Monday, August 31, 2009

ராஜேஷும் பில் கேட்சும் (கதை - 13)

Share |
"டேய் ஜெகதீஸ் எங்க இருக்க..?"

ராஜேஷ் கூப்பிட்ட தொனியிலே ஒரு பதட்டம் இருந்தது. பல தமிழ் திரைப்படங்களில் காட்டப்படுவது போல, அப்பொழுதே நான் சாப்பிட அமர்ந்து முதல் உருண்டையை கையில் எடுத்திருந்தேன். முதல் உருண்டையை என்பதை விட முதல் சிக்கன் பீஸ் என்று சொல்வதே சாலச் சிறந்தது.

"வீட்லதாண்டா...ஏன்..? வந்து உன்ன பிக்-அப் பண்ணனுமா..?"

"பிக்-அப்பா....டேய் அப்ளிகேசன் பாரம் பில்-அப் பண்ணனும்டா...உடனே வா..."
அப்ளிகேசன் பாரம்?!.....என்னால் அதிர்ச்சியை தாங்க முடியவில்லை.

"அப்போ மொத ரவுண்டு முடிஞ்சதா..?"

"முடிஞ்சதுடா.....ப்ளீஸ் டா...உடனே வா....சீக்கிரம் கூப்ட்ருவாங்க ..."

அப்ளிகேசன் பாரம் பில்-அப் செய்வதை விட ராஜேஷ் தேர்வாகிவிட்டான் என்ற பேரதிர்ச்சியிலே கைகளை அளம்பினேன். போன இரண்டு வாரமும் இதே போல் சாப்பிடுவதற்கு முன்போ இல்லை , சாப்பிடும் வேலையிலோ தொலைபேசி அழைப்பு வந்து கிளம்பியது அம்மா திட்டும்போதுதான் தெரிந்தது. சென்ற ஜென்மத்தில் இதை விட அதிக கோழிகளை கொன்று குவித்திருப்பேனோ..?

நான் என்னுடைய இரு சக்கர வாகனத்தில் கிளம்பினேன். நான் அங்கு போய் சேர்வதற்குள் கொசுவத்தியை சுற்றுவதே கதை படிப்பவர்களுக்கு நலம்.


ராஜேஷ். என் கல்லூரி நண்பன். பார்ப்பதற்கு பீமன் போல (மகாபாரத பீமன் - தமிழ் படம் அல்ல) காட்சி அளிப்பான். அவனுடைய உடல் வாகினாலும், அவனுடைய அப்பா அரிசி மண்டி வைத்திருந்ததாலும் அவனை எல்லோரும் "அரிசி மூட்டை" என செல்லமாக அழைப்பர்.

நாங்கள் படித்தது மெக்கானிக்கல் என்றாலும் எங்களுடைய இரண்டாம் ஆண்டு பாடத்தில் C++ என்னும் கணிப்பொறி சார்ந்த ஒரு பாடமும் இருந்தது. அதுவரை கணிப்பொறியை கண்ணாடி வழியாக மட்டுமே பார்த்த நாங்கள் அதனுடன் நெருங்கி பழக வேண்டிய இக்கட்டு ஏற்பட்டது. எல்லோரும் தட்டு தடுமாறி அந்த பாடத்தில் தேர்ச்சி பெற்றோம். ஆனால் ராஜேஷ் தேர்வாக கொஞ்சம் நேரம் பிடித்தது. மூன்றாம் பருவத்தில் 3 மதிப்பெண்ணில் தொடங்கி எட்டாம் மற்றும் இறுதி பருவத்தில் ஒரு வழியாக தேர்ச்சி அடைந்தான்.

கல்லூரி முடியும்போது ராஜேஷின் ஆட்டோகிராப் புத்தகத்தில் எல்லோரும் வைத்த விண்ணப்பம், வேண்டுகோள், ஆணை எல்லாம் ஒன்றே ஒன்றுதான் - "தயவு பண்ணி ஈமெயில் id கிரியேட் பண்ண முயற்சி பண்ணாத. எல்லோரும் எல்லோரோடயும் டச்-ல இருக்க மெயில் id வெச்சுக்குவாங்க. அதே ஆசை உனக்கும் வரலாம். ஆனா அப்பிடி ஒரு ஆசை இந்த கணிப்பொறி துறை முழுக்க பாதிக்க கூடிய வாய்ப்பு இருக்கு. நீ எப்ப வேணும்னாலும் எங்களுக்கு கடுதாசி எழுதலாம்." என்பதோடு எல்லோரும் அவர்களின் முகவரியை அவனுக்கு மட்டும் கொடுத்தார்கள்.

இன்று வரை யாரேனும் எங்கே இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள நாங்கள் ராஜேஷிடம் அவர்களுக்கு கடிதம் எழுத சொல்லுவோம். அவன் எழுதினால் யார் எங்கு இருந்தாலும் உடனடி பதில் வரும். அவர்களால் முடியவில்லை என்றால், நண்பர்கள் அவர்களின் பெற்றோர்கள் மூலியமாக கடிதம் எழுதுவர்.

ஆனால் விதி வலியதல்லவா..?? ராஜேஷின் அப்பா அவன் படிப்பு முடிந்தவுடன் ஒரு பெருஞ்செயல் செய்தார். அவருடைய நண்பரின் ஆலோசனைப்படி, அவனை ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸில் சேர்த்துவிட்டார். ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டிவிட்டால் போதும், அந்த கோர்ஸில் தற்பொழுது வேலை வாங்கி தரக்கூடிய பாடங்கள் எடுத்து, அவர்களே குறைந்தபட்சம் 1 வருடத்திற்கு வேலையும் தருவார்கள்.அதற்கான மாத சம்பளம் 6,000 ரூபாய் தரப்படும்.

'போட்ட காச இப்டி எடுத்தாதான் உண்டு' என்ற அவரின் வியாபார தந்திரம் எங்களை மெய் சிலிர்க்க வைத்தாலும், இதனால் கணிப்பொறி துறைக்கு ஏற்பட போகும் தீங்கை எங்களால் சிந்திக்கக்கூட முடியவில்லை.

ராஜேஷ் அங்கு சேர்ந்தான். இவனை போலவே இன்னும் சிலர் சேர்ந்தனர் போல. அங்கு நடக்கும் பரிட்சைகளில் இவனையும் சேர்த்து ஒரு ஆறு பேர் குறைந்த மதிப்பெண்ணே வாங்கி வந்தனர்.

"கவலைபடாதடா, எல்லாத்தையும் உங்க அப்பா பார்த்துக்குவாரு.."

"போடா...செருப்ப கழட்டி அடிப்பாரு....இவ்ளோ காசு போட்டுட்டு, சரியா மார்க் வங்காளன்னா..."

"அந்த எடத்துலதான் உங்க அப்பாவ நீ சரியாய் புரிஞ்சிக்கல. இப்போ இவனுங்க என்ன சொல்லி இருக்காங்க.....ஒரு வருசத்துக்கு வேல உண்டுன்னு சொல்லி இருக்காங்க இல்லையா..."

"ஆமாண்டா..ஆனா இப்போ சரியாய் மார்க் வாங்காட்டி நல்ல ப்ராஜெக்ட் கொடுக்க மாட்டங்க..நான் அப்புறம் எப்டி ஒரு வருஷம் கழிச்சு நல்ல கம்பெனி போறது..."

"பெர்பெக்ட்" அதுவரை ஏதோ சிந்தித்து கொண்டிருந்த இன்னொரு நண்பன்.

"என்னடா பெர்பெக்ட்..?"

"உங்க அப்பாக்கு இது தெரியுமா...??"

"ம்ம்.."

"பார்த்தியா....இப்போ உன்ன நேரடியா அரிசி மண்டிக்கு கூப்பிட்டா போவியா..?போகமாட்ட ..ஆனா ஒரு வருஷம் கழிச்சு அரிசி மண்டிக்குதான் போவ.....இதுக்கு பேர்தான் பெர்பெக்ட் ப்லன்னிங்-நு சொல்றது..."

ஒரு வழியாக படிப்பு முடிந்து ராஜேஷ் வேலை தொடங்கினான். இவனுடன் படித்தவர்களில் சிலருக்கு வேறு இடங்களில் படிப்பு முடித்தவுடனேயே வேலை கிடைத்தது. சிலர் மலேசியா எல்லாம் சென்றார்கள்.

ஒரு வருட வேலையும் முடிந்து இவனையும் சேர்த்து நால்வர் மட்டுமே வேறு ஏதேனும் வேலை கிடைக்காமல் இருந்தனர். கம்பெனி என்ன நினைத்தோ ராஜேஷை இன்னொரு வருடம் கூட தேவைப்பட்டால் வேலையை தொடரலாம் என்றனர்.

கம்பெனி முதலாளி செய்த பாவத்துக்கு பிராயச்சித்தம் தேடினார் போல.ராஜேஷ் மிக்க மகிழ்ச்சி அடைந்தான்.

நானும், என் நண்பர்களும் ராஜேஷைவிட நிறையவே ஊதியம் வாங்கினோம். நானும் ஒரு புகழ் பெற்ற மென்பொருள் நிறுவனத்தில்தான் வேலை பார்த்து வந்தேன். நாங்கள் அனைவரும் அவனை வேறு நிறுவனத்திற்கு மாறுமாறு வற்புறுத்தினோம். அவன் ஒவ்வொரு முறையும், "கொஞ்சம் படிச்சிகிறேண்டா. இண்டர்வியுலே கேள்வி எல்லாம் கேட்பாங்க இல்ல.." என்பான்.

எங்களில் ஒரு நண்பன், உண்மையான அக்கறையுடன், "உனக்கு winamp ல பாட்டு போட தெரியுமில்ல..?"

"ம்ம்"

"மீடியா பிளேயர்ல படம் ..?"

"ம்ம்.."

"அது போதும். விடு பார்த்துக்கலாம்."

"ஆனா நான் வேல பாக்குறது டாட்.நெட் டா. அதுலதான் கேள்வி கேட்பாங்க."

"விட்ரா. winamp தெரியுது, டாட்.நெட் தெரியாமலா இருக்கும்..?" .

நான் அவனை இடைமறித்து, "என்னடா இன்னும் படிக்கிற...நீ போற மொத இண்டர்வியுவே கிளியர் பண்ணனும்னு அவசியம் இல்லே...மொதல்ல முயற்சி பண்ணு...அப்புறம் பார்ப்போம் " என்று சொல்லி ஒரு வழியாக இரண்டாம் ஆண்டு முடிவில் நான் என் நிறுவனத்திலேயே அவனை பரிந்துரை செய்தேன்.

அதற்கான நேர்முகம்தான் இன்று. கொசுவத்தியை அணைத்துவிடலாம்.

நான் என் நிறுவனத்தின் உள்ளே சென்றேன். இரண்டாம் மாடியில் ராஜேஷ் அமர்ந்து இருந்தான். "என்னடா ஆச்சு..?"

"இந்த பாரம் மொதல்ல எப்பிடி பில்-அப் பண்றதுன்னு சொல்டா..நானே கொஞ்சம் பண்ண ஆரம்பிச்சிட்டேன்."

"அதுக்குள்ள மொத ரவுண்டு முடிஞ்சதா..?"

தொழில் சார்ந்த கேள்விகள் முதல் சுற்றில் இருக்கும். அதில் தேர்வு பெற்றவர்கள் மட்டுமே இந்த விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும். அடுத்தது மனித வள சுற்று. அதில் பொதுவாக கொஞ்சம் பேசி, மனித வள பணியாளரிடம் சம்பள பேரம் பேச வேண்டும்.

"டேய்...நான் பில்-அப் பண்றேன். மொதல்ல என்ன நடந்ததுன்னு சொல்லு.."

"சொல்றேன்-டா.....இத முடிச்சிட்டு வந்திடறேன்.."

விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்கிறேன் என்று அங்கு அங்கு அடித்து திருத்தியிருந்தான், அவன் பெயர் உட்பட. "டேய், இதென்ன உன்னோட கணக்கு பரீட்சைத் தாளா..உன் பெயரக்கூட உனக்கு சரியா எழுத தெரியாதா..?"

"இல்லடா.... மொதல்ல இனிசியல் தானே போடனும்னு போட்டேன். அப்புறம்தான் பச்ட் நேம், லாஸ்ட் நேம் ..." தலையை சொரிந்தான்.

"HR ரவுண்டு-ல அவ்வளவு சுலபமா வேலை போகாது....நான் இத பார்த்ததுக்கு அப்புறம் அத மாத்திக்கனும்னு தோணுது..."

"என்னடா சொல்ற..?"

"அத விடு. உனக்கு என்ன பதில் வேணும்னு கேளு. நான் சொல்றேன்."

தொடங்கினான்.
"காரியார் கோலா..அப்டீனா..? "என்னடா என் strength..?"

"ம்ம்..ஒரே நேரத்துல 40 இட்லி சாப்பிடுவேன்னு போடு.."

"டேய்...ப்ளீஸ் டா.." நான் ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாக பதில் சொன்னேன்.

"டேய், எவ்ளோடா சம்பளம் கேட்கலாம்..?"

"கூச்சமே படறதில்ல......கேளு ஒரு 5 லட்ச ரூவா கேளு..."

"ரொம்ப ஜாச்தியிள்ள....?"

"நீ பாக்குற வேலைக்கு நியாயப்படி நீதான் அவங்களுக்கு கொடுக்கணும்.....பரவா இல்ல....கேட்டுப்பாரு.."

உள்ளே போய் வந்தான். "என்னடா இவன், 4.75 தான் கொடுப்பேன்னு சொல்லிட்டான்."

"அட நாயே...உண்மையிலே உனக்கு வேல கெடைச்சிருச்சா..?"

"ஆமா ஜகதீசு உனக்கு எவ்ளோ சம்பளம் இங்க....என்னோட ஜாஸ்தியா..." நக்கல் கலந்த தொனியில் கேட்டான்.

யோசித்து பார்த்தால் எனக்கு இதை விட குறைவுதான் என்பது தெரிந்தது.

"ஒழுங்கு மரியாதையா மொத ரவுண்டு என்ன நடந்துச்சுன்னு சொல்லு..."

"இதுதான் நடந்தது...நான் மொதல்ல உள்ளே போனேன். அவரு டாட்.நெட் கேள்வி ஒன்னு கேட்டாரு. நான் சரியாய் தப்பான்ன பதில் சொன்னேன். அவரு சரிபன்னாரு. இன்னொரு கேள்வி கேட்டாரு, நாமதான் தப்பா சொல்றேமேன்னு, இந்த தடவ சொல்லவே இல்லை. அவரு என்ன தயவு பண்ணி வெளிய போக சொல்லிட்டார். நான் வந்துட்டேன்."

"என்னடா சொல்ற...அப்புறம் எப்டி ரெண்டாவது ரவுண்டு.."

"இருடா கத இன்னும் முடியல....எனக்கு அடுத்து இன்னொருத்தன் போனான். நானாவது 5 நிமிஷம் இருந்தேன். அவன் சரியா 3 நிமிஷம். வெளிய வந்துட்டான்.அவனே பார்த்து நான் சிரிச்சிட்டு இருக்கும்போதே அவரே வெளிய வந்தார். என்ட்ட எங்க மத்தவங்கன்னு கேட்டாரு."

"ம்ம்....எங்க போயிருந்தாங்க அவங்க எல்லாம்..? ஒரு நிமிஷம் இரு. இதே மாடிலதான் உனக்கு மொத ரவுண்டு நடந்ததா..?"

"மத்தவங்களா.....வந்தது மொத்தம் ரெண்டுபேர்தாண்டா..."

"என்னது...?"

"ஆமா....இதே அதிர்ச்சிதான் அவரு முகத்துலையும். சரின்னு நான் கிளம்பினேன்...என்ன திரும்ப கூப்பிட்டு மறுபடியும் உள்ள வர சொன்னாரு. மறுபடியும் கேள்வி கேட்டாரு. அவரே பதிலும் சொன்னாரு. இப்படியே ஒரு பத்து கேள்வி. பத்து பதில். இதெல்லாம் படிக்க எவ்ளோ நாள் ஆகும்னு கேட்டாரு. நான் ஒரு 3 வாரம் சொன்னேன்."

"என்ன சொன்ன..? அந்த கேள்வியாவது உனக்கு ஞாபகம் இருக்கா..?"

"அவர பாக்க பாவமா இருந்துச்சுடா...அதான் சொன்னேன்."

"அட நாசமா போனவனே...."

"சரிடா, அதான் வேல கிடைச்சிடுச்சே , உனக்கு ட்ரீட் வேணுமா..?"

"இந்த கருமத்த கேட்டபுரம் கொஞ்சம் விஷம் இருந்தா வாங்கிக் கொடு.."


இதெல்லாம் நடந்து ஒரு வருடம் ஆனது. என்னுடைய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த ராஜேஷ் ஒரு வருடம் பல பல ப்ராஜெக்ட்ஸ் மாற்றப்பட்டான். கடைசியாக நேற்று மைக்ரோசாப்ட் ப்ராஜெக்ட் ஒன்றில் சேர்ந்திருப்பதாக சொன்னான். இன்று அதிகாலை செய்தித்தாள் எடுத்தேன். முதல் பக்கத்தில் இருந்த செய்தி இது: "Bill Gates retired today".