Wednesday, April 1, 2009

கதை - 2

Share |
எங்களின் அலுவலகம் வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்படுவதாய் அறிவிப்பு வந்தது. இப்பொழுது இருக்கும் அலுவலகத்தில் இருந்து 13 மைல் தூரம்.

நான் மைல் கணக்கு சொல்லும்பொழுது உங்களுக்கு ஏதேனும் தோன்றினால் நீங்கள் இந்திய வாசகராய் இருத்தல் வேண்டும். அமெரிக்க வாசகர்களுக்கு ஒன்றும் தோன்றாது.

இது குளிர் காலம் வேறு. அமெரிக்க குளிரை நீங்கள் நேரில் பார்க்க வேண்டும். அது வரை உங்களால் நிட்சயம் நம்ப முடியாது.முதல் முறை நான் பனி பார்த்தபோது மிக அதிசயமாய் இருந்தது. இது சாத்தியமா என கூட தோன்றியது.
இந்திய நண்பன் ஒருவன் டார்ஜீலிங்-ல இல்லாத பனியா..? என்றான்.
என் அறை நண்பன் , "டேய் ...இத என்னத்த வேடிக்க பாக்குற ..." என்றான். இது உண்மை எனும்போது "குளிர் கொடுமை" உண்மையாகத்தான் இருக்க வேண்டும்.

அமெரிக்கா வந்த உடனே எல்லோரும் செய்யும் முதல் வேலை ஒரு மகிழுந்து (தேவநேய பாவாணர் தமிழ்) வாங்குவதுதான்.

"நம்ம ஊர் மாதிரி இல்ல, இங்க வண்டி ஓட்றது ரொம்ப ஈசிடா...."

"ஊர்ல டூவீலர் ஓட்டுவியா...?"

"இங்க கியர் கிடையாது தெரியும்ல..."

"வண்டி இல்லாம ஒன்னும் பண்ண முடியாது..."

"இங்க அரசு பேருந்தெல்லாம் கிடையாது. இதெல்லாம் அமெரிக்கா அரசியல்.....எல்லோரும் கார் வாங்கனும்னு செஞ்ச சூழ்ச்சி. கார் வித்தாதான் பெட்ரோல் விக்க முடியும். பல பெட்ரோல் கிணத்துக்கு சொந்தகாரங்க இந்த ஊர் அரசியல்வாதிங்க..." இதென்ன பெட்டி செய்தியா..?!

என்னை மகிழுந்து ஓட்ட வைக்க நண்பர்கள் எடுத்த முயற்சி எல்லாமே தோற்றுபோனது, அமெரிக்க அரசியல் உட்பட.

நல்ல விதமாக என்னுடைய வீடு என் அலுவலகத்தின் பக்கத்தில் இருந்ததால் அவர்களை பார்த்து நான் ஏளனம் செய்ததுதான் அதிகம்.

"டேய்.....எந்த பணக்கரானவது மகிழுந்து ஓட்டுவானா...?"
ஒன்றும் புரியாத நண்பன், "டிரைவர் வெச்சிருப்பாங்க அவங்கெல்லாம்.."

"பாரு..இப்பவே ஒரு பயபுள்ள தயாரா இருக்கான்.."
"பேசு மகனே...பேசு...ஒரு நாள் நீ கார் ஓட்ட வேண்டிய கட்டாயம் வரும்...அன்னைக்கு யார் மேலயாவது மோதி 'மாப்ள என்ன காப்பதுங்கடான்னு பொலம்புவ...அன்னைக்கு தெரியும்.." புரிந்தவன் சாபமிட்டான்.

"இவனுக்கு யாராவது பழரசம் கொடுங்கப்பா...கஷ்டப்பட்டு வசனம் பேசிருக்கான்"


நண்பர்கள் விட்ட சாபம் இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை. நான் மட்டுமே தூரமான அலுவலகத்திற்கு மாற்றபட்டேன். 13 மைல்.

ஒரு வழியாக நானும் ஓட்ட கற்றுக்கொண்டு (மூன்று முறை கூடுதல் சிறப்பு பயிற்சு பெற்று) ஒரு மகிழுந்தும் வாங்கினேன். என் முன்னை போல் இருவர் வேறு என்னுடன் சேர்ந்துகொண்டார்கள். அவர்கள் இப்பொழுதுதான் கற்றுகொள்கிரார்களாம்.

"என்னையும் இந்த உலகம் நம்புதே..."

நீண்ட தூரம் செல்ல வேண்டி இருப்பதால் நான் சீக்கிரமே கிளம்பினேன். இருவரில் ஒருவரும் சீக்கிரம் கிளம்பி இருந்தார். இன்னொருவரை தொலைபேசியில் அழைத்தால், "பாஸ், சுத்தமா மறந்துட்டேன்....ஒரு 2 மினிட்ஸ் கொடுங்க..."

2 நிமிடம் 20 நிமிடம் ஆனது.
"மொத தடவ வண்டி ஓட்டறேன். கொஞ்சம் மெல்ல ஓட்டலாம்-நு நெனச்சேன். இப்பவே நேரமாயிடுச்சு..."
வண்டி கிளம்பியது. "கோச்சுகாதீங்க பாஸ். உங்களுக்காக நல்ல பாட்டு போடறேன் என் i-pod வழியா..."

நான் ஒன்றும் சொல்லவில்லை. வண்டியின் பாட்டு கருவியை ஏதோ செய்து கொண்டிருந்தார்.


நான் சென்ற பாதை தோறும் சிகப்பு விளக்கு குறிப்புகள் வேறு. வேகமாக போகவும் கொஞ்சம் பயம் இருந்தது. அவர் தொடர்ந்து ஏதோ செய்து கொண்டிருந்தார். "யோவ் என்னையா பண்ற..?"
திடீர் என பாட்டு அதிர.... நான் என் முன் சென்ற வண்டியை மோதிவிட்டேன். முன்னே சென்ற வண்டி சரியாக குறிப்பின் கீழ் போய் நின்றது.
"பாஸ்....என்ன பண்ணிடீங்க..."

என்ன செய்தேன் என புரியவில்லை. வண்டியின் நிறுத்த கருவி இயங்கவில்லை எனதான் முதலில் நினைத்தேன்.

அதற்குள் முன் இருந்தவர் இறங்கி வந்தார். தன் வண்டிக்கான சேதம் பார்த்தார். அவரின் கோபம் அவர் கண்களில் தெரிந்தது.

நான் இறங்கி முதலில் மன்னிப்பு கேட்டேன். அவர் என்னை மதிப்பதாய் தெரியவில்லை.

நான் என் நண்பனை கூப்பிட்டேன். "யாருக்கும் எதாவது அடிபட்டுச்சா..?""இல்லடா அவங்க வண்டிக்கும் என் வண்டிக்கும்தான் சேதம்.."

நண்பன் குபீர் என சிரித்தான். "மாப்ள எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா...? நான் விட்ட சாபம் பார்த்தியா..?"
"டேய்...அத பேச இதுவா நேரம்..."
"இப்பதாண்டா பேசணும்..உன்ன மாதிரி ஆளுங்கல்ட.."
"டேய்...என்ன பண்ணனும்னு சொல்டா..."

அதற்குள் இன்னொருவன் கைபேசியை பிடுங்கி,"அவனே சீரியஸா கேட்டுட்டு இருக்கான்..அவன்ட்ட போய்...""டேய் ..911 கால் பண்ணு. மாமா வந்து உன்ன அரஸ்ட் பண்ணுவார். வண்டிய சீஸ் பண்ணுவார்" என சொல்லி சிரிக்க ஆரம்பித்தான்.
"டேய்..என்னடா சொல்ற..?""ஆமாண்டா லைசென்ஸ் இப்பதான் வாங்கி இருக்க....கண்டிப்பா attempt murder கேஸ்தான்."

ஒரு வழியாக என்ன செய்ய வேண்டும் என புரிந்து முடிப்பதற்குள் அவரே காவல் துறையை அழைத்திருந்தார். நண்பர்கள் சொல்லிய மற்றவை விளையாட்டாக இருந்தால் கூட செய்த தவறுக்கு கண்டிப்பாக அபராத தொகை கட்டவேண்டிவரும். வந்த காவலர் நமக்கு வழங்கும் புள்ளியை வைத்து அது முடிவாகுமாம். மேலும் நான் இடித்த அந்த வண்டிக்கும் நான்தான் செலவு செய்ய வேண்டும்.

காவலர் வந்தார். பக்கத்தில் இருந்தவர் கீழே இறங்க போனார். "யோவ். எங்க போற..?"

"இல்ல போலீஸ் வர்றார். மரியாத இல்லாம உட்கார்ந்துகிட்டு..."
"சீ...உட்கார்ந்து இருக்கை வார் போடு.."

"வந்துட்டார்யா map போட" இது இன்னொருவர்.
திரும்பி ஒரு முறை முறைத்தேன்.அபராத தொகையை இவர்கள் தலையிலும் கட்ட வேண்டும் என முடிவு செய்தேன்.அது கூட பரவா இல்லை. புதிதாக வண்டி ஓட்டுபவன் என்பதால் வேறு ஏதேனும் பிரச்சனை வருமா..? உரிமம் ஏதேனும் ரத்தானால் என்ன செய்வது..? கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.

வந்த காவலர் முதலில் யாருக்கேனும் காயம் உள்ளதா என வினவினார். பின்பு அந்த வண்டிகாரரையும் வினவிமுடித்து...வண்டியை கொஞ்சம் ஓரமாக நிறுத்த சொன்னார்.

விசாரணை தொடங்கியது.
"முன்னே சென்ற வண்டிக்கும் என் வண்டிக்குமான தூரம் திடீர் என குறைந்தது. நான் மோதிவிட்டேன்."
"நீங்கள் மோதும்போது சிக்னல் என்ன நிறத்தில் இருந்தது..?"

"சிகப்பு..இல்லை பச்சை இல்லை...மஞ்சள்.." என்ன விளக்கு என்பது எனக்கு உண்மையில் நினைவில்லை.
"மஞ்சள்?"
"ஆம்"

இதே போல் அங்கும் விசாரணை நடந்தது. மீண்டும் காவலர் வந்தார். தன் அட்டையை வழங்கி இன்னும் இரண்டொரு நாளில் வந்து அறிக்கை பெற்று கொள்ள சொன்னார். மேலும் குற்றம் செய்தது அவர் என்பதால் எங்களை மன்னிப்பதாகவும் சொன்னார்.

என்னது..?!

அவரிடம் விசாரிக்கும்போது, அந்த வண்டி ஓட்டுனர் விளக்கின் நிறம் பட்சையாய் இருந்தது என கூறி உள்ளார். அதற்கு காவலர் பட்சையாய் இருக்கும்பொழுது வண்டியை நிறுத்தியது உங்கள் குற்றம். நீங்கள் நிறுத்தியதால் பின்னால் வந்த வண்டிக்கு ஆபத்து விளைவித்து இருக்கிறீர்கள் என அவருக்கு அபராத தொகை கட்ட சொல்லிவிட்டாராம்.

எனக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. கைபேசியை எடுத்தேன்.
"மாப்ள....உரிமம் ரத்தாயிடுச்சு ..."
"லைசென்ஸ-அயே கான்செல் பண்ணிட்டாங்களா..? இது கொஞ்சம் ஜாச்திதாண்டா..."

"இல்லடா தப்பு நாந்தான் பண்ணேன்-நு காவலர் கண்டுபிடிச்சிட்டார். ரொம்ப கஷ்டமா இருக்குடா. உங்கள எல்லாம் எவ்ளோ கிண்டல் பண்ணி இருப்பேன். என்ன மன்னிசிருங்கடா."
"டேய்....சீ சீ... நீயே லைசென்ஸ் இல்லாம....இதெல்லாம் ஏன் இப்போ பேசுற.."

"மாப்ள...ஒரு .சின்ன உதவி ...நான் வண்டி ஓட்டகூடாதிள்ள . கொஞ்சம் இங்க வரீங்களா..?"

காவலர் வந்தார். 'What are you waiting for" (எதற்கு காத்திருக்கிறாய்...?)
"I am waiting for my drivers, sir" (நான் என் ஓட்டுனர்களுக்காக காத்திருக்கிறேன்)
"Drivers...!!You must be a rich guy" (ஓட்டுனர்கள்..!! நீ ஒரு பணக்காரனாய் இருத்தல் வேண்டும்).

3 comments:

ச. சிவராம் குமார் said...

நன்று நண்பா..
அமெரிக்க வாழ் இந்தியர்கள் கதையில் பாவாணர் தமிழ் பாராட்டுக்குரியது! (ஒரு டப்பிங் படம் பாத்த effect தருது..)
உன் எழுத்துப் பணி தொடரட்டும்..

யாத்ரீகன் said...

thodarndhu yeludhu machi, suvarasiyamaa iruku un yezhuthu :-)

Subha said...

ellam sari, nee eppa car otta kathukka pora?
(Athukuthaan climax-la pathil solli irukannu ninaikiren!)

Post a Comment