Thursday, June 25, 2009

கடிதம் (கதை - 11)

Share |
                                உ
திருச்சி                                   மதுரை
      அன்புள்ள சந்தோஷிற்கு நயினா அம்மா எழுதிக்கொண்டது. இங்கு யாபேர்களும் நலம். இதுபோல அங்கு நீ நலமாக இருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.மேலும் நலத்திற்கு கடிதம் எழுதவும்.
      உன் கடிதம் கிடைக்கப்பெற்றோம். உன் கடிதம் கண்டவுடன் எங்கள் இதயம் உடைந்து சுக்கு நூறாகி விட்டது. ஏனென்றால் நீ ஒரு பரிட்சையில் பெயில் ஆவாய் என்று நாங்கள் கொஞ்சம் கூட நினைத்து கிடையாது. ஏதோ ஒரு இடி எங்கள் தலை மேல் விழுந்ததை போன்று உணர்கிறோம். எது நடக்க வேண்டுமோ அது கண்டிப்பாக நடந்தே தீரும். நாங்கள் எங்கள் மனதை தேற்றிக்கொள்ள முயற்சிக்கிறோம். முடியுமா என்பது சந்தேகமே. ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள். நீ நன்றாக படித்தால்தான் நம் சொந்தபந்தங்களும், மற்ற சுற்றத்தாரும் உன்மேல் வைத்திருக்கும் மரியாதை நிலைத்து நிற்கும். இனியாவது அதனை கெடுத்துக்கொள்ளும்படி நடக்காதே.
      ஆனால் என் மனதில் பட்டதை அன்றே சொன்னேன். ஹாஸ்டலை விட்டு வெளியே வந்தால் இப்படி ஆகும் என்று. இது என் கருத்து. என் கருத்தை நீ பொய்யாக்கி இருக்க வேண்டும்.
      நீ பாஸ் ஆனாலும், பெயில் ஆனாலும் அது உன்னுடைய வாழ்க்கை. நாங்கள் உனக்கு செலவுதான் செய்யலாம். ஆலோசனை கூறலாம். மேற்கொண்டு உன் வாழ்க்கையை நிர்ணயிப்பது நீதான். ஆயிரம் சமாதானம் சொன்னாலும் மனதால் ஜீரணிக்கவே முடியவில்லை. இனிமேலாவது உன் எதிர்கால வாழ்கையை நினைத்து, நம் குடும்ப சூழ்நிலையையும் நினைத்து எப்படி படிக்க விரும்புகிறாயோ, அப்படி படி. உனக்கு அதிகப்படியாக புத்தி கூற தேவையில்லை என்று நினைக்கிறேன்.
நைனா கூறிய யாவற்றையும் அப்படியே அம்மா எழுதி உள்ளேன்.

சந்தோஷிற்கு அம்மா எழுதுவது.
      உன் படிப்பையும், வேலையையும் வைத்துதான் நம் குடும்பமே முன்னுக்கு வரவேண்டும் என்று எண்ணி உள்ளேன். எனவே அனுதினமும் நன்றாக படித்து வீட்டிற்கு மார்குகள் வரும்படி செய்யவும்.
      மேலும் நயினா மிகவும் மனது உடைந்து போயுள்ளார். யாரிடமும் சந்தோஷ் பெயில் என்று கூறிவிடாதே, எல்லா சொந்தங்களும் வேதனைப்பட்டு விடுவார்கள் என்று கூறினார். நயினா வாழ்க்கையில மிகவும் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறார். உன் மார்க்கும் இப்படி ஆனவுடன் மிகவும் வேதனைப்பட்டார். எனவே வாழ்க்கையில் கடவுள் நம்பிக்கையும், படிப்பில் நன்கு கவனமும் செலுத்தப்பார்க்கவும்.
      மேலும் யார் மீதும் வாழ்க்கையில் கோபம் என்பதே வைத்துக்கொள்ளாதே. எல்லோரிடமும் அன்பாக பேசவும். எல்லோரையும் போல நீயும் நிறைய கோபப்படுகிறாய். தயவுகூர்ந்து அன்புடன் கோபத்தை குறைத்துக்கொள். இது என் தாழ்மையான வேண்டுகோள். நன்றாக படி.

என் கண்களில் கண்ணீர் கோர்த்துக்கொண்டது. என் பக்கத்தில் இருந்த குடத்தில் கொஞ்சம் தண்ணீர் எடுத்து குடித்தேன். தண்ணீர் விழுங்குவது சிரமமாய் இருந்தது.

என் கடிதத்திற்கான பதில் கடிதம்தான் இது. முதலில் வீட்டில் தெரியப்படுத்தாமல் மறைத்துவிடலாம் எனதான் நினைத்தேன். அதற்காக கல்லூரி பதிவேட்டில்கூட என் நிரந்தர முகவரியை மதுரைக்கே மாற்றி இருந்தேன்.

நான் ஒரு பரிட்சையில் தோல்வி அடைந்தேன் என்பது எனக்கே மிகுந்த வேதனையாகவும், சில நேரத்தில் ஆச்சர்யமாகவும் இருந்தது.


பள்ளி படிப்பில் எப்பொழுதுமே நான் முதல் ரேங்க் மாணவன். LKG முதற்கொண்டு எட்டாம் வகுப்பு வரை நான் முதல் ரேங்க் தவிர்த்து வாங்கியதில்லை. ஒன்பதாம் வகுப்பு வேறு ஒரு பள்ளிக்கு மாறினேன். அங்கு நிறையவே போட்டி இருந்தது. முதல் ரேங்க் என் கையை விட்டு போனது. இரண்டாம், மூன்றாம் இடங்களுக்கு எப்பொழுதும் தள்ளப்பட்டேன். பத்தாம் வகுப்பிலும், பன்னிரெண்டாம் வகுப்பிலும் பள்ளியில் முறையே இரண்டாம், மூன்றாம் இடம் பிடித்தேன். அப்பா சிறிது கவலை கொண்டாலும் பெரிதாய் ஒன்றும் காட்டிக்கொள்ளவில்லை.

நல்ல மதிப்பெண்கள்தான் எனக்கு அரசு பொறியியல் கல்லூரியை பெற்றுக்கொடுத்தது. அதே கல்லூரி என்னை இப்படி ஏளனப்படுத்தி பார்க்கும் என்று ஒருநாளும் நான் நினைத்ததில்லை.

நிறைய நண்பர்கள், ஊர் சுற்றல் என்று காலம் கழிந்தது. ஹாஸ்டல் சாப்பாடு எப்பொழுதும் கசந்ததால், பெரும்பாலும் வெளியேதான் சாப்பிட்டோம். நாங்கள் சாப்பிடும் ஒவ்வொரு உணவகம் பக்கமும் ஒரு திரை அரங்கு தவறாமல் இருந்தது. வெளியே சாப்பிடுவது கட்டுபடி ஆகாத காரணத்தால் ஹாஸ்டல் விட்டு வந்து வெளியே ஒரு வீடு எடுத்து தங்கினோம். இன்னும் சுதந்திரமாக செயல்பட்டோம். மாலை காட்சி இரவு காட்சியானது. சில பழக்கங்கள் எங்களோடு வந்து சேர்ந்தது.

முதலாம் செமஸ்டர் தினம் படித்தேன். இரண்டாம் செமஸ்டர் இன்டெர்னல் மட்டும் படித்தேன். மூன்றாம் செமஸ்டர் கடைசி பரீட்சைக்கு மட்டும் படித்தேன். தேவையான அளவு மட்டும் வகுப்புக்கு சென்றேன். டிராயிங் வகுப்புகளுக்கு யாராவது proxy கொடுக்க, அதனை முற்றிலும் தவிர்த்தேன்.
"என்ன மாப்ள நாம பார்க்காத ட்ராயிங்கா..?"

டிராயிங் பரீட்சை தொடங்கிய மூன்றாவது நிமிடம் முதல் முதலாய் என்னை பின்னோக்கி ஓட்டிப்பார்த்தேன். கடவுளிடம் கெஞ்சினேன். இந்த முறை எப்படியாவது தேற்றிவிட்டால், கண்டிப்பாக ஒழுங்காய் படிப்பதாய் வேண்டிக்கொண்டேன். தியரி பரீட்சை என்றாலாவது அக்கம் பக்கம் பார்க்கலாம், இந்த பரிட்சையில் என்ன செய்ய முடியும். மேலும் டிராயிங் கருவியான drafter-ஐ எப்படி சரியாக பொருத்துவது என்பது கூட என்னால் யோசிக்கமுடியவில்லை. தொடர்ந்து அங்கு இருந்தால் ஏதேனும் இருதய கோளாறு உண்டாகும் என 1 மணி நேரத்தில் அறையை விட்டு கிளம்பிவந்தேன்.


அப்பா - இன்று முன்னேறிவிடலாம், இன்று முன்னேறிவிடலாம் என்று பெருங்கனவுகளோடு வாழும் ஒரு ஏழ்மையான மனிதர். நான் நன்றாக படிப்பதால் எனக்கு எப்பொழுதும் அவரிடத்தில் ஒரு தனி மரியாதை.
"என் புள்ளதான் என்னோட கனவெல்லாம் நெனவாக்குவான் பாரேன்"....பெருமையோடு என் அப்பா. அவர் ஆசையெல்லாம் ஒன்றுதான். ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும். அதற்கும் பணம் செர்த்துக்கொண்டுதான் உள்ளார். ஆனால் சேர்க்கும் பணம் ஒவ்வொரு முறையும் ஏதாவது செலவுக்கு உபயோகப்படுகிறது, என் படிப்பு, சாப்பாடு செலவு உட்பட.

அம்மா - அன்பான அம்மா. அடுத்தவர் உள்ளம் நோகாமல் எல்லோரிடத்திலும் அன்பு காட்டுபவர். அவரின் கனவு, அப்பாவின் கனவை நினைவாக்குவது.

சொந்தபந்தங்கள் - "ச..நம்ம சந்தோஷுக்கு டிஷ்டிரிக்ட் ரேங்க் வரலன்னா, அப்போ சரியாய் யாரும் பேப்பர் திருத்தலன்னுதானே அர்த்தம்."
என் பத்தாம் வகுப்பு பரிட்சையை பெரிதாக எதிர் பார்த்து ஏமாந்தவர்கள்.

இவர்களை ஏமாற்றுவது நான் கண்ட தோல்வியைவிட என்னை பெரிதும் துன்புறுத்தியது. அதனால்தான் என் கடிதம் எழுதினேன். என்னை மன்னிக்கும்படி வேண்டி கேட்டுக்கொண்டேன். பதில் கடிதமும் கிடைக்கப்பெற்றேன்.


"எங்கள் இதயம் உடைந்து சுக்கு நூறாகி விட்டது "
"எங்கள் இதயம் உடைந்து சுக்கு நூறாகி விட்டது"
இந்த வார்த்தைகளை தேடியே மீண்டும் மீண்டும் மனது அலைபாய்ந்தது. கண்ணீர் பீறிட்டு வந்தது.

என் கண்ணீரில் சிலத்துளி பட்டு அந்த எழுத்துக்கள் அழிந்து போனது.

அங்கங்கே சிதறி கிடந்த புத்தகங்களை ஒழுங்கு செய்து என் மேஜையில் வைத்தேன். எல்லா புத்தகங்களுக்கும் மேலே என் பெற்றோரின் கடிதத்தை வைத்தேன்.

8 comments:

meena said...

Thats looks good. I liked it. Best.
Meena.

Priya said...

Good one.

suja said...

Nan Expect panninathu ethuthan it was nice .....simple and good

செல்வா(தமிழ்செல்வன்) said...

உங்கள் கதை நாம் தற்போது மறந்த கடிதத்தை(இப்போ எல்லாமே மெயில் தானே) கண் முன் கொண்டுவந்தது . முடிவு மாணவன் சிறந்த எதிர்காலத்தின் விடிவாக மாற்றியது மிக்க நன்று .

bond said...

simply superb

Laplace said...

உன் கல்லூரி கதைகள் அனைத்தும், கல்லூரி நாட்களை நீனைவு படுத்துகிறது ... தப்போ சரியோ, அது ஒரு அழகிய கனகாலம் ;)
ஏன் அம்மா மகன் இருவரின் எழுத்து நடை ஒன்றாக இல்லை?!

jegan said...

nadandha sambavam unmai kadhayalaa,endru udaan irundhavargaalmathiram arindha valigal.

Subha said...

Unnudaya munthaya kathai ondrin saayal ithil therigirathu. But it's always interesting to read about college days!

Post a Comment