Monday, September 29, 2014

ஜீவா

Share |
திரைப்படங்களில் நிதர்சனம் அல்லது யதார்தத்தை பற்றி பேசும்பொழுது எதிர்மறை முடிவுகள் இயல்பானது. அப்படியான நிதர்சன முடிவுகளில் அந்த முடிவை தாங்கும் கதாபாத்திரத்தோடு அந்த கதாபாத்திரம் பட்ட கஷ்டங்களும் முடிவுக்கு வந்துவிடும். அப்பொழுது உண்மையான உழைப்புக்கான பலன்?

மேலே சொன்ன 2 விசயங்களையும் மிக அழகாக தாங்கி வந்துள்ள படம் ஜீவா. சுசீந்திரன் இயக்கத்தில் இமான் இசையில் விஷ்ணு, ஸ்ரீ திவ்யா, லஷ்மண் நாராயண், சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வயது வித்தியாசம் இன்றி கிரிக்கெட மட்டையை தொட்ட எவருக்கும் இந்த படம் பிடிக்கக்கூடிய வாய்ப்புண்டு. குறிப்பாக சிறு வயதில் தெரு கிரிக்கெட்டில் துவங்கி நாமும் ஒரு நாள் பெரிய கிரிக்கெட்டராக வருவோம் என்று ஏதாவது ஒரு தருணத்தில் நினைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த படம் பிடிக்கும்.


ஜீவாவாக வரும் விஷ்ணுவிற்கும் கிரிக்கெட் மீது தீராத காதல். சச்சின் மேல் மற்றவர்கள் கொண்ட பற்று அவரையும் கனவை நோக்கி ஓடச் செய்கிறது. அந்த கனவிற்கு பெரிய துணையாக தன் சொந்த அப்பா இல்லாவிட்டாலும், அவனின் பக்கத்து வீட்டு அருள் அப்பா அதற்கு பள்ளி காலம் தொட்டு துணையாக இருக்கிறார். பள்ளி கால காதலி ஜென்னியாக ஸ்ரீ திவ்யா - சென்னையில் படிக்கும் மாணவியின் குறும்புகளோடு. பள்ளி குறித்த காதல் காட்டப்பட்டிருந்தாலும், தங்கள் பெற்றோரின் வார்த்தைக்கு ஜென்னி மதிப்பு கொடுத்து காதலை துறக்கும்போது ஈர்க்கிறார். ஆனால் அதே காதல் விஷ்ணு மனதில் ரணமாகிறது.

ஒரு விசயத்தை மறக்க இன்னொரு நல்ல விசயம் தேவை என்ற அடிப்படையில் ஜீவாவின் அப்பா அவனின் தீவிர கிரிக்கெட் பயிற்சிக்கு சம்மதிக்க, அதற்கு பிறகு வரும் கிரிக்கெட் வளர்ச்சி, பயிற்சி, கிரிக்கெட் விளையாடுபவர்களுக்குள் வரும் ஈகோ சண்டைகள், Team work, காதல், நட்பு, கலாய்ப்புகள்தான் பெரும்பாலான படம். சிரிப்பு மூட்ட சூரி.

கிரிக்கெட்டின் உச்ச கட்டத்தை அடைவதற்கு ஒவ்வொருவரும் கடக்க வேண்டிய பாதை மற்றும் Process சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது. அந்த உச்சத்தை அடைய ஜீவா மற்றும் மற்றொரு கிரிக்கெட்டர் ரஞ்சித் ஆகிய இருவருக்கும் தகுதி, திறமை இருந்தும், நம் நாட்டின் சாபக் கேடான சாதி அரசியல் இவர்களை தோற்கடிக்கிறது.'வாய்ப்பு வழங்கப்படாமலேயே இவர்கள் தோற்கும் நிலைமையும் வருகிறது.

பள்ளி மாணவனாக ஜீவாவை பார்ப்பது கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் படம் முழுக்க சிறப்பாக நடித்துள்ளார். இன்னொரு முறை சரியான படங்களை தேர்வு செய்து நடித்துள்ளதிலும் ஜெயித்துள்ளார். பள்ளி காதலியாக ஜீவாவை காதலிப்பதும், பின்னர் அவரை விட்டு விலக நினைப்பதும் என ஸ்ரீ திவ்யாவிடமும் சிறந்த நடிப்பு. ரஞ்சித்தாக வரும் லஷ்மண் நாராயண் கிரிக்கெட்டராகவே தெரிகிறார். தோற்கும்போது காட்டும் வலியில் ஈர்க்கிறார். அவர்களை தாண்டி ஜீவாவின் அப்பா, சார்லி, ரஞ்சித் நண்பர்கள், 'கதற கதற காதலிக்கும்' பி.பி.சேகர், சிறு வயது ஜீவா என அனைவருமே தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளார்கள்.


இமானின் இசையில் 'ஒவ்வொன்றாய் திருடுகிறாய்' மற்றும் 'ஒருத்தி மேலே' சிறப்பு. ஆனால் ஒன்று இளையராஜாவையும், மற்றொன்று பரத்வாஜையும் ஞாபகப்படுத்துகிறது.

மதியின் ஒளிப்பதிவு பாராட்டுக்குரியது. 'ஒவ்வொன்றாய் திருடுகிறாய்' பாடலில் வரும் மிக சாதாரண அமைவிடங்களை வித்தியாசமாய காட்டியது ஆகட்டும், கிரிக்கெட் போட்டிகளை படம் பிடித்தது ஆகட்டும், இல்லை கடைசியில் வரும் பிரம்மாண்ட 'IPL' போட்டி போன்ற ஒன்றை காட்டியதாகட்டும் மிக நிறைவான பணி.

சுசீந்திரன் - இப்படிபட்ட ஒரு கதை களத்தை தேர்வு செய்ததற்கும், துணிச்சலாக கிரிக்கெட்டில் நடக்கும் ஜாதி அரசியலை பேசியதற்கும் மனப்பூர்வ வாழ்த்துக்கள். உறவுகளை கையாள்வதில் அவர் ஒரு வித்தகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். முதலில் காட்டப்படும்பொழுது தேவையற்ற டாஸ்மாக காட்சியிலும் பின்னர் ஒரு நெகிழ்வை கொண்டுவருகிறார்.வாழ்த்துக்கள் சுசீந்திரன்.

நான் முதலில் சொன்னதுபோல தமிழ்நாட்டில் இருக்கும் அநேகமானவர்கள் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்புள்ளது. இந்த படத்தை நிச்சயம் பார்க்க வேண்டியவர்கள் பார்த்து இதனால் ஒரு சிறு மனமாற்றம் ஏற்பட்டாலும் அதுவும் ஒரு வெற்றியே.

Tuesday, September 23, 2014

பைத்தியக்காரன்-3 - "என்னாச்சு?"

Share |

இப்படி நடப்பது இது 2வது முறை. முதல் முறையும் அதே இடத்தில்தான் நடந்தது. அன்று நடந்தது மாதிரியே பொதுக் கூட்டத்தின் முடிவில் ஏதோ ஒரு கேள்விக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கும்பொழுது பாதியில் அப்படி ஆனது. இன்றும் பாதி பதிலில் அப்படி ஆனது. மிகக் குறைந்த நொடிகளே அப்படி இருந்ததால் அதனை யோசிப்பதற்கான நேரம் என சொல்ல முடியாது.  யோசனை என்று இருந்திருந்தால் ‘வந்து..வந்து...’ என வாய் சொல்லிக்கொண்டேயிருந்திருக்கும். "நீங்கள் கேட்கும் கேள்வி எனக்கு புரிகிறது. நீங்கள் உங்கள் பேச்சில் ‘வந்து..’ என்ற சொல்லை பயன்படுத்துவதில்லை. அடுத்தவருக்கு அறிவுரையாகக் கூட இதனை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.”

“ஆம், உண்மைதான் ‘வந்து..வந்து’ என்று இழுப்பது ஒரு நல்ல பேச்சாளருக்கு அழகில்லை. அவர் பேச்சாளரே இல்லை. எப்படி நான் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் அனைத்திலும் பேச்சாளருக்கு அவர் பேசிய பிறகு கேள்வி-பதில் பகுதி இருக்கவேண்டுமோ அப்படித்தான் 'வந்து' பயன்படுத்துதல் கூடாது.”

ஆனால் அப்படி இழுக்காமல், எனக்கு நடந்தது மிக குறைந்த நொடிகள் மட்டும் இருந்ததில் ஒரு நன்மையும் இருந்தது. யாருக்கும் அது தெரியவில்லை. எனக்கு தெரிந்திருந்தாலும் புரியவில்லை.

தீவிரமாக யோசித்தேன். ஒற்றுமைகள் சரி. வேற்றுமைகள்..? முதல் தடவை நடந்தபோது இரவு 9 முதல் 10 மணிக்குள்....1 மணி நேரம்தான் பேச்சு. 9.30 தாண்டித்தான் நடந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் கேள்வி-பதில் நேரம்.

2வது தடவை 12 முதல் 12.30க்குள். அரை மணி நேரம்தான் பேச்சும், கேள்வி-பதிலும். அந்த இடைவெளியில் எப்பொழுது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்.

முதல் தடவை முக்கிய பேச்சாளர்கள் பேசிய பின்தான் நான் கடைசியாக பேசினேன். 2வது தடவை என்னைத் தவிர முக்கிய பேச்சாளர் யாரும் இல்லை. இல்லை அப்படித்தான் சொல்லிக்கொள்கிறார்கள்.

அது இருக்கட்டும். ஏன் அப்படி ஆனது? ஒரு சிகரெட் பற்ற வைத்தால் புரிய வாய்ப்புள்ளதா? எனக்கு அப்படி தோன்றவில்லை. அதைத் தவிர சிகரெட் புகைத்தும் வெகு நாளாகிவிட்டது.

மேலோட்டமாக பார்த்தால் அதனை நினைத்து நான் சிரிக்கலாம். கூட்டத்தில் கூட இது குறித்து பேசி, அதில் சில நன்மைகள் உண்டு என்று நகைச்சுவைக்கு சொல்லி கைத்தட்டல் வாங்கலாம். ஆனால் தீவிரமாக யோசித்தால்? அது தொடர்ந்திருந்தால்? நினைத்துப்பார்க்கவே பயமாக உள்ளது. அது தொடர்ந்திருந்தால், எங்கு நினைப்பார்ப்பது? அத்தோடு எல்லாம் காலி. வெகுகாலம் இல்லை. சில நிமிடங்கள் தொடர்ந்திருந்தாலே என் ஆட்டம் முடிந்திருக்கும்.

இதனை பற்றி யாரிடமாவது சொல்லலாம் என்றால் ஒரு பக்கம் பயம். எங்கே ஏதாவது தர்கா கூட்டி சென்று தாயத்தோ இல்லை பகவதி அம்மன் கோயில் கூட்டி சென்று பேயோட்டுவார்களோ என்ற பயம்.

இன்னொரு பக்கம் நாம் நகைப்புக்கு உள்ளாவாமோ என்ற நினைப்பு – ‘நடிக்காதடா’ என்ற நகைப்பு.

அது எந்த மாதிரி நிலை..? கஞ்சா அடித்து திரிவார்களே அந்த மாதிரி நிலையா..? கஞ்சா அடித்தால் கடைசியாக என்ன செய்துகொண்டிருந்தார்களோ அதைதான் செய்வார்கள் என கேள்விப்பட்டுள்ளேன். கடைசியாக சிரித்துக்கொண்டிருந்தால் சிரிப்பு, அழுகை வந்தால் அழுகை. உங்களிடம் சொல்வதில் என்ன? – நான் ஒரு முறை மரிஜூணா புகைத்துள்ளேன். நண்பர்கள் வீட்டில் விருந்து. விருந்து முடித்து அனைவரும் சுற்றி அமர்ந்து ஒரு பெரிய சிகரெட் எடுத்து பத்தவைத்து, ஒரு இழு இழுத்து அதற்கு அடுத்தவரிடத்தில் ‘pass’ செய்தார்கள். நானும் சிகரெட் என்று நினைத்து உறிஞ்சினேன். அடுத்தவரிடம் கொடுத்துவிட்டு இது என்ன என கேட்டேன். அப்பொழுதுதான் சொன்னார்கள். எல்லாம் ஒரு அனுபவம் என பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்த சுற்றில் நான் பங்கேற்கவில்லை. ஆனால் அன்று கஞ்சா குடித்த யாருக்கும் எனக்கு நடந்தது மாதிரி ஒன்றும் நடக்கவில்லை.

பின் எனக்கு ஏன் இப்படி நடந்தது? நடந்தது கூட பரவாயில்லை. இனி இது நடக்காமல் இருக்கும் என்று என்ன நிச்சயம். ஒரு முறை மட்டும் நடந்திருந்தால் பரவாயில்லை. இரண்டாம் முறையும் இப்படி நடக்கும்போதுதான் இதற்கான தீர்வு என்ன என நான் யோசிக்கிறேன்.

இதற்கு மருத்துவம் ஒரு தீர்வாக அமையலாம். ஆனால் நான் அதனை எப்படி விளக்குவேன்? தேவையில்லாமல் வேறு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டுவிட்டால்? அதுவும் வீட்டுக்கு தெரியாமல் எப்படி?

வீட்டிற்கு தெரிந்தால் கூட சமாளித்துவிடலாம். பொதுவில் தெரிந்துவிட்டால்? பின் எனக்கான கைத்தட்டல்? எனக்கான பாராட்டு? இல்லை. நிச்சயம் தெரியக்கூடாது. கைத்தட்டல்கள் இல்லை என்றால் கூட சமாளித்துவிடலாம். கல்லடி கிடைத்தால்? நமக்கு ஏதாவது ‘பட்டம்’ கட்டிவிட்டால்? இல்லை இதனை சரி செய்யாமல் இன்னொரு கூட்டம் இல்லை. யாராவது கூப்பிட்டால் ஏதாவது பதில் சொல்லி சமாளிக்கலாம். அங்கு சென்று அடிபடுவதை விட இது எவ்வளவோ மேல்.

யோசித்து யோசித்து பின் மண்டை வலிப்பது போல் உள்ளது. கொஞ்சம் தலை பயிற்சி செய்ய வேண்டும். தலையை இந்த பக்கமும் அந்த பக்கமும் மாற்றி, மாற்றி சுற்ற வேண்டும். இப்படித்தான் ஒரு முறை ஒரு மருத்துவர் யாருக்கோ சொல்லிக்கொடுத்ததை பார்த்தேன். நானும் இதனை அடிக்கடி செய்து பார்த்துள்ளேன். தலைக்கு ஒரு பயிற்சி. கை வலித்தால் ஒரு பயிற்சி. முதுகு வலிக்கு ஒரு பயிற்சி. எல்லா பிரச்சனைக்கும் ஒரு பயிற்சி. நானே எனக்குள் சிரித்துக்கொண்டேன். ஒரு யோசனையும் பிறந்தது. இவ்வளவு பிரச்சனைகளுக்கு பயிற்சி இருக்கும்பொழுது நம் பிரச்சனைக்கு பயிற்சி இருக்காதா? ஆனால் அப்படி ஒரு பயிற்சி உண்டா இல்லையா என எப்படி தெரிந்துகொள்வது? இணையம்.

ஆனால் என்ன என்று தேடுவேன்? புரியாத ஒரு பிரச்சனையை எப்படி விளக்குவேன்? பெருவிரல் நகம் வைத்து பற்களை நற நற என தேய்த்தேன். சுற்றும், முற்றும் பார்த்தேன். ஒன்றும் இல்லை. பின் மண்டை வலி ஜாஸ்தியானது. பயிற்சி துவக்கம்.

இந்த பக்கம் 10 முறை. அந்த பக்கம் 10 முறை. தூக்கம் வருவதுபோல் உள்ளது. எழுந்தபின் இது குறித்து யோசிக்கலாம்.

அவர் தூங்கிப்போனார். அவரை சுற்றிலும் எண்ணற்ற காகிதங்கள். ஒரு காகிதத்தில் ஒரு முடிவற்ற கவிதை. இன்னொரு காகிதத்தில் ஒரு நாடகத்திற்கான ஆரம்ப மேடை அலங்காரங்கள். இன்னொன்று சினிமா ‘script’என்ற ஆரம்பம் மட்டும். இன்னொரு காகிதத்தில் இந்த கதையின் தொடக்கம்.......
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த கதைக்கு சம்பந்தமற்ற, மேலும் பைத்தியக்கார கதைகள் படிக்க :  பைத்தியக்காரன்-1 பைத்தியக்காரன்-2 

Saturday, September 20, 2014

சிகரம் தொடு

Share |
தமிழ் திரைப்படங்கள் என்றால் 2 மணி நேரத்திற்கு அதிகமாக இருக்க வேண்டும் என்ற இலக்கணம் உடைக்கப்பட வேண்டும் என நினைக்கிறேன். 1 மணி நேரத்திற்குதான் தன்னிடம் கதை உள்ளது எனும்போது தேவையில்லாத நகைச்சுவை, பாடல்கள் ஆகியவை இடைச்செருகல்களாக தேவைப்படுகிறது. முதல் பாதியை எப்படியாவது ஓட்டிவிட்டு, Interval Block-ல் கதையை துவங்கிகொள்ளலாம் என்ற போக்கு பல படங்களில் தொடர்கிறது. ஆனால் முதல் பாதியில் இயக்குனர் நம்பும் காமெடி காட்சிகள் கைகொடுக்காத போது அவை மொத்த படத்திற்குமான ஒரு சறுக்கலாகவே இருக்கிறது. சத்யராஜ், விக்ரம் பிரபு, புதுமுகம் மோனல் கஜ்ஜார் ஆகியோர் நடித்து கடந்த வாரம் வெளியான 'சிகரம் தொடு' இந்த ரகமே.



முன்னாள் போலீசான, ஒரு போராட்டத்தை அடக்கும்பொழுது தன் ஒரு காலை இழந்த அப்பா, தன் மகனையும் போலீசாக உருவாக்கி தான் சாதிக்க நினைத்ததை மகன் மூலம் சாதிக்க துடிப்பதும், எந்த போலீஸ் வேலை தன் குடும்பத்தை சிதைத்ததோ, அந்த போலீஸ் வேலையில் எப்படியும் சேரக்கூடாது என்று மகன் முடிவெடுப்பதும்தான் ஒரு வரிக் கதை. ஆனால் அதை அப்பாவின் மனம் நோகாதவாறு செய்ய வேண்டும் என நாயகன் நினைக்கிறார். அவரின் 'லட்சியத்திற்கேற்ப' நாயகியும் அமைகிறார். அந்த லட்சிய குழப்பங்களில் சிறு பங்கு வகித்து, 2 பாடல்களுக்கும் வந்து போகிறார்.

ஆனால் எப்படியும் நாயகன் தன் அப்பாவிற்கு ஒரு பாதிப்பு ஏற்படும்பொழுது போலீசாக உருவாக வேண்டிய கட்டாயம் வரும் என்பது எளிதில் கணிக்ககூடிய கதைக்கரு. ( 'அன்புள்ள அப்பா' பாடல் இசையை கேட்டவர்களுக்கு அப்பா-மகன் அறிமுக காட்சியில் இருந்து வரும் இசையும் இதனை உறுதிப்படுத்தும்). அந்த பாதிப்பென்பது  ATM கொள்ளை ரூபத்தில் படத்தில் தொடர்ந்து வருகிறது.


ATM கொள்ளை குறித்து அறிவுப்பூர்வமான காட்சிகள் மட்டுமே படத்திற்கு பலம். முன்பு சொன்னது போல் முதல் பாதியில் காமெடியை கையில் எடுத்த சதீஷ் கடிக்கிறார். இரண்டாம் பாதியில் வரும் 'ஈரோடு' மகேஷ் எவ்வளவோ பரவாயில்லை. டாஸ்மாக கடை காட்டப்படாத படம் என்ற வகையில் ஆறுதல்.

விஜய் உலகநாதனின் ஒளிப்பதிவு மிகச் சிறப்பு - குறிப்பாக இந்தியா முழுக்க பயணித்து வரும் காட்சிகள் செம்ம. இமானின் இசையில் 'அன்புள்ள அப்பா' - யேசுதாசின் மென்மையான குரலில் 'பிடிக்குதே' சிறப்பு. 'டக்கு டக்கு' என்ற முதல் பாடல் காட்சிபடுத்திய விதம் வித்தியாசமாக இருந்தாலும், அந்த பாடலும், முதல் பாதியுமே எதற்கு என்ற கேள்வி எழுகிறது. முன்பு 'தூங்கா நகரம்' தந்த கவுரவ் இயக்கி நடித்துமிருக்கிறார்.

எல்லாம் சரி, இந்த படத்திற்கு 'சிகரம் தொடு'ன்னு எதுக்கு பெயர் வெச்சாங்க?

Wednesday, September 17, 2014

சாதி ஒழிப்பு - ஒரு முட்டாள்தனமான சிந்தனை

Share |

சாதி ஒழிப்பிற்காக தன் வாழ்நாள் முழுக்க பாடுபட்ட பெரியாரின் பிறந்ததினம் இன்று. அவர் காலத்திலிருந்து இன்று யோசிக்கும்பொழுது பல்வேறு சாதிய அடிமைத்தனங்கள் மாறியிருந்தாலும்; சாதிய கலவரங்கள் தலைதூக்கும்பொழுதும், மாவட்டங்களில் அப்பட்டமாக தங்கள் வீடுகளிலும், வணிக இடத்திலும் தாங்கள் இந்த சாதியை சேர்ந்தவர்கள் என மக்கள் மார்தட்டும்பொழுதும் முன்பை விட நாம் பின்னோக்கி செல்கிறோமோ என்ற எண்ணமும் தோன்றாமலில்லை.



மற்ற மாநிலங்களில் உள்ள ரெட்டி, நாயுடு, நாயர், யாதவ் பெயர்களை போல தமிழகத்தில் இன்று 90% பேர் தங்கள் பெயரோடு தங்களின் சாதிப் பெரயர்களை சேர்க்காமல் இருப்பதற்கு பெரியார் ஒருவரே முழுக் காரணம். பெயர்களை விட்டெறிந்த நாம் அதனை முழு மனதோடு செய்தோமா என்ற கேள்வி என்னுள் எழுகிறது. மனதளவில இந்த இந்த சாதியை சேர்ந்தவர்கள்தான் நாம் என்ற எண்ணம் நம்மை விட்டு விலகவேயில்லை. அம்பேத்கரும், பெரியாரும் இன்னும் எத்தனையோ தலைவர்கள் போதித்தும்; எத்தனை எத்தனையோ வழிகள் சொல்லியும் ஜாதியை நம் மனம் விட்டொழிப்பதாக இல்லை.



சமூகத்தில் நடக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் அடிப்படை பிரச்சனை அரசியலும், அரசாங்கமும் என்றாலும் சாதிக்கு உண்மையான ஒரு அரசியல் தீர்வு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. நகரமயமாக்கல், காதல் திருமணங்கள் ஆகியவை தீர்வுகளாக முன்வைக்கப்பட்டாலும் நம் மனதில் உள்ள 'சாதீ' நம்மை விட்டு விலகுவதாக தெரியவில்லை.

இந்த நேரத்தில்தான் இந்த முட்டாள்தனமாக யோசனை எனக்கு தோன்றியது. எந்த சாதிப் பெயர்களை தங்கள் பெயரில் இருந்து பெரியார் நீக்க சொன்னாரோ அந்த சாதிப் பெயர்களை மீண்டும் நம் பெயரோடு இணைத்துக்கொள்வது. ஆனால் நம் சாதிப் பெயரை தவிர மற்ற ஏதாவது ஒரு சாதிப் பெரயரை நம் பெயரோடும், நமக்கு பிறக்கும் பிள்ளைகளின் பெயரோடும் இணைப்பது. உதாரணத்திற்கு தலித்தாக பிறந்த ஒருவருக்கு 'பெயர் + வன்னியர்' என்றோ 'பெயர்+ஐயர்' என்றோ வைப்பது. உயர்சாதி என சொல்லப்படும் சாதியினரோடு 'பெயர்+பரையர்' என்று வைப்பது. ஆனால் யாரால் இதை செய்ய முடியும்? - உண்மையிலேயே சாதியை அழிக்க துடிக்கும், சாதியை வெறுக்கும் ஒரு சிலரால் மட்டுமே இதை செய்ய முடியும். முள்ளை முள்ளால் எடுப்பது போல் சாதிப் பெயர்களை வைத்து சாதிய அடையாளங்களை அழிக்கும் ஒரு முட்டாள்தனமான யோசனை இது :).

Friday, September 12, 2014

கந்தக பூமிக்கு நம் கைமாறு என்ன?

Share |

சேவை பெறும் உரிமை பைக் பயணத்தின் போது ஒரு நாள் சிவகாசியில் ஜெய்கணேஷின் நண்பர் சக்தி அறையில் தங்கினோம். எந்த ஒரு ஊரிலும் இரவு உறங்கும்போது தரை சூடாக, வானிலை வெக்கையாக இருந்தாலும், விடிகாலை வேலையில் வானிலை மாறி தரை கொஞ்சம் ஜில்லாகும், குறைந்தபட்சம் சூடு தணிந்திருக்கும்.  24 மணி நேரமும் தரையின் வெப்பம் குறையாத ஊராக சிவகாசி இருந்தது. இந்த பகுதியின் சீதோஷன நிலைக்கு ஏற்றவாறுதான் வெள்ளைக்காரன் இங்கு பட்டாசு தொழிலை ஆரம்பித்தான் என்று சக்தி காலை டீ அருந்தும்பொழுது சொன்னார்.

சிவகாசி - பட்டாசு, அச்சு (பிரிண்டிங் குறிப்பாக Offset Printing), தீப்பெட்டி மூன்றிற்கும் பெயர் போனது. அச்சு பணி, தீப்பெட்டி பணியை விட பட்டாசு நம் வாழ்வில் கலந்த ஒன்று. எவ்வளவு விலை ஏறினாலும், எவ்வளவு வயதானாலும் ஏதாவது ஒரு வகையான பட்டாசு நம் உள்ளத்தை கவர்ந்திருக்கும். பிற்காலத்தில் சுற்றுப்புறத்திற்காக பட்டாசு வெடிப்பதை நிறுத்தியவர்கள் கூட ஏதாவது ஒரு சமயம் சிவகாசியில் தயாரான பட்டாசுகளை பயன்படுத்தியவர்களாகத்தான் இருப்பார்கள். 

எந்தத்திசையிலும் சிவகாசிக்கு உள்ளே நுழையும்பொழுதும், சிவகாசியைவிட்டு வெளியேறும்பொழுதும் நம் கண்களில் பட்டாசு கடைகள் மட்டுமே நம் கண்ணிற்கு படும். தீபாவளியை ஒட்டி விற்பனை சரி. வருடம் முழுவதும்? அங்கிருக்கும் ஒவ்வொரு கடையும் ஏதாவது ஒரு வெளி மாநிலத்திற்கோ அல்லது வெளிநாட்டிற்கோ பட்டாசுகளை தொடர்ந்து ஏற்றுமதி செய்துவரும்.

அப்படிப்பட்ட சிவகாசியும், பட்டாசு தொழிலும் தவறான காரணங்களுக்காகவும் செய்திகளில் அடிபடுவதுண்டு. சாவு எண்ணிக்கையை பொறுத்து அவை உள்ளூர் செய்தியாகவோ இல்லை உலக செய்தியாகவோ மாறும். ஆனால் ஒன்று நிச்சயம். ஏதாவது ஒரு இடத்திலாவது தினம் ஒரு அசம்பாவிதம் பட்டாசு தொழிலில் நடந்து வருகிறது.



1991 ஆம் ஆண்டு நடந்த விபத்தில் 39 பேர் இறந்ததும், ஜூலை 2009ல் 40 பேர் இறந்ததும், 2010 ஆம் ஆண்டு தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய சென்ற 7 அரசு அதிகாரிகள் இறந்ததும், ஆகஸ்ட் 2011ஆம் ஆண்டு 7 பேர் இறந்ததும்,  செப் 2012 40 பேர் இறந்ததும் நம் மனதில் நிற்கும் பெரிய சம்பவங்கள். இதை தாண்டி எத்தனையோ ஆயிரக்கணக்கான மக்கள், சிறுவர்/சிறுமியர் தினம் தினம் இறந்தோ அல்லது காயத்தாலோ பாதிக்கப்படுகிறார்கள், 3 நாட்களுக்கு முன் காரிசேரி கிடங்கில் விபத்து ஏற்பட்டு இறந்த இருவர் உட்பட.

ஒவ்வொரு முறை பெரிய விபத்து ஏற்படும்பொழுதும் இது ஒரு விவாத பொருளாக பேசப்பட்டு, அரசு அதிரடியில் இறங்கி உடனே பல கிடங்குகளை மூடுவதும், சட்டத்திற்கு புறம்பாக தொழில் செய்தவர்களை கைது செய்வது, பல தொழிற்சாலைகளுக்கு தங்களின் 'நிலையை' உயர்த்த காலக்கெடு வழங்குவதும் நாம் எப்பொழுதும் பார்த்து வரும் ஒன்று. இவையாவும் சரியாக இருந்தால் விபத்து நடக்க வேண்டிய தேவையேயில்லையே. இல்லை ஒவ்வொரு விபத்திற்கு பிறகும் ஏதாவது ஒன்றிரண்டு அரிதான விசயங்கள் மாறியிருந்தால் இத்தனை உயிர்கள் இழக்க வேண்டிய தேவையில்லையே.

பின் என்னதான் பிரச்சனை?

1) சிவகாசியில் இருக்கும் ஒவ்வொருவரும் மேற்சொன்ன 3 தொழிலில் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட்டிருப்பார்கள். அந்த தொழிலை தங்கள் வீட்டில் கூட செய்து வருவார்கள். குறிப்பாக பட்டாசு தொழிலும், தீப்பெட்டி தொழிலும் குடிசை தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வரும். 

2) பாரம்பரியம் என்பதை மீறி இதில் இன்று பயிற்சி இல்லாத எத்தனையோ பேர் இந்த தொழிலில் ஈடுபடுகிறார்கள். பாதுகாப்பு என்ற ஒன்றே அறியாதவர்கள்.

3) உற்பத்தி நிலையங்களில் இருக்கும் ஒரே மேற்பார்வையாளரே பல கட்டங்களை(Stages) கவனிக்க வேண்டிய கட்டாயம்.

4) ஒரே இடத்தில் சந்தைக்கு செல்ல வேண்டிய பட்டாசுகள், பட்டாசு தயாரிக்க தேவையான மூலப் பொருள், வெடி மருந்துகள் யாவும் வைக்கப்படுகின்றன.

5) ஒரே இடத்தில் அதிக அளவில் வேலையாட்கள்.

இவை எல்லாவற்றையும் மீறிய இரண்டு உண்டு - 1.  'சட்டமற்ற நிலை' (Lawlessness). (சட்டங்கள் இருக்கு ஆனால் இல்லை போன்ற நிலை) 2. பட்டாசு தொழில் ஈடுபடுவோரின் திறமைகளை நவீன தொழிலாக மாற்ற முடியாமல் இருப்பது.  

இதற்கு என்னதான் தீர்வு ?

லியுயங் - சீனாவின், ஏன் உலகத்தின் சிவகாசி என்று கூட சொல்லலாம்.  ஒரு காலத்தில் சிவகாசி சந்திக்கும் அத்தனை பிரச்சனைகளையும் சந்தித்து வந்த ஊர். இன்று தன்னுள் எல்லா மாற்றங்களையும் புகுத்திக்கொண்டு, தொடர்ந்து வரும் மாற்றங்களை உள்வாங்க காத்திருக்கும் ஒரு ஊர்.

பட்டாசு தொழிலில் 1400 ஆண்டுகள் வரலாறு கொண்டது லியுயங். 1875 ஆம் ஆண்டுகளில் ஜப்பான், கொரியா, இந்தியா, ஈரான், ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு பட்டாசு ஏற்றுமதி செய்து வந்தது. 1990களில் ஏற்பட்ட விபத்துகள் ஆகியவையால் 1998 ஆம் ஆண்டு முதல் பல குறைபாடுகளை, குறிப்பாக தொழில்நுட்ப குறைபாடுகளை கண்டறிந்தது. அதற்கு பிறகு லியுயங் மேற்கொண்ட அதிரடி மாற்றங்கள்

1) தொழில்துறை ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு
2) 10,000 சட்டத்திற்கு புறம்பான தொழிற்சாலைகளுக்கு தடை
3) தனக்கான ஒரு பாதுகாப்பு நிலை (Standard) உருவாக்குதல்
4) உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் ஒத்துழைப்போடு சிறந்த பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் கொண்ட பட்டாசுகளை கண்டுபிடித்தல்.



மேற்சொன்ன மாற்றங்களின் வெளிப்பாடாக இன்றும் லியுயங் பட்டாசு தொழிற்சாலைகளில் நடந்துவருபவை :

1) ஒவ்வொரு உற்பத்தி பிரிவும் தனித்தனியாக இயங்குதல்
2) கட்டுமானங்களை அதற்கேற்றார்போல் வடிவமைத்தல்
3) தொடர் பாதுகாப்பு பயிற்சி
4) பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல்
5) தொடர் கண்காணிப்பு.

இவற்றையெல்லாம் பின்பற்றிய பிறகும் சீன பட்டாசுகளை குறைவான விலைக்கு அவர்களால் விற்க முடிகிறது.

நாம் எங்கிருந்து துவங்குவது என்பதுதான் முதல் மற்றும் முக்கியமான கேள்வி. பதிலும் அதுவே - முதலில் இருந்து துவங்க வேண்டும். சிவகாசியை "முழுமையாக சுத்தப்படுத்துதல்" என்ற ஆரம்பப்புள்ளியும், லியுயங்கிற்கு போட்டியாக சிவகாசியை உருவாக்குவோம் என்ற கடைசி புள்ளியும் இதனை சாத்தியப்படுத்தும்.

ஒரு வருடத்திற்கு சிவகாசி பட்டாசுகள் உருவாக்கும் வருவாய் - 1200 கோடி. தீப்பெட்டியும், அச்சும் உருவாக்கும் வருவாய் - 800 கோடி. கந்தக பூமி தன் உயிர்களை பலியாக்கி நம்மை குஷிப்படுத்துகிறது. நாம் என்ன கைமாறு செய்யப்போகிறோம்?

Tuesday, September 2, 2014

கதை - 15

Share |
மதுரை எனக்கு புதிதில்லை என்றாலும் தாத்தனேரியின் உட்சாலைகளில் நான் இதுவரை சென்றதில்லை. கோரிப்பாளையத்தில் வெகு நேரம் பேருந்திற்காக காத்திருந்த பிறகுதான், அந்த நிறுத்தத்திலிருந்து ஷேர் ஆட்டோ மட்டுமே செல்லும் என்று தெரிந்துகொண்டேன்.

அருள்தாசபுரம் போகுமா?”

ஃபாத்திமா காலேஜ் வரைக்குமே போகும். நீங்க முன்னாடி உட்காருங்க சார்என்று டிரைவர் ஃபாத்திமா காலேஜ், ஃபாத்திமா காலேஜ் என் கூவினார். பின் இருக்கையிலும், அதற்கு கீழும் ஏற்கனவே மொத்தம் 6 பேர் அமர்ந்திருந்தார்கள்.

வண்டி கிளம்பியது.

அங்க பெரியசாமி கோனார் தெரு எங்க இருக்குன்னு தெரியுமா?”

அருள்தாசபுரத்துல இறக்கிவிடறேன். அங்க போய் கேளுங்க சார்

அன்று விநாயகர் சதுர்த்தி. நான் இறக்கிவிடப்பட்ட இடத்தில் இருந்த விநாயகர் சிலைக்கு பக்கத்தில் அன்னதானம் சிறப்பாக நடந்தது. விநாயகருக்கு காவலாக நின்ற ஒரு பெண் போலீசிடம், பெரிய கோனார் தெரு குறித்து கேட்டேன். அவர் அறிந்திருக்கவில்லை.

வேற யார்டயாவது கேளுங்கஎன்று சொல்லி முடிக்கும்முன் அங்கு வந்த இன்னொரு காவலர் விநாயகரின் சிலைக்கு பக்கத்தில் அமர்ந்து சட்டியில் ஏதோ பிசைந்துகொண்டிருந்த ஒருவரை காட்டி அவரிடம் கேட்க சொன்னார். அவர் வழி சொல்ல நான் அந்த இடத்தின் எதிர்திசை நோக்கி நடந்தேன்.

அது ஒரு பெரிய வீதியாக இருந்தது. வழியில் நின்ற இரண்டு இளைஞர்களிடம் வழி கேட்டேன். மேலும் அதே வீதியில் நடக்க சொன்னார்கள். நடந்தேன். கொஞ்ச தூரத்தில் இருந்த பலகை அய்யனார் முதல் தெருஎன்றது, அடுத்த தெரு, ‘அய்யனார் 2வது’. ஒரு வீதியில் இருந்து வெளியே வந்த பெண்மணி ஒருவரிடம் பெரிய கோனார் தெரு குறித்து கேட்டேன். நான் வந்த திசையில் இடது பக்கமாக சென்ற தெரு ஒன்றின் வழியாக போக சொன்னார்.

தங்கையிடமிருந்து அழைப்பு வந்தது. அங்கதான்மா போயிட்டு இருக்கேன். போயிட்டு கூப்பிடறேன்.

அந்த தெரு வழியாக சென்று மீண்டும் விசாரித்தேன். இடது பக்கம் தெருவாகவும், வலது பக்கம் வீடுகளாகவும் இருந்தது. முதல் இடது பக்க தெருவில் பெரிய கோனார் தெற்கு-வடக்கு தெரு என்றிருந்தது. நான் வந்த தெருவிலேயே நின்று மீண்டும் விசாரித்தேன். தெற்கு-வடக்கு என குறிக்கப்பட்டிருந்த தெருதான் 2வது வீதி என்றார்கள்.

ஒரு நான்கு வீடுகளுக்கு தள்ளி இருக்கும் ஒரு வீட்டில் மீண்டும் விசாரித்தேன். என்ன நம்பர் என்றான் வெளியே வந்த இளைஞன் ஒருவன்.

137 இங்க வராதே....இது முதல் தெரு, நீங்க பக்கத்தில் இருக்க தெருல போய் கேளுங்களேன்என்றான்.

மீண்டும் நான் வந்த தெருவுக்கு வந்தேன். அடுத்த இடது புற வீதிக்கு நடந்தேன். ஒரு சின்ன சந்து வந்தது. யோசித்துகொண்டிருக்கும் பொழுதே என் பின்னால் இருந்து ஒரு பெரியவர், “இந்த சந்துதான்...உள்ள போய் கேளுங்கஎன்றார். அந்த சந்து இன்னொரு வீதிக்கு என்னை இட்டு சென்றது. ஒரு பக்கம் நான் பார்த்த வீட்டு எண் 124கவும், அதன் எதிர் வீடு 142ஆகவும் இருந்தன. இன்னுமொரு 10 வீடுகளுக்கு மேல் இந்த வீதியில் இருக்கும். அப்பொழுது அவனை பிடித்துவிடலாம்.

129, 130, 131,132, 133, 134ல் அந்த வீதியின் வீடுகள் முடிந்து ஒரு சின்ன 4 முனை சந்திப்பிற்கு நான் வந்தேன். 4 பக்கமும் சென்று பார்த்தேன். 135 தென்படவில்லை. நேர் எதிரில் தன் பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்த ஒரு அம்மாவிடம் கேட்டேன். அவரும் என்னைப் போலவே சுற்றி சுற்றிப் பார்த்தார்.

என்ன பேர்?” என்றார்.

ரமேஷ். டிராவல்ஸ்-ல வேல பாக்குறாப்ல.

வண்டி ஓட்றார்..?”

இல்ல பஸ்-ல டிக்கெட் போட்டு ஏத்துற வேல..

என்னை 131 வீட்டை காண்பித்து அங்கு போய் கேட்க சொன்னார். அவுங்க வீட்ல வேந்தான் ஓட்டறாங்க.

நான் தேடி வந்தவன் வேன் ஓட்டுனர் இல்லை என்றாலும் விசாரிக்கலாம் என சென்றேன். அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.

4 முனை சந்திப்பிற்கே வந்தேன். அந்தம்மா அங்குதான் இருந்தார். என்ன அவருக்கும் தெரியலயா என்றார்?”

இடது புற சாலையிலேயே சென்றேன். விநாயகனே..வினை தீர்ப்பவனே...பாடல் மிகுந்த சத்தத்தோடு ஒலித்தது. வீதியின் கடைசியில் ஒரு பெட்டிக்கடை இருந்தது. ஒரு வயதானவர் இருந்தார். என்ன தம்பி பேரு?”

அவருக்கும் தெரிந்திருக்கவில்லை.

ஒரு பாடல் முடிந்து இன்னொரு பாடல் துவங்கியது. சத்தம் வந்த திசை நோக்கி பார்த்தேன். கோவில் பக்கத்தில்தான். அதுதான் இவ்வளவு சத்தம். எதிரே ஒரு பெரிய வீடு இருந்தது. அந்த சுவரை உற்றுப்பார்க்கையில் 137 என்பது மெலிதாக தெரிந்தது. பலர் வசிக்கும் ஒரு பெரிய வீடு அது. சின்னசின்னதாய் கீழே 5 வீடுகள். மேலே எத்தனை என தெரியவில்லை.

இடது பக்கம் இருந்த வீட்டில் மூடர் கூடம்படம் பார்த்துக்கொண்டு ஒருவர் படுத்திருந்தார். நான் இருமுறை அழைத்த பின்தான் என்னை பார்த்தார். எழுந்து அமர்ந்தார். வெளியே வரவில்லை.

இங்க ரமேஷ்னு...

இங்க அப்டி யாரும் இல்லையே....என்ன வீதி?”

நான் சொன்னேன்.

இல்ல...இது முதல் வீதி.....நீங்க 2 வது வீதிக்கு நேரா போகணும்.

வெளியே வந்து கடைகாரரிடம் விசாரித்தேன். அவருக்கும் தெரியவில்லை. ஆள் ஒல்லியா கறுப்பா இருப்பானுதானே சொன்னீங்க என மீண்டும் உறுதிபடுத்திக்கொண்டார். ஒரு சின்ன பெண் ஒருத்தி கடைக்கு வந்தாள். எங்களை கவனித்திருப்பாள் போல.

தாத்தா ரமேஷ்னு கறுப்பா ஒருத்தர் இருந்தார். அவரு இப்போ அந்த வீதில இருக்காருஎன்று வளைத்து கை காண்பித்தாள். தாத்தா எந்த பெண்ணிடம் அதுவா...அங்கேயா..” என பல கேள்விகள் கேட்ட பின், “தம்பி..நீங்க நேரா இந்த ரோடுல போங்க..அப்புறம் இடது புறமா திரும்புங்க. அங்க போய் 2ம் நம்பர் ரேசன் கடை எங்கன்னு கேளுங்க...அது பக்கத்துல இருக்கிற வெள்ளை வீடுதான் பாப்பா சொல்ற வீடு”.

மீண்டும் நடந்தேன். ரேசன் கடைக்கு முன் இருந்த ஒரு கடையில் சில இளைஞர்கள் இருந்தனர். அவர்களிடம் அவன் குறித்து விசாரித்தேன். முதலில் பிடிபடவில்லை அவர்களுக்கு. பின் அவர்களுல் ஒருவன் டேய், கோனார கேட்குறார்னு நினைக்கிறேன்என்றான். பின் அவர்கள் ஒரு 2 வீடுகள் தள்ளி இருக்கும் டீ கடையை காண்பித்து அங்கு சென்று கேட்க சொன்னார்கள்.

டீ கடையில் சுமாரான கூட்டம். விசாரித்தேன்.

டீ ஆத்திக்கொண்டே அவர் ரமேஷ் அப்படின்னு யாரும் இல்லையேஎன்றார். ட்ராவல்ஸ் விவரங்கள் சொன்னேன். அவன் முன் இருந்த முகவரி, வீடு அடையாளம் யாவும் சொன்னேன். திடீர் என, “மதுரையா?” என்றார்.

ஆமா...மதுரதான்...மதுர ரமேஷ்....அவன் ஊர் பேர சேர்த்து அப்படி வச்சிருக்கானு நெனச்சேன். அவன் பேரே மதுரயா..?”

சொல்லுங்க..என்ன விசயம்என்றார். அப்படியே போன் எடுத்தார்.

அவன தெரியுமா..எதும் சொந்தமா என்றேன்.

அவன் அண்ணன்தான் நான்”. என்றார். போன் அதற்குள் அடித்திருந்தார். டேய் மதுர. மதுர....” “ஒரே சத்தமா இருக்கு..ஒண்ணும் கேட்கல
மீண்டும் முயற்சித்தார். அவன் எடுக்கவில்லை. காதில் போனை வைத்துக்கொண்டு இடையில் நான் வந்த விசயம் கேட்டார். நான் சைகையில் போன் தொடர்ந்து முயற்சிக்குமாறு சொன்னேன். அவனை பிடிக்க முடியவில்லை.

வேற என்ன விசயம்..பணம்தான்...

எவ்வளவு?”

25,000....என்ட்ட வாங்கியிருந்தா பரவாயில்ல...பிராடு பய பொய் சொல்லி என் தங்கச்சிகிட்ட வாங்கியிருக்கான். போன் பண்ணா எடுக்கிறதில்ல
அவன் போன் எடுக்கவில்லை. நீங்க ட்ரை பண்றீங்களா?”

அவன் நிச்சயம் எடுக்கமாட்டான். இப்ப எங்க இருப்பான்?”

நீங்க சொல்லிதான் அவன் டிராவல்ஸ் இருக்கிறதே தெரியும்...இந்த கடைக்கு ஒரே ஒரு தடவ வந்திருக்கான். அதுவும் வேற ஒருத்தர கூட்டிகிட்டு வேற சோழியா...அவன் வீட்டுக்கு நான் அவன் பொண்டாட்டி வலகாப்புக்கு மட்டும் போனேன்.கொஞ்சம் இடைவெளி விட்டு இப்போ அது நடந்தே ஒரு வருடம் ஆச்சே. ஆனா வீடு இங்க நிச்சயமா வரல

வீடு நிச்சயம் இங்கில்லை எனவும், நான் முன்னர் பார்த்த வீடுதான் தான் கடைசியாக வலகாப்பிற்கு சென்றபோது பார்த்த்து எனவும் சொன்னார்.
அவன் அவரின் சொந்த தம்பிதானா என கேட்க நினைத்தேன். கேட்கவில்லை.

மீண்டும் அதே வீட்டிற்கு வந்தேன். தாத்தாவிடம் அவன் நிஜப் பெயர் சொன்னேன். அட மதுரயா......இந்த வீடுதான்.என்று உறுதி செய்தார்.

முன்னர் பார்த்த இடது புற வீட்டின் நபர் இப்பொழுது இல்லை. நேராக 4 வீடுகள் இருந்தன. இடது புற ஓரமான வீட்டை தட்டினேன். மதுரயா..?” என யோசித்தவர் ஓ....லாவண்யா வீடா?...இந்த அடுத்ததுக்கு, அடுத்த வீடு

ஆள் இல்லையா..?”

இல்ல உள்ள ஆள் இருக்காப்ல

க்ரில் கேட் திறந்திருந்தது. மெயின் டோர் மூடி இருந்தது. ஜன்னல் லேசாக திறந்திருந்தது. ஜன்னலை விலக்கி பார்த்தேன். ஸ்டீல் கட்டிலில் குப்புற படுத்துக்கொண்டு போன் பேசிக்கொண்டிருந்தான். ஜன்னல் கதவை பழைய நிலையிலேயே விட்டு, கதவை தட்டினேன். பாட்டு சத்தம் வேறு காதை கிழித்தது. 

3 முறை தட்டிய பிறகே கதவை திறந்தான். அதிர்ந்தான். உள்ளே நுழைந்தேன்.

நானாகவே கட்டிலின் பக்கத்தில் இருந்த ப்ளாஸ்டிக் சேரை இழுத்துபோட்டு அமர்ந்தேன்.

அவன் அதிர்ச்சி மீளவில்லை.

கொஞ்சம் தண்ணீர் கொண்டுவாங்க.என் தண்ணீர் என் பையில் இருந்தது.

கொண்டுவந்தான். கொஞ்சமாக குடித்தேன். கார்ப்பரேசன் தண்ணீர்.

அவனை முழுவதும் பார்த்தேன். ஒரு பழைய லுங்கி. 20 நாள் தாடி. மேல் சட்டை ஏதும் அணியாது ஒரு குடிகார பரதேசி போல காட்சியளித்தான்.

அப்புறம்..எப்படி இருக்க ரமேஷ்?”

சார்....நல்லா இருக்கேன்”. வேகமாக போன் எடுத்தான். பேசினான். பாப்பாவ தூக்கிட்டு வீட்டுக்கு வா. மெட்ராஸ்ல இருந்து பாக்க வந்திருக்காங்க

“..................”

பரவாயில்ல. எழுப்பி தூக்கிட்டுவா

போனை துண்டித்தான்.

எப்படி போகுது

அதான் சார்..ஆபீஸ் ஆரம்பிச்சேன். சரியா பண்ண முடியல.மூடியாச்சுஇழுத்து இழுத்து பேசினான். வெளியில் பாடல் சத்தம் வேறு உள்ளே அப்பட்டமாக கேட்டது.

வண்டி வச்சிருக்கியா..?”

இருக்கு சார்...மாப்ளகிட்ட கொடுத்துவச்சிருக்கேன்

பணம் என்னாச்சு?”

அவனுக்கு சரியாக கேட்கவில்லையா இல்லை கேட்காததுபோல் நடித்தானா என தெரியவில்லை.

பாப்பாவ தூக்கிட்டு வருவாங்க சார். இங்கதான் அவுங்க அம்மா வீடு”.என்று வெளியில் கைகாண்பித்தான்.

நான் எதுவும் பேசவில்லை. இடையில் தங்கையின் அழைப்பு. அங்கதான் இருக்கேன். கூப்பிடறேன்.மீண்டும் அவன் கதை சொல்ல துவங்கினான். நான் இடைமறித்தேன்.

பாப்பாவ தூக்கிட்டு பணம் கொண்டுவராங்களாஎன்றேன் சத்தமாக.

இல்ல சார்...பாப்பாவ உங்ககிட்ட காமிக்க....

நான் பாப்பாவ பாக்க வரல. உங்கிட்ட பணம் வாங்க வந்திருக்கேன்

எப்படி சார் திடீர்னு என்னால கொண்டுவர முடியும்? அதுவும் 25,000...சத்தியமா முடியாது சார். என்ன நம்பி யாரும் கொடுக்கமாட்டாங்க...

உனக்கு இழிச்சவாயி யாரும் மாட்டாமளா போயிடுவாங்க..? கிளம்பு. என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது....சட்டைய மாட்றா..

சார்....ஒரு 3 நாள் மட்டும் டைம் குடுங்க சார்..நிச்சயம் கொடுத்திடரேன்.

என்ன பார்த்தா உனக்கு எப்படி தெரியுது?”

அப்போ இங்க stay பண்ணி வாங்கிகங்க சார்..?”

டேய்..என்ன என்ன வேலைவெட்டி இல்லாதவன்னு நினைச்சியா..? நான் இதுவரைக்கும் ரொம்ப பொறுமையா போறேன். ஒரு பொம்பளபுள்ள்கிட்ட நீ காசுகேட்டதே மொதல்ல தப்பு. அத பேசக்கூடாதுன்னு நினைக்கிறேன். இந்த நிமிசம் வரைக்கும் உன் மரியாதையே கெடுக்ககூடாதுன்னு நினைக்கிறேன்...வேணாம்.

Pant மாற்றிக்கொண்டிருக்கும்போதே அவன் மனைவி குழந்தையுடன் வந்தார். மனைவியின் கழுத்தில் தாலி தவிர வேறொன்றுமில்லை.

வாங்க...என்ற புன்னகையுடன் குழந்தையை என்னிடம் காண்பித்தார்.

தூங்கிட்டு இருந்தானா..?”

ஆமா....

எழுப்பாம விட்ருக்கலாமே.... 

இல்ல..நீங்க வந்திருக்கீங்கன்னுதான்....பரவாயில்ல நைட் தூங்கிக்குவான்

நடக்க ஆரம்பிச்சுட்டானா..?”

இல்லன்ணே...முயற்சி பண்றான்...ஆனா இன்னும் முழுசா எந்திரிச்சு நிக்கல...

குழந்தை அவன் அப்பனுடன் விளையாடியது. அவன் பாக்கெட்டுக்குள் எதையோ தேடியது. பாருங்க எல்லார் பாக்கெட்டிலும் இந்த மாதிரிதான் கையவிட்டு எதையாவது எடுத்திடறான்என்றாள் மனைவி. அவன் கணவனுக்கு மட்டும் கேட்பதுபோல் ஏதோ கேட்டாள். கட்டிலில் கிடந்த 2 பத்து ரூபாய்களில் ஒரு 10 எடுத்து மனைவியிடம் கொடுத்தான். எங்கம்மா போற..?” என்றேன்.

கலர் வாங்கண்ணே....

அதெல்லாம் ஒண்ணும் வேணாம்...வேண்ணா டீ மட்டும் போட்டுகொடு

அப்போ பால் வாங்கிட்டு வரேன்என்று கிளம்பினாள்.

நாங்கள் இருவரும் பேசவில்லை. பாடல் சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. 2 நிமிடங்களில் அவன் மனைவி வந்தாள். கேஸ் அடுப்பு இல்லை. மண்ணெண்ணைய் அடுப்பில் டீ தயாரானது. மூவரும் குடித்தோம். அவன் மெல்ல பருகினான். அவனை அழைத்தேன். போயிட்டு வர எவ்வளவு நேரம் ஆகும்?” என்றேன். வேகமாக சட்டையை மாட்டினான். பதில் இல்லை.

சரிம்மா, நீ கிளம்பு....நான் வெளிய போகணும்.

ஏங்க...இன்னும் சாமி கும்பிடலையே...

கிளம்புன்னா..கிளம்பு....கேள்வி கேட்காத..

அவள் வேகமாக சென்று பின் கதவை சாத்தினாள்.

சாத்த வேண்டாம்....சார் இருப்பாரு...சார்..நீங்க டிவி பார்த்திட்டு இருங்க சார்.....குழந்தைய தூக்கிக்க.என்றான்.

நான் குழந்தையை தூக்கினேன். 

உங்க அம்மா வீடு எங்கம்மா...?” என்றேன் அவனை பார்த்துக்கொண்டே.

இங்க இருந்து 4 வீடு தள்ளிண்ணே”.

குழந்தையோட நான் கொஞ்சம் விளையாடிட்டு இருக்கேன். அழுதா நானே தூக்கிட்டு வரேன்....என்ன சரிதானே ரமேஷ்?” என்றேன். அவன் அதிர்ந்தான்.

அவன் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டது.

சார்....நான் சீக்கிரம் வந்திடரேன் சார்...

கவலைபடாம போயிட்டு வாங்க மதுர சார்என்றேன்.

குழந்தையை பார்த்துக்கொண்டே வெளியேறினான்.

குழந்தையை கட்டிலில் இறக்கினேன். இவனுக்கு யார் இவ்வளவு தொகையை தருவார்கள். இவன் மீண்டும் வீட்டிற்கு வருவான் என்பது என்ன நிச்சயம்? வீட்டை சுற்றி பார்த்தேன். கட்டில் இருந்த அந்த ஹால், அடுப்பு இருந்த சமையலறை, குளியலறை, கழிப்பறை. அவ்வளவே. கட்டிலின் பக்கம் ஒரு இரும்பு பீரோ. கதவை சாத்தினேன்.

பீரோவை திறக்கலாமா என் எண்ணினேன். கதவை மீண்டும் திறந்து ஒரு முறை பார்த்தேன். எனக்கு வீட்டை அடையாளபடுத்திய பக்கத்து வீட்டு அம்மா க்ரில் கேட்டை கடந்து சென்றார். கதவை மூடினேன். பீரோவை திறந்தேன். ஒரு நொடி கட்டிலை பார்த்தேன். கட்டிலின் கம்பியையும், சுவரையும் பிடித்து குழந்தை எழுந்து நின்றான். நான் சுதாரிப்பதற்குள் அடுத்த அடி எடுத்துவைக்க அவனை பிடிக்க ஓடினேன். நல்ல வேலையாக அவனை பிடித்துவிட்டேன். ஒரு துளி கண்ணீர் என் கண்களில் கோர்த்துக்கொண்டது. குழந்தை பயத்தில் உரைந்து போனது. சத்தமில்லை. என்னடா நீ, இப்படி கீழே விழ பார்க்கலாமா..?” என்றேன். பீரோவின் கதவுகள் மெல்ல திறந்து அந்த பீரோவின் கண்ணாடியில் என் முகம் தெரிந்தது. என்னை ஒரு வித பயத்தோடு குழந்தையும் பார்த்துக்கொண்டிருந்தது.