Tuesday, April 14, 2009

கதை - 4

Share |
வெள்ளிகிழமை எற்பாடு
என்னுடைய அடுத்த கதை இதைப்பற்றித்தான் என முடிவு செய்தேன். ஆனால் கற்பனைக்காக பொய் சொல்ல வேண்டியது வருமோ என்பதால் தொடர்ந்து எழுத முடியவில்லை. இருப்பினும் வேறு என்னதான் செய்வது..?

இந்த வாரத்தில் 5 நாளில் மொத்தமே ஒரு 20 மணிநேரம்தான் வேலை செய்திருப்பேன். விஷயம் தெரிந்தவனாக இருந்திருந்தால் நான் செய்த அதே வேலையயை 10 மணி நேரத்தில் செய்திருப்பான்.

சில நேரங்களில் உடல் கொண்டு உழைக்கும் மனிதர்களை நினைத்து பார்க்கும்போது எனக்கு வெட்கி தலை குனிய தோன்றும். ஒரு விவசாயி சுமார் 10 முதல் 12 மணி நேரம் வேலை பார்த்தால் அவரின் தினக்கூலி என்னவாய் இருக்கும்..?

கடலுக்குள் சென்று கரை மீள்வோமோ இல்லையோ என்று தெரியாமல் தவிக்கும் ஒரு மீனவனுக்கு தினம் மீன்கலாவது கிடைக்குமா..?
எல்லை காக்க தன்னுயிர் இழக்கிறானே ராணுவ வீரன் அவன் வாங்கும் குண்டுகளுக்கு ஏதேனும் விலை உண்டா..?

ஏன்..?? நான் நன்றாய் படித்தேன்...இல்லை கல்லூரி சென்றேன் என்ற ஒரே காரணத்திற்காக எனக்கு இவ்வளவு ஊதியமா..?

அவ்வளவு உதாரணங்கள் ஏன்.? எனக்கு கீழே அங்கே இந்தியாவில் பணி புரிகிறார்களே அவர்கள் கூட கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள். ஏன்..? நானே ஒரு காலத்தில் 24 மணி நேரங்கள் தாண்டியும் உழைத்துள்ளேன்.

எல்லாம் இருந்தும்...இந்த கேள்வி என்னை உறுத்துகிறது.


வெள்ளிக்கிழமை மாலை
யோசித்ததை எழுதலாம். ஆனால் வெள்ளிகிழமை மாலை பொழுதேன்பது ஏக்கங்களுக்காக எழுதப்பட்ட மாலை பொழுது. தேவையில்லாத/தேவையான கேள்விகளுக்காக பொழுது. மாலை முடிந்து இரவு எப்பொழுது வந்ததென தெரியாமல் கழியும் பொழுது. என்ன செய்தேன் என்பதை யோசிப்பதை காட்டிலும் அந்த பொழுது கழிந்தாலே போதும் என நினைப்பேன்.


வெள்ளிக்கிழமை யாமம்
ஏதோ படம் பார்த்தேன். ஏதோ படித்தேன். பொழுது கழிந்தது.


வெள்ளிகிழமை வைகறை
உறங்க சென்றேன். அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறைதான். என்ன செய்து கிழித்தேன்.?! இரண்டு நாள் விடுமுறைக்கு. நாளை சுமார் ஒரு 10 மணிக்கு எழுந்தாலும் எழுதிவிடலாம். தூங்கிப்போனேன்.ஏதேதோ கனவுகள்.


சனிக்கிழமை காலை
கணிப்பொறி துறையில் உற்பத்தி அனுசரணையாளர்களுக்கு (Production Support) வழங்கப்படும் 'விளிப்பு' கருவி (Beeper) என்னையும் விழிக்க செய்தது.

"Fourtimes SQL Job failed"

மிக சரியாக சொல்ல வேண்டுமேயானால் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் பிழை என்னை சார்ந்தது அன்று. வேறு ஒரு இலாகாவினர் பார்க்க வேண்டியது. ஆனாலும் உலகத்தில் உள்ள யாவும் ஏதோ ஒருவகையில் ஒன்றோடு ஒன்று சம்பதப்பட்டிருப்பதுபோல இந்த பிரச்சனையும் என்னோடு சம்பதபட்டிருந்தது.

அந்த இலாக்காவினரை கைபேசியில் அழைத்தேன். எல்லோருமே தூங்கி கொண்டிருந்தார்கள். இரவு வேலை செய்திருப்பார்கள் என தோன்றியது. அதுதான் இந்த பிழைக்கு காரணமாய் இருக்கலாம்.

எல்லோரும் பதறினார்கள். அந்த இலாகாவின் உயர் அதிகாரி எல்லோரையும் தொலைபேசியில் அழைத்தார். நானும் அந்த தொலைபேசி அழைப்பில் பங்கெடுக்க வேண்டிய கட்டாயம் உருவானது.


சனிக்கிழமை நண்பகல்
எல்லோரும் பேசினார்கள். என்ன பிரச்சனை என்று யூகித்தார்கள். என்னால் என் தொலைபேசியை துண்டிக்க முடியவில்லை. ஒரு வழியாக நண்பகல் 12 மணிக்கு இதுதான் பிரச்சனை என்று கண்டுபிடித்தார்கள். அவர்கள் ஒரு அரை மணி நேரத்தில் அதனை திருத்தி விட்டு என்னை அழைப்பதாக சொன்னார்கள்.

நான் நிம்மதி பெரு மூச்சுவிட்டேன். 4 மணி நேரமாய் பல் கூட துலக்காமல்......கைபேசியை மின்சாரம் வசம் ஒப்படைத்துவிட்டு காலை கடன் முடிக்க சென்றேன்.

நான் திரும்பி வரவும் என் கைபேசி அடிக்கவும் சரியாய் இருந்தது. அவர்கள் வேலை முடிந்ததாம். என் வேலையே சீக்கிரம் முடிக்க உத்தரவிட்டார்கள்.

நான் முடித்துவிட்டு அழைப்பதாய் சொன்னேன். அவர்கள் தொலைபேசியில் காத்திருப்பதாய் சொன்னார்கள். மேலும் நான் செய்கின்ற வேலையினால் வேறு ஏதேனும் பிரச்சனை இல்லை என்பதையும் அவர்கள் உறுதி படுத்த வேண்டுமாம்.

ஒரு 1 மணி நேரம். எல்லாம் முடிந்தது.

பசியில் தலை வலித்தது. ஒரு குளம்பி குடித்தால் நன்றாய் இருக்கும் என தோன்ற குளம்பி கலக்கி வந்து என் கணிப்பொறியை அணைக்க போனேன்.
ஒரு மின்னஞ்சல்:

"Doc Upload Error-Cannot Connect to DB-2147467259[Microsoft][ODBC SQL Server Driver][DBNETLIB]General network error."

ஆ.......இது வேறு பிரச்சனை. என் பிரச்சனை. புரியாத வார்த்தைகளாய் தோன்றினாலும் எனக்கு தெரிந்த பிரச்சனைதான். வழங்கி படுத்துவிட்டது. (server down). ஏன்..?

என் மேலதிகாரிக்கு தொலைபேசி முயற்சி செய்தேன். அவர் எடுப்பதாய் தெரியவில்லை.

இது சம்பதமான கணிப்பொறி உள்கட்டமைப்பு குழுவினருக்கு கூப்பிட்டேன். சனிக்கிழமை என்பதால் ஒரு அரை மணி நேரம் கழித்தே இணைக்கப்பட்டேன்.

அவர்கள் முயற்சி செய்து பார்த்து என்னை அழைப்பதாய் சொன்னார்கள்.


சனிக்கிழமை எற்பாடு
ஆறிப்போன குளம்பி குடித்து முடித்தேன். அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தது.

சில விபரம் அவர்களுக்கு தேவையாய் இருந்தது. எல்லாம் சொன்னேன்.கருவிக்கு வயதான காரணத்தால் அது பழுதடைந்துள்ளது என்பதே அவர்கள் கண்டறிந்த உண்மை. பழுதடைந்த கருவியை அவர்கள் இடத்தில் இருந்து அவர்களாலும் இணைக்க முடியவில்லை.

இப்பொழுது என்ன செய்ய வேண்டும். அந்த கருவி இருக்கும் அலுவலகம் செல்ல வேண்டும். இன்று விடுமுறை ஆன காரணத்தினால் அவர்களிடத்தில் பணியாளர்கள் குறைவாகவே இருந்தார்கள்.

என்னை உடனடியாக கிளம்பி அந்த அலுவலகம் போக சொன்னார்கள். அவர்கள் அங்கிருந்து சொல்ல சொல்ல நான் செய்ய வேண்டும்.
பசி இப்பொழுது அதிகமானது. அலுவலகம் கிளம்பினேன். என் வீட்டில் இருந்து 70 மைல்.

எல்லாம் முடித்து வீடு திரும்பும்பொழுது சனிக்கிழமை மாலை வந்திருந்தது. இப்பொழுது பசி இல்லை. தூக்கமும் வருவதாய் தெரியவில்லை.

திங்கட்கிழமை காலை
யோசித்ததை எழுதி முடித்தேன். பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் போனது.

7 comments:

யாத்ரீகன் said...

உன் மொழி சரளமான நடை நண்பா... சாதரண நிகழ்வையும் சுவாரசியமாய் கொண்டுசெல்ல உதவுகின்றது :-)

ச. சிவராம் குமார் said...

நன்று நண்பா..

"விஷயம் தெரிந்தவனாக இருந்திருந்தால் நான் செய்த அதே வேலையை 10 மணி நேரத்தில் செய்திருப்பான்."
பாத்து, உங்க office-la யாராவது படிச்சிடப் போறாங்க..

Error Message எல்லாம் அப்பிடியே குடுத்திருக்கியே? பிரச்சனை நடக்கும்போதே எழுதினயா?

குளம்பி - பாவாணர் தமிழ்.
வழங்கி ?

மொழி said...

@சிவா,
//Error Message எல்லாம் அப்பிடியே குடுத்திருக்கியே? பிரச்சனை நடக்கும்போதே எழுதினயா?

இந்த error msg கூட ஞாபகம் இல்லனா நான் வேல செய்றதுல ஒரு அர்த்தம் இருக்குமா..:-)

குளம்பி - பாவாணர் தமிழ்.
வழங்கி ? - நம்ம தமிழ். server-kku வேற என்ன பொருத்தமான வார்த்தை இருக்க முடியும்..:-))

மொழி said...

நன்றி யாத்ரீகன் :-)

ச. சிவராம் குமார் said...

ஆஹா! உன் தமிழ் கேட்டு இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே...

nandha said...

படிக்க நாலு பேர் இருந்தா, என்ன வேணுன்னாலும் எழுதுவியா?

ஆனா ஒரு வகைல பாத்தா, எல்லா நிகழ்வையும் நல்லா எழுதுறவந்தான் நல்ல கலைஞன்

Subha said...

Software Engineers Sangili illa adimaigal?!

Post a Comment