Monday, October 6, 2014

நம் கடைசி நம்பிக்கையின் இன்றைய நிலையும், தீர்வும்.

Share |
மு.கு : இன்று விசாரணைக்கு வரும் ஜெயலலிதா அவர்களின் ஜாமீன் மனு இன்றைய விசாரணை பட்டியலில் 76வதாக வருவதாக செய்திகள் சொல்கின்றன.
சில மிக அதி முக்கியமான வழக்குகளுக்காக நான் நீதிமன்றம் சென்றுள்ளேன். வழக்கறிஞர்கள் அன்றைய முதல் வழக்கை விசாரணைக்கு எடுக்கும்முன் 'mentioning' என்ற ஒரு கூறில் பின்னால் இருக்கும் முக்கிய வழக்குகளை முதலாவதாக விசாரிக்க நீதிபதியிடம் கேட்கலாம்.அது போன்ற முயற்சிகள் இன்றும் இருக்கும்.
கடந்த வருடம் கட்டாய கல்வி உரிமைக்காக திரு.பாடம் நாராயணன் அவர்கள் தொடுத்த வழக்கில் லோக்சத்தாவும் தன்னை இணைத்துக்கொண்டது. ஜூன் மாதம் பள்ளி திறக்கும் முன் எப்படியாவது வழக்கை கொண்டுவர வேண்டும் என்ற முனைப்புடன் 'விடுமுறை அமர்வில்' (நம் நீதிமன்றங்கள் மே மாதம் விடுமுறையில் இருக்கும்) தாக்கல் செய்தோம். வழக்கு எடுத்துக்கொள்ளபடவில்லை. அதன் பிறகு நீதிமன்றம் விடுமுறை முடித்தும் பல நாட்கள் விசாரணை பட்டியலில் 45, 56, 78,...... என்று இருந்தும் ஒவ்வொரு தினமும் வழக்கு வராமல் நீதிமன்றத்திலேயே காத்து கிடந்த நாட்கள் பல உண்டு.'Mentioning' செய்தாலும் 'whats the urgency' என்றும் அரசு தரப்பு பதில் கொடுக்காமலும் இழுத்த நாட்கள் உண்டு.
முக்கிய வழக்குகளுக்கே இப்படியென்றால், ஒரு சாமானியனின் நிலை.....இதற்கு தீர்வு ஏதேனும் உண்டா..?

நிலுவையிலுள்ள வழக்குகள்.

1993 ஆம் ஆண்டின்படி உயர் நீதிமன்றங்களில் நிலுவையிலுந்த வழக்குகள் மொத்தம் 26 ½ லட்சம். 2002 ஆம் ஆண்டு இது 36 லட்சமாக உயர்ந்தது. சில வழக்குகள் 15 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்து வருகிறது. கீழமை நீதிமன்றங்களில் சுமார் 2 கோடி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

மார்ச் 2012 ஆந்திராவில் நடந்த அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றொரு உச்ச நீதிமன்ற நீதிபதி சுரிந்தர் சிங் அடுத்த ஆண்டு மொத்தம் 15 கோடி வழக்குகள் நிலுவையில் இருக்கும் என அதிர்ச்சி தெரிவித்தார்.

பிரதமர் தெரிவிக்கையில் தற்பொழுது 3 கோடி வழக்குகளுக்கு மேல் நிலுவையில் இருப்பதாகவும் அவற்றில் 26%, 5 வருடங்களுக்கு மேல் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாடு புள்ளி விவரங்கள்

சென்னை உயர்நீதிமன்றங்கள் 2010ஆம் ஆண்டு தொடக்கத்தில் நிலுவையில் இருந்த உரிமையில் வழக்குகள் – 11,09,762. 2010ஆம் ஆண்டு மேலும் 11,58,969 வழக்கு தொடரப்பட்டு, 2010 ஆம் ஆண்டு முடிவில் நிலுவையில் இருந்த வழக்குகள் 11,51,623(11,17,108 மொத்தம் தீர்க்கப்பட்டுள்ளன).

இதே போல் 2010ஆம் ஆண்டு முடிவில் நிலுவையில் இருக்கும் குற்ற வழக்குகள் 5,37,915.

தமிழ்நாட்டில் அதிகப்படியான வழக்குகள் தீர்க்கப்பட்டாலும் 2011ஆம் ஆண்டின் படி தமிழ்நாட்டின் மொத்த வழக்குகள் 16.5 லட்சம். இவற்றில் கீழமை நீதிமன்றங்களில் மட்டும் 11.83 லட்சம் வழக்குகளும், சென்னை உயர்நீதிமன்றத்தில் 3.65 லட்சம் வழக்குகளும், மதுரை அமர்வில் 1.07 லட்சமும் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.


இதற்கு என்னதான் தீர்வு ?

அமெரிக்காவின் ``மக்கள் நீதிமன்றம் (People’s court)
நகராட்சி, நகர, மண்டல சட்ட எல்லைகளுக்கு உட்பட்ட, சிறிய தொகைக்கான உரிமையியல் வழக்குகளுக்கும், சிறிய சட்ட மீறல்களுக்கும் அமெரிக்காவில் ``மக்கள் நீதிமன்றம்’’ வெகு சிறப்பாக செயல்படுகிறது. உதாரணத்திற்கு சிறிய அளவிலான சாலை போக்குவரத்து விதி மீறல் இந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். சிக்கல்கள் ஏதுமில்லாத மிக எளிமையான நடைமுறைகள். தங்களுடைய வழக்கை தாங்களே நீதிபதியிடமோ, நீதிமன்ற ஆணையிரிடமோ தாக்கல் செய்து வழக்காடும் உரிமை. இந்திய மதிப்பில் 50,000 முதல் 7½ லட்சம் வரையிலான வழக்குகள் இங்கு விசாரிக்கப்படும். ஆண்டு ஒன்றுக்கு 10 கோடி வழக்குகள் வரை இந்த நீதிமன்றத்தில் தீர்க்கப்படுகின்றன.


இங்கலாந்தின் ``ஜஸ்டிசஸ் ஆஃப் பீஸ்’’ (Justices of the Peace)  
90% அதிகமான உரிமையியல் மற்றும் குற்ற வழக்குகள் இந்த நீதியரசர்களின் மூலம் தீர்க்கப்படுகிறது. இவர்களுக்கென தனி சம்பளம் என்பது கிடையாது. இந்த நீதியரசர்கள் உள்ளூர் நீதிமன்றங்களில் இந்த வழக்குகளை சிறப்பாக நடத்தி முடிக்கிறார்கள். உட்கட்டமைப்பு, பொது போக்குவரத்து ஆகியவை மிகச் சிறப்பாக உள்ள இங்கிலாந்தில், சில உள்ளூர் நீதிமன்றங்கள் மூடப்பட்டபொழுது சாட்சிகள், குடும்பங்கள், காவலர்கள் 10 முதல் 15 மைல் தொலைவு பயணிப்பதற்கே கண்டனக் குரல்கள் எழுந்தன. இங்கலாந்தில் சிறிய தொகைக்கு 1973-ல் வகுக்கப்பட்ட இந்த நடைமுறைகள் மிக எளிமையானவை. சிறிய தொகைக்கான அளவாக இந்திய ரூபாயில் 60,000 என 1990-ல் நிர்ணயிக்கப்பட்ட்து. 1998ஆம் ஆண்டு இந்த தொகை 3 லட்சமாக உயர்த்தப்பட்ட்து. எளிமையான நடைமுறை, வழக்கின் வேகம், செலவுகள் ஏதுமில்லா சூழல் இந்த நீதிமன்றங்களை அனைவரும் ``அணுகும் தூரத்தில் வைத்துள்ளது

இந்தியா. . . . . . . . ?

இந்தியாவில் எளிமையான, சாதாரணமான சட்ட நடைமுறைகள் கொண்ட அதிகப்படியான கீழமை நீதிமன்றங்களை அமைப்பது முதல் முக்கிய தேவை. ஏன், நம் நாட்டிலும் `இரண்டாம் வகுப்பு குற்றவியல் நீதிமன்றங்கள்’’ மிகச் சிறப்பாக நடந்து வந்தவைதான். அதே போன்றதொரு வேகமான, நியாமான, கடினமில்லாத நடைமுறைகள் கொண்ட, வட்டார மொழியை மட்டும் பயன்படுத்தும், அதிக செலவில்லாத, குற்றம் நடந்த உள்ளூரிலேயே (நகராட்சி, மண்டலம்) விசாரித்து தீர்ப்பளிக்கக்கூடிய அமைப்புகள்தான் நம் முதல் முக்கிய தேவை. அப்படிப்பட்ட ஒரு அமைப்பு சட்டமன்ற பாராளுமன்றவாதிகளிடமிருந்தும்(Legislative) , சட்டத்தை நிறைவேற்றுபவர்களிடமிருந்தும்(Executive)  சுதந்திரம் பெற்ற மக்களின் நம்பிக்கைக்குறிய அமைப்பாக செயல்படவேண்டும். ஏற்கனவே இருக்கும் நீதிபரிபாலனத்திற்கு கட்டுப்பட்டவையாகவும் அதன் கட்டமைப்பில் இருக்கும் `அவசியமான ஒன்றாகவும் இருக்க வேண்டும். எதிர்ப்புகள் மேல்முறையீட்டிற்கு வாய்ப்பு வழங்குவதாகவும், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கீழ் (உரிமையியல் – தொகை, குற்றவியல் – அளவு) தொடுக்கப்படும் வழக்குகள் இந்த நீதிமன்றங்களிலேயே விசாரிக்கப்பட வேண்டும். எல்லாவற்றிக்கும் மேலாக வழங்கப்படும் தீர்ப்பு எளிமையாக, சுலபாமாக வேகமாக அமல்படுத்த வேண்டும். சாத்தியமா?

நிச்சயம் சாத்தியம் - ``மாதிரி’’ உள்ளூர் நீதிமன்றம்:
  • கிராமங்களில் 25,000 மக்கள் தொகைக்கும், நகரங்களில் 50,000 மக்கள் தொகைக்கும் ஒரு உள்ளூர் நீதிமன்றம்.
  • மாவட்ட அல்லது குற்றவியல் அமர்வு நீதிபதியால் (பணிபுரியும் இன்னும் 2 நீதிபதிகளிடம் கலந்தாலோசித்து) நியமிக்கப்பட்ட சட்டம் படித்தவர் அல்லது ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது அரசு அதிகாரி நீதிபதியாக நியமனம். இவர்களுக்கு மதிப்பூட்டுத் தொகை மற்றும் பயணச்செலவு எல்லாம் சேர்த்து ஒரு மாதத்திற்கு 15,000-க்குள் செலவு.
  • நிரந்தர ஊழியர்கள் இல்லாது ஏற்கனவே இருக்கும் அரசு அலுவலகங்களை நீதிமன்றமாக உபயோகித்தல் .
  •  நீதிபதியின் பதவிக்காலம் 3 ஆண்டுகள், தேவைபட்டால் மறுசேர்க்கை.
  •  குறைந்தபட்ச வயது – 45
  •  குற்றம் நடந்த இடத்திற்கே சென்று விசாரிக்கும் அதிகாரம்.
  •  வழக்காட வட்டார மொழி மட்டும்
  •  உரிமையியல் வழக்குகள் – 1 லட்சம் மிகாமல், குற்ற வழக்கு – 1 வருட தண்டனை மிகாமல்
  •  எந்த ஒரு வழக்கிற்கும் – 90 நாட்களுக்குள் தீர்ப்பு.
  •  முதல் மேல்முறையீடு 6 மாதத்திற்குள் முடிவு. இரண்டாம் மேல் முறையீடு அனுமதி மறுப்பு.
  •  இளநிலை உரிமையியல் மாவட்ட நீதிபதி கொண்டு தீர்ப்பு அமல்.
மிக குறைந்த காலத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை வெகுவாக உயர்த்த முடியும். இந்தியா முழுக்க சுமார் 30,000 உள்ளூர் நீதிமன்றங்களை அமைக்க முடியும். 2002-ஆம் ஆண்டு மதிபீட்டின்படி மொத நாட்டிற்கும் சுமார் 600 கோடி ரூபாயிலேயே இந்த நீதிமன்றங்களை அமைக்க முடியும். தற்பொழுது 1400 கோடியில் இவற்றை அமைக்கலாம். இந்திய அரசின் ஒரு நாள் செலவு மட்டும் 5500 கோடி. ஒரு வருடத்திற்கு 90 லட்சம் வழக்குகள் வரை இந்த நீதிமன்றத்தால் விசாரித்து தீர்ப்பு வழங்க முடியும். நீதிமன்றங்களின் மீது ஏற்பட்டுவரும் நம்பிக்கை இழப்பை குறைத்து ஏழை மக்களுக்கும் அணுகும் தூரத்திலான நீதியை  நம்மால் வழங்க முடியும்.

பி.கு : இது மிக முக்கியமான சீர்திருத்தம் என்றாலும், இது போன்ற இன்னும் சில சீர்திருத்தங்களும் - நீதிபதிகள் நியமனம், தேர்வுதேசிய நீதி ஆணையம், தவறு செய்யும் நீதிபதிகளுக்கான தண்டனை ஆகியவை அவசியம்.

0 comments:

Post a Comment