Monday, January 11, 2016

'இன்று நீ நாளை நான்'' முதல் ''இறைவி' வரை

Share |
சென்னையில் முதல் மழையிலிருந்து 'சென்னைநெக்ஸ்ட்' நிகழ்வு வரை சரியான ஓய்வு இல்லை. நேற்று சரியாக தூங்க முடியவில்லை. இரவில் இருந்தே தலைவலி... காலை வரை இருந்தது. தொடர்ந்து தூங்கவும் முடியவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு கே.டி.வியில் முதல் முறையாக "இன்று நீ நாளை நான்" திரைப்படம் வேறு சேனல் மாற்றாமல் பார்த்தேன் (துவக்க 15 நிமிடங்கள் தவிர்த்து) . படம் பார்க்க துவங்கியதில் இருந்து சில சினிமாத்தனங்கள் இருந்தாலும், இது நிச்சயம் ஒரு சிறு கதையை தழுவி எடுக்கப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என தோன்றியது. இணையத்தில் தேடும்போது, சி.ஏ.பாலன் எழுதிய 'தூக்குமர நிழல்' நாவலின் ஒரு சிறு அத்தியாயம் இது என தெரிகிறது.மேஜர் சுந்தர்ராஜன் இந்த திரைப்படத்தின் இயக்குனர். இசை - இளையராஜா. 'பொன்வானம் பன்னீர் தூவுது...' பாடல் இந்த படத்தில்தான்.

ஊர் பணக்காரரின் வீட்டில் வேலை செய்யும் ஒரு தொழிலாளியாக சிவக்குமார் இருந்தாலும், அந்த வீட்டு மகன் போல அவன் கருதப்படுகிறான். அந்த ஊர் பணக்காரரின் மகனான ஜெய்சங்கர், சிவக்குமாரை தன் தம்பியாகவே நடத்துகிறார். ஜெய்சங்கர் ஒரு அரசியல்வாதி.



லட்சுமியும், சுலோச்சனாவும் அக்கா, தங்கை போல் பழகும் தோழிகள். லட்சுமியின் தாய் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த இரண்டாம் தாரம்.ஆகையால், 'ஜாதி கெட்ட' லட்சுமிக்கு திருமணம் நடக்காமல் இருக்கிறது. லட்சுமியை பார்த்த மாத்திரத்தில் இருவருக்கும் பரஸ்பரம் ஒரு அபிப்ராயம் வந்தாலும், தன் உடன் பிறவா சகோதரன் ஜெய்சங்கருக்கு அவர் பொறுத்தமானவர் என நினைக்கிறான். ஜெய்சங்கரின் பெற்றோர் சம்மதிக்க மறுக்க, 'சீர்திருத்த' திருமணம் அவர்களுக்கு நடக்கிறது. திருமணமான 2வது தினமே ஜெய்சங்கர் 'கட்சி வேலையாக சென்னை கிளம்ப, அதற்கு நடுவில் சிவக்குமாருக்கும், சுலோச்சனாவிற்கு காதல் ஏற்பட்டு அவர்களின் திருமணமும் நடக்கிறது.

ஒன்றரை மாதம் கழிந்து வந்த ஜெய்சங்கர் அடுத்து நடக்கப்போகும் 'இடைத்தேர்தலுக்காக' தன் தோட்டத்தின் சொத்தை அடமானம் வைத்து 1 லட்சம் கட்சியிடம் கொடுத்து, ஊருக்கு திரும்பி மீண்டும் 'பிஸி' ஆக ஜெய்சங்கர்-லட்சுமியின் தாம்பத்ய வாழ்க்கை மீண்டும் பாதிக்கப்படுகிறது. அதே சமயம் இந்த பக்கம் சுலோச்சனா கற்பமடைகிறாள்.

ஜெய்சங்கரின் கட்சியில் இருந்த அவனின் எதிரி வேறு கட்சி தாவுகிறான். ஜெய்சங்கர் தன் கட்சி தலைவரை மகிழ்விக்க வீட்டிற்கே மது கொண்டுவருகிறான். தானும் குடிகாரனாக மாறுகிறான். தேர்தல் செலவிற்கு தன்னுடைய வீட்டையும் அடமானம் வைத்து தேர்தலில் தோற்று, மேலும் குடிக்கு அடிமையாகி ஒரு சமயம் இறந்தும் போகிறான்.

தனக்கு பிறந்த குழந்தையை கூட பார்க்க செல்லாது, ஜெய்சங்கரின் குடும்பத்திற்கு சிவக்குமார் உழைக்க, வீட்டிற்கு வரும் சுலேச்சனாவின் குழந்தை கணவனை இழந்த லட்சுமியிடமே பெரும்பாலும் வளர்கிறது. சிறிது, சிறிதாக கடன் அடைக்கப்பட்டு, தோட்டத்து வீட்டிலேயே இரண்டு குடும்பமும் வாழ்வது என்று முடிவாகிறது.

சுலோச்சனா மீண்டும் கற்பமடைய, அவளை ஊருக்கு விடப்போகும் சமயம் ஜெய்சங்கரின் எதிரி லட்சுமியிடம் தவறாக நடக்க முயற்சித்து அவளால் துறத்தப்படுகிறான். ஒரு மழை நாளில் லட்சுமி, சிவக்குமாரிடம் தன்னுடைய ஆசையை வெளிப்படுத்துகிறாள். முறையான உறவிற்கு முயற்சி செய்கிறாள். சிவக்குமார் குழப்பத்தோடு சம்மதம் தெரிவிக்க, தன்னுடைய குழந்தையை சுலோச்சனா பங்குபோட அனுமதித்தது போல கணவனையும் அனுமதிப்பாள் என்று தப்பு கணக்கு போடுகிறாள், மீண்டும் மணப்பெண்ணாய் மாறுகிறாள், தன்னுடைய மாமியாரும் லட்சுமி இது வரை வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க, சிவக்குமாரும், லட்சுமியும் கோவிலுக்கு செல்கையில் நடக்கும் ஒரு சம்பவம் இந்த திருமணத்தை நிறுத்துகிறது.



அன்று இரவே சிவக்குமார் சுலோச்சனாவை பார்க்க செல்கையில், அவளுக்கு ஆண் குழந்தை பிறக்க, தன்னுடைய மகள் இந்த திருமணம் குறித்து தன் அன்னையிடம் வெகுளியாக கூற, வெகுண்டெழுந்த சுலோச்சனா ஊருக்கு உடனே திரும்பி லட்சுமியை தாக்க முற்பட, தடுத்த சிவக்குமாரால் காயம் ஏற்பட்டு தற்கொலை செய்துகொள்கிறாள்.சிவக்குமாரின் மீது கொலைப்பழி (தன் மகளே ஒரு முக்கியமான சாட்சியாக மாற) விழுகிறது. அவனுக்கு மரண தண்டனை கிடைக்கிறது.

தன்னுடைய மரண தண்டனைக்கு முந்தைய நாள் சிறைக்கு லட்சுமி, அவன் குழந்தைகள் மற்றும் ஒரு மிலிட்டரிகாரர் வருகிறார். அவரிடம் 'அண்ணே, அவுங்கள நீங்க கல்யாணம் பண்ணிகிட்டு, என் 2 குழந்தைகளுக்கு தாய், தகப்பனா இருங்க' என்று சிவக்குமார் கோரிக்கை வைக்க - சில நிமிடங்களில், 'நீங்க போன பிறகு நான் உயிரோட இருப்பேன்னு நினைச்சீங்களா? நான் எப்படி இன்னொருத்தர கல்யாணம் பண்ணிப்பேன்?' என்று கேட்டு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொள்கிறாள்.

லட்சுமியின் கதாபாத்திரம் நம்மை நிச்சயம் பாதிக்கும். சிறு வயது முதலே ஜாதி கெட்டவள், பின் தான் ஆசைபட்ட ஒருவருடன் சேர முடியாமல், கிடைத்த வாழ்க்கையை வாழலாம் என நினைக்கும்போது கணவனின் அரசியல், குடி அதற்கு தடையாக, இளம் விதவையாக, பின் அதில் ஒரு மாற்றம் வரும்போது மீண்டும் வாழ்க்கையே மாறிப்போக, கடைசி காட்சியில் கூட சிவக்குமாராலும் தன் அன்பை புரிந்துகொள்ள முடியாதவளாக என - ஒரு பெண்ணின் உணர்வுகள் குறித்து அவளின் பிறப்பு முதல் இறப்பு வரை இங்கு பெரும்பாலானவர்களுக்கு அக்கறை இல்லை என்ற உண்மை அவளின் மூலம் உணர்த்தப்படுகிறது.



சமூகத்தில் அந்த சூழல் இன்றும் இருக்கவே செய்கிறது. நிறைய மாற்றங்கள் இன்று ஏற்பட்டு இருந்தாலும், ஒரு பெண்ணின் உணர்வுகள் குறித்து ஒரு தந்தையோ, கணவனோ புரிந்துகொள்ள இன்றும் முயற்சிக்கிறார்களா என்ற கேள்வி எழமால் இல்லை.
'இறைவி' - சில wo'MEN'களின் கதை என்ற வாசகம் இன்றும் அந்த நிலைமை குறித்து பேச வேண்டிய சூழல் இருப்பதை காட்டும் படமாக இருக்குமோ என்றும் தோன்ற செய்கிறது.