"என்ன தேதி இன்னைக்கு..?"
கேள்வி கேட்டு சுவரின் மேல் மாட்டப்பட்டிருந்த நாட்காட்டி பார்த்தார். அது புது வருட தேதியிலேயே இருந்தது.
"ரொம்ப மேல இருக்கா அதான்...." என தலையை சொரிந்தார்.
அவர் சம்மனமிட்டு உட்கார்ந்து எழுதுவதற்கு ஏதுவாக அந்த பலகை அமைந்திருந்தது. அந்த பலகையின் முன் புறம் 'கோயில் கணக்கர்' என எழுதியிருந்தது. அந்த நாட்காட்டியின் பக்கத்திலேயே இருந்த ஒரு பச்சை நிற பலகை அர்ச்சனையில் ஆரம்பித்து மிருக காணிக்கை வரைக்கான அனுமதி சீட்டுக்கு எவ்வளவென பறைசாற்றியது.
பக்கத்தில் நின்றிருந்த எங்கள் அலுவலக நண்பர் குமார், "இன்னைக்கு தேதி...." என்று தொடங்கும்போது என் கண்கள் பார்த்த அவன், "சுபா, ஸ்ரீய கூட்டிட்டு முன்னாடி போ..அய்யர் எல்லா ஏற்பாட்டயும் செய்திட்டாரான்னு கொஞ்சம் பாரு. நாங்க ரஷீது வாங்கிட்டு வறோம்" என்றான்.
நான் அவன் கண்கள் பார்த்துக்கொண்டே அங்கிருந்து கிளம்பினேன். கொஞ்சமும் கலங்கமில்லாத கண்கள். இப்பொழுதும் பெரிதாய் சலனப்படவில்லை.
தூரத்தில் குமார் "தேதி 8/8/2008 சாமி" என்பது கேட்டது.
8/8/2007
அன்று பயங்கர மழை. ஆகஸ்ட் மாதம் இவ்வளவு மழை யாரும் எதிர்பார்க்காத ஒன்று. நான் வேலை பார்த்து வந்தது ஆவடி பக்கம் இருக்கும் ஒரு கால் செண்டரில். என்னுடய ஷிஃப்ட் நேரம் மாலை 4.30 முதல் இரவு 12.30 வரை. என்னுடைய விடுதி இருப்பது நுங்கம்பாக்கத்தில். விடுதியில் வந்து ஏற்றிக்கொள்ளவும், இறக்கிவிடவும் எங்கள் நிறுவனத்தில் ஒரு மாருதி வேன் ஏற்பாடு செய்திருந்தார்கள். நான் வேலைக்கு சேர்ந்து மூன்று ஆண்டுகள் ஆனதால் வேலை நேரம் நிறையவே பழகிவிட்டது. மாதம் ஒரு முறை அம்மாவையும், தங்கைகளையும் பார்க்க போகும்பொழுது கூட இந்த நேரம் வீட்டில் தூங்கி விடுவேன்.
என்னுடய விடுதிக்கு பக்கத்தில்தான் எங்கள் நிறுவனம் ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்தது. அப்பொழுதும் கார் சேவைகள் இருந்தாலும் நடந்தே விடுதிக்கு சென்று விடுவேன்.இரவு நேர அமைதி எனக்கு மிகப்பிடித்த ஒன்று.
சென்ற வருடம் இங்கு மாற்றியப்பின்தான் வேறு வழியில்லாமல் காரில் வருகிறேன். தூரத்தின் காரணமாக நாந்தான் முதல் ஆளாய் ஏற்றப்படுவேன், நாந்தான் கடைசியாக இறக்கிவிடப்படுவேன். என்னுடன் வரும் இருவர் இறங்கிய பிறகு, ஒரு அரை மணி நேரம் பயணம் செய்தால்தான் என்னுடய விடுதி வரும்.
பயண நேரத்தை உபயோகமாக செலவழிக்க சில நாவல்கள் வாசிக்க தொடங்கினேன். கி.ராவும், ஜெயகாந்தனும் என்னுடைய உலகத்திற்கு முழுமையாக வந்தனர். என்னுடய பயண நேரம் எனக்கு மிகச்சிறப்பாக அமைந்தது. கூட வரும் இருவரும் நிறைய பேசக் கூடியவர்கள் இல்லை என்றாலும், ஏதோ கொஞ்சம் பேசுவார்கள். அது இப்பொழுது அவர்களுக்குள்ளே நின்றுபோனது. வண்டி ஓட்டுனரை சரியாக கூட பார்த்ததில்லை. "போலாமா மேடம்", "குட் நைட் மேடம்" என்பதை தவிர வேறு எதும் பேசிக்கேட்டதில்லை.
அன்று மழை காரணமாக வண்டி கொஞ்சம் நேரம் கழித்தே வந்தது. வந்தபோதே ஓட்டுனர் நனைந்து இருந்தார். "போலாமா மேடம்?". வண்டியை மிக மெதுவாய்தான் ஓட்டி சென்றார். வண்டி திடீர் என நின்றது. "சாரி மேடம்...மழைனால படுத்துது..." வண்டியை விட்டு கீழே இறங்கினார். மாருதி வேனின் பின் பக்கம் வந்து ஏதோ தேடினார்.
அந்த இருவரில் ஒருத்தி, "மழைன்னு தெரியிதில்ல, வேற வண்டி எடுத்துட்டு வந்திருக்கலாம்ல..வந்து சேறானுங்க பாரு" என்றாள்.
'பாவம் அவரும் என்ன பன்னுவாரு..மழை இப்படி இருக்கும்னு அவருக்கு தெரியுமா' என நான் நினைத்துக்கொண்டேன். அவள் மீண்டும் ஏதும் பேசவில்லை.
ஒரு பத்து நிமிடத்தில் வண்டி கிளம்பியது. அவர்கள் இருவரும் இறங்கிய பிறகு வண்டி கிளம்பியது. மீண்டும் நின்றது. அவர்கள் அதை பார்த்தும் அவர்களின் விடுதிக்குள் சென்றனர்.
அவர் மீண்டும் இறங்கினார். மீண்டும் பின் வந்தார். ஏதோ தேடினார்.
"மேடம் உங்க சீட் கீழே ஒரு ஸ்க்ரெவ் ட்ரிவெர் இருக்கான்னு கொஞ்சம் பாருங்களேன். நான் கீழே குனிந்தேன். என் முதுகுக்கு பின் ஒரு பாரம் அழுத்தியது.
"ஏய்...என்ன செய்றீங்க..?"
"விட்றா..."
"அம்மா......கடவுளே...."
என் ஆடைகள் கிழிக்கப்பட்டன. அவனின் கைகள் எனக்கு அருவருப்பு உண்டு செய்தது.
அதன் பின் எப்படி நான் விடுதிக்கு வந்தேன் என்பதும், எப்படி நான் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தேன் என்பது இன்று வரை தெரியவில்லை.ஒவ்வொரு இரவும் நரகமாய் இருந்தது.
ஆனால் நானாகத்தான் காவல் துறைக்கு சென்றேன். அவனைப் பற்றி புகார் செய்தேன். அவன் சிறையில் அடைக்கப்பட்டான். காவல் துறை விசயத்தை நல்ல விதத்தில் கையாண்டது. இருந்தும் நான் பாதிக்கப்பட்டது ஊர் முழுக்க தெரிந்தது. என் சொந்த ஊருக்கு செல்வதிலேயே நிறைய சிக்கல் இருந்தது.
எங்களுக்கு தெரியாத சொந்தம் எல்லாம் வந்து நலம் விசாரித்து சென்றது.
"அவள சென்னயிலேயே தங்க சொல்லு... இங்க நீ தனியா இருக்க....ரெண்டு பொண்ணுங்கள வச்சிட்டு..."
நான் சென்னையிலேயே தங்கினேன். ஒரு மூன்று மாதம் கழித்து என் பழைய அலுவலகம் சென்றேன். நிறைய அனுதாபங்கள்.....மேலாளர் அழைத்தார்.
நலம் விசாரித்து முடித்து, "ஸ்ரீநிதி, சொல்றேன்னு தப்பா நெனசுக்காத, உனக்கு 3 மாசம் சம்பளம் தர்றோம். நீ வேலய விட்டு நின்னுக்கிரியா....உன்ன பாக்குற ஒவ்வொருத்தொரும் இந்த சூழ்நிலை அவ்வளவு பாதுகாப்பில்லாத மாதிரியே உணருவாங்க...அது எங்களுக்கு அவ்வளவு நல்லதில்லமா..."
வெளியே வந்தேன். என்னுடன் காரில் வரும் இருவரும் என்னுடய பழைய இருக்கையில் நின்றிருந்தனர்.
"ஒரு நிமிடம் எங்க கூட வர முடியும்மா?"
பெண்கள் கழிப்பறை கூட்டி சென்று இருவரும் என் காலில் விழுந்தனர். "அன்னைக்கு நாங்க மட்டும் கதவ சாத்தாம போயிருந்தா..எங்கள மன்னிச்சிடு ஸ்ரீ...."
அவர்களிடம் விடைபெற்றேன். நான் நிறுவனத்தை விட்டு வெளியே செல்வதை கேட்டு அவர்கள் முன்னர் வேலை செய்த பெங்களூர் கால் சென்டர் தொடர்புகள் தந்தனர்.
பெங்களூர்
இங்கு பகலில்தான் வேலை.என்னை பற்றி இங்கு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. யாருடனும் எனக்கு பேசவும் பிடிக்கவில்லை. மதிய வேலைகளில் கூட நாவல் படித்துக்கொண்டே சாப்பிடுவேன்.
என்னுடைய அனுபவத்திற்கு எனக்கு டீம் லீட் வேலை கிடைத்தது. என்னுடய ப்ரொஜெக்ட் லீட்தான் முரளி. அலுவல் காரணமாக நான் பேச வேண்டிய குமார், ப்ரேம், சுபா ஆகிய நால்வரில் இவனிடம்தான் நான் அதிகம் பேச வேண்டும். எல்லோரிடத்திலும் சகஜமாய் பழகுவான். தனக்கு மேலே வேலை செய்பவர்கள் கீழே இருப்பவர்கள் என்ற எந்த பாரபட்சமும் இல்லாமல் எல்லோரிடத்திலும் ஒரே மாதிரியாய் பழகுவான். எந்த இக்கட்டான சூல்நிலையிலும் அவனால் மட்டும் சிரிக்க முடியும்.வேலை தவிர்த்து அவன் கேட்கும் எந்த கேள்விக்கும் நான் பதில் சொன்னதில்லை.
எங்கள் அலுவலகத்தில் யாருக்கு பிறந்தநாள் வந்தாலும் அதை வெகு சிறப்பாக கொண்டாடுவர். என்னுடய பிறந்தனாளும் வந்தது. வேலை முடித்து எனக்காக என் குழுவில் இருந்த மூவரும், முரளியும் ஒரு கேக் வாங்கி காத்திருக்க, நான் விடுதிக்கு கிளம்பிவிட்டேன்.
அடுத்த தினம் எல்லோரும் என்னை திட்ட முரளி வந்து ஒரு பரிசுப்பொருள் வைத்துவிட்டு சென்றான். ஜெயகாந்தனின், “சில நேரங்களில் சில மனிதர்கள்”
உள்ளே “இனிய பிறந்தனாள் வாழ்த்து” என எழுதி இருந்தது.
அவனுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். “மன்னிக்கவும். நன்றி”
உடனே என் இடத்திற்கு வந்தான்.
“எல்லாரும் அத கொண்டு வாங்க....”
கேக் வந்தது.
நீண்ட நாட்கள் கழித்து சிரித்தேன். “ஸ்ரீ...உங்களுக்கு இது கூட தெரியுமா..?”
“எது ..?!”
“அதான் இப்போ எதோ ஒன்னு வாயில செஞ்சீங்களே.”
மீண்டும் சிரித்தேன்.
எல்லோருக்கும் நன்றி சொன்னேன்.
“தோடா..நன்றிக்குதான் இவ்வளவும் செஞ்சோம்னு நினைக்கிறீங்களா..? உங்களுக்கு சின்ன மீனு போட்டு, பெரிய மீனு பிடிக்கிற வித்தை தெரியுமா..?”
“அப்டீனா..?”
“பசங்களா...கொஞ்சம் சொல்லுங்கப்பா..”
“என்ன ஸ்ரீ இது கூட தெரியாம..ஆமா நீங்க வெஜ்ஜா..இல்ல நான்-வெஜ்ஜா..?”
எல்லொரும் வெளியே சென்று சாப்பிட்டோம். திரும்ப வரும்பொழுது எல்லோருடய வீடு பற்றியும் விசாரித்தேன். நாந்தான் கடைசியாக இறங்குவேன் என தோன்றியது.
அந்த பயம் என்னை கவ்விக்கொண்டது. ‘என்ன செய்வேன்’? எல்லொரும் ஒவ்வொருவராக இறங்கினார்கள். வண்டி நிற்பது போல தோன்றினால் நாமும் கீழே இறங்கிவிடலாம்.
“என்ன ஸ்ரீ பலமான யோசனை..?”
“ம்ம்...ஒன்னுமில்ல முரளி..”
“இருட்டு பார்த்தா பயமா..?”
“அதெல்லாம் இல்ல முரளி”
“நான் உங்கள்ட ஒன்னு கேட்கலாமா..?”
“என்ன முரளி..?”
“நேரடியா விசயத்துக்கு வரேன். நான் உன்ன காதலிக்கிரேன் ஸ்ரீ....”
“என்ன சொன்னீங்க..?”
அதற்கு பிறகு இருவரும் ஒன்றுமே பேசவில்லை. என் விடுதி வந்தது.
முரளி பேசினான்....”அப்பா... இப்போ பயம் இல்லாம வந்தீங்களா..? “
“என்ன சொல்றீங்க முரளி?”
“எங்கடா இவன் நம்மள லவ் பண்றானோன்னுங்ற நெனப்புல, மத்ததெல்லாம் மறந்து போச்சா..?”
“அப்போ...?” சிரித்துவிட்டேன்.
என்னை கேட்காதவன் போல், “என்ன இதுக்காக அவசரபட்டு என் காதல சொல்ல வேண்டியதா போச்சு..என் பிறந்தநால்ள சொல்லலாம்னு நெனச்சிருந்தேன். உன் பிறந்தநாளுக்கு சொல்லிட்டேன்.”
நான் அவனை முறைத்தேன்.
“நாளைக்கு ஆபிஸ்ல பாக்கலாமா..?” கார் பறந்தது.
அடுத்த தினம்.
அவன் இடத்திற்கு சென்றேன்.
“உங்கள்ட கொஞ்சம் பேசனும்..”
அலுவலக உணவகம் சென்றோம்.
நான் தொடங்குவதரற்குள் அவன், “உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா..? நேத்துதான் காதல சொன்னென், கனவுல வந்து எப்ப கல்யாணத்த வச்சிக்கலாம்னு இப்டியா தொல்ல பன்னுவ..? எனக்கு கொஞ்சம் டயம் குடும்மா..”
நான் மீண்டும் முறைத்தேன்.
“இப்ப என்னடான்னா ஆபிஷ் வந்த உடனே இங்க கூட்டிட்டு வர...காதலன் மேல ஆசை இருக்கலாம்..அதுக்காக இப்டியா..?”
“முரளி...உங்கள்ட நான் கொஞ்சம் சீரியசா பேசனும்..”
“ம்ம்..சொல்லு ஸ்ரீ..”
எல்லாம் சொன்னென்.
“எப்போ கல்யாணம் வச்சுக்கலாம்..?”
“என்ன முரளி....நான் சொன்னதெல்லாம் கேட்டப்புறம்....”
“உனக்கு ஆட்சேபனை இல்லன்னா அதே ஆகஸ்ட் 8 வச்சிக்கலாமா..?”
“முரளி எல்லாம் புரிஞ்சுதான் பேசுறியா..?”
“என்ன தேவயில்லாம சீரியசான ஆளா ஆக்குற நீ......சரி நீ உடம்பால கெட்டுபொய்ட்ட....உன் மனசு உண்டதானே இருக்கு...அத யாரும் ஒன்னும் பண்ணிடலயே..? எனக்கு உன் உடம்பு வேணாம்...உன் மனச மட்டும் கொடு.. சரியா..? இன்னும் ஒன்னு சொல்லவா...எனக்கு இந்த விசயம் எல்லாம் எப்பவோ தெரியும்."
எனக்கு பேரதிர்ச்சியாய் இருந்தது.
"உன்ன பார்த்த உடனே நான் உன்ன காதலிக்க ஆரம்பிச்சுட்டேன். சரி மொதல்ல உங்க வீட்ல போய் பேசிடுவோம்னு உன் பைல புரட்டுனேன். உன் அட்ரஸ் எடுத்து உங்க வீட்டுக்கு போனேன். உன் தையிரத்த, தன்னம்பிக்கைய தெரிஞ்சுக்கிட்டேன். அப்பதான் உன்ன நிறைய காதலிக்க ஆரம்பிச்சேன்.எத்தன பேருக்கு வரும் இந்த துணிச்சல்...நேத்து உன் பயம் போக நான் ஒன்னு சொன்னேன்..நீ கார் இறங்குர வரை பழச பத்தி நெனைக்கல....அதே மாதிரி அந்த சம்பவம் முழுக்க நீ மறக்கனும்னுதான் கல்யாணத்த கூட அதே நாள்ல வச்சிக்கலாம்மன்னு கேட்டேன்”
என் கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது.
முரளி கோவிலுக்குள் வந்தான். அய்யர் எல்லாம் தயார் செய்துவைத்திருந்தார்.
முரளி என்னிடம், “என்ன ஸ்ரீ தேதி நெனச்சு கண் கலங்குரியா..?”
“ஆமா....ஆனா பழைய தேதி நென்னசில்ல, புதுசு நெனச்சு...”
முரளி முகத்தில் ஆனந்த ரேகைகள்.
அய்யர், “தம்பி, வீட்ல போய் காதல் பண்ணலாம். இப்போ தாலிய கட்டுடா என்றார். மாங்கல்யம் தந்துனானே இருக்கா உங்க போன்ல”
ப்ரேம், “இருக்கு சாமி என்று....ரஹ்மானின் ‘மாங்கல்யம் தந்துனானே’ அலைபேசியில் போட்டான்.
Thursday, October 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
I liked it...............
தம்பி கதை சூப்பர்!
முதன்முதலாய் ஒரு பெண்ணை மையபடுத்தி எழுதியிருக்கிறாய். பெண்ணாய் கதை சொல்லுதலும் நன்றாகவே வந்திருக்கிறது.
நடை அருமை. ஒரு short film -க்கான script ready
கதை ஆரம்பத்திலிருந்த detailing இன்னும் சில இடங்களில் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது
தலைவா...
உன்கிட்ட நெறைய எதிர் பாக்கறோம்....
vocabulary அனந்த விகடன் ஸ்டைல்-ல இருக்கு ....
அதை எப்பிடியாவது மாத்து...
கதைக்கரு நல்லா இருக்கு...
வாழ்த்துக்கள்!
மிக அருமையான கதை...மீண்டும் ஆகத்து 8 க்கே திருமணம் என்பது மிகவுன் அழகான சிந்தனை.
"நேத்து உன் பயம் போக நான் ஒன்னு சொன்னேன்..நீ கார் இறங்குர வரை பழச பத்தி நெனைக்கல....அதே மாதிரி அந்த சம்பவம் முழுக்க நீ மறக்கனும்னுதான் கல்யாணத்த கூட அதே நாள்ல வச்சிக்கலாம்மன்னு கேட்டேன்” அருமையான வார்த்தை தேர்வு..
Heart touching story also...
தொடரவும், வாழ்த்துகள்...
kadhai nalla iruku..
but somehow i ws able to guess wat will be next..andha ponnuku nadantha kodumai,murali-ku ellame munadiye therinchadhu..
somehow i was able to find this is wat is going to happen....:-))))
Kadhai sooper.. Nice story line.. If you had detailed description in places like office, the environment and the feelings in the end, It would have been still better.
Post a Comment