Tuesday, May 12, 2009

கதவு (கதை - 8)

Share |
இன்று வெகு நாட்களுக்கு பிறகு மதிய உணவு உண்ண வீட்டிற்கு போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒரு காலத்தில் தினம் சென்றுகொண்டிருந்தேன். அந்த "ஒரு காலம்" இன்றும் நெஞ்சை படபடக்க வைக்கிறது.


என் அலுவலகத்திற்கும், வீட்டிற்குமான தூரம் 6 நிமிட நடைத்தொலைவு. ஒரு ஞாயிறன்று காலையில் யாரோ ஒருவர் கதவு தட்டும் சத்தம் கேட்டது. தூக்கத்திலேயே கதவை திறந்தேன். பார்பதற்கு அந்த பெண்மணி தமிழ் போலவே காட்சி அளித்தார். அவர் கை பிடித்த ஒரு குழந்தை ஒன்று தலை நிமிர்ந்து என்னை பார்த்தது. தமிழாய் தெரிந்தாலும் நாங்கள் வாழ்வது அமெரிக்கா என்பதால், ஆங்கிலத்தில், "என் வீட்டு கதவை திறக்க கொஞ்சம் உதவ முடியுமா" என வினவினார்.

நான் வேறு ஆடை மாற்றிக்கொண்டு அவர் பின் சென்றேன். அவர் வீடு நான் வசித்த அதே ஏழாவது மாடியில் ஒரு மூன்று வீடு தள்ளி இருந்தது. அவர் புதிதாக குடி வந்தவராக இருத்தல் வேண்டும். நாங்கள் வசித்த குடியிருப்பில் இருக்கும் பொதுவான பிரச்சனை இது. ஒவ்வொரு கதவுக்கு பின்னும், இரண்டு பூட்டுகள் இருக்கும். ஒன்று auto lock என சொல்லப்படும் தானியங்கி பூட்டு. மற்றொன்று நாம் சாவியால் பூட்ட வேண்டிய பூட்டு.

நான் சாவி வாங்கினேன். இரண்டு மூன்று முறை முயற்சி செய்து பார்த்தேன். அவரின் கணவரிடம் இருக்கும் சாவியில் எந்த வித பிரச்சனையும் இல்லை என சொன்னார். கீழே சென்று குடியிருப்பு நிர்வாகிகள் யாரையாவது கூப்பிடலாமா என எண்ணிய போது சரியாக கதவு திறந்தது.

அவரிடம் இரண்டு பூட்டுகள் பற்றி தமிழிலேயே விளக்கி வந்தேன். அவர் என் முகத்தை கூட சரியாக பார்க்கவில்லை.

அடுத்த நாள் மதியம் வீட்டிற்கு உணவருந்த என் வீட்டை நோக்கி வந்துக்கொண்டிருந்தேன். அவர் திறக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தார்.
"என்னங்க திரும்பவும் திறக்க முடியலையா..?"
"ஆமாங்க. இப்பதான் மேநேஜ்மென்ட்ல வந்து பார்த்தாங்க, அவங்க வந்து பார்த்தப்புறம் மேல என் பிரண்ட் வீட்டுக்கு போயிட்டு வந்தேன். மறுபடியும் திறக்க முடியல."

நான் முயற்சி செய்தேன். இந்த முறை எனக்கு கொஞ்சம் எளிமையாகவே இருந்தது. வீட்டை திறந்து, உள்ளே சென்று அவரையும் உள்ளே அழைத்து, இரு பூட்டுகள் காண்பித்து, அவை எவ்வாறு வேலை செய்கிறதென விளக்கினேன். இந்த முறை அவர் நன்றாக கேட்டுக்கொண்டார். அவர் குழந்தை மெதுவாய் சிணுங்கியது.

அடுத்த நாள் நான் மதிய உணவு உண்ணும்பொழுது யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டது. "சாரிங்க, எப்ப பார்த்தாலும் உங்கள டிஸ்டர்ப் பண்றோம். ஐயோ, சாபிடரீங்களா...சாப்ட்டு வாங்க, நாங்க வெயிட் பண்றோம்."
"இல்லங்க பரவா இல்ல."

நான் கை கழுவி அவரிடம் சாவி வாங்கினேன். அவர் குழந்தை பசியில் இருப்பதுபோல் தோன்றியது.அவர் குழந்தையை சமாதானம் செய்தார்.இந்த முறை நான் முதல் முயற்சியில் மிக எளிதாய் திறந்தேன்.

"என்னங்க, நீங்க இவ்ளோ ஈசியா திறக்கறீங்க..."
"நீங்க வந்து எவ்ளோ நாள் ஆச்சு..?"
"ஏன்..? போன வாரம் வந்தோம்..."
"நான் ரொம்ப நாளா இங்க இருக்கேன் இல்லையா. அதன் இந்த பூட்டு ஏன் பேட்சு கேட்குது."

இந்த முறை மீண்டும் விளக்கினேன்.
"அமெரிக்கால லாக் வந்து இந்தியாவோட தலைகீழ். இதுல ரெண்டு பூட்டு இருக்குதுல்ல, அதுல ஆட்டோ லாக் மட்டும் போட்டா கூட போதும். அதனால நீங்க பூட்டும்போது சும்மா கதவ சாத்திடுங்க. அதுவே பூட்டிக்கும்."

நான் விளக்கியது போல் செய்து காண்பித்தேன்.
"இப்போ பூட்டிகிச்சா."
"ம்ம்."
"இப்போ திறக்கிறேன் பாருங்க. திறக்கும்போது இந்த நாப உங்க பக்கம் இழுத்துக்கங்க."
நான் கதவின் கைப்பிடி இழுத்து எளிதாக திறந்து காண்பித்தேன். கதவை மீண்டும் மூடி அவரை திறக்க சொன்னேன்.

அவர் முயற்சி செய்தார். அவர் முயலும்பொழுது சரியாக பூட்டை திறந்தார். ஆனாலும் பூட்டு திறந்தவுடன் உடனே கைப்பிடியை விட அது மீண்டும் பூட்டிக் கொண்டது.
"ஓ. உங்க பிரச்சனை என்னனு புரியுது. பிடிச்ச நாப கதவு திறக்கற வரை விடாதீங்க. இப்போ முயற்சி பண்ணுங்க."

இந்த முறை அவரே கதவு திறந்தார். ஆயினும் இன்னும் அவருக்கு அது லாவகமாக ஏற்படவில்லை.

"இது நல்லா வர்றவரை நீங்க ஆட்டோ லாக்-கே மட்டும் போடுங்க. இன்னொரு லாக் போடவேணாம்."
"ரொம்ப தேங்க்ஸ்ங்க"

நான் என் வீடு நோக்கி சென்றேன்."இருடா செல்லம், அம்மா மம்மு கலந்து தர்றேன்" குழந்தையை தூக்கிக்கொண்டு அவர் வீட்டினுள் நுழைந்தார்.
அதற்கு பிறகு நான் அவரை சந்திக்கவில்லை.

ஒரு நாள் இரவு 8 மணி. கதவு தட்டும் சத்தம்.
"சாரிங்க, என் வீட்டுக்காரர் வேலை விஷயமா பக்கத்துக்கு சிட்டிக்கு போய்ட்டார். போனவர் ரெண்டு சாவியையும் எடுத்துட்டு போய்ட்டார். நான் இவ்ளோ நேரம் மேல என் பிரண்ட் வீட்ல இருந்த போது எனக்கு நெனப்பே இல்ல. கீழ மேநேஜ்மென்ட்டும் மூடி இருக்கு."
"செக்யூரிட்டில பார்த்தீங்களா..?"
"இல்லங்க"

நான் கீழே சென்றேன். செக்யூரிட்டி "எமெர்ஜென்சி மெயின்டெநன்ஸ்" அழைக்கச் சொன்னார்.

அவர்களை கூப்பிட்டேன். அவர்கள் சாவி காலையில்தான் கிடைக்கும் என கூறினர்.
"உங்க பிரண்ட் மேல இருக்காங்களா..?"
"நீங்க கேட்குறது புரியுதுங்க, அவங்க வெளியூர் கிளம்பிட்டாங்க, அவங்களுக்கு கொஞ்சம் திங்க்ஸ் எல்லாம் அடுக்கிட்டு இருந்ததுலதான் சாவி விஷயத்தையே மறந்துட்டேன். "
"சரி. என்ன பண்ணலாம்."
"......"
"உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லனா நீங்க என் வீட்ல தூங்கலாம். நான் என் பிரண்ட் வீட்ல பொய் படுத்துக்கறேன். காலைல கீழ போய் விஷயம் சொன்னா அவங்க உங்க வீட்ட திறந்துகொடுப்பாங்க."

நான் அவருக்கு படுக்கை ஏற்படுத்தி, அவர் குழந்தைக்கு தேவைப்பட்டால் வேண்டிய பால், அவருக்கு தேவைப்பட்டால் வேண்டிய உணவு எல்லாம் என் குளிர் சாதன பெட்டியில் வைத்து கிளம்பினேன்.

"நான் என் சாவிய இங்க வச்சிட்டு போறேன். காலைல கதவு தட்டறேன். உங்க போன் நம்பர் கொடுங்க. அதையும் எதுக்கும் வச்சிக்குறேன்"

காலை நான் கதவு தட்டிய உடனையே அவர் திறந்தார். முன்னரே எழுந்திருப்பார் போல.
"காப்பி..?"
"இல்லங்க பரவா இல்ல. பையனுக்கு மட்டும் கொஞ்சம் பால் எடுத்துகிட்டேன்"
நான் இருவருக்கும் காப்பி கலக்கினேன்.

"சரிங்க நான் ஆபீஸ் கிளம்புறேன். இன்னொரு அரை மணிநேரத்துல கீழ ஆள் வருவாங்க. நீங்க போகும்போது சும்மா சாத்திட்டு போங்க"
"ரொம்ப தேங்க்ஸ்ங்க"

அன்று மாலை மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்டது.
"என்ன ஆச்சு..?"
"பயப்படாதீங்க. இன்னைக்கு நீங்க எங்க வீட்டுக்கு சாப்பிட வரணும்."
"அட பரவா இல்லங்க."
நல்ல உணவு. சாப்பிட்டு வந்தேன்.

ஒரு ஒரு வாரம் ஆனது. மீண்டும்.. அவராகத்தான் இருக்க வேண்டும்.திறந்தேன்.
"டேய்.. ............. நீதான் என் பொண்டாட்டிய வச்சிருக்கியா..? ஏன்டா இப்படி அழயறீங்க..? உங்களுக்கு எல்லாம் வேற வேலை இல்லை."

அக்கம் பக்கத்தில் இருந்த வெள்ளைக்காரர்கள், இந்தியர்கள் வெளியே வந்தார்கள்.
"ஒரு நிமிஷம் உள்ள வர்றீங்களா சார்..?"
"என் பொண்டாட்டிய மொதல்ல உள்ள கூப்பிட்ட, இப்போ என்ன கூப்படரியா..? என் பொண்டாட்டி செல் போன்ல என்ன ............. உன் நம்பர் இருக்கு..? வெளிய ஊர் சுத்தரீங்களா ரெண்டு பேரும்..?"

எனக்கு கோபத்தை விட இந்த காலத்தில் கூட இந்த மாதிரி ஆட்கள் இருப்பது வியப்பை தந்தது. இப்பொழுது நான் என்ன பேசினாலும் அவரின் மனைவிதான் பாதிக்கப்படுவார்கள். நான் மறுபேச்சு பேசவில்லை.

"பேசுடா. உண்மை தெரிஞ்சிடுச்சுன்னு அசிங்கமா இருக்கா..? இது மாதிரி எத்தன குடும்பத்த தாலி அத்துருக்க..?"

நான் பேசாதது அவனை அமைதி அடைய வைத்ததுபோல தெரியவில்லை.
நேரே அவன் வீட்டுக்குள் சென்றான். அவன் மனைவியை வெளியே இழுத்துவந்து, "இந்தாடா இவளே நீயே வெச்சுக்க. போடி...அவன்கூடவே போ.."

அவர் முகம் முழுக்க அவன் கைரேகைகள். முடி எல்லாம் களைந்து இருந்தது. இனியும் பொறுமை காத்து ப்ரயஜோனமில்லை. நான் அவனை நோக்கி போகவும் உள்ளே ஒரு அமெரிக்கா காவலர் நுழையவும் சரியாக இருந்தது.

அவன் அப்படியே அமைதியானான். வந்தவர் அவனிடம் சில கேள்விகள் கேட்டார். அவன் மனைவியிடமும் சில கேள்விகள் கேட்டார். நாலு வீடு தள்ளி இருந்த பெரியவர் தான்தான் காவலரை வர சொன்னேன் என்றார். மேலும் அவர் அவன் அந்த பெண்ணை தாக்கியதாகவும் புகார் கொடுத்தார். அவன் வந்த காவலர்களால் அழைத்து செல்லப்பட்டான். காவலர் இன்னும் 5 நிமிடத்தில் முதலுதவி வண்டி வரும் என்றும், அதில் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். செய்வதறியாது அவர் மனைவி திகைத்து நின்றார்.

குழந்தையையும் தூக்கிக்கொண்டு, நாங்கள் மருத்துவமனை சென்றோம். என்னை வெளியே இருக்க சொல்லி அவர் மட்டும் அழைத்து செல்லப்பட்டார்.

நிறைய இடங்களில் காயம் போல. நிறைய தழும்புகள் வேறாம். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த குழந்தையின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவருக்கு ஒரு அரை வழங்கப்பட்டது. ஆனால் அதை மறுத்து உடனடியாக வீட்டுக்கு போக வேண்டும் என்றார். நான் மருத்துவமனையில் பேசினேன். நாங்கள் வீட்டுக்கு சென்றோம். நாங்கள் வீடு அடைவதற்குள் குழந்தை உறங்கிப்போனான்.

"யாருக்காவது போன் பண்ணவா உங்க வீட்ல..?"
"............"
"உங்களைதான் கேட்குறேன்.."
"இல்லங்க வேணாம். அவர எப்ப விடுவாங்க. அவரு ஒன்னும் தப்பு பண்ணலன்னு போய் நாம சொல்ல முடியுமா..?"

எனக்கு இந்த மாதிரியான சட்டங்கள் பற்றி தெரியவில்லை.
"நான் முயற்சி பண்றேங்க. என் கிளையன்ட் யார்டயாவது பேசி என்ன பண்ணலாம்னு பாக்குறேன். நீங்க இப்பைக்கு ஒன்னும் கவலை படாதீங்க."

இந்த நேரத்தில் என் வெள்ளைக்கார முதலாளிகளிடம் பேச முடியாது. காலை முதல் வேலையாக இதை பார்க்க வேண்டும்.
இப்பொழுதே 911 எண்ணிற்கு தொலைபேசியில் பேசிப்பார்த்தால் என்ன என தோன்றியது. நான் விபரம் முழுவதும் சொன்னேன். அவன் எங்கு வைக்கப்பட்டிருக்குறான் என தெரிந்து கொண்டேன்.

அவரை அவர் அறையில் விட்டு, நான் என் அறைக்கு வந்தேன்.
காலை கதவு தட்டப்பட்டது. அவராகத்தான் இருக்கும்.
காவலர்கள்!!
"எஸ்"

வெளியே வந்தேன். நிறைய காவலர்கள் அவர் வீட்டில்.அவனை மீண்டும் அழைத்து வந்துவிட்டார்களா..? குழந்தை அழுதது. குழந்தையை ஒரு காவலர் தன கையில் வைத்திருந்தார்.

"என்ன ஆனது..."
"அவர் மேலிருந்து கீழே குதித்துவிட்டார்."
"......................."
"R u alright..?"

எனக்கு மயக்கம் வந்தது. அவருடைய வீட்டில் யாரையாவது எனக்கு தெரியுமா என காவலர் வினவினார்.அவருடைய செல் போனில் இருந்த எண்கள் முயற்சித்து கடைசியாக அவரின் மாமனாரிடம் பேசினோம். நான் எல்லா விசயமும் சொன்னேன்.
"அடப் பாவி, நல்லா இருந்த குடும்பத்த நாசமாக்கிட்டியே.."யாரும் புரிந்து கொள்வதாக தெரியவில்லை.

அவரின் அப்பா, அம்மாவிடம் பேச முயற்சித்தோம். அவர்கள் எங்கிருப்பர்கள் என தெரியவில்லை.அவன் அழைத்துவரப்பட்டான்.

நாந்தான் அவன் மனைவியை கொலை செய்திருக்க கூடும் என சொன்னான். அவன் மனைவியை அவன் காதல் திருமணம் செய்துள்ளான் என்பதும், அவர் ஒரு அனாதை விடுதியில் வளந்தார் என்பதும் அப்பொழுதே தெரிந்தது.

சில மாதங்கள் வழக்கு நடந்தது. குழந்தை அரசு கவனிப்பில் இருந்தது. அவன் மனைவியின் இறப்புக்கு காரணம் அவன்தான் என முடிவானது.

சாப்பிட்டு முடித்தேன். நேற்றுதான் எல்லா வேலைகளும் முடிந்தது. அவர் வீட்டை பார்த்துக் கொண்டே கிளம்பினேன். நேற்றே அந்த வீட்டை அவருக்காக திறந்தது போல் இருந்தது.

நான் வக்கீல் வீட்டுக்கு சென்றேன். அவர் எல்லாம் சரி பார்த்தார். நாங்கள் இருவரும் அந்த குழந்தை கவனிப்பு மையம் சென்றோம்.

அவர் கடைசியாக என்னிடம், "U sure u want to do this..?" என்றார்.

அவனை தூக்கிக்கொண்டு வீடு வந்தேன். அந்த குழந்தை அது இருந்த வீடு பார்த்து பார்த்து கதவை நோக்கி கை நீட்டியது.

9 comments:

thenn_arasu said...

Ethai padithathum, enaku "Sila nerankalil sila manitharkal" ninaivuku varukirathu..Oru kadhavu mudinal oru kadhavu thirakkum..

Anonymous said...

Unnoda Kadaisi "Touch" eppovume good...

Vidhya said...

nalla iruku kadhai..nee marandhu poi kooda america-la yarukum kadhavai therandhu vidatha :-)

மொழி said...

நன்றி தென்.

மொழி said...

நன்றி அருண்.

மொழி said...

நன்றி வித்யா.:-))

ச. சிவராம் குமார் said...

கதை நன்று. சில இடங்களில் சித்தரிப்பு செயற்கையாக உள்ளது போல் ஒரு மயக்கம். சரி செய்யவும்..
finishing touch super!

nandha said...

என்னையா நீ! நல்லா ஆரம்பிச்சுட்டு தினத்தந்தி மேட்டெர் மாதிரி முடிச்சிடியே!
நல்லா வேய்ட்டா எழுதனும்யா! ரெண்டு நாள் யாரும் தூங்கக்கூடாது!
அப்புறம் detailing என்ன ஆச்சி?! இதெல்லாம் செல்லாது! செல்லாது !!

bLueray said...

i love the way u r writing

Post a Comment