Friday, December 1, 2017

கூவம் ஆக்கிரமிப்பாளர்கள்

Share |
முன் குறிப்பு - கூவம் மட்டுமல்லாது எந்த ஒரு நீர்நிலையிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்துமில்லை.

2015 வெள்ளத்திற்கு பிறகு, கூவம் நதியின் நடுவில் ஒரு 'Channel' உருவாக்கப்பட்டு, கூவத்தில் (திருவள்ளூர் மாவட்டம்) துவங்கும் தண்ணீர்,, அந்த Channel வழியாக மட்டும் வந்துகொண்டிருந்தது. சரி..இன்னொரு ஊழல் திட்டம் போல இது என்று நினைத்துக்கொண்டேன். வார்டு அதிகாரிகளுக்கும் பெரிதாக தெரிந்திருக்கவில்லை. இணையத்தில் படித்தபோது 1900 கோடிக்கு 'கூவம் சீரமைப்பு' நடந்துகொண்டிருப்பதை தெரிந்துகொண்டேன். மே மாதம் 'சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை' நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. கூவம் சீரமைப்பு குறித்த ஒரு விரிவான திட்டத்தை வழங்கியதோடு, வந்திருந்தவர்களின் குறைகளையும், அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களையும் பொறுமையாக கேட்டுக்கொண்டார்கள்.



சீரமைப்பின் ஒரு பகுதியாக, மொத்தம் 14,450 வீடுகள் இடிக்கப்படும் என்றும், அவர்களுக்கு மாற்று வீடுகள் பெரும்பாக்கம் பகுதியில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் துரதிரஷ்டவசமாக, இடிக்கப்படும் வீடுகளில் இருந்தோ அந்த பகுதியில் இருந்தோ ஒருவர் கூட அந்த நிகழ்ச்சியில் இல்லை. கேள்வி- பதில் பகுதியில் நான் எழுப்பிய ஒரு முக்கிய கேள்வி, 'மாற்று வீடுகள் ஏன் பெரும்பாக்கம் பகுதியில் வழங்கவேண்டும்' என்பதாக இருந்தது. அவர்களின் வாழ்வாதாரம், கல்வி குறித்து கவலை தெரிவித்த நான், இதற்கு சரியான மாற்று ஏற்பாடு செய்யாமல்  பாடிக்குப்பம் பகுதியில் வீடுகள் இடிக்க வந்தால், நானே எதிர்க்க வேண்டியது வரும் என்றும் தெரிவித்தேன்.

அறக்கட்டளை நிர்வாகிகளுடன் பேசுகையில், பெரும்பாக்கம் பகுதி தவிர்த்து, மற்ற 4 இடங்களில் கூட வீடுகள் உண்டென்று தெரிவித்தார்கள். அவை - கூடப்பாக்கம், நாவலூர் - ஒரகடம் (படப்பை), திருவொற்றியூர் மற்றும் செம்மஞ்சேரி. இவை அனைத்துமே குடிசை மாற்று வாரியம் கட்டிய வீடுகள் என்றும், இந்த பகுதியில் இருக்கும் வசதிகள்; தூரம் ஆகியவை கொண்டு இவற்றில் ஒன்றை கூட தேர்வு செய்யலாம் என்று சொன்னார்கள். இது அந்த 14,450 வீடுகளுக்கும் பொருந்தும்.

குடிசையை தாண்டி மற்ற கட்டிடங்கள் பற்றி நான் கேள்வி எழுப்புகையில், 'நீதிமன்ற வழக்கில் இல்லாத எல்லா கட்டிடங்களும் இடிக்கப்படும்' என்றே தெரிவித்தனர்.

பிரச்சனையின் வீரியம் எனக்கு முழுவதும் புரிந்தாலும், மக்களுக்கு அந்த வீரியம் புரியவில்லை. நான் பேச முயற்சித்த சிலர், '40 வருசமா இருக்கோம், ஏற்கனவே 4 தடவ சொன்னாங்க, ஆனா எடுக்கல.. இந்த வாட்டியும் அதுதான் நடக்கும்' என்றார்கள்.

அடுத்த 2 மாதத்தில் (ஜூலை), திருவேற்காட்டில் நடந்த இன்னொரு நிகழ்ச்சிக்கு பாடிக்குப்பம் பகுதியை சேர்ந்த சிலரை அழைத்து சென்றேன். நிகழ்ச்சியை பார்த்த அனைவருக்கும், இந்த முறை வீடுகள் தப்பாது என்பது புரிந்தது. நிகழ்ச்சி முடிந்த அடுத்த நொடி, குடிசை மாற்று வாரியத்திற்கு அருகில் ஏதேனும் வீடுகள் உண்டா என்று தேடத் துவங்கி, அத்திப்பட்டில் வீடுகள் இருப்பது கண்டுபிடித்து அதற்கான மனு கொடுத்தோம். இந்த மனுவின் ஒரு நகலை 'சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளைக்கும்' வழங்கி, அவர்கள் சொன்ன மற்ற 4 இடங்களில் திருவொற்றியூர் நீங்கலாக மற்ற இடங்களை சென்று பார்த்து, அங்கு ஏற்கனவே இருக்கும் மக்களையும் சந்தித்து பேசினோம்.

ஒவ்வொரு இடத்திலும் இருக்கும் நிறை, குறைகளை பட்டியலிடும் முன் - குடிசைகளில் உள்ள மக்களை, சேரியில் வாழும் மக்களை கட்டிட வீடுகளுக்கு மாற்ற வேண்டும் என்பது குடிசை மாற்று வாரியத்தின் பணி. சுனாமிக்கு பிறகு இது கொஞ்சம் வேகம் பிடித்தது. இந்த வீடுகளில் அளவு - 310 சதுர அடி. பல நேரங்களில் இப்படி மாற்றப்படும் மக்களில் சிலர், 'அம்மாவிற்கு நன்றி' என்று பேட்டி கொடுத்த கையோடு, அடுத்த பேருந்து பிடித்து, தங்களின் பழைய குடிசைக்கே வந்த கதைகளும் உண்டு. (தற்பொழுது மக்கள் அகற்றப்பட்ட அடுத்த கணம், வீடு சின்னதாக முதலில் இடிக்கப்பட்டு, 1 வாரத்தில் மொத்தமாக இடிக்கப்படுகிறது). தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை 65,000 ரூபாய்க்கு ஆரம்ப காலத்திலும், பின் 2, 3 லட்சங்களுக்கு விற்றதும் உண்டு. ஆனால் இதற்கான அடிப்படை காரணம் - வாழ்வாதாரம். பாடிக்குப்பத்தில் நான் பழகிய இந்த 2 வருடங்களில் நான் தெரிந்துகொண்ட ஒரு விசயம் - சென்னையில் இருக்கும் ஒவ்வொரு சேரியும் ஒரு கிராமம்தான். அரை கி.மீ இருக்கும் கோயம்பேடு அவர்களுக்கு வேறு ஒரு நகரம். குறிப்பாக பெண்களுக்கு அந்தந்த குப்பமே அவர்களின் சொந்த ஊர். அவர்களுக்கென்று ஒரு கோவில், ஒரு திருவிழா, ஒரு சுடுகாடு, இன்னபிற. ஆகையால் ஒரு குப்பத்தில் இருந்து வேறு ஒரு இடத்திற்கு அவர்கள் மாற்றப்பட்டாலும், அவர்கள் பாத்திரம் துலக்கிய, வீட்டு வேலைகள் செய்த, துணி துவைத்த பழைய எஜமானர்கள்தான் அவர்களுக்கான வாழ்வாதாரம். ஆகவே மிக இயற்கையாகவே அவர்கள் அகற்றப்பட்ட இடத்திற்கே ஓடிவந்தார்கள். மீறி இருந்தவர்கள் என்ன ஆனார்கள் என்பதற்கு 'கண்ணகி நகர்' ஒரு மிகச் சிறந்த உதாரணம்.  கஞ்சா, செயின் அறுப்பது, கொலை என்ன குற்ற எண்ணிக்கைகள் அதிகம் கொண்ட இடமான கண்ணகி நகர் மாறிப்போனது. அரசாங்கத்தை பொறுத்தவரை, 'ஒண்ணுமில்லாத உங்களுக்கு நாங்க வீடு கொடுக்கறோம்..அத வெச்சு வாழு' என்பதோடு கடமை முடிந்தாகிவிட்டது. ஆரம்ப காலங்களில் கல்வி, மருத்துவம் எல்லாமே கவலையான நிலையில்தான்.

மாற்று வீடுகள்

இன்றைய பிரச்சனைக்கு வருவோம். தற்பொழுது இருக்கும் இடங்களில் உள்ள நிறை, குறை -

கூடப்பாக்கம் - திருமழிசைக்கு அருகில் இருக்கும் இந்த குடியிருப்பில் 1024 வீடுகள். துவக்கத்தில் காவல்துறைக்காக கட்டப்பட்டதால் அங்கு மட்டும் டைல்ஸ் ஒட்டப்பட்டு இருந்தது. அளவும் 380 சதுர அடி. (இவ்வளவு சின்ன வீட்டில் எப்படி இருப்பது என்று காவல்துறை நினைத்திருக்கலாம்.)  நாங்கள் அங்கு செல்லும்போதே மற்ற பகுதிகளில் இருந்து வந்தவர்கள் இருந்தார்கள். வாழ்வாதாரம் - ஒன்றுமே கிடையாது. அரசாங்கம் கொடுத்த மாத உதவி தொகை 1000 கொண்டு (இந்த திட்டத்தில் 1 வருடத்திற்கு இது வழங்கப்படும்) சமாளிக்கிறார்கள். சமூக ரீதியான பிரச்சனை - இது புதிய பாரதம் கட்சியின் கட்டப்பஞ்சாயத்து இடங்களுள் ஒன்று.



நாவலூர் - ஓரகடம் - படப்பைக்கு அருகில் இருக்கும் இந்த இடம் மிக அமைதியான இடம். சிமெண்ட் தரை. சுற்றி இருக்கும் தொழிற்சாலைகளால், நாளை வாழ்வாதாரம் காக்கப்படலாம். ஆனால் இந்த தொழிற்சாலைகளுடன் பேசி, அந்த வேலைவாய்ப்பு முகாம்ளை உருவாக்க வேண்டும். குறை - மெயின் ரோடிற்கு வருவதற்கு 2 கி.மீ நடக்க வேண்டும். 1 மணி நேரத்திற்கு 1 முறை மின் பஸ் மட்டும் உண்டு. 5ம் வகுப்பு வரை குடியிருப்பிற்கு அருகிலும், அதற்கு மேல் படிக்க இந்த 2 கி.மீ நடந்தும் வரவேண்டும்.

பெரும்பாக்கம் / செம்மஞ்சேரி - சில ஆண்டுகளுக்கு முன் பார்த்ததற்கும், இப்பொழுது பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடு. போக்குவரத்து வசதி பரவலாக உள்ளது. கண்ணகி நகர் பகுதி பிரச்சனைகள் இங்கில்லை. ஆனால் வீடு சிறியது. 7 மாடிகள் என்றாலும் Lift இருந்தது. வாழ்வாதாரத்தை பொறுத்தவரை House keeping, வீட்டு வேலைகள் இருந்தாலும், அதிகமான supply இருப்பதால் அவர்களுக்கான சம்பளம் மற்ற இடங்களை விட பாதிதான். இன்னொரு பிரச்சனை மாதம் 750ரூ maintenance. (Lift இருக்கும் காரணத்தால்). மேற்சொன்ன 2 இடங்களில் 250 ரூ.

மக்களிடம் இந்த மாற்று இடங்களை பற்றி பேசும்போது ஆரம்பத்தில் அவர்களும் அலட்சியமாகவே இருந்தார்கள்.

பின்னர் ஒரு நாள் மாநகராட்சியில் இருந்து அதிகாரிகள் வந்து கணக்கெடுக்கும்போதுதான் மக்களுக்கு பிரச்சனையின் வீரியம் கொஞ்சம் புரிந்தது. இனிமேலும் காத்திருக்க கூடாது என்று மக்களே களத்தில் இறங்கினார்கள். எல்லோரும் சேர்ந்து வண்டி பிடித்து மேலே சொன்ன 4 இடங்களுக்கு போய் வந்தார்கள். மேலே சொன்ன நிறை, குறைகள் யாவும் அவர்களின் அனுபவம்.

சிலருக்கு கூடப்பாக்கம் பிடித்தது, சிலர் ஒரகடம் என்றார்கள். ஆனால் தூரம் கருதி பெரும்பாக்கமோ, செம்மஞ்சேரியோ வேண்டாம் என்று பாடிக்குப்பம் மக்கள் உறுதியாக இருந்தார்கள். மறுபடியும் இந்த விசயம் பிரதானம் இழந்து, மறுபடியும் அத்திப்பட்டுக்காக பல்வேறு மனு, போராட்டம் ஆகியவை நடந்துகொண்டு வருவது குறித்து உங்களுக்கு தெரிந்திருக்கக்கூடும்.

இப்பொழுது பொதுவான விளைவுகளுக்கு வருவோம்.

விளைவுகள்

கூவம் ஓரம் இருக்கும் அனைத்து பகுதிகளிலும் வீடுகள் எடுக்கப்படுவதால் தற்பொழுது அல்லது எதிர்காலத்தில் நடக்கும் விளைவுகள் குறித்து இங்கு ஒரு சின்ன விவாதம் கூட எழவில்லை. இடிக்கப்படும் அன்று மட்டும் மக்களின் ஆதங்கம் செய்தியாக்கப்பட்டு அதோடுவிடப்படுகிறது.

வாழ்வாதாரம்

கடந்த 5 மாதங்களாக மக்களை அப்புறப்படுப்படுத்தப்படும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மிக அடிப்படையானது இவர்களின் வாழ்வாதார பிரச்சனை. நான் முன்னரே சொன்னதுபோல், பெரும்பாக்கம் பகுதியில் மட்டும் 20000 வீடுகளில் மக்கள். இந்த குடும்பத்தில் உள்ள பெண்களில் பெரும்பாலனவர்கள் House keeping, வீட்டு வேலைகள் செய்தவர்கள். குடிக்கும் தன் கணவர்களிடமிருந்து குடும்பத்தை காப்பாற்றுபவர்கள். இவர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்குமா?

நாவலூர் - ஒரகடத்தில் இருக்கும் 2048 குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் வேலைவாய்ப்பு உண்டாக்கப்படுமா? அங்கு வீட்டு வேலைகள் செய்ய 5 கி.மீக்கு வீடுகளே கிடையாது.

கூடப்பாக்கத்தில் இருக்கும் மக்களுக்கு என்ன வாழ்வாதாரம்?



கல்வி

நேற்று இரவு வரை உங்கள் மகனோ, மகளோ சென்ற பள்ளி வேறு. நாளை வேறு. பழைய நண்பர்கள் கிடையாது..பழைய ஆசிரியர்கள் கிடையாது. இன்னும் 3 மாதத்தில் முழுப் பரீட்சை. மன ரீதியான அதிர்வுகளை இது ஏற்படுத்தாதா? இந்த குழந்தைகள் மட்டுமின்றி எல்லா மக்களுக்கான ஒரு Counselling கொடுக்கப்பட வேண்டுமா இல்லையா?

போக்குவரத்து

பெரும்பாக்கத்தில் மிக சிறந்த போக்குவரத்து வசதிகள் இருந்தாலும், கிழக்கு கடற்கரை சாலை நெரிசல் குறித்து தனியாக சொல்ல வேண்டுமா? இவர்களால் பழைய இடங்களுக்கு எப்படி போகமுடியும்?  கூடப்பாக்கத்திற்கும், ஒரகடத்திற்கும் அந்த குடியிருப்பில் இருந்து முக்கிய சாலைக்கு பேருந்து வசதிகள் ஏற்படுத்தி தரப்படுமா?

மருத்துவம்

இத்தனை வீடுகள் கட்டும் ஒரு அரசாங்கத்தால், அந்த குடியிருப்பிலேயே அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தாதது, மக்கள் மீதான அக்கறையை வெளிச்சம்போட்டு காட்டுகிறது.

தேர்தல்

இன்றைய தேதியில் தமிழ்நாடின் மிகப் பெரிய தொகுதி சோழிங்கநல்லூர். ஏற்கனவே 624405 வாக்காளர்கள். இது இன்னும் பெரிதாக போகிறது. இவர்களுக்கான் தேவைகளும் அதிகம். இவர்கள் கண்டுகொள்ளப்படுவார்களா?

அதனை விட,  அப்புறப்படுத்தப்படும் மக்கள்தான் எல்லா தேர்தல்களிலும், உள்ளாட்சி தேர்தலில் கூட வாக்களித்தவர்கள். அரசியல் ரீதியாக ஒரு தாக்கத்தை இது ஏற்படுத்தாதா? முக்கிய அரசியல் கட்சிகள் இது குறித்து பெரிதாக வாயே திறக்காதது புரிந்துகொள்ள கூடியதாக இருந்தாலும், தாங்கள் செய்த தவறுக்கு ஏதாவது ஒரு வகையில் பிராயசித்தம் செய்திருக்க வேண்டுமா இல்லையா?

'ஆக்கிரமிப்பாளார்களுக்கு அதற்காக அங்கேயே பட்டா கேட்கிறீர்களா?' என்ற உங்கள் கேள்வி எனக்கு கேட்கிறது. நிச்சயமாக இல்லை. ஒவ்வொரு பகுதியிலும் அரசாங்கத்திற்கு சொந்தமான இடமோ அல்லது தனியாரிடமிருந்து வாங்கக்கூடிய வசதியோ உண்டு. அப்படியெனில் கொள்கை ரீதியாகவே இது குறித்த ஒரு விவாதத்தை முன்னெடுத்திருக்க வேண்டாமா?



சேரியில் பிறந்த ஒரே காரணத்திற்காக சில ஆயிரக்கணக்கானவர்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டுமா? அரசாங்கம் யோசனைகளின்றி ஒரு இடத்தில், ஏழைகளுக்காகவே வெறும் 310 சதுர அடியில், 20000 வீடுகள் கட்டிவிட்ட காரணத்திற்காக அவர்களை அங்கு அடைக்க வேண்டுமா? அவர்கள் இருக்கும் பகுதிக்கு குறைந்த்பட்சம் ஒரு 10 கி.மீக்குள் அவர்களுக்கான மாற்று வீடுகள் அரசாங்கத்தால் கட்டியிருக்க முடியாதா? அப்படி கட்டப்பட்டிருந்தால் இந்த பிரச்சனைகளுக்கான தேவை ஏற்படுமா?

இன்று காலை குடிசை மாற்று வாரியத்தில் ஒரு அதிகாரியை சந்தித்தேன். 'இவ்வளவு நாள் ஆக்கிரமிச்சிட்டு இருந்தீங்க..இப்போ அரசாங்கமா பார்த்து கொடுக்கறது வாங்கிட்டு போகவேண்டியதுதானே. அதுவும் பெரும்பாக்கத்தில எல்லாம் வீடு கிடைக்குதுன்னு சும்மாவா? எத்தனை லட்சம் பெறும்?' என்றார். அவரை பொறுத்தவரை அரசாங்கம் போடும் பிச்சையை பொறுக்கி எடுத்துக்கொள்ளுங்கள் என்கிறார். இந்த மக்கள்தான் முறைசாரா தொழில்கள் மூலம் நம்முடைய உள்நாட்டு உற்பத்திக்கு உதவுகிறார்கள் என்பது குறித்தோ அல்லது அவருக்கு மற்ற எந்த பிரச்சனை குறித்தும் அக்கறை இல்லை. அவரை பொறுத்தவரை குடிசை மாற்று வாரியம் தன்னுடைய தாரக மந்திரமான 'ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டுவிட்டது'. கூவம் காய்ந்தாலும் அந்த ஏழையின் கண்ணீர் கூவத்தில் நிரந்தரமாக இருக்கப்போவது அவருக்கு தெரியாது.

0 comments:

Post a Comment