Saturday, October 4, 2014

ஜெயலலிதா தண்டனை - பகுப்பாய்வு - பகுதி 1

Share |
நேரடியாக விசயத்திற்கு வருவோம்.

ஜெயலலிதா அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை பல விவாதங்களை துவக்கியுள்ளது. அலசி தொடர்ந்து ஆராயப்பட்டுவரும் சட்ட நுணுக்கங்களை விட்டு, 2 முக்கியமான விசயங்கள் பொது தளத்தில் முன்வைக்கப்படுகின்றன.

1. இந்த முறை ஜெயலலிதா புரிந்து வந்த செம்மையான ஆட்சி.
2. எவரும் மாற்று இல்லாத நேரத்தில் காலம் தாழ்த்தி, தவறான நேரத்தில் வழங்கப்பட்ட, அதிகபட்ச தண்டனை

செம்மையான ஆட்சி :

செம்மையான ஆட்சிக்கு அடிப்படை என்பது எல்லா அல்லது பெரும்பாலான மக்களை சென்றடையும் திட்டம் என்பதாகவே இருக்கும். 

1) அம்மா திட்டங்கள் - அம்மா உணவகம், காய்கறி, மருந்தகம்..தற்பொழுது குடிநீர் வரை.

மேல்சொன்ன எல்லாமே குறைவான விலையில் கிடைக்கிறது என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. அடிப்படை அடிப்படையாக வைத்து பார்த்தால் இந்த திட்டத்தின் பயனாளிகள் எவ்வளவு பேர்?

இதே விலையில் மற்றவர்களால் ஏன் தர முடியவில்லை? - ஏன் முடியாது? நிச்சயம் முடியும்....தடுப்பது எது? அம்மா உணவகம் செயல்படும் இடங்கள் மாநகராட்சிக்கு சொந்தமானது, அரிசி 1 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. லாபம் தேவையற்றது. மிக முக்கியமாக எந்த ஒரு அரசுத் துறைக்கும் எந்த லஞ்சமும் தர வேண்டியதில்லை. காவல்துறையில் இருந்து எவரும் ஓசி இட்லிக்கு வருவதில்லை.

ஒரு தள்ளுவண்டிக்காரர் சென்னையில் விற்கும் இட்லியின் விலை - 4 ரூபாய். அவருக்கு இலவச அரிசி (தினம் இட்லி விற்கும் அளவு) அவ்வளவு கிடைப்பதில்லை. அவருக்கு லாபம் தேவை. மிக முக்கியமாக தினம் வரும் காவலர்களுக்கு அவர் கப்பம் கட்டியே ஆக வேண்டும்.
இன்று தமிழ்நாட்டில் எவராவது ஒரு பைசா லஞ்சம் கொடுக்காமல் ஒரு கடை, ஒரு தொழில் துவங்கமுடியுமா..? லஞ்சமும் வேண்டும், அதே சமயம் நல்ல பெயரும் வேண்டும் என்றால் தமிழ்நாட்டு 'மாதிரி' அருமையான திட்டம். திட்டங்களை வந்து பார்த்து சென்ற வெளிநாட்டினரும், மற்ற மாநிலத்தவரும் இதனை துவக்கும்போது மட்டுமே புரியும் சூட்சமங்கள் இவை.

ஒரு அரசாங்கத்தின் பணி அரசிற்கும், தனியாருக்கும் சிறப்பான பாலமாய் இருப்பதே தவிர, நிரந்தரமற்ற ஓட்டு வங்கிக்கு மேன்மேலும் லஞ்சத்தை ஊக்கிவித்து தொழில்களை அழிப்பது இல்லை. அரசாங்கத்தின் உண்மையான வெற்றி தொழில் செய்வோருக்கான ஒரு சாதகமான சூழலை உருவாக்கி குறைந்த விலையில் அவர்களை விற்க செய்வதே ஆகும். 

2) காவிரி - அரசிதழில் காவிரி தீர்ப்பை வெளியிட வைத்தது ஜெயலலிதாவே சொன்னது போல் அவரின் அரசியல் வாழ்வில் மேற்கொண்ட ஒப்பற்ற சாதனை. மாற்றுக் கருத்தே இல்லை. 

ஆனால் நம் விவசாயிகள் கர்நாடகத்தில் மழை பெய்து தன்ணீர் கிடைக்கும் வருடங்களில் சமயங்களில் துன்பப்படுவது 2 நேரத்தில் - 1. ஆரம்ப ஜூன் மாதம். 2. இறுதி ஜனவரி மாதம். அந்த இறுதியில் நம் தேவைக்கான 30 டி.எம்.சிக்கு மிகப் பெரிய போராட்டங்கள், நீண்ட கடிதங்கள், தற்கொலைகள் நடக்கும். டெல்டா பகுதிகளில் அந்த 30 டி.எம்.சியை தேக்கி வைக்க வாய்ப்பு இருந்தும் அவற்றை நாம் செய்ய முடியாததற்கு யார் காரணம்?

தூர் வாருங்கள் என்று தொடர்ந்து குரல் கேட்டாலும், 'ஏனோ, தானோ' என்ற தூர் வாரும் பணிக்கு, அல்லது மறந்தும் தூர் வாராத நீர் நிலைகளுக்கு யார் காரணம்?

3) முல்லை பெரியாறு - மீண்டும் ஜெயலலிதாவின் சட்டப் போராட்டத்திற்கு, மத்திய அரசிற்கு கொடுத்த தொடர் அழுத்தத்திற்கு கிடைத்த வெற்றி. ஆனால் ஜெயலலிதாவிற்கு மட்டும் அல்லது இந்த வெற்றியின் முன் வரிசையில் அவர் மட்டுமே நிற்கும் தகுதி இருக்கிறதா? ஓட்டுகள் முக்கியம்தான். உண்மையான போராடியவர்களுக்கு கொடுக்கும் மரியாதை அவரின் ஓட்டுகளை மேம்படுத்தத்தானே போகிறது?


4) மீனவர் பிரச்சனை, கச்சத்தீவு மீட்டல் - ஜெயலலிதா தவிர்த்து இந்த பிரச்சனைக்கான தொடர்ந்து குரல் கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் தெரியும் கச்சத்தீவை மீட்பதால் ஒரு துரும்பும் அசையாது என்று. மீனவர்கள் மேல் உண்மையான அக்கறை கொண்டிருந்தால் அவர்களுக்கான மாற்று தொழில் ஏற்படுத்தி கொடுப்பதில் மாநில அரசிற்கு என்ன சிரமம்? அதற்கான ஒரு சிறு முயற்சியாவது உண்டா..?

உண்மையான அக்கறை கொண்ட அரசியல் கட்சி ஆட்சிக்கு வரும்வரை இது தொடர்கதையாக மட்டுமே இருக்கும்.

5) இலங்கை பிரச்சனை - ஜெயலலிதாவின் இரட்டை நிலைப்பாடு நாம் அரியாததா ?

6) மின்சார பற்றாக்குறை - ஜெயலலிதா அடிக்கடி சொல்வதுபோல் நாம் 'மின்சார பற்றாக்குறை' என்பதே இல்லை என்ற வாதம் பொய்யாக இருந்தாலும், நிச்சயம் அதில் முன்னேற்றம் உள்ளது. ஆனால் கடுமையான மின் பற்றாக்குறையில் மூடப்பட்ட சிறு, குறு தொழில்களை நாம் மீட்டெடுத்தால்தானே தொழில்துறை வளர்ச்சியில் நாம் தற்பொழுது இருக்கும் கடைசி இடத்தில் இருந்து முன்னேற முடியும்?

மேலே சொன்னவை பிரதானமாக சொல்லப்படுபவை. மேலே சொன்னவற்றில் கருணாநிதியை விட இவர் பரவாயில்லை என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. உண்மையே. ஆனால் அவர் செய்த மோசமான ஆட்சியினால்தான் தொடர் தோல்விகளை அவர் சந்தித்து வருகிறார். அதைதான ஜெயலலிதாவும் விரும்புகிறாரா? மேலும் இதற்காக மட்டும்தான் நாம் அவரை தேர்வி செய்தோமா?

நம் தேவை என்ன?

1. லஞ்சம் - இது மிக சாதாரணமாக இன்று போய்விட்டது. ஆனால் அரசு அலுவலகங்களில் நாம் விரும்பிதான் லஞ்சம் கொடுக்கிறோமா? இந்தியாவின் 19 மாநிலங்கள் அரசு அலுவலகத்தில் மக்கள் அல்லல்படக்கூடாதென் கொண்டு வந்த 'சேவை பெறும் உரிமை' சட்டம் தமிழகத்தில் மட்டும் கனவாக இருப்பதேன்?


ஆசிரியர் மாறுதலுக்கு, செவிலியர் மாறுதலுக்கு மாவட்ட வாரியாக கொடுக்க வேண்டிய லஞ்சம் எவ்வளவு தெரியுமா?

2. வெளிப்படைத்தன்மை - வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் தகவல் பெறும் உரிமை தமிழகத்தில் மிகக் கேவலமாக செயல்படாமல் இருப்பது தெரிந்தும் ஜெயலலிதா செய்ததென்ன?

3. ஊழல் - கணிம கொள்ளை, மணல் கொள்ளை, போக்குவரத்து ஊழல், ஆதி திராவிடர் மாணவர்கள் ஊழல். தவறு செய்யும் அரசு அதிகாரிகளை, அரசியல்வாதிகளை தண்டிக்கும் லோக் ஆயுக்தா எப்போது?

4. காவல்துறை - பெண்கள் திருட்டு பயமில்லாமல் இன்று வீதியில் உண்மையிலேயே நடக்க முடிகிறதா? எந்த ஒரு பரிந்துரையும் இல்லாமல் இன்று நாம் கொடுக்கும் ஒரு புகாருக்கு CSR அல்லது FIR வாங்க முடியமா?

5. நீதித்துறை - வழக்குகளை விரைந்து முடிக்கும் 'உள்ளூர் நீதிமன்றங்கள்' அமைக்க எவ்வளவோ வலியுறுத்தப்பட்டும் அது குறித்த ஒரு சிந்தனையாவது ஜெயலலிதாவிற்கு உண்டா?

இன்னும் எத்தனை எத்தனையோ சொல்லி செல்லலாம். எந்த ஒரு ஊரிலாவது பேருந்து நிலையத்தில் இருக்கும் பராமரிக்கப்படாத கழிவறைக்கு இலவசமாக அல்லது குறைந்தபட்சம் 3 ரூபாய்க்குள் சென்று வர முடியுமா.?

திறந்த வெளியில் மக்கள் கழிக்காத ஏதாவது ஒரு கிராமத்தை காண்பிக்க முடியுமா..?

இன்னும் எத்தனை எத்தனையோ கேள்விகள் உண்டு - 1. விபத்துகளில் அதிகமாக உயிரிழக்கும் மாநிலமாக தமிழகம்  தொடர்ந்து இருப்பது ஏன்? 2. தற்கொலைகளில் அதிகமாக உயிரிழக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம்  தொடர்ந்து இருப்பது ஏன்? 3. டாஸ்மாக்கினால் ஏற்படும் உயிரழப்புகளுக்கு யார் பொறுப்பு? 4. மாநில மனித உரிமை ஆணையத்திற்கு தலைவர் நியமனம் எப்போது? 5. இந்தியாவிலேயே மிகச் சிறப்பாக பேசப்படும் மாநிலத்தின் கல்வி உலகளவில் சந்தி சிரிப்பது ஏன்? 6. சாதி ஒழிப்பு ? 7. கடைசியாக நாம் சென்று வரும் சுற்றுலாத் தளங்களில் நம் வீட்டு பெண்களுக்கான ஆடைகள் மாற்றும் அறை அல்லது பெண்களுக்கான கழிப்பறை உண்டா?


2.எவரும் மாற்று இல்லாத நேரத்தில் காலம் தாழ்த்தி, தவறான நேரத்தில் வழங்கப்பட்ட, அதிகபட்ச தண்டனை - அடுத்த பகுதியில்.....


7 comments:

Complaint said...

true,

Sensei.Mohan said...

true

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
மொழி said...

Thank you Complaint & Sensei.Mohan.

Anonymous said...

நீங்கள்சொல்வதுபோல் கச்சத்தீவு ஒன்றும்பைசாவுபிரயோஜனப்படாதது இல்லை...கச்சத்​தீவு தாரைவார்க்கப்பட்டதால் தான் நமது கடல் எல்லை சுருங்கிவிட்டது...

nagarajan

மொழி said...

Anonymous, நம் மீனவர்களிடம் பேசுங்கள்..முடிந்தால் ஒரே ஒரு முறை இராமேஸ்வரத்திற்கோ இல்லை கோட்டைப்பட்டினம் அல்லது ஜெகதாப்பட்டிணம் அல்லது கோடியக்கரை சென்று வாருங்கள்....உண்மை புரியும்....

Post a Comment