைப்படத்தை பற்றி யாரும் அதிகம் எழுதாத, பேசாத விசயங்களையே இங்கே தர முயற்சி செய்கிறேன். நாயகனுக்கும், நாயகிக்கும் ஒரு சின்ன சண்டை. நாயகியின் மன நிலையை காட்சிகளால் மட்டுமே சொல்லப்பட வேண்டும். ஒரு மழையில் அவள் சோகம் தெரியலாம், ஆனால் அவள் சொல்ல நினைப்பதை அவள் தேனீர் குடிக்கும் கோப்பையில் “Bring Back the Joy” என மிக அழகாக சொல்லியிருப்பார். இப்படி அங்கங்கே சின்ன சின்ன ஹைக்கூக்கள்.



இந்தப் படம் ஒரு த்ரில்லர், ஹாரர் என்று பலவகையில் சொல்லப்பட்டாலும், படம் பார்த்துமுடிக்கும்பொழுது நீங்கள் பயம்கொண்ட அளவு நிச்சயம் சிரிக்கவும் செய்திருப்பீர்கள்.

படத்தின் ‘props’ – இதைப்பற்றி நாம் தனியாகவே பேசலாம். நாம் இதுவரை பார்த்த பேய் படங்களில் பார்த்த எந்தவொரு ‘பொருளையும்’ இந்த படத்தில் பார்க்க முடியாது. இருந்தாலும் ஒரு குழந்தையின் பொம்மை கூட உங்களை பயம்கொள்ள வைக்கும். அப்படிப்பட்ட ஒரு சிறப்பான திரைக்கதை.

விஜய் சேதுபதி – போஸ்டர்கள் எல்லாம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு அதற்கான மெனக்கெடல் நிச்சயம் உள்ளது. நாயகன் விஜய் சேதுபதியின் படம் (நிழற்படம்) ஒரு போஸ்டரில் கூட இல்லை. அவரின் நடிப்புக்கு ஒரு ஆளுயர கட்-அவுட்டே வைக்கலாம். ‘டேய் திரும்பாதடா.. பின்னாடி பேய் இருக்கு’ என்று படம் பார்ப்பவர்கள் அவருக்கு உதவி செய்ய துடிப்பதே இதற்கு சான்று.

மழை தூரலில் காபியை ‘எரிவதாகட்டும்’, நாயகன் நாயகி மழைக்குள் ஒளிவதாகட்டும், ஒரே ஒரு ‘டார்ச்’ கொண்டு படத்தின் பாதியை பயணிப்பதாகட்டும் ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத் நம்மையும் திரைக்குள் பயணிக்கவைக்கிறார்.

இசை – படத்தின் இயக்குனர் ஒரு பேட்டியில் சொன்னது இது – “என்கிட்ட சந்தோஷ் ஒரு டியுன் போட்டு இது என்னன்னு தெரியுதான்னு கேட்டார். 80% பேய் படங்கள்ள வற்ர டியுன் அது. இது கண்டிப்பா நம்ம படத்துல இருக்காதுன்னார்”. சாதித்தும் காட்டியுள்ளார். ‘மோகத்திரை’, ‘எங்கோ ஓடுகின்றான்’, பிண்ணனி இசை அசத்தல்.

இயக்குனர் – கார்த்திக் சுப்புராஜ் செய்திருப்பது ஒரு சின்ன வகையான புரட்சி. ’16 வயதினிலே’ இன்றும் பேசப்படுவதற்கு காரணம் கிராமத்து மனிதர்களை, அவர்களின் வாழ்க்கையை அவர் உண்மையாக பதிவு செய்த விதம். திரைப்படம் என்பது ஒரு பதிவு. கற்பனை கதையாக இருந்தாலும், உருவாக்கப்படும் சூழ்நிலையில் உங்களை என்னை போன்ற மனிதர்கள் எப்படி எதிர்வினையாற்றுவோம் என்பதின் பதிவு. அப்படி உருவாக்கும் பதிவுகளின் எல்லாம் தர்க்க ரீதியாக மட்டுமே இருக்கும் – பீட்சாவை போல. முழுமையாக தர்க்கத்தை மீறி தரம் கெட்டு போன சினிமாவை கையை பிடித்து தொடங்கிய இடத்திற்கு கூட்டிவர முயற்சிக்கும் ஒரு சின்ன புரட்சி இது.

இது கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனம் அல்லது ஆர்வ மிகுதியான கேள்வி – ‘உங்களின் அடுத்த படம் என்ன?’ கார்த்திக் சுப்புராஜின் குறும்படங்கள் பார்த்திருப்பவர்களுக்கு தெரியும் – எந்த ஒரு குறிப்பிட்ட வகையிலும் (genre) அவரை அடக்க முடியாது. எந்த ஒரு வகையிலும் தரமான தர்க்கமான சினிமா அவரால் கொடுக்க முடியும். காத்திருக்கிறோம்.....