Thursday, May 28, 2009

நிருபர் (கதை - 9) - போட்டிக்கான சிறுகதை

Share |
குழந்தை தொழிலாளிகள்...முன்வருமா சமூகம்..?
------------------------------------------------------------------------
வாசு


வாகனங்களின் சத்தம் காதில் இரைந்தது.

"உன் பெயர் என்ன தம்பி..?"
அவன் என்னை பார்த்தான். கண்கள் என்னை பார்த்தபோதும் அவனுடைய கை மிக நேர்த்தியாக பூக்களை ஒரு நூலில் கோர்த்துக்கொண்டிருந்தது. என் கையில் இருக்கும் சின்ன ஏடு, என் கழுத்தில் மாட்டி இருந்த புகைப்படக் கருவி எல்லாம் பார்த்தான்.

"பாண்டி சார். பூ வேணுமா சார்..?"
"இல்லபா உன்ட்ட கொஞ்சம் பேசணும்."

கொஞ்சம் வித்தியாசமாய் பார்த்தான்.
"என்ன சார் பேசணும்..? நீ அந்த பத்திரிக்கை கம்பேனீல வேல பாக்குறியா சார்..?"

"ஆமா தம்பி. உன் வயசு என்ன..?"
"என் வயசு 12 இருக்கும் சார். நான் பொறந்த மாசம் அம்மாக்கு சரியா நெனவில்லியாம்."

"எவ்ளோ நாளா பூ வியாபாரம் பாக்குற..?" இடையிடையே குனிந்து பூக்களை எடுத்துக்கொண்டான்.
"இப்போ ஒரு ரெண்டு வருசமாதான் சார். மொத எங்க அப்பாகூடதான் வந்திட்டு இருந்தேன். இப்போ அப்பா வேற ஏரியா பாக்குறார். அதனால என்னையே பாத்துக்க சொல்லிட்டாரு."

"அதுக்கு முன்ன என்ன பண்ண..?"
"இஸ்கூல் போவேன் சார்.."

"எந்த கிளாஸ் வர படிச்ச..?"
"அஞ்சாவது வர படிச்சேன் சார். அதுக்கு அப்புறம்தான் அப்பா பூ வியாபாரம் பாக்க கூட்டிட்டு போனார்.."

"ஸ்கூல் போகாதது உனக்கு கஷ்டமா இல்லையா..?"
"ஆரம்பத்தில என் பிரண்ட்ஸ் எல்லாம் பாக்காம கஷ்டமாத்தான் இருந்திச்சு. அப்புறம் தெரியல சார்.."

"நீ ஸ்கூல்-ல என்ன ரேங்க் வாங்குவ..?"
"10 குள்ள வருவேன் சார்.."

"ஒரு நாளைக்கு எவ்வளவு வியாபாராம் பார்ப்ப..?"
"சில நாள் 100 ரூவா வரும். நல்ல வியாபாரம்னா, 200 ரூவா வரும் சார்.."
"உன்ன ஒரு போட்டோ பிடிச்சிக்கவா..?"

பாண்டி அண்ணா சாலை நடை மேடையில் தொழில் செய்யும் ஒரு குழந்தை தொழிலாளி.

இன்னும் கொஞ்ச தூரம் நடந்தேன்.

வயது மூத்த ஒருவரும், சிறுவனும் ஒரு குடையின் கீழ் அமர்ந்திருந்தனர்.அந்த மூத்தவர் சுற்றி நிறைய பூட்டுக்களும், சாவியும் இருந்தது. அந்த சிறுவன் ஒரு கூடை நிறைய மாம்பழம் வைத்திருந்தான்.

"என்ன நைனா...சாவி தொலைஞ்சு போச்சா..?" அந்த மூத்தவர் என்னை பார்த்துக்கேட்டார்.
"இல்லங்க...இந்த பையன் யாரு..?"
"இது நம்ம புள்ளதான் நைனா...இன்னாத்துக்கு கேட்குற..? டேய், அம்மாசி சார்-க்கு மாம்பழம் வேணும் போல இருக்கு...கொடுரா.."

"ஒரு டஜன் போடவா சார்..?" இது அம்மாசி.

"இல்ல எனக்கு மாம்பழம் வேணாம். உங்களோட கொஞ்சம் பேசணும்..."
"பேசு நைனா...எதாவது சினிமால என் புள்ள நடிக்கணுமா..?"
"அதெல்லாம் இல்ல. உங்களோட ஒரு பேட்டி வேணும்.."
"ஓ..நீ பத்திரிக்கையா..? ஒரு போட்டோ எடு நைனா...என்னையும், என் புள்ளையையும்..."

"சொல்லுங்க ...அம்மாசிய பள்ளிக்கூடத்துக்கு அனுப்பலையா..?"
"போய்ட்டுதான் நைனா இருந்தான் போன வருஷம் வரைக்கும். இந்த வருஷம் போல.."
"அதான் ஏன்..?"
"போன வருஷ லீவுக்கு என்னோட தொழில் பாக்க கூட்டி வந்தேன். அவனுக்கு பூட்டு தொழில் பிடிக்கலயாம். அவனா மாம்பழம் வாங்கி யாவாரம் பார்த்தான். அதையே இப்பவும் பாக்குறான்...நல்ல கெட்டிக்கார பய நைனா..இஸ்கூல்ல நல்லா மார்க் எல்லாம் வாங்குவான். "

"அம்மாசி...நீ ஸ்கூல் போலையா..?"
"இதுலையே நல்ல காசு வருது சார். எங்க அப்பா நான் சம்பாதிக்கிற காசு கேட்கமாட்டாரு. அம்மாட்டதான் கொடுப்பேன். அம்மாதான் ஸ்கூல் போகாம இதையே பாக்க சொல்லிருச்சு." அவன் கண்களில் ஒரு ஏக்கம் இருந்தது.
"உனக்கு படிப்பு வேணாமா..?"
"தெரியலையே சார்..அம்மாட்டதான் கேட்கணும்."

"நைனா..பீடி வச்சிருக்கியா..?" அம்மாசியின் அப்பா என்னிடம் கேட்டார்.
"இல்லையே..."
அம்மாசியின் அப்பா பீடி வாங்க கிளம்ப,
"என்ன அம்மாசி உனக்கு படிப்பு வேணாமா..? நல்லா மார்க் வாங்குவன்னு வேற உங்க அப்பா சொல்றாரு.."
"இல்ல சார்...அப்பா இதுல வர்ற வருமானத்துல குடிச்சிடுவார் சார். அதனாலதான் அம்மா என்னையும் கூட அனுப்புது. இப்பவும் நான் வராட்டி குடிக்க போய்டுவார். அதனாலாதான் அம்மா என்னையும் இங்க உட்கார சொல்லிடுச்சு."

குழந்தை தொழிலாளி என்றாலே ஏதோ உணவங்களிலும், சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலையிலும், மெக்கானிக் கடைகளிலும் உள்ளவர்கள் என்றே நாம் நினைக்கிறோம். இவர்களும் தொழிலாளர்கள்தான். நாளை உலகத்தில் இவர்களின் நிலைமை ஒரு கேள்விக்குறியே.

இதற்கு ஏதேனும் ஒரு தீர்வு இல்லையா என்று இந்த தருணத்தில் நீங்கள் நினைத்தால், அதற்கான பதிலும் நீங்களாகத்தான் இருப்பீர்கள்.

இதை போக்க மக்களாகிய நீங்கள்தான் முன் வரவேண்டும். நீங்கள் செய்வது பொருள் உதவியாக இருக்கலாம், அல்லது உங்கள் அறிவை பகிர்வதாய் இருக்கலாம். அவர்கள் இடம் சென்று அவர்களுக்கு நீங்கள் கற்பிக்கலாம். இன்னொரு கலாம் கூட உருவாக்கலாம்.
--------------------------------------------------------------------------------

என்னுடைய முதல் கட்டுரையை எழுதி முடித்தேன். பத்திரிக்கை ஆசிரியரைப் பார்க்க அவரின் அறை சென்றேன். கதவில் இருக்கும் பொத்தானை அமுக்கினேன்.

"யாரு..?" ஆசிரியர் குரல் கேட்டது.
"வாசு சார்..உள்ள வரலாமா..?"
"வா வாசு.."

ஒரு நிமிடம் என்று செய்கை காட்டி, என்னை அமரும்படி செய்கை செய்தார். ஆசிரியர் ஏதோ ஒன்றில் மூழ்கி இருந்தார்.
அவருடைய அறை முழுக்க பத்திரிக்கை தாள்கள்.சுவற்றோரத்தில் சில சாக்கு மூட்டைகள்.அவருக்கு பின் இருக்கும் சுவற்றில் பத்திரிக்கை தொடங்கிய ஆசிரியரின் புகைப்படம். அவரின் மேஜை மீது ஒழுங்கு செய்யப்பட்டு காட்சி அளித்த காகிதங்கள்.

"சொல்லு வாசு.."
"இல்ல சார்...என் ஆர்டிகள்.."

"ம்ம்...நல்லா இருக்கு வாசு....சில சேன்ஜஸ் பண்ணனும். நான் பண்ணிடவா..?"
"என்ன சேன்ஜஸ் சார்..?"

"நல்ல ஆரம்பம்...நல்ல மெசேஜ். ஆனா ஆர்டிகள் முடிச்சது சரி இல்லையோன்னு தோணுது.."
"ஏன் சார்..?"

"நீ யாரு..?"
"சார்..." நான் கொஞ்சம் அதிர்ச்சியானேன்.

"அதாவது நீ இங்க யாரு..?"
"பத்திரிக்கை நிருபர் ."

"பத்திரிக்கையாலனோட வேல நியூஸ் சொல்றது மட்டும்தான். அதற்கான தீர்வு சொல்றது நம்ம வேல இல்ல."
"அப்போ நம்ம பத்திரிக்கைல கட்டுரைகள் எழுத வேண்டிய அவசியம் என்ன சார்..?"

"அத நாம படிக்க வைக்கணும்...அவளோதான். அத பார்த்து வாசகர்கள் என்ன செய்யணும்ங்கறது சொல்றது நம்மோட வேல இல்ல.."
"நாம யோசிக்கிற மாதிரி அவங்களும் வாசகர்களோட வேல படிக்கிறதுன்னு சும்மா இருந்துட்டா..?" இந்த கேள்வி கொஞ்சம் கோபமாகத்தான் வந்தது.

"உணர்ச்சி வசப்படாத வாசு....ஆர்டிகள் நல்லா வந்திருக்கு...கண்டிப்பா ஏதாவது நடக்கும்.."
"என்ன சார் நடக்கும்..? சென்னை அண்ணா சாலையில ஒரு நாளைக்கு போறவுங்க எத்தன பேரு..? ஏன் உங்க ஆபீஸ் ஸ்டாஃப் கூட தினம் அவன்ட்ட பூ வாங்குறாங்களாம். யாராவது இத ஒரு விஷயமா யோசிச்சாங்களா..?"
என்னுடைய சத்தம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

"வாசு. உன்னோட முதல் ஆர்டிகள் இது. நான் இங்க 25 வருசமா வேல செய்றவன். உன்ன தட்டி கொடுத்து தூக்கிவிட வேண்டியது என் வேல. என் அனுபவுத்துல சொல்றேன். நான் சொல்ற மாதிரி போடலாம்." அவரிடம் துளியும் கோபம் இல்லை.

"சரி சார். நீங்க சொல்ற மாதிரியே போடலாம்." அதற்கு மேல் அவரிடம் பேச ஒன்றுமில்லை.

வெளியே வந்தேன். என்னுடைய இரு சக்கர வாகனத்தில் அறைக்கு கிளம்பினேன். வெய்யில் இன்னும் குறையவில்லை. பாண்டியும், அம்மாசியும் தொழில் பார்த்துக்கொண்டிருந்தாகள்.

எனக்குள்ளே மீண்டும் அந்த கேள்விகள் வந்தது.
"டேய்..மெக்கானிக்கல் படிச்சுட்டு ஜர்னலிசம் பக்கம் போறியா..? என்ன பிரச்சனை உனக்கு..? எல்லோரும் சிரித்தனர்.
"அப்போ மெக்கானிக்கல் படிச்சிட்டு சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகலாம்....ஆனா பத்திரிக்க பக்கம் போகக்கூடாது.."

நான் படித்தது பொறியியல். பன்னிரண்டாம் வகுப்பில் நிறைய மதிப்பெண் வாங்கி இருந்ததால் என் பெற்றோரின் வற்புறுத்தலுக்காக பொறியியல் படித்தேன். ஆனால் என்னுடைய ஆசை, கனவு எல்லாமே ஒரு பத்திரிக்கையாளனாக வேண்டும் என்பதுதான். என்னை பொறுத்தவரை படிப்பு அறிவை வளர்க்க மட்டுமே. படித்த படிப்பு சம்பந்தமாகத்தான் வேலை செய்ய வேண்டும் என்பதெல்லாம் சுத்தமான பொய். எங்கு நிறைய வருமானம் கிடைக்குமோ அங்கு சேர்வதுதான் இங்கு பலரின் எண்ணம்.

காம்பஸ் இன்டெர்வியு என சொல்லப்படும் வேலை வாய்ப்பில் எனக்கும் வேலை கிடைத்தது. நிறைய வருமானமும் தருவதாய் சொன்னார்கள். வேலை கிடைத்த இரவுதான் நிறைய யோசித்தேன். இந்த நான்கு ஆண்டு கல்லூரி வாழ்க்கை எனக்கான சுயத்தை இன்னும் அதிகரித்திருந்தது. வேலையில் சேர முடியாதென மறுத்துவிட்டேன். வேலைக்கு சேர்ந்தால் ஒரு பத்திரிக்கையாளனாக மட்டுமே வேலை செய்ய வேண்டும் என் உறுதி பூண்டேன்.

என்னுடைய எழுத்து மூலம் நிறைய மாற்றங்கள் கொண்டு வர முடியும் என நம்பினேன். ஏன்..? ஒரு பத்திரிக்கையாளன் நினைத்தால் எந்த விதமான சமூக புரட்சியும் ஏற்படுத்த முடியும். என்னுடைய ஆசைப்படி ஒரு புகழ்பெற்ற பத்திரிக்கையில் இணைந்தேன்.


என் அறை வந்து சேர்ந்தேன்.
என் நண்பனுக்கு கைபேசியில் அழைத்தேன்.
"என்னடா ஜர்னளிச்ட், வேல எப்டி இருக்கு..? வேல இன்னைக்கே ஆரம்பிச்சிட்டியா..?"

எல்லாம் அவனிடம் சொன்னேன்.
"இன்னிக்குதாண்டா சேர்ந்து இருக்க.. அவங்க சொல்றத கேட்க வேண்டியதுதானே..?"


அடுத்த இதழில் என்னுடைய கட்டுரை வந்தது. நிறைய வாசகர்கள் கட்டுரை அற்புதமாக உள்ளதாக சொல்லி இருந்தனர். சிலர் அந்த சிறுவர்களுக்காக வருந்தினர். கண்டிப்பாக இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டு என்றனர். சில பேர் அரசை குற்றம் சொல்லினர்.

வாசகர் கடிதம் எடுத்துக்கொண்டு ஆசிரியர் அறை சென்றேன்.
"நல்ல ரெஸ்பான்ஸ் பார்த்தியா..? அடுத்த கட்டுரை ஆரம்பிக்கிறியா..?"

வெளியே வந்தேன். என் நண்பனை கூப்பிட்டேன்.
"எனக்கு ஒரு உதவி பண்ணுவியா..? உங்க கம்பெனி-ல எனக்கு வேல கெடைக்குமான்னு பாக்குறியா..? உன் அக்கௌன்ட்ல எவ்ளோ பணம் வெச்சிருக்க..?"

கைபேசியை வைத்துவிட்டு பாண்டியையும், அம்மாசியையும் பார்க்கச் சென்றேன்.

(உரையாடல்-சமூக கலை இலக்கிய அமைப்பு போட்டிக்கான சிறுகதை)

Tuesday, May 12, 2009

கதவு (கதை - 8)

Share |
இன்று வெகு நாட்களுக்கு பிறகு மதிய உணவு உண்ண வீட்டிற்கு போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒரு காலத்தில் தினம் சென்றுகொண்டிருந்தேன். அந்த "ஒரு காலம்" இன்றும் நெஞ்சை படபடக்க வைக்கிறது.


என் அலுவலகத்திற்கும், வீட்டிற்குமான தூரம் 6 நிமிட நடைத்தொலைவு. ஒரு ஞாயிறன்று காலையில் யாரோ ஒருவர் கதவு தட்டும் சத்தம் கேட்டது. தூக்கத்திலேயே கதவை திறந்தேன். பார்பதற்கு அந்த பெண்மணி தமிழ் போலவே காட்சி அளித்தார். அவர் கை பிடித்த ஒரு குழந்தை ஒன்று தலை நிமிர்ந்து என்னை பார்த்தது. தமிழாய் தெரிந்தாலும் நாங்கள் வாழ்வது அமெரிக்கா என்பதால், ஆங்கிலத்தில், "என் வீட்டு கதவை திறக்க கொஞ்சம் உதவ முடியுமா" என வினவினார்.

நான் வேறு ஆடை மாற்றிக்கொண்டு அவர் பின் சென்றேன். அவர் வீடு நான் வசித்த அதே ஏழாவது மாடியில் ஒரு மூன்று வீடு தள்ளி இருந்தது. அவர் புதிதாக குடி வந்தவராக இருத்தல் வேண்டும். நாங்கள் வசித்த குடியிருப்பில் இருக்கும் பொதுவான பிரச்சனை இது. ஒவ்வொரு கதவுக்கு பின்னும், இரண்டு பூட்டுகள் இருக்கும். ஒன்று auto lock என சொல்லப்படும் தானியங்கி பூட்டு. மற்றொன்று நாம் சாவியால் பூட்ட வேண்டிய பூட்டு.

நான் சாவி வாங்கினேன். இரண்டு மூன்று முறை முயற்சி செய்து பார்த்தேன். அவரின் கணவரிடம் இருக்கும் சாவியில் எந்த வித பிரச்சனையும் இல்லை என சொன்னார். கீழே சென்று குடியிருப்பு நிர்வாகிகள் யாரையாவது கூப்பிடலாமா என எண்ணிய போது சரியாக கதவு திறந்தது.

அவரிடம் இரண்டு பூட்டுகள் பற்றி தமிழிலேயே விளக்கி வந்தேன். அவர் என் முகத்தை கூட சரியாக பார்க்கவில்லை.

அடுத்த நாள் மதியம் வீட்டிற்கு உணவருந்த என் வீட்டை நோக்கி வந்துக்கொண்டிருந்தேன். அவர் திறக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தார்.
"என்னங்க திரும்பவும் திறக்க முடியலையா..?"
"ஆமாங்க. இப்பதான் மேநேஜ்மென்ட்ல வந்து பார்த்தாங்க, அவங்க வந்து பார்த்தப்புறம் மேல என் பிரண்ட் வீட்டுக்கு போயிட்டு வந்தேன். மறுபடியும் திறக்க முடியல."

நான் முயற்சி செய்தேன். இந்த முறை எனக்கு கொஞ்சம் எளிமையாகவே இருந்தது. வீட்டை திறந்து, உள்ளே சென்று அவரையும் உள்ளே அழைத்து, இரு பூட்டுகள் காண்பித்து, அவை எவ்வாறு வேலை செய்கிறதென விளக்கினேன். இந்த முறை அவர் நன்றாக கேட்டுக்கொண்டார். அவர் குழந்தை மெதுவாய் சிணுங்கியது.

அடுத்த நாள் நான் மதிய உணவு உண்ணும்பொழுது யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டது. "சாரிங்க, எப்ப பார்த்தாலும் உங்கள டிஸ்டர்ப் பண்றோம். ஐயோ, சாபிடரீங்களா...சாப்ட்டு வாங்க, நாங்க வெயிட் பண்றோம்."
"இல்லங்க பரவா இல்ல."

நான் கை கழுவி அவரிடம் சாவி வாங்கினேன். அவர் குழந்தை பசியில் இருப்பதுபோல் தோன்றியது.அவர் குழந்தையை சமாதானம் செய்தார்.இந்த முறை நான் முதல் முயற்சியில் மிக எளிதாய் திறந்தேன்.

"என்னங்க, நீங்க இவ்ளோ ஈசியா திறக்கறீங்க..."
"நீங்க வந்து எவ்ளோ நாள் ஆச்சு..?"
"ஏன்..? போன வாரம் வந்தோம்..."
"நான் ரொம்ப நாளா இங்க இருக்கேன் இல்லையா. அதன் இந்த பூட்டு ஏன் பேட்சு கேட்குது."

இந்த முறை மீண்டும் விளக்கினேன்.
"அமெரிக்கால லாக் வந்து இந்தியாவோட தலைகீழ். இதுல ரெண்டு பூட்டு இருக்குதுல்ல, அதுல ஆட்டோ லாக் மட்டும் போட்டா கூட போதும். அதனால நீங்க பூட்டும்போது சும்மா கதவ சாத்திடுங்க. அதுவே பூட்டிக்கும்."

நான் விளக்கியது போல் செய்து காண்பித்தேன்.
"இப்போ பூட்டிகிச்சா."
"ம்ம்."
"இப்போ திறக்கிறேன் பாருங்க. திறக்கும்போது இந்த நாப உங்க பக்கம் இழுத்துக்கங்க."
நான் கதவின் கைப்பிடி இழுத்து எளிதாக திறந்து காண்பித்தேன். கதவை மீண்டும் மூடி அவரை திறக்க சொன்னேன்.

அவர் முயற்சி செய்தார். அவர் முயலும்பொழுது சரியாக பூட்டை திறந்தார். ஆனாலும் பூட்டு திறந்தவுடன் உடனே கைப்பிடியை விட அது மீண்டும் பூட்டிக் கொண்டது.
"ஓ. உங்க பிரச்சனை என்னனு புரியுது. பிடிச்ச நாப கதவு திறக்கற வரை விடாதீங்க. இப்போ முயற்சி பண்ணுங்க."

இந்த முறை அவரே கதவு திறந்தார். ஆயினும் இன்னும் அவருக்கு அது லாவகமாக ஏற்படவில்லை.

"இது நல்லா வர்றவரை நீங்க ஆட்டோ லாக்-கே மட்டும் போடுங்க. இன்னொரு லாக் போடவேணாம்."
"ரொம்ப தேங்க்ஸ்ங்க"

நான் என் வீடு நோக்கி சென்றேன்."இருடா செல்லம், அம்மா மம்மு கலந்து தர்றேன்" குழந்தையை தூக்கிக்கொண்டு அவர் வீட்டினுள் நுழைந்தார்.
அதற்கு பிறகு நான் அவரை சந்திக்கவில்லை.

ஒரு நாள் இரவு 8 மணி. கதவு தட்டும் சத்தம்.
"சாரிங்க, என் வீட்டுக்காரர் வேலை விஷயமா பக்கத்துக்கு சிட்டிக்கு போய்ட்டார். போனவர் ரெண்டு சாவியையும் எடுத்துட்டு போய்ட்டார். நான் இவ்ளோ நேரம் மேல என் பிரண்ட் வீட்ல இருந்த போது எனக்கு நெனப்பே இல்ல. கீழ மேநேஜ்மென்ட்டும் மூடி இருக்கு."
"செக்யூரிட்டில பார்த்தீங்களா..?"
"இல்லங்க"

நான் கீழே சென்றேன். செக்யூரிட்டி "எமெர்ஜென்சி மெயின்டெநன்ஸ்" அழைக்கச் சொன்னார்.

அவர்களை கூப்பிட்டேன். அவர்கள் சாவி காலையில்தான் கிடைக்கும் என கூறினர்.
"உங்க பிரண்ட் மேல இருக்காங்களா..?"
"நீங்க கேட்குறது புரியுதுங்க, அவங்க வெளியூர் கிளம்பிட்டாங்க, அவங்களுக்கு கொஞ்சம் திங்க்ஸ் எல்லாம் அடுக்கிட்டு இருந்ததுலதான் சாவி விஷயத்தையே மறந்துட்டேன். "
"சரி. என்ன பண்ணலாம்."
"......"
"உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லனா நீங்க என் வீட்ல தூங்கலாம். நான் என் பிரண்ட் வீட்ல பொய் படுத்துக்கறேன். காலைல கீழ போய் விஷயம் சொன்னா அவங்க உங்க வீட்ட திறந்துகொடுப்பாங்க."

நான் அவருக்கு படுக்கை ஏற்படுத்தி, அவர் குழந்தைக்கு தேவைப்பட்டால் வேண்டிய பால், அவருக்கு தேவைப்பட்டால் வேண்டிய உணவு எல்லாம் என் குளிர் சாதன பெட்டியில் வைத்து கிளம்பினேன்.

"நான் என் சாவிய இங்க வச்சிட்டு போறேன். காலைல கதவு தட்டறேன். உங்க போன் நம்பர் கொடுங்க. அதையும் எதுக்கும் வச்சிக்குறேன்"

காலை நான் கதவு தட்டிய உடனையே அவர் திறந்தார். முன்னரே எழுந்திருப்பார் போல.
"காப்பி..?"
"இல்லங்க பரவா இல்ல. பையனுக்கு மட்டும் கொஞ்சம் பால் எடுத்துகிட்டேன்"
நான் இருவருக்கும் காப்பி கலக்கினேன்.

"சரிங்க நான் ஆபீஸ் கிளம்புறேன். இன்னொரு அரை மணிநேரத்துல கீழ ஆள் வருவாங்க. நீங்க போகும்போது சும்மா சாத்திட்டு போங்க"
"ரொம்ப தேங்க்ஸ்ங்க"

அன்று மாலை மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்டது.
"என்ன ஆச்சு..?"
"பயப்படாதீங்க. இன்னைக்கு நீங்க எங்க வீட்டுக்கு சாப்பிட வரணும்."
"அட பரவா இல்லங்க."
நல்ல உணவு. சாப்பிட்டு வந்தேன்.

ஒரு ஒரு வாரம் ஆனது. மீண்டும்.. அவராகத்தான் இருக்க வேண்டும்.திறந்தேன்.
"டேய்.. ............. நீதான் என் பொண்டாட்டிய வச்சிருக்கியா..? ஏன்டா இப்படி அழயறீங்க..? உங்களுக்கு எல்லாம் வேற வேலை இல்லை."

அக்கம் பக்கத்தில் இருந்த வெள்ளைக்காரர்கள், இந்தியர்கள் வெளியே வந்தார்கள்.
"ஒரு நிமிஷம் உள்ள வர்றீங்களா சார்..?"
"என் பொண்டாட்டிய மொதல்ல உள்ள கூப்பிட்ட, இப்போ என்ன கூப்படரியா..? என் பொண்டாட்டி செல் போன்ல என்ன ............. உன் நம்பர் இருக்கு..? வெளிய ஊர் சுத்தரீங்களா ரெண்டு பேரும்..?"

எனக்கு கோபத்தை விட இந்த காலத்தில் கூட இந்த மாதிரி ஆட்கள் இருப்பது வியப்பை தந்தது. இப்பொழுது நான் என்ன பேசினாலும் அவரின் மனைவிதான் பாதிக்கப்படுவார்கள். நான் மறுபேச்சு பேசவில்லை.

"பேசுடா. உண்மை தெரிஞ்சிடுச்சுன்னு அசிங்கமா இருக்கா..? இது மாதிரி எத்தன குடும்பத்த தாலி அத்துருக்க..?"

நான் பேசாதது அவனை அமைதி அடைய வைத்ததுபோல தெரியவில்லை.
நேரே அவன் வீட்டுக்குள் சென்றான். அவன் மனைவியை வெளியே இழுத்துவந்து, "இந்தாடா இவளே நீயே வெச்சுக்க. போடி...அவன்கூடவே போ.."

அவர் முகம் முழுக்க அவன் கைரேகைகள். முடி எல்லாம் களைந்து இருந்தது. இனியும் பொறுமை காத்து ப்ரயஜோனமில்லை. நான் அவனை நோக்கி போகவும் உள்ளே ஒரு அமெரிக்கா காவலர் நுழையவும் சரியாக இருந்தது.

அவன் அப்படியே அமைதியானான். வந்தவர் அவனிடம் சில கேள்விகள் கேட்டார். அவன் மனைவியிடமும் சில கேள்விகள் கேட்டார். நாலு வீடு தள்ளி இருந்த பெரியவர் தான்தான் காவலரை வர சொன்னேன் என்றார். மேலும் அவர் அவன் அந்த பெண்ணை தாக்கியதாகவும் புகார் கொடுத்தார். அவன் வந்த காவலர்களால் அழைத்து செல்லப்பட்டான். காவலர் இன்னும் 5 நிமிடத்தில் முதலுதவி வண்டி வரும் என்றும், அதில் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். செய்வதறியாது அவர் மனைவி திகைத்து நின்றார்.

குழந்தையையும் தூக்கிக்கொண்டு, நாங்கள் மருத்துவமனை சென்றோம். என்னை வெளியே இருக்க சொல்லி அவர் மட்டும் அழைத்து செல்லப்பட்டார்.

நிறைய இடங்களில் காயம் போல. நிறைய தழும்புகள் வேறாம். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த குழந்தையின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவருக்கு ஒரு அரை வழங்கப்பட்டது. ஆனால் அதை மறுத்து உடனடியாக வீட்டுக்கு போக வேண்டும் என்றார். நான் மருத்துவமனையில் பேசினேன். நாங்கள் வீட்டுக்கு சென்றோம். நாங்கள் வீடு அடைவதற்குள் குழந்தை உறங்கிப்போனான்.

"யாருக்காவது போன் பண்ணவா உங்க வீட்ல..?"
"............"
"உங்களைதான் கேட்குறேன்.."
"இல்லங்க வேணாம். அவர எப்ப விடுவாங்க. அவரு ஒன்னும் தப்பு பண்ணலன்னு போய் நாம சொல்ல முடியுமா..?"

எனக்கு இந்த மாதிரியான சட்டங்கள் பற்றி தெரியவில்லை.
"நான் முயற்சி பண்றேங்க. என் கிளையன்ட் யார்டயாவது பேசி என்ன பண்ணலாம்னு பாக்குறேன். நீங்க இப்பைக்கு ஒன்னும் கவலை படாதீங்க."

இந்த நேரத்தில் என் வெள்ளைக்கார முதலாளிகளிடம் பேச முடியாது. காலை முதல் வேலையாக இதை பார்க்க வேண்டும்.
இப்பொழுதே 911 எண்ணிற்கு தொலைபேசியில் பேசிப்பார்த்தால் என்ன என தோன்றியது. நான் விபரம் முழுவதும் சொன்னேன். அவன் எங்கு வைக்கப்பட்டிருக்குறான் என தெரிந்து கொண்டேன்.

அவரை அவர் அறையில் விட்டு, நான் என் அறைக்கு வந்தேன்.
காலை கதவு தட்டப்பட்டது. அவராகத்தான் இருக்கும்.
காவலர்கள்!!
"எஸ்"

வெளியே வந்தேன். நிறைய காவலர்கள் அவர் வீட்டில்.அவனை மீண்டும் அழைத்து வந்துவிட்டார்களா..? குழந்தை அழுதது. குழந்தையை ஒரு காவலர் தன கையில் வைத்திருந்தார்.

"என்ன ஆனது..."
"அவர் மேலிருந்து கீழே குதித்துவிட்டார்."
"......................."
"R u alright..?"

எனக்கு மயக்கம் வந்தது. அவருடைய வீட்டில் யாரையாவது எனக்கு தெரியுமா என காவலர் வினவினார்.அவருடைய செல் போனில் இருந்த எண்கள் முயற்சித்து கடைசியாக அவரின் மாமனாரிடம் பேசினோம். நான் எல்லா விசயமும் சொன்னேன்.
"அடப் பாவி, நல்லா இருந்த குடும்பத்த நாசமாக்கிட்டியே.."யாரும் புரிந்து கொள்வதாக தெரியவில்லை.

அவரின் அப்பா, அம்மாவிடம் பேச முயற்சித்தோம். அவர்கள் எங்கிருப்பர்கள் என தெரியவில்லை.அவன் அழைத்துவரப்பட்டான்.

நாந்தான் அவன் மனைவியை கொலை செய்திருக்க கூடும் என சொன்னான். அவன் மனைவியை அவன் காதல் திருமணம் செய்துள்ளான் என்பதும், அவர் ஒரு அனாதை விடுதியில் வளந்தார் என்பதும் அப்பொழுதே தெரிந்தது.

சில மாதங்கள் வழக்கு நடந்தது. குழந்தை அரசு கவனிப்பில் இருந்தது. அவன் மனைவியின் இறப்புக்கு காரணம் அவன்தான் என முடிவானது.

சாப்பிட்டு முடித்தேன். நேற்றுதான் எல்லா வேலைகளும் முடிந்தது. அவர் வீட்டை பார்த்துக் கொண்டே கிளம்பினேன். நேற்றே அந்த வீட்டை அவருக்காக திறந்தது போல் இருந்தது.

நான் வக்கீல் வீட்டுக்கு சென்றேன். அவர் எல்லாம் சரி பார்த்தார். நாங்கள் இருவரும் அந்த குழந்தை கவனிப்பு மையம் சென்றோம்.

அவர் கடைசியாக என்னிடம், "U sure u want to do this..?" என்றார்.

அவனை தூக்கிக்கொண்டு வீடு வந்தேன். அந்த குழந்தை அது இருந்த வீடு பார்த்து பார்த்து கதவை நோக்கி கை நீட்டியது.

Monday, May 11, 2009

அம்மா (கதை - 7)

Share |
இன்று உலகம் முழுக்க அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரின் வாழ்விற்கும் ஆரம்பப் புள்ளி அவள்தான் என்பதை விட ஒரு சிறப்பு அவளுக்கு என்ன இருக்க முடியும். ஆனாலும் அதையும் தாண்டி ஒவ்வொரு தாய்க்கும் ஒரு மகனின் பார்வையில் ஒரு சிறப்பம்சம் இருக்கத்தான் செய்கிறது.
இது என் தாயைப் பற்றிய சிறப்பம்சம்.

எங்கள் வீட்டில் நானும், என் தங்கையும். அப்பா ஒரு அரசு வேலையில் இருக்க, என் அன்னை வீட்டை கவனித்து வந்தார்.

அப்பொழுது நான் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேர வேண்டிய நேரம் வந்தது. மதுரையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்க்கப்பட்டேன். இயந்திரவியல் பிரிவு. என் அப்பாவும், அன்னையும் வந்து என்னை சேர்ப்பித்து, விட்டுச் சென்றனர்.

முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. வெள்ளிக்கிழமை வந்தால் என் கால்கள் மாட்டுத்தாவநியில்தான் நிற்கும். என் ஊருக்கு 3 மணிநேரம்தான்.

ஒவ்வொரு புதியவரும், நண்பனாய் மாற எல்லாம் பழகிப்போனது, சீனியர்சின் ராகிங் உட்பட. சென்னை, கோயம்புத்தூர் போன்ற ஊர்களில் இருந்து வந்த மாணவர்களால் வாரவாரம் ஊருக்கு செல்ல முடியவில்லை.
"ஏன்டா நாங்க எல்லாம் எல்லா வாரமுமா ஊருக்கு போறோம்..?"

அந்த வாரம் நான் ஊருக்கு செல்லவில்லை.
"அம்மா, பிரண்ட்ஸ் எல்லாம் ஊருக்கு போவேணாம்னு சொலறாங்கம்மா. அவங்களுக்கு தனியா போர் அடிக்குதாம்."

விடுதியிலேயே தங்கி விட்டேனே தவிர, ஊருக்கு போயிருக்க வேண்டும் என்றே யோசித்துக்கொண்டிருந்தேன். அவர்கள் எல்லோரும் விடுதிக்கு உள்ளேயே கிரிக்கெட் விளையாடினார்கள். சிலர் பீர் அருந்தினார்கள். எனக்கு அதில் அவ்வளவு ஆர்வமில்லை.

அடுத்த வாரம் எப்பொழுது வரும் என காத்துக்கொண்டிருந்தேன்.
இரண்டு வாரங்கள் கழிந்தது. "டேய், போன வாரம்தானே ஊருக்கு போன.."
"ஆமாண்டா. ஊருக்கு போனேன். ஆனா இங்க இருக்கப்போ மட்டும் என்ன பண்ணேன்..? நீங்க பாட்டுக்கு கிரிக்கெட் விளையாண்டீங்க...ஊருக்கு போயிருந்தா கூட நல்ல சாப்பாடு, ஒரு படம் பார்த்திருப்பேன்..."
"இதான் உன் பிரச்சனையா.."

வெள்ளிக்கிழமை இரவு. அம்மா மெஸ்ஸில் சாப்பிடோம்.
"சொல்லு மாப்ள. என்ன படத்துக்கு போவோம்..?"
"செகண்ட்-சோவா..??"
"யார்ரா இவன். இவனுக்காக நம்ம வந்தா, பச்ச கொளந்த மாதிரி பேசிட்டு இருக்கான்.."

அண்ணாமலையில் முதல்வன் பார்த்து, ஆட்டோ பிடித்து ஹாஸ்டல் வந்தோம்.

சனிக்கிழமை எழுந்தபோது மணி 12. சாப்பிட்டு முடித்து எல்லோரும் கிரிக்கெட் விளையாடப்போனார்கள். நானும் விளையாட வேண்டி வந்தது.

கடுமையான உடல் வலி வந்தது.
"டேய், ஏதாவது பாம் வச்சிருக்கியா, உடம்பு வலி பின்னுது."
"என்னடா இதுக்கே, இப்படி ஆயிட்ட. இதுக்கெல்லாம் நம்ம மணி ரூம்தான். அங்கதான் எல்லா மருந்தும் இருக்கும்."

மணி அறையில்தான் எல்லோரும் பீர் அருந்துவார்கள். மணி ஏற்கனவே போதையில் இருந்தான். நான் மருந்து தேடினேன்.
"மாப்ள, நீ என் நண்பனா இல்லையா..?" இது மணி.
"ஏன்..?"
"சொல்லு மாப்ள.."
"ம்ம்."
"அப்படின்னா இந்த பீர் குடி."

எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் என்பதை விட, இப்பொழுது யோசித்தால் நான் விரும்பித்தான் குடித்திருப்பேன் என தோன்றுகிறது.

இரண்டு வாரம், மூன்று வாரம் ஆனது. மூன்று வாரம் 1 மாதமானது.

எங்கள் கல்லூரியில் மட்டும், முதலாம் ஆண்டும் இரண்டு செமஸ்டர். முதல் செமஸ்டர் வந்தது. ஓரளவுக்கு நல்ல மதிப்பெண்கள் எடுத்தேன்.
விடுதி வட்டாரத்தில் அது "டாப் மார்க்" ஆனது.

பீர் மாறி சில நேரங்களில் விஸ்கி, பிராந்தி என குடிக்க ஆரம்பித்து இருந்தோம். இரண்டாம் செம்மும் வந்தது.
"உனக்கென்னடா..எங்களோட சுத்திகிட்டே சூப்பர் மார்க் எடுத்திருவ.."

பரீட்சை முடிந்து எல்லோரும் கொடைக்கானல், ஊட்டி, சென்னை என ஊர் சுற்றினோம். நான் வீட்டை சுத்தமாக மறந்து போனேன்.

இம்முறையும் நான் "டாப் மார்க்" அவர்களை பொறுத்தவரை. விடுதியில் இருந்து அரியர் இல்லாமல் தப்பித்த சிலரில் நானும் ஒருவன் ஆனேன். 3 பேப்பரில் ஜஸ்ட் பாஸ். எல்லோரையும் கூப்பிட்டு HOD கண்டித்தார்.

"நீ போன தடவ, நல்லாதானே படிச்ச...இப்ப என்ன ஆச்சு உனக்கு..?"

நாங்கள் சீனியர்ஸ் ஆனோம். எங்கள் கல்லூரியின் மாணவ்ர்கள் சட்டப்படி, விடுதியில் இருக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களை விடுதியில் இருப்பர்வகள் மட்டுமே ராகிங் செய்ய முடியும்.

அதே போல்தான் தினம் வந்து செல்வோருக்கும்.

இந்த சட்டம் மீறப்பட்டது. சிவில் படிக்கும் மாணவன் ஒருவன், எங்கள் விடுதி மாணவனை ராகிங் செய்தான்.

"மச்சான், இந்த சிவில் ............ நாம யாருன்னு காட்டணும். இனி ஒரு ஜூனியர் டே-ஸ்காலர் கூட விடாதீங்க. எல்லாரையும் சாவடீங்க." மணி எங்களுக்கு உத்தரவு பிறப்பித்தான்.

ராகிங் செய்த மாணவன் தாக்கப்பட்டான். ஜூனியர் டே-ஸ்காலர் எங்களை பார்த்து நடுங்கினர்.

தாக்கப்பட்ட மாணவன் ஆள் சேர்க்க, விஷயம் அவன் வீட்டில் தெரிந்து, நாங்கள் எல்லோரும் 15 நாட்களுக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டோம்.

கல்லூரியில் இருந்து நீக்கப்படாலும், விடுதியில் தங்க அனுமதி கிடைத்தது. விடுதியில் இருக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு எங்கள் மீது பயம் ஏதும் இல்லாமல் இருந்தது.

அன்று விடுமுறை. முதலாம் அண்டு மாணவன் ஒருவன் ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தான். எங்களை பார்த்தும் பார்க்காததுபோல் இருந்தான்.
"டேய்....இங்க வா....." "நீ அப்படியே கிளம்பு.."
அந்த பெண்ணை கிளம்ப செய்ததில், அவனுக்கு கோபம்.

"என்னங்க....நீங்க யாரு அவள கிளம்ப சொல்றதுக்கு..?"
"......இந்த வயசுலேயே உனக்கு ஜாரி கேட்குதா...? " மணி பொளேர் என ஒரு அரை வைக்க, அவன் மயக்கமானான்.இதை பார்த்துக்கொண்டிருந்த அந்த பெண் ஓட்டம் பிடித்தாள்.

இந்த முறை ஒரு மாதம் நீக்கப்பட்டோம். அதோடு பெற்றோரையும் அழைத்து வர வேண்டிய காட்டயத்திற்கு ஆளானோம்.

அப்பாவிடம் செய்யாத தவறுக்கு நான் மாட்டிக்கொண்டேன் என பொய் சொல்லி, அவரை அங்கிருந்தே பேசச் செய்தேன்.

ஒரு வழியாய் பிரச்சனை ஓய்ந்தது. அடுத்த செமஸ்டர் வந்தது.

இந்த முறை 10 நாட்களே விடுமுறை இருந்தது.

பரீட்சை முடிவு வந்தது. நான் எல்லா பாடங்களிலும் தோல்வியை சந்தித்தேன். ஒரு பாடத்தில் கூட இன்டெர்நலில் முப்பதிற்கு 10 மதிப்பெண் கூட வாங்கவில்லை. கல்லூரி விட்டு வெளியே வந்தேன். மணி பத்தவைத்திருந்த சிகரெட் வாங்கி புகைத்தேன்.

" ...... வேணும்னே குத்திருக்கானுங்க மாப்ள.."

என்னுடைய வகுப்பறைக்கு வெளியே எல்லா பாடங்களிலும் தோல்வி அடைந்த என்னையும், மணியையும் எந்த ஆசிரியரும் உள்ளே விடக்கூடாது என்று அறிவிப்பு இருந்தது.

HOD பார்க்க சென்றோம்.
"அப்பாவ கூட்டிட்டு வாங்க. நாங்க TC ரெடி பண்ணியாச்சு."
"சார்..."
"வெளியப் போ.."

வேறு வழியேயில்லை.
அப்பா வந்தார். HOD என்னை வெளியே நிற்கச் சொன்னார்.

அப்பா வெளியே வந்தார்.
"கிளம்பு. ஊருக்கு போகலாம்."
"அப்பா..."
விடுதியிலும், பேருந்திலும் ஒன்றும் பேசவில்லை.

வீட்டுக்குள் சென்றதும் பளார் என ஒரு அடி விழுந்தது. என் அப்பா என்னை இதுவரை கைநீட்டி அடித்ததில்லை.
"உன் வாழ்க்கை நல்ல இருக்கணும்னா படி"

அம்மா ஓடி வந்து என்னை தாங்கிப்பிடித்தார்.
அப்பா அம்மாவிடம், "உனக்கு தேவையான துணிமணி எடுத்துக்க. ரெண்டு பெரும் மதுரை கிளம்புங்க. ஒரு ரெண்டு நாளைக்கு நீ ஹாஸ்டல் கெஸ்ட் ஹவுஸ்ல தங்கிக்க. அதுக்குள்ள இவன காலேஜ் பக்கத்தில ஒரு வீடு பார்க்க சொல்லு. இனி அவன் நல்லா வர்றதும், நாசமா போறதும் உங்க ரெண்டு பேர் கைல."

நான் என் அறைக்கு சென்றதும் அப்பா அம்மா பேசுவது கேட்டது. "தண்ணி, சிகரெட் ஒன்னு விடல. ராக்கிங் வேற பண்ணி இருக்கான். என்ன பிரச்சனடி இவனுக்கு..?"

அம்மா என்னிடம் சகஜமாய்தான் பேசினார். மதுரை வந்து ஒரு வீடு பிடித்தேன்.
கல்லூரி சென்றேன். மணியின் அப்பாவும் வந்து போயுள்ளார்.
"தம் வாங்க கூட காசில்ல மாப்ள.."
"விட்றா..நான் வாங்கித்தரேன்."

நானும் மணியும் நன்றாக குடித்தோம்.
"மாப்ள, இதோட ஹாஸ்டல் போமுடியதுரா..."எங்க அப்பா வார்டன், வாட்ச்மன் எல்லார்டையும் சொல்லிட்டு போயிருக்கான்.

எங்கள் வீட்டுக்கு போனோம்.அம்மா உறங்காமல் காத்திருந்தார்.
"அம்மா. இது மணி."
"உள்ள வாப்பா."
இருவருக்கும் அம்மா உணவு பரிமாறினார்.

"மணி, உங்க அப்பாவும் வந்தாரப்பா..?"மணி தயங்கினான்.
"நீ கெட்டுப்போனதுக்கு என் பையன்தான் காரணம்னு HOD சொன்னாரா..?"மணி பதில் பேசவில்லை.
"என்னடா அப்பிடியா..?" இது நான்.

"உங்க அப்பாட்ட என்ன சொன்னாங்கன்னு தெரியுமா உனக்கு..?" இது அம்மா.
நாங்கள் இருவரும் வருகிற பரிட்சையில், ஒரு பாடத்தில் கூட தேர்ச்சி பெறப்போவதில்லை. கல்லூரிக்கும் சரியாக வரப்போவது கிடையாது. சென்ற பருவத்தில் வந்த நாட்கள், இந்த பருவத்தில் செல்லும் நாட்கள் எல்லாம் மொத்தம் கணக்கு செய்து வருகை பதிவேடு காரணம் காட்டி எங்களை எங்கள் பல்கலைக்கழகம் மூலியமாக வெளிய அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
அம்மா கொஞ்சம் கூட கோபம் காட்டாமல் எல்லாம் சொல்லி முடித்தார்.

"எனக்கு ஒரே ஒரு ஆசைதான்பா. நாளைக்கு உன் தங்கச்சி கல்யாணம்போது, என்னால முடிஞ்சது இதுப்பான்னு நீ கொடுத்தா, நாங்க எவ்வளவு சந்தோசப்படுவோம்."

எங்கள் இருவருக்கும் படுக்கை தயார் செய்து அவரும் உறங்க சென்றார்.
எங்களுக்கு தூக்கம் வரவில்லை. வீட்டின் வெளியே வந்து அமர்ந்தோம். அம்மா உறங்கிவிட்டார் என முடிவி செய்த மணி சிகரெட் பற்ற வைத்தான்.

"அவனுங்க வேணும்னே நம்மள குத்தறாங்க ....நம்ம என்னடா தப்பு பண்ணோம்..?"

காலை எங்கள் இருவருக்கும் அம்மா உணவு பரிமாறினார்."மணி. உன் பிரண்ட யாராவது வம்பிழுத்தா....நீ என்ன பண்ணுவ..?"
"சாவடிசிருவேன்மா..."
"உன்ன யாரவது வம்பிழுத்தா உங்க அப்பா அம்மா அந்த பையன என்ன பண்ணுவாங்க..?"

என்னிடம் 10 ரூபாய் நீட்டினார்.
"3 சிகரெட் வாங்கிக்க. காலேஜ்ல இருந்து நேரா வீட்டுக்கு வா."
"மணி. என் பையன நீ ஒரு நல்ல பிரண்டா நெனச்சா, நீயும் இங்கயே தங்கலாம். இல்லாட்டி இதுவே நீ இங்க வர்றது கடைசியா இருக்கும்."

ரெண்டு பேருக்கும் ஒன்னு சொல்றேன்.
"யாராவது உங்கள பழிவாங்குறதா நெனச்சா, உங்கள விட முட்டாள் யாருமே கிடையாது.."

பெட்டி படுக்கை எடுத்துக்கொண்டு மணியும் என்னுடன் வந்தான். அவனுக்கும் அம்மா 10 ரூபாய் கொடுத்தார்.

அடுத்த செமஸ்டர் வந்தது. இந்த செம் பேப்பர் காலையில் இருக்க, அரியர் பேப்பர் மதியம் இருக்கும். இரவு கண் விழித்து படிப்போம். எங்களுடன் அம்மாவும் அமர்ந்திருப்பார். நாங்கள் இருவரும் ஒரு 4 மணிப்போல் தூங்குவோம். அம்மா அதற்குள் காலை உணவு செய்து எங்கலுக்கு கொடுப்பார். மதிய உணவு சமைத்து கல்லூரிக்கே வந்து கொடுத்துப்போவார்.

நானும், மணியும் சேர்ந்து படித்தோம். அரியர் பேப்பரில் நான்கை இந்த முறையும், மீதி நான்கை அடுத்த முறையும் எழுத அம்மா சொன்னார்.

தேர்வு முடிந்ததது. நான் அம்மாவை ஊருக்கு போக சொன்னேன். அம்மா கேட்கவில்லை. நாங்கள் மூவரும் வீட்டிலயே இருந்தோம். அந்த 4 பாடம் படித்தோம். எங்கள் விடுமுறை நேரத்திலும் அம்மா அவ்வளவாக ஓய்வு எடுக்கவில்லை.

முடிவுகள் வந்தது. இந்த செமஸ்டரின் எல்லா பாடங்களிலும், அந்த 4 பாடங்களிலும் தேர்சிப்பெற்றோம்.

அப்பா முதல் முறையாக எங்கள் வீட்டிற்கு வந்தார். அம்மாவை கிளம்பச்சொன்னார். தங்கையும் வந்தாள். அம்மா தான் வந்த வேலை இன்னும் முடியவில்லை என சொல்லி மறுத்துவிட்டார். தங்கையிடம் தனியாக பேசினார்.

ஐந்தாவது செமஸ்டர். இந்த முறையும் காலை ஒரு பேப்பர். மதியம் ஒன்று. எல்லாம் தேர்ச்சி அடைந்தோம்.

HOD எங்களை அழைத்தார்.
"என்னடா படிக்கிறீங்க போல இருக்கு"
எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது. அம்மாவிடம் சொன்னேன். அம்மாவின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை.

"இப்போ நீ எவ்ளோ பெர்செண்ட் வெச்சிருக்க..?"
"மொத செம்ல 70, ரெண்டாவது 60. மூனாவது...."
"பரவா இல்ல சொல்லு..."
"52"
"நாலு, அஞ்சு..?"
"55, 58"
"மொத்தம்..?"
"59"
"உங்களுக்கு எப்போ கம்பஸ்..?"
"7th செம் ஆரம்பத்திலேயே வந்துரும்.."
"எவ்ளோ வேணும் கம்பஸ்க்கு..?"
"60 - மினிமம். ஆனா நம்ம விட நெறைய பேர் இருந்தா அது ஜாஸ்தி கூட ஆகலாம்."
"சரி. போய் சாப்பிடு"

யோசித்து பார்த்தேன். இரண்டு தேர்விலும் 12 பாடங்கள் எழுதி உள்ளேன். இந்த முறை 8. ஏன் நான் முயற்சி செய்யக்கூடாது?

ஆறாவது செம்மில் நான் எடுத்தது 80 சகதிவிகிதம். எல்லோரும் புகழ்ந்தார்கள். என் மொத்த சகதிவிகிதம் 62.5 ஆனது.

அம்மா இப்பொழுதும் மகிழ்ச்சியாய் இல்லை.
"கம்பஸ்க்கு படிக்க ஆரம்பி."

என்னுடைய இயந்திரவியல் துறையில் நாந்தான் முதல் ஆளாக வேலைக்கு தேர்வு பெற்றேன்.இனிப்பு வாங்கி வீட்டிற்கு வந்தேன். அம்மா உறங்கிக்கொண்டிருந்தார். முதல் முறையாக அம்மா உறங்குவதை நான் பார்த்தேன்.

அம்மா என்னை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தார்.
"நான் ஊருக்கு கிளம்புறேன்பா. செம் லீவுக்கு வீட்டுக்கு வா."

நானும் அம்மாவும் நல்ல உணவகத்தில் உணவருந்தினோம். அம்மா பேருந்தில் ஏறியவுடன், அம்மாவிடம் ஒரு மோதிரம் கொடுத்தேன்.
"என்னடா இது. யார்டயாவது கடன் வாங்கினியா..?"
"இல்லம்மா. நீ என்னைக்கு 10 ரூவா கொடுத்தியோ அன்னைக்கே நான் சிகரெட் பிடிக்கிறத நிருத்திட்டேன்மா. இது தங்கச்சிக்கு. நான் வாங்குன மொத நகை. என் தங்கச்சி கல்யாணம் என் காசில மட்டும்தான்மா நடக்கும்."