Thursday, December 14, 2017

அருவி - அன்பு உடலுக்கு ஆயுள் அதிகம் (No spoilers)

Share |
திரைப்படங்கள் நம்மை என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பினால் இங்கு நூற்றுக்கணக்கான பதில்கள் வரும். அந்த நூற்றுக்கணக்கில் ஒரு பதிலை கூட பூர்த்தி செய்யாது போன படங்கள் நிறைய உண்டு. எந்த வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் போய் நம்மை சலனப்படுத்திய படங்கள் உண்டு. திரைப்படம் மீதான நம்பிக்கையிலோ (சர்வதேச அங்கீகாரங்கள்) அல்லது அதன் இயக்குனர் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் சென்று, இதுவரை இயக்கிய எல்லா திரைப்படங்களிலும் அந்த நம்பிக்கையை காப்பாற்றியவர் கார்த்திக் சுப்புராஜ். அதில் ஒரு படி மேல் சென்றுவிட்டதாகவே அருவி திரைப்படத்தை உணர்கிறேன். படம் எப்படி இருந்தது என்ற கேள்விக்கு என்னுடைய மனதில் உதித்த உடனடி கேள்வி - எப்படி இது போன்ற ஒரு கதையை யோசிக்க முடியும்? சேது வந்த சமயம் இது போல் நான் யோசித்ததுண்டு. சேது படத்தின் ஓட்டப்படி முதல் பாதிதான் நமக்கு முதல் என்று நினைக்க, இரண்டாம் பாதியின் அடிப்படையில் முதல் பாதி வடிவமைக்கப்பட்டது என்பது பின்னர் தெரிந்துகொண்டேன்.
அருவியும் அப்படி இருக்கக்கூடும். ஆனால் அந்த அடிப்படை புள்ளியின் முன்னும், பின்னும் மிக நேர்த்தியாக கையாளப்பட்டுள்ளது. அந்த முன் - இசையாலும், காட்சிகளாலும் - (குறிப்பாக அருவி அப்பாவின் அன்பு) கோர்க்கப்பட்டு, ஒரு நொடி கூட அதீதமில்லாது கொண்டு செல்லப்பட்டுள்ளது. அந்த அடிப்படை புள்ளி திரையில் விரிந்து, அதற்கு அடுத்தடுத்த நிகழ்வுகளால் பல அதிர்வுகளை உருவாக்கி இடைவெளி தருணத்தில், உண்மையிலேயே உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்பதுபோல், இடைவெளி என்னும் Interval Blockக்கிற்கு திரையரங்கு கைத்தட்டுகிறது. சமீப கால படங்களில் 'Interval Block'க்கிற்கு என மிகுந்த சிரமங்கள் எடுத்துக்கொண்டு பின்னர் மொக்கையாகிபோன படங்களும், சுவாரஸ்யத்தை கூட்டி, 'Intervalன்னா இப்படியில்ல் இருக்கணும்' என்று சொல்லவைத்த ஜிகர்தண்டா போன்ற படங்களும் உண்டு. ஆனால் எனக்கு தெரிந்தவரை இறுதியில் வரும் கைத்தட்டல்கள் Intervalலில் நான் கண்டதில்லை. ஆனால் அந்த அடிப்படை புள்ளியும் ஒரு குறியீடுதான். அந்த குறியீட்டைகொண்டு பல கேள்விகளை எழுப்ப முற்படும் படம் இந்த அருவி. அந்த புள்ளிதான் 'குளிரும், இங்கேயிருந்தே பார்க்கறேன்' என்று சொல்கிறவர்களைகூட அருவிக்குள் இழுத்து செல்கிறது. எங்கோ துவங்கி ஒரு மலையின் மீதேறி, அருவியாக உருமாறியபின் அடுத்த துளி எங்கு விழும் என்று எப்படி கணிக்க முடியாதோ, அப்படி விரியும் ஒவ்வொரு காட்சியும் கணிக்க முடியாது செல்கிறது. அருவியின் வேகம் வசனங்களாய் கொட்டும்போது, அருவியில் வார்த்தைகளிலேயே, 'இந்த குப்பை வாழ்க்கைக்கு, நாம நாக்க பிடுங்கிட்டு சாகலாம்' என்று தோன்றினாலும், அதே அருவி வாழ்க்கைகாக ஏங்கும் தருணங்கள் அழகிய முரண். உண்மையில் மனிதன் என்னும் சிக்கலான நாம் இதைத்தானே தினம் தினம் செய்கிறோம். சுயநலமாக சில சமயம், சிந்தனையற்று சில சமயம் என வாழ்க்கை ஓட்டத்தில் மீது லாவகமாக பழிபோட்டு எதை வேண்டுமானாலும் செய்ய துணியும் நாம்தான், ஆசுவாசப்படுத்தி சிந்திக்கும் தருணங்களில் வெட்கப்படுகிறோம். இல்லை நம்மையே நாம் திரையில் பார்க்கும்போது தலைகுனிகிறோம். இந்த அருவியில் நம்மை நாம் நிச்சயம் காண்போம். அந்த புரிதலுக்கு பின் வெளிப்படும் அந்த சொல்ல முடியாத உணர்வு எது? அன்புதானே?. அந்த அன்புதான் இந்த அருவியின் அடிநாதம். அந்த அன்பு ஏற்படுத்தும் மனமாற்றம் கூட கண்களின் அருவியாகத்தானே வெளிப்படும். நம் கண்களை விட வேறு எந்த உறுப்பால் அன்பை அதிகம் வெளிப்படுத்தமுடியும்? "இதுவே வாழ்க்கை வலியும் கூட அனுபவம் இன்னும் கேட்டால் வரங்கள் கூட வழங்கி அருளும் அன்பு உடலுக்கு ஆயுள் அதிகம்" ஏற்கனவே பல விமர்சனங்களில் சொல்லப்பட்டிருந்தாலும், மீண்டும் மீண்டும் நாம் சொல்லத்தான் வேண்டும். ஒரு விருது விழாவில் சிறந்த நடிகை என்று சொல்லிவிட்டால், பிற விருதுகள் கொடுக்காமலா போய்விடுவார்கள். பெயரில் 'தீ'கொண்டு தண்ணீர்போல வாழ்ந்துள்ளார் அதிதீ. நடித்திருக்கும் எல்லோருமே இனி இயக்கப்படும் திரைப்படங்களில் அதிக வாய்ப்புகள் பெறக்கூடியவர்கள். இசை - படத்தின் மிகப் பெரிய பலம். ஒரு பாடல் கூட தேவையற்றது என்று சொல்ல முடியாத அளவிற்கு இசையும், வரிகளும் அது இடம்பெற்ற இடங்களும். ஒளிப்பதிவு குறித்த அறிவெல்லாம் நமக்கு இல்லையென்றாலும், இயற்கை, தொலைக்காட்சி நிகழ்ச்சி, காவல் நிலையம் என நம் வாழ்வில் நம் கண்முன்னே கண்டவையெல்லாம சரியாகவே இருந்தது. தயாரிப்பு - நல்ல கதைகளைகொண்ட, வளரத் துடிக்கும் இளைஞர்கள் அணுக வேண்டிய இடம் DreamWarrior Pictures. இயக்கம்
1. இறப்பு குறித்த பயம் நமக்கு எப்பொழுது வரும் என்று நீங்கள் சிந்தித்துண்டா? ஒரு மருத்துவமனையில் நம் பக்கத்து படுக்கையில் இருப்பவர் இறந்துபோனால், அடுத்த நொடி அந்த பயம் நம்மை பற்றிகொள்ளும். ஒன்று இறக்க வேண்டும் இல்லையேல் அந்த மருத்துவமனையைவிட்டு ஓட வேண்டும் என்று தோன்றும். 2. இன்று பரவலாக பேசப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று எப்படி நடக்கிறது எனும் காட்சிகள். காட்சி ஊடகம் குறித்து ஓரளவு தெரிந்தவன் என்ற அடிப்படையில், 'கவண்' போன்று படத்தை பார்த்து படம் எடுக்காமல், உண்மையிலேயே யதார்த்தமாக இன்று என்ன நடக்கிறது என்று சொல்லிய இடம். இது சில உதாரணங்கள். இப்படி ஒவ்வொரு காட்சியிலும் 'detailing' மூலம் அசத்துகிறார் இயக்குனர் அருண் பிரபு. தொடர்ந்து நம்பிக்கையை காப்பாற்றுவார் என்று நம்பலாம். தமிழக பெரும்பான்மை சமூகத்திற்காக : மேலே சொன்னது ஒன்னும் பிரியல, லோக்கலா சொல்லுப்பா என்பவர்களுக்கு - சில படம் கட்டிங் சாப்பிட்டுபோனாதான் புரியும், சில படம் பார்த்தபிறகு கண்டிப்பா கட்டிங் போடணும்னு தோணும். இது ரெண்டாவது ரகம்.

0 comments:

Post a Comment