Friday, April 17, 2009

பிஞ்சமண்டயன் (கதை - 5)

Share |
"டேய், எங்கடா நம்ம புது மாப்ள, வந்துட்டானா..?" நான் கேட்டுக்கொண்டே வீட்டினுள் நுழைந்தேன்.
"அத ஏன் மாப்ள கேட்குற.....என்னடா பிஞ்சமண்டயான்னு கேட்டதுக்கு ஒரு மாதிரி பார்வை பார்த்துட்டு ரூம்குள்ள போனான்...இன்னும் வெளிய வரல...."


பிஞ்சமண்டயன். அவனுடைய இயற்பெயர் ரவி என்றாலும், அவனை எல்லோரும் அழைப்பது இப்படிதான். எல்லோரும் நினைப்பது போல் அவன் முன் தலயில் விழுந்த வலுக்கயால்தான் இப்படி ஒரு பெயர் வந்தது அவனுக்கு. முதலில் கொஞ்சம் கோபமடைந்தாலும் நாட்கள் செல்ல செல்ல இது அவனுக்கும் சகஜமாகிபோனது.

கல்லூரி படிக்கும்போது அவனுடைய தலைமுடி நன்றாய்தான் இருந்திருக்கிறது. வேலைக்காக சென்னை வந்து மூன்றே மாதத்தில், முன் மண்டையெல்லாம் கொட்டிபோனது. பின் தலையில் ஒன்றும் பிரச்சனை இல்லை. சரி செய்ய வேண்டும் என யோசிப்பதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.

சென்னை தண்ணீரை பற்றி யாரவது உயர்வாக பேசினால் இவனுக்கு கோபம் வரும்.

இந்த முறை அவன் ஊருக்கு போனது அவனுக்கு பெண் பார்க்க. மிகுந்த மகிழ்ச்சியோடு சென்றான். அவர்கள் வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்து சுமார் 1 வருடம் ஆகிறது. வந்த வரன் எல்லாம் ஜாதகம் பொருந்தாத காரணத்தினால், திருமணம் என்பது அவனுக்கு ஒரு கனவாகவும், கவலையாகவும் போனது.

பெண் ஒன்று அமைந்துவிட்ட மகிழ்ச்சியில் எங்களுக்கெல்லாம் விருந்தளித்தான்.

விருந்தின் போது, சக தோழன் ஒருவன், "டேய் பிஞ்ச மண்டையா ...ரொம்ப சந்தோசமா இருக்குடா..." என்றான்.
"thanks da"
"ஆமா பிஞ்சமண்டயா, உனக்கே கல்யாணம்னா அப்போ எங்களுக்கெல்லாம் எவ்ளோ ஈசியா நடந்துரும்..." எல்லோரும் சிரித்தனர்.
ரவியும் சிரித்தான்.
"டேய், பில் கொடுக்கவா வேணாமா...?"
"உன்ன கல்யாணம் பண்ற அந்த பொண்ணு ரொம்ப கொடுத்துவச்சவடா...பில் நீயே கொடுத்துரு மாப்ள.."

நான் ரவியை தனியாக அழைத்தேன்.
"உன் மனசுக்கு எல்லாம் நல்லபடியாக அமையும். எண்ணம்போல் வாழ்வு. சரி சொல்றதுக்கு முன்னாடி அந்த பொண்ணுட்ட பேசி முடிவு எடு. வாழ்த்துக்கள்" என்றேன்

ரவி உண்மையிலேயே ஒரு சிறந்த மனிதன். யாருக்கு உதவி என்றாலும் முதல் ஆளாக இருப்பவன். எங்கள் எல்லோரின் அன்புக்கு உரியவன். நானும் அவனும் ஒரே கல்லூரியில் வேறு படித்ததால் எங்களுக்குள் என்றுமே ஒரு நல்ல நட்பு இருந்து வந்தது.


இப்பொழுது என்ன கோபம் அவனுக்கு. பெண் இவன் நினைத்த மாதிரி இல்லையா.
இல்லை அவள் வேறு யாரையாவது மனதில் நினைத்திருந்தாளா..?

நான் அறைக்குள் சென்றேன். நல்ல இருட்டாக இருந்தது.

"ரவி.."
தூங்குகிறான் போல. சரி பிறகு எழுப்பலாம்.
"வினோத்"

"முழிச்சிட்டுதான் இருக்கியா. பேருந்துல வந்தது அசதியா இருக்கா.."
"அதெல்லாம் இல்லடா."

உடனே நான் தொடங்க வேண்டாம் என்று நினைத்தேன்.

"நான் வேணா போய் நம்ம ரெண்டு பேருக்கும் சாப்பாடு வாங்கிட்டு வரவா"
"அதெல்லாம் வேணாம் மாப்ள."

"சரி கொஞ்சம் நேரம் கழிச்சு ரெண்டு பேருமே போலாம். அப்புறம் ஊர்ல அப்பா, அம்மாவெல்லாம் எப்படி இருக்காங்க.."
"ம்ம்...நல்லா இருக்காங்கடா"

நான் உடை மாற்றி முடித்து மின் விளக்கை எரிய வைத்தேன்.
அவன் முகம் பார்த்தேன்.

"ரவி....." அவன் முகம் கொஞ்சம் வீங்கி போயிருந்தது. அவன் படுத்திருந்த தலையணை எல்லாம் ஈரம்.

அதற்குள் என் இன்னொரு நண்பன் அறைக்குள் வர அவன் நடப்பது புரியாமல்,
"பிஞ்சமண்டயா...ஊர்ல இருந்து வந்திருக்க...திங்க எதாவது கொண்டு வந்தியா..." என்றான்.

ரவிக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ....
அவன் பக்கத்தில் கிடந்த அவன் காலணி எடுத்து நண்பன் மீது விட்டெறிந்தான்.
பதிலுக்கு நண்பன் அவன் மீது பாய போக, நான் அவனை தடுத்து வெளியேற்றினேன்.

பிரச்சனை புரிந்தது.
"என்னடா ரவி..? பொண்ணு வேணாம்னு சொல்லிருச்சா..முடினால பிரச்சனையா..."

அவன் ஒன்னும் பேசவில்லை.பச்சை குழந்தை போல் அழத்தொடங்கினான்.

அவனை சரி செய்து விஷயம் தெரிந்து கொண்டேன். இதுவரை பொருந்தாத ஜாதகம் என்று சொன்னதெல்லாம் பொய். எல்லா பெண்களும் இவன் புகைப்படம் பார்த்து இவனை நிராகரித்து உள்ளனர். வருத்தமாய் இருந்தது.

இந்த பெண்ணுக்கு வீட்டில் இவனுடைய பழைய புகைப்படம் கொடுக்கப்பட்டுள்ளது. விஷயம் தெரியாமல் சென்ற இவனுக்கு அவமானமாய் போய்விட்டது.

தொடர்ந்து அழுதான். நானும் மனரீதியாக பேசிப்பார்த்தேன். அவனை வெளியே கூட்டிச் செல்ல முயன்றேன். முடியவில்லை.

இவனிடம் தர்க்க ரீதியாகத்தான் பேச வேண்டும்.

"ரவி...நான் ஒன்னு கேட்குறேன். ஒழுங்கா பதில் சொல்லு"
"கேளு"
"உன்னோட பிரச்சினையே ஒரு உதாரணமா எடுத்துக்குவோம். இப்போ நீ ஒரு பொண்ணு பாக்குற. அந்த பொண்ணுக்கு தலையில சில இடங்கள்ல முடி இல்ல. நீ அவல ஏத்துக்குவியா..?"
"கண்டிப்பா..." உடனே பதில் வந்தது.
"கத விடாதடா.."
"இல்ல மாப்ள...நீ கேட்குறதுக்கு முன்னாடியே நான் இத பத்தி யோசிச்சேன். அப்படி ஒரு பொண்ணு வந்தா நான் ஏத்துக்குவேன். இது எனக்கு ஒரு பிரச்சனை இல்ல. மனசு ஒத்து வாழ்ரபோ இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லடா.."

அப்பா நான் ஒன்னு சொல்றேன், என்ன தப்ப எடுத்துக்காத,
அவன் முடியை சுட்டிகாட்டி, "இத பார்த்து வர்றவ இது மாதிரிதான் இருப்பா என்றேன்."
"அப்டீங்கற...."

தெரியாத பெண்களை பற்றி தவறாக பேசியதில் எனக்கு மிகுந்த வருத்தம் இருந்தாலும், இவன் இப்பொழுது கொஞ்சம் அமைதியானான்.

"சரி வா. சாப்பிட போலாம். வெளிய வேற ஒரு பஞ்சாயத்து இருக்கு..."

வெளியே வந்ததும் ரவி நண்பனிடம் மன்னிப்பு கேட்டான்.
"என்னையும் மன்னிச்சிரு மாப்ள.நீயே ஏதோ பிரச்சனைல இருக்க போல. அது தெரியாம. சரி இப்போ சொல்லு, எதாவது திங்க கொண்டு வந்தியா..."
"ஒன்னும் கொண்டு வரல. வா வெளிய போலாம். என் treat. "
"பிஞ்சமண்டயன்...பிஞ்சமண்டயந்தாண்டா .."
ரவியும் இப்பொழுது சிரித்துவிட்டான்.

சாப்பிட்டு முடித்து இரவு பேசிகொண்டிருந்தோம்.
"ரவி...கொஞ்சம் யோசிச்சு பார்க்கும்போது, நீ என் உன் முடிக்கு எதாவது பண்ண கூடாதான்னு தோணுது.."
"என்னடா பண்ண முடியும் இனிமே..?"

அடுத்த மூன்று மாதம் மூலிகை சிகிச்சையில் புகழ் பெற்ற ஒரு நிறுவனம் சென்றோம். ஒன்றும் பலனில்லை.
அடுத்த மூன்று மாதம் ஹோமியோபதி. பலனில்லை.
வெளிநாடு மருந்து. உள்ளூர் மருந்து. சுத்தமாய் பலனில்லை.

"டேய்..பிஞ்சமண்டயா....இப்படி எல்லாம் பண்ணி அந்த பொண்ண ஏமாத்தலாம்னு பாக்குறியா".
என்னை தவிர யாருக்கும் அன்று நடந்த விஷயம் தெரியாது. ரவி அவர்களிடத்தில் சொல்லவில்லை. கூடிய சீக்கிரம் திருமணம் என்று மட்டும் சொல்லிவைத்தான்.

இதற்கு நடுவேதான் ரவிக்கு இன்னொரு வரன் வந்தது. ரவி மீண்டும் பயந்தான். சரியான புகைப்படம் அனுப்பபட்டுலதா என சரி பார்த்தான்.

அந்த பெண்ணுக்கு இவனை மிகவும் பிடித்து போனது. ரவி மீண்டும் மகிழ்ச்சியின் உச்சிக்கு சென்றான்.

"மாப்ள...இது வரைக்கும் நான் பார்த்ததில இந்த மாதிரி ஒரு அழகான, அறிவான பொண்ண பாக்கலாடா."

அந்த பெண் பாண்டிச்சேரியில் வேலை செய்தாள். கிட்டத்தட்ட அந்த பெண்ணை இவன் காதலிக்க தொடங்கிவிட்டான். நல்லா படியாக நிச்சயம் முடிந்தது. திருமணம் இன்னும் ஒரு ஆறு மாதத்தில் என முடிவானது.

ஒரு முறை அவளுடைய தோழி திருமணத்திற்கு அந்த பெண் சென்னை வரவேண்டிய சூழல் வந்தது. தோழி இவனையும் அழைத்துள்ளதாக சொன்னால். இது வரை அந்த பெண்ணின் தோழிகள் இவனை பார்த்தது இல்லையாம்.

அந்த பெண்ணோடு தொலைபேசியில் இது சம்பதாமாய் உரையாடிக்கொண்டிருந்தான் .
"கண்டிப்பா வரணுமா...?"
"...."
"இல்ல லீவுதான்..."
"...."
"சரி வரேன்."
"......"
"ஹ்ம்ம்....சொல்லு. எதாவது வாங்கிட்டு வரணுமா..?"
"......"
"வேற என்ன சொல்லுமா. என்ன தயக்கம்..?"
"................."
"அப்டியா.....?!?!......சரி.....நான் முயற்சி பண்றேன்."

நான் எல்லாம் கேட்டு கொண்டிருந்தேன்.
"என்ன மாப்ள. என்ன வேணுமா அவங்களுக்கு..?"
"இந்த Hair transplant பத்தி உனக்கு ஏதும் தெரியுமா மாப்ள..?"

11 comments:

meena said...

WOW EXCELLENT JAGA.I was confused in one place at the end of your story. Some one is going to ask you whether you blame men or women. Anyhow its a good one I liked it da.

Subha said...

kathaya padichuttu mudinjuruchaa-nnu thonichu. ennathaan sonnaalum, Appearances do make a part of ourselves??!!
surukkamaai, elithaai, nalla sirukathai solkirai.

சுந்தர குமார் பத்மநாபன் said...

நண்பா...
"சென்னை தண்ணீரை பற்றி யாரவது உயர்வாக பேசினால் இவனுக்கு கோபம் வரும்." - படிச்சு சிரிச்ச வரிகள்.

ஆனா சிவா சொல்ற மாதிரி முடிஞ்சா பாவாணர் தமிழ் கொஞ்சம் இல்லாம பார்த்துக்க. கதையோட ஓட்டத்துக்கு நெருடலா இருக்குன்னு தோனுது.

உன் கதையோட சிறப்பு... "We can identify ourselves with the story".... நல்லா இருக்குடா.
வாழ்த்துக்கள்.

Vasanthan said...

Nalla Irukku mama..

ச. சிவராம் குமார் said...

என்னடா 'அவார்டு' படம் மாதிரி திடீர்னு முடிச்சிட்ட?
இனிமேல்தான் ஏதோ கருத்து சொல்லப் போறன்னு நான் பயங்கரமா படிச்சிட்டு இருந்தேன்..
இருந்தாலும் நல்லாத்தான் இருக்கு...
நான் முன்பே கூறியதுப் போல், ஒரு எழுத்தாளனுக்கு நிஜத்தையும் புனைவையும் கலந்து எழுதும் திறமை வேண்டும்..
அது உனக்கு வசமாகி இருக்கிறது..
வாழ்த்துக்கள்..

நந்தாவின் விமர்சனத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்... :-)

ச. சிவராம் குமார் said...

தயவு செய்து 'word verification' ஐ எடுத்து விடவும்..
L.K.G சரியாக படிக்காத காரணத்தால் மிகவும் சிரமமாக உள்ளது...

nandha said...

கதைக்கரு ஓகே!
களமும் ஓகே!
லாஜிக்-ல்லாம் ஓகே!
ட்விஸ்ட் எங்கே எங்கே என்று பின்னாடியே போனால் முட்டுசந்தில் போயி நிக்குது
பஞ்ச் மிஸ்ஸிங்!

மொழி said...

நன்றி மீனா.
நன்றி சுபா.

மொழி said...

@சு.கு
//ஆனா சிவா சொல்ற மாதிரி முடிஞ்சா பாவாணர் தமிழ் கொஞ்சம் இல்லாம பார்த்துக்க. கதையோட ஓட்டத்துக்கு நெருடலா இருக்குன்னு தோனுது.

இந்த கதையில பாவாணர் தமிழ் உபயோகிக்கல. என்னோட "கதை சொல்லும்" பாத்திரமாவது நல்ல தமிழ்-ல பேசனும்னு நெனச்சேன். அதுதான் சில வார்த்தைகளுக்கு காரணம். முடிஞ்ச வரை பேட்சு வழக்கத்தில் இருக்க தமிழ் உபயோகிக்க இனிமே முயற்சி பண்றேன்.
கருத்து பகிர்வுக்கு நன்றி.

மொழி said...

நன்றி வசந்தன்.
நன்றி சிவா.
நன்றி நந்தா.

Prabhu C said...

kalakure chandru...keep going.

Post a Comment