Monday, July 20, 2009

பைத்தியக்காரன்-2 (கதை - 12)

Share |
முன் குறிப்பு : என்னுடைய இந்த கதைக்கும், முந்தைய பைத்தியக்காரன்-1 க்கும் சில சம்பந்தகள் உள்ளது. முதல் கதையை படித்தால்தான் இது புரியும் என்ற கட்டாயம் இல்லை.


ரு வழியாக எனக்கு வேலை கிடைத்தது. நான் தொடர்ந்து என் சித்தி வீட்டிலேயே தங்கி இருந்தேன். முடிந்தவரை என் சித்திக்கும், என் தங்கைக்கும் உதவியாக இருந்தேன்.

ஒரு சனிக்கிழமை மாலை என்னுடன் வேலை செய்யும் உயர் அலுவலகர் வீட்டிற்கு புறப்பட்டு கொண்டிருந்தேன். அவருடைய பெண் குழந்தைக்கு இன்று பிறந்தநாள்.வெளியில் மழை தூவிக்கொண்டிருந்தது.

என்னுடைய இரு சக்கர வாகனம் மழையில் நின்றிருந்ததால் அதனை உயிர்ப்பிப்பது கொஞ்சம் சிரமமாய் இருந்தது. மீண்டும் மீண்டும் உதைந்தேன்.வண்டியில் அமர்ந்தவாறே கீழே குனிந்து ஸ்பார்க்-ப்ளக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். நிமிர்ந்து பார்க்கும்பொழுது எனக்கு மிக நெருக்கத்தில் ஒரு சிறுவன் நிற்க, கொஞ்சம் தூக்கிவாரி போட்டது.

என்னுடைய பயம் தெளியும் முன்னரே, "அங்கிள், ஒரு 2 ருபீஸ் இருக்குமா அங்கிள் " என்றான். அவனுடைய உடலில் ஒரு நடுக்கம் இருந்தது

என்னுடைய பயம் இப்பொழுது கோபமாக மாறி இருந்தது. அவனுக்கு ஒரு 15,16 வயது இருக்கலாம். மேல்சட்டையும், ஷார்ட்சும் அணிந்திருந்தான். அவனுடைய முகத்தில் கொஞ்சம் பயம் இருந்தது. இப்பொழுது என்னுடைய முக மாற்றம் கண்டு இன்னும் கொஞ்சம் பயந்து போனான்.

"உன் வீடு எதுடா..?" கோபமாக கேட்டேன்.
"இல்ல அங்கிள், வேணாம் அங்கிள், நான் போயிடறேன்.."
"உன் வீடு எது சொல்லு..? உன் பெயர் என்ன..?"
"இல்ல அங்கிள்....." சொல்லிக்கொண்டே ஓட்டமும், நடையுமாக அங்கிருந்து கிளம்பினான்.
"நில்லு..."
என்னுடைய கோபம் குறைந்து அவனுடைய செய்கை கண்டு அவன் மீது பரிதாபம் வந்தது. அவனை தொடர்ந்தேன்.
"நில்லு தம்பி..."

தூறலுக்கு ஒதுங்கி நின்ற எங்கள் குடியிருப்புகளின் காவலாளி என்னை நோக்கி வேகமாக வந்தார்.
"என்ன சார்...என்ன ஆச்சு..?"
"ஒன்னும் இல்லங்க....." நான் அவனை தொடர முயற்சித்தேன்.
அவன் எங்களது குடியிருப்பில் என்னுடைய வலது பக்க வீதியில் சென்று மறைந்தான்.
"சார், என்ன ஆச்சு..?"
"ஒன்னும் இல்ல வாட்ச்மன், அந்த பையன் நம்ம காலனிதானா..?"
"நம்ம காலனிதான் சார்..ஏன் சார்..? எதாவது பிரச்சனை பண்ணிட்டானா..?"
"அதெல்லாம் ஒன்னும் இல்ல....."

தூறல் முழுமையாக நின்றது. வண்டியும் உயிர்ப்பெற்றது.வாட்ச்மேனிடம் ஒரு 10 ரூபாய் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

என்னுடைய உயர் பணியாளருக்கு ஒரு பையன் மற்றும் ஒரு பெண். போகும் வழியில் அவளுக்கு ஒரு பிறந்தநாள் பரிசு வாங்கிக்கொண்டேன்.

வீடு முழுக்க அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அந்த அறையின் நடுவில் ஒரு மேசை வைக்கப்பட்டு அதன் மீது ஒரு சிகப்பு நிற பட்டு போர்வை போர்த்தப்பட்டு இருந்தது. அதற்கு பின்னே இருந்த சுவற்றில் , "இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சிவானி" என்ற வார்த்தைகள் காட்சி அளித்தன.

என்னுடைய உயர் பணியாளர் என்னை அவர்களின் குடும்பத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார். அவருடைய பையனை பார்த்தவுடன் எனக்கு என் வீட்டருகே சந்தித்த பையனின் நினைவு வந்தது. "என்னவாக இருக்கும் அவனின் பிரச்சனை..?"

பிறந்தநாள் விழா முடிந்து வீட்டிற்கு வந்தேன். மீண்டும் மீண்டும் அவன் நினைவுக்கு வந்தான். தூக்கம் பிடிக்கவில்லை. நாளையும் விடுமுறைதான்.

வீட்டை விட்டு வெளியே வந்தேன். அவன் சென்ற திசை நோக்கி நடந்தேன். மாலை நேர காவலாளி மாறி இப்பொழுது இரவு நேர காவலாளி வந்திருந்தார். புகைப்பிடித்துக்கொண்டிருந்தார். இவர் கொஞ்சம் வயது மூத்தவர். நிறைய பேர் இவரை அய்யா என்றுதான் அழைப்பார்கள்.

"என்ன தம்பி ..? ஏதாவது வேணுமா..?"
"இல்லங்க அய்யா....சும்மா தூக்கம் வரல..."
"ஆமா ராசு ஏதாவது பிரச்சனை பண்ணிட்டான உங்ககிட்ட..? நம்ம ஏழுமலை சொன்னான்....நீங்க அவன தொரத்திட்டே போனீங்கன்னு.."
அவன் பெயர் வரதராஜு.
"இல்லங்க அய்யா. பிரச்சனை ஏதும் பண்ணல.....ஆமா அவன் வீடு எது..?"
"அதோ அங்க ஒரு போஸ்ட் கம்பம் தெரியுதில்ல, அதுல இருந்து மூணாவது வீடு, ரெண்டாவது மாடி...." "ஹ்ம்ம்.." என்ற ஒரு பேரு மூச்சுக்கு பின், அவரே தொடர்ந்தார்.
"அவனுக்கு ஏழு வயசு இருக்கும்போது அவங்க குடும்பம் இங்க வந்துச்சு.....எப்ப பார்த்தாலும் அவங்க அப்பன்ட்ட அடி, ஒத வாங்கிட்டே இருப்பான். இப்ப இந்த மாதிரி ஆயிட்டான்."
"எந்த மாதிரி...?"

வரதராஜுவிற்கு போதை பழக்கம் உள்ளது என்றும், அவன் பெற்றோர் அதனால்தான் அவனை வீட்டிற்குள்ளேயே அடைத்துவைக்கிறார்கள் என்றும் தெரிந்துகொண்டேன்.
அதற்காகத்தான் என்னிடம் ரூபாயும் கேட்டிருப்பான் போல.

"அவன பார்த்தா எனக்கு போதை பிரச்சனை மட்டும் தெரியல அய்யா...வேற ஏதாவது பிரச்சனை இருக்குமோன்னு தோணுது. அவங்க அப்பா அம்மாவ நெனச்சாதான் கஷ்டமா இருக்கு.."
"என்ன பைத்தியக்காரன் மாதிரி இருக்கானா..?" அண்ணாந்து பார்த்து ஒரு வறட்டு சிரிப்பு சிரித்தார். "அட போங்க தம்பி, அப்பா அம்மா....அவன் அப்பாதான் இது எல்லாத்துக்கும் காரணம்.."
"என்ன சொல்றீங்க..?"

வரதராஜு பிறந்தது அமெரிக்காவில். அவனுடைய பெற்றோர் இருவரும் அங்கு வேலை பார்த்து வந்தவர்கள். தங்களுடைய வேலை பளுவுக்கு இடையிலும் அவனுக்கு செய்ய வேண்டிய எல்லாவற்றையும் சரியாகவே செய்து வந்தனர். அவனின் அப்பா அடிக்கடி மற்ற ஊர்களுக்கும் அழைவதால் அவனுக்கான அன்பு கொஞ்சம் கம்மியாகவே கிடைத்துவந்தது. படிப்பில் கெட்டியாக இருந்தாலும் வரதராஜு ஒரு சுட்டி பிள்ளையாகவே வளர்ந்து வந்தான். அவனின் சக மாணவர்களை அடிப்பது, அமெரிக்க குழந்தைகளை கேலி செய்வது அவனின் பொழுதுபோக்கு.

தனக்கு கிடைக்கும் கொஞ்ச நேரத்திலும் தன் குழந்தையை பற்றி அவர் கேட்ட விஷயங்கள் அவருக்கு கோபத்தையே வெளிப்படுத்தியது. முதலில் திட்டிப் பார்த்த அவர் ஒரு நாள் அடித்தேவிட்டார். இதுவே கொஞ்ச காலத்தில் வழக்கமாகிப்போனது.

அவனுக்கு ஒரு ஏழு வயது இருக்கும். அவன் செய்த ஒரு சுட்டித் தனத்துக்கு அவனை இவர் அடிக்க, வரதராஜு அமெரிக்க காவல்துறைக்கு தொலைப்பேசினான்.
வெளியூர் செல்ல காத்திருந்த அவனின் தந்தையை ஒரு விமான நிலையத்தில் வைத்து காவல் துறை கண்டித்தது. பிள்ளைகளிடம் எப்படி அன்பாக நடந்துகொள்ள வேண்டும் என்று புத்தி சொல்லி சென்றது.

வீட்டுக்கு வந்தவர் அனைவரும் ஒரு வாரத்தில் இந்தியா கிளம்புவதாக அறிவித்தார். விஷயம் தெரிந்த அவள் மனைவி வரதராஜுவை அடிக்க சென்றால். அதை அவர் தடுத்துவிட்டார். மன்னிப்பு கேட்ட வரதராஜுவையும் அவர் கண்டுக்கொள்ளவில்லை.

விமானம் சென்னையில் தரை இறங்கியது. வெளியே வந்தவுடன், தான் மாட்டி இருந்த பெல்ட் அவிழ்த்து தூக்கத்தில் தடுமாறிக்கொண்டிருந்த சிறுவனை............
"இப்ப கூப்பிடறா, எவன் வர்றான்னு பாக்குறேன்.." என்றார்.

எனக்கு கண்ணீர் முட்டியது.

அதற்குப் பிறகு அவன் இங்கு ஒரு பள்ளியில் சேர்க்கப்பட்டான். அமெரிக்காவில் வாங்கிய அதே அளவு பணம் தேவைப்பட்டதால் கணவனும் மனைவியும் நிறைய நேரம் உழைத்தனர். வரதராஜு அனாதையாக்கப்பட்டான். எப்பொழுதும் ஒரு அச்சத்தோடு வாழ்ந்துவந்தான். பத்தாம் வகுப்பு படிக்கும்போது அவனுக்கு போதை பழக்கம் வந்தது.

தெரிந்த அவன் அப்பா, "என்னைக்கு பெத்த அப்பன போலீஸ்ல புடிச்சு கொடுத்துச்சோ, அன்னைக்கே இதெல்லாம் உரப்படாதுன்னு தெரியும்" என்றார்.

"அப்ப இருந்து ராச வீட்டுக்குள்ள வச்சு பூட்டிட்டு போய்டுவாங்க."

அவனுடைய வீடு எதுவென விசாரித்து அவன் வீட்டின் பக்கம் சென்றேன். அவன் அந்த ஜன்னலின் வழியே வீதியை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்.