Wednesday, June 17, 2009

பைத்தியக்காரன் - 1 (கதை - 10)

Share |
அவன் அந்த ஜன்னலின் வழியே வீதியை வெறித்து பார்த்துக்கொண்டிருப்பான். அவனுக்கு சுமார் 18 வயது இருக்கும். அந்த வீட்டினுள் இருந்து எப்பொழுதும் மெல்லிய ஓசையில் ஃப்.ம் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். அந்த வீட்டில் அவனை தவிர அவனின் தந்தை, தாய் மற்றும் அவனின் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் தம்பி. அவர்கள் எல்லோரும் தத்தம் தங்கள் பணிகளுக்கு கிளம்பிவிட, அவன் வீட்டினுள் வைத்து பூட்டப்படுவான். ஒரு சிறு குழந்தையை கொஞ்சுவதைபோல் அவன் அன்னை அவனை கொஞ்சிச் செல்வார்.கொஞ்சி முடித்து தன்னுடைய கணவனின் வண்டியில் பின் அமரும்போது அவர்களின் கண்களில் தண்ணீர் கோர்த்திருக்கும்.

நான் தங்கி இருந்தது அவனின் எதிர் வீட்டில். நிறைய வீடுகளை கொண்டது எங்கள் குடியிருப்பு. எங்கள் இருவரின் வீடும் தரை தளத்தில் எதிர் எதிராய் அமைந்திருக்கும். என் வீட்டை விட்டு வெளியே வந்து மூன்று அடி நேராக வைத்தால் அவர்களின் வீட்டுக்குள் நான் ஒரு அடி சென்றிருப்பேன். எங்கள் குடியிருப்புக்கு எதிர்புறம் வெறும் பொட்டல் காடு போல் இருக்கும். நிறைய முள் செடிகள் மட்டுமே காட்சி அளிக்கும். மக்கள் அதைதான் குப்பை போடும் இடமாக பயன் படுத்தி வந்தனர். இந்த வரிசையில் ரயில் பாதை வரும் ஒரு திட்டம் இருப்பதால் இங்கு யாரும் வீடு கட்டவில்லையாம்.

அவன் அடைக்கப்பட்ட அறை வீதி நோக்கி இருந்ததால், அவனை பார்க்க நான் வீட்டை விட்டு வெளியில்தான் வர வேண்டும். வீதியில் செல்லும் யாவரும் அவனை பார்க்கலாம் என்றாலும், இந்த அவசர சென்னையில் யாருக்கும் அவனை பார்க்கும் நேரமோ, எண்ணமோ கூட இருந்திருக்க வாய்ப்பில்லை. என் சித்திக்கு கூட இப்படி ஒருவன் இருக்கிறான் என்று தெரியாது. அவளும் பணிக்கு செல்பவள். என் அம்மாவாக இருந்திருந்தால் இந்த நேரத்திற்கு அந்த குடும்பத்தின் கதையை கேட்டிருப்பாள்.

நான் தங்கியிருந்த வீடு என் சித்தி, அம்மாவின் தங்கயுடையது. எல்லோரும் போல் நானும் வேலை தேடித்தான் இங்கே வந்திருக்கிறேன். என் சித்திக்கு ஒரு பெண் மட்டும். பதிணொண்றாம் வகுப்பு படிக்கிறாள்.

வேலை தேடும் மற்ற பொழுதில் நான் இவனைதான் கவனித்துக்கொண்டிருப்பேன். அவனை பார்த்துக்கொள்ள ஒரு ஆளாவது இருந்திருக்கலாம். இல்லையேல் அவன் அன்னையே அவனை பார்த்துக்கொண்டிருக்கலாம். காலையில் வேலைக்கு செல்லும் அவன் அம்மா மதியம் ஒரு 3 மணிபோல் வந்துவிடுகிறார். அதன் பிறகு அவனை ஒரு அரை மணி நேரத்திற்கு அங்கு காண முடிவதில்லை.

காலையில் அவர்கள் எல்லோரும் வெளியே செல்கையில் அவன் மேல் சட்டை, கால் சட்டை அணிந்து காண்கிறேன். அவன் ஜன்னலுக்கு வரும்பொழுது, அவனின் மேல சட்டை இல்லை. கால் சட்டை அணிந்துள்ளானா என்பதை என்னால் நிச்சயம் சொல்ல முடியவில்லை. மதியம் அவன் அன்னை வந்த பிறகு வேறு ஒரு ஆடையில் தோன்றுகிறான்.

அவன் அன்னை வந்த பிறகு வானொலி சத்தம் குறைகிறது. நான் என் வீட்டுக்குள் சென்றால், அவனின் அன்னை அவனை கொஞ்சும் சத்தம் கேட்கின்றது. அவனை சாப்பிட வைக்க, சில மாத்திரைகள் விழுங்க வைக்க என்று விதவிதமான கொஞ்சல்.

அவனுடைய தந்தை ஒரு 5 மணிக்கு வருகிறார். அவர் சில நேரத்தில் அவனை கொஞ்சுகிறார்.

அவன் தம்பி பள்ளி முடிந்து 6 மணிக்கு வருகிறான். அவனுடைய முகத்தில் ஒரு சலிப்புதான் தோன்றுகிறது.

அன்று நான் வெளியே ஒரு நேர்முகத்தேர்விற்கு சென்று வந்தேன். வீட்டு பக்கத்தில் வந்ததும் அவனை பார்க்க நினைத்தேன். அவனை காணவில்லை. நான் ஆடை மாற்றும்பொழுது அவன் வீட்டில் இருந்து கத்தும் சத்தம் கேட்டது. ஓடிப்போய் அந்த வீட்டை தட்டினேன். வீடு பூட்டபட்டிருக்க வேண்டும். ஜன்னல் வழியே பார்த்தேன். சத்தம் மட்டுமே வந்தது. வீட்டை உடைக்கலாமா..? யாரையாவது கூப்பிடலாமா..? வீதிக்கு வந்தேன். நல்ல வேலையாக அவன் அம்மா வந்துகொண்டிருந்தார்.அவர் திசை நோக்கி ஓடினேன்.

"கொஞ்சம் சீக்கிரம் வாங்க.." என்னை வெறித்து பார்த்தார்.
"நான் உங்க எதிர் வீட்ல இருக்கேன். உங்க பையன் உள்ள சத்தம் போட்டுட்டு இருக்கான்."
"நீங்க புதுசா. மன்னிச்சிடுங்க. உங்கள தொந்தரவு செஞ்சிட்டனா..?"
இவர் என்ன பேசுகிறார்.
"அதெல்லாம் இல்லங்க. அவனுக்கு என்ன ஆச்சோன்னு..."

அவர் பதட்டப்படவில்லை.
கதவு திறந்தார். அவன் ஆடை ஒன்றும் அணியாமல் கீழே படுத்திருந்தான்.
"என் செல்ல குட்டி..." என்று கொஞ்ச ஆரம்பித்தார்.
நான் அங்கிருந்து விலகினேன்.

ஒரு சனிக்கிழமை காலை, அவன் அப்பா அவனை வீட்டைவிட்டு வெளியே கூட்டிவந்தார். அவனை தன் ஸ்கூட்டரின் முன் இருக்கையில் அமர்த்தி, இவர் பின் அமர்ந்து கொண்டார். ஒரு ஆட்டோ வந்தது. அதில் அவன் அம்மா ஏறிக்கொண்டார்.

"நான் வேணா ஆட்டோல கூட்டிவரட்டா..?"
"இல்லமா வேணாம். நானே பார்த்துகிறேன்."

ஒரு 2 மணி நேரம் கழிந்து அவர்கள் வந்தார்கள். மீண்டும் கொஞ்சல் சத்தம் கேட்டது.

கொஞ்ச நேரத்தில் வெளியே சென்ற என் தங்கை வீட்டிற்குள் ஓடி வந்தாள். அவன் தன் உடம்பில் ஆடை ஏதும் இல்லாமல் வீதி நோக்கி போய்க்கொண்டிருக்கிரானாம்.
ஓடி சென்று அவனை இழுத்து வந்து அவனுடைய வீட்டில் சேர்த்தேன்.

அவர்கள் இருவரும் அவனை ஆற தழுவிக்கொண்டார்கள்.
"என்ன கண்ணு. அடி பட்டிருந்தா என்ன பண்ணுவ..?"
"ரொம்ப தேங்க்ஸ் சார். கதவ திறந்து வெச்சிட்டு தூங்கிட்டோம்."

"இந்த தம்பிதாங்க அன்னைக்கு இவன் சத்தம் கேட்டு, ஓடி வந்தாப்ள"
"தேங்க்ஸ் தம்பி. நீங்க எதிர் வீட்ல இருக்கீங்களா..?"

நான் அவனை பற்றி ஒன்றும் கேட்டுக்கொள்ளவில்லை.

அடுத்த தினம் முதல் நான் பார்க்கும்போது, அவனும் என்னை பார்ப்பான். நான் சிரிக்க அவனும் சிரிப்பான். அவனுக்கு ஏதாவது வாங்கித்தர தோன்றியது.

என் அம்மா என் சித்தி வீட்டிற்கு வந்தாள். அம்மாவை பேருந்து நிலையத்திலிருந்து கூட்டி வரும்போது அவனை பற்றி பேசி வந்தேன்.


அவன் சிறு வயதில் எல்லா குழந்தையை போல் நன்றாகவே இருந்திருக்கிறான். படிப்பும் நன்றாகவே இருந்திருக்கிறது. ஏழாம் வகுப்பு படிக்கும்போது இவர்கள் ஏதோ ஒரு உறவினரின் திருமணத்திற்கு சென்றனர். திரும்பி வரும்பொழுது, இவனுக்கு பிடித்த ரயிலில் பயணிக்கலாம் என நினைத்தனர். இவனின் தம்பியும், அன்னையும் நடை மேடையில் காத்திருக்க, பிரயான சீட்டு வாங்க இவன் தந்தையுடன் இவனும் சென்றான். சீக்கிரம் வாங்கி திரும்ப வேண்டும் என்பதற்காக தண்டவாளம் வழியே இவர்கள் செல்ல, பக்கத்து தண்டவாளத்தில் வந்த வண்டி தன்னுடைய தண்டவாளத்தில்தான் வருவதாய் நினைத்து இவன் பயம் கொண்டு "அப்பா" என சத்தம் செய்துள்ளான். அவன் பேசிய கடைசி வார்த்தை அதுதான்.

எத்தனையோ மருத்துவர்கள், எவ்வளவோ மாத்திரைகள்.பார்க்கும் மருத்துவர் எல்லாம் கண்டிப்பாக குணமடைய வாய்புள்ளதாகவே கருதுகின்றனராம். ஆனால் எப்பொழுது என்று சரியாக சொல்ல முடியவில்லை.

இரவெல்லாம் மழை பெய்தது. காலை பார்க்கும்பொழுது தெருவெல்லாம் சேறாக காட்சி தந்தது.

அவனை மருத்துவமனை அழைத்து செல்ல வேண்டிய தினம் போல இன்று. சென்ற முறை போல் இந்த முறையும் ஆட்டோ வந்தது. அவன் அம்மா ஆட்டோவில் ஏறிக்கொள்ள, அவன் அப்பா அந்த ஸ்கூட்டரில் அவனை ஏற்றிக்கொண்டார். அவனை என்னால் சரியாக பார்க்க முடியவில்லை. அவன் சிரிப்பு பார்க்க எண்ணி ஏமாந்தேன்.

ஒரு பத்தடி செல்வதுற்குள் வேகமாக சைக்கிள் ஓட்டி வந்த ஒருவர் இவரின் ஸ்கூட்டரில் மோத அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவனுக்கு வலிப்பு வந்தது.

எல்லோரும் ஓடினோம். விழுந்த அதிர்ச்சியில் அவனுக்கு வலிப்பு உண்டாகி இருந்தது. அவன் அம்மா ஆட்டோவில் இருந்து ஓடி வந்து அவனை தூக்கினார். அவனுடைய தந்தையும் தடுமாறி எழுந்தார். செய்வதறியாது திகைத்து நின்றார். ஒருவர் யாரையாவது சாவி அல்லது இரும்பு எடுத்து வர சொன்னார். அவனின் அம்மா சென்ற ஆட்டோ ஓட்டுனர் இரும்பு எடுத்து வந்தார். நான் ஓடி சென்று தண்ணீர் எடுத்து வந்தேன். அவனுக்கு வலிப்பு அடங்கியது. என்னிடம் தண்ணீர் வாங்கி அவன் முகத்தில் அறைந்தனர். அவன் உடல் எல்லாம் சேறு பூசி இருந்தது. அவன் பெற்றோர் கண்களில் கண்ணீர் கசிந்தது.

"ஒண்ணுமில்ல விழுந்த அதிர்ச்சி..எல்லாம் சரியாய் போய்டும்." தண்ணீர் அறைந்தவர் சொன்னார்.
அவர்கள் அவனுக்கு வேறு ஏதேனும் அடிபட்டுள்ளதா என பார்த்தனர். நல்லவேளையாக ஒன்றும் இல்லை. அவனின் தந்தைக்குதான் கையில் சிராய்ப்பு ஏற்பட்டு இருந்தது.

ஒரு இரண்டு தினம் கழித்து மருத்துவமனை போகலாம் என முடிவு செய்தனர். அவனை வீட்டுக்குள் அழைத்து சென்றார்கள். உள்ளே போகாமல் அவன் அடம் பிடித்தான். அவன் அன்னை அவனை கட்டிக்கொண்டு உள்ளே இழுத்து சென்றார். அவனுடைய கத்தல் அந்தே வீதியே கேட்டது.

அடுத்த நாள் அவன் அம்மா என்னிடம் வந்தார்.
"அவன கொஞ்சம் அப்பப்ப பாத்துக்கிரியா..?"

இரவு வெகு நேரம் கண் விழித்து இருந்ததாகவும் இப்பொழுதே தூங்குகிறான் எனவும் சொன்னார்.
எனக்கு ஒரு மணி நேர வேலை இருந்தது.

"கூட இருக்கெல்லாம் வேணாம் கண்ணு. ஏதாவது சத்தம் கேட்டா மட்டும் பாரு. இந்தா சாவி."

நான் வெளியே சென்றேன். நன்றாக மழை பிடித்துக்கொண்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாகி இருந்தது.மழையிலேயே வீடு வந்து சேர்ந்தேன். அவன் வீட்டின் ஜன்னல் வழி பார்த்தேன். அவனை காணவில்லை. உள் அறையில் தூங்குகிறான் போல. கதவில் காது வைத்து பார்த்தேன். வீட்டுக்குள் இருந்து ஒன்றும் சத்தம் இல்லை. மழையின் சத்தம்தான் அதிகமாக இருந்தது.

இரண்டு மணி நேரம் ஆனது. எனக்கு பசித்தது. கதவை திறக்க எண்ணி என் வீட்டை திறந்தேன். என் கதவின் மேல் ஒரு பாம்பு நின்றது. ஒரு நிமிடம் பயந்து போய் அலறினேன். என் சத்தம் வெளியே கேட்டிருக்க வாய்ப்பில்லை. கதவை அப்படியே வைக்கவும் முடியாது. மூடினாலும் பாம்பு போய் விடும் என்று உறுதியாக சொல்ல முடியாது. கண்ணுக்கு எட்டும் தூரத்தில் எதுவும் அகப்படவில்லை. வீட்டிற்குள் சென்று ஏதேனும் எடுக்கக்கூட முடியாமல் அந்த பாம்பையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு 15 நிமிடத்தில் பாம்பு கதவை விட்டு இறங்கி வீதி நோக்கி சென்றது. பின் அந்த பொட்டலில் சென்று மறைந்தது.

ஒரு நிம்மதி பெரு மூச்சு விட்டு வீட்டுக்குள் வந்தேன். பாம்பு வந்ததில் நான் அவனை மறந்துபோயிருந்தேன். சாவியை எங்கு வைத்தேன் என நினைவில்லை. திடீர் என ஒரு பயம் என்னை கவ்விக்கொண்டது. எங்கிருந்து வந்தது இந்த பாம்பு..?அவன் கதவில் மீண்டும் காது வைத்தேன். இப்பொழுதும் சத்தம் இல்லை.

வேகமாக தேடி சாவியை கண்டுப்பிடித்தேன். வீட்டை திறந்தேன். அவன் இன்னும் உறங்கிக்கொண்டிருந்தான். நிம்மதியாக இருந்தது. அவனை எழுப்ப முயற்சித்தேன்.

எழுந்து என்னை வித்தியாசமாய் பார்த்தான். சுற்றும் முற்றும் பார்த்தான்.
"அப்பா..." என்றான், அவர் எங்கே என கேட்பதுபோல்.

6 comments:

Subha said...

Nandavoda commentsa implement panni irukka?! Enga tragedya mudichuruviyonnu yosichuttey padichen :-) kathayin peyaril '1' idam pettrirupathin kaaranam?

Anonymous said...

Same doubt for me jegan athu enna paithiyakaran -1.......kathai arumayaga suvarasyamaga erunthathu....Kaalam kadantha murpokkuvathhigal than entha mathiri kathai elutuvanga....relay good keep it up...:-))

Anonymous said...

Good...Suttathu? illa sontha muyarchiya...really superb Jegan.

i-v-a-n

anujanya said...

சுவாரஸ்யமான கதை சொல்லல். நல்லா இருக்கு.

அனுஜன்யா

மொழி said...

நன்றி அனுஜன்யா..

Anonymous said...

story ya padicha, namma life engaiyo arimugam ana nigalvukal than. Anal, antha nerangalil nam eppadi nadanthu irupoma enpathu than kelvi? Thenn

Post a Comment