Monday, September 29, 2014

ஜீவா

Share |
திரைப்படங்களில் நிதர்சனம் அல்லது யதார்தத்தை பற்றி பேசும்பொழுது எதிர்மறை முடிவுகள் இயல்பானது. அப்படியான நிதர்சன முடிவுகளில் அந்த முடிவை தாங்கும் கதாபாத்திரத்தோடு அந்த கதாபாத்திரம் பட்ட கஷ்டங்களும் முடிவுக்கு வந்துவிடும். அப்பொழுது உண்மையான உழைப்புக்கான பலன்?

மேலே சொன்ன 2 விசயங்களையும் மிக அழகாக தாங்கி வந்துள்ள படம் ஜீவா. சுசீந்திரன் இயக்கத்தில் இமான் இசையில் விஷ்ணு, ஸ்ரீ திவ்யா, லஷ்மண் நாராயண், சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வயது வித்தியாசம் இன்றி கிரிக்கெட மட்டையை தொட்ட எவருக்கும் இந்த படம் பிடிக்கக்கூடிய வாய்ப்புண்டு. குறிப்பாக சிறு வயதில் தெரு கிரிக்கெட்டில் துவங்கி நாமும் ஒரு நாள் பெரிய கிரிக்கெட்டராக வருவோம் என்று ஏதாவது ஒரு தருணத்தில் நினைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த படம் பிடிக்கும்.


ஜீவாவாக வரும் விஷ்ணுவிற்கும் கிரிக்கெட் மீது தீராத காதல். சச்சின் மேல் மற்றவர்கள் கொண்ட பற்று அவரையும் கனவை நோக்கி ஓடச் செய்கிறது. அந்த கனவிற்கு பெரிய துணையாக தன் சொந்த அப்பா இல்லாவிட்டாலும், அவனின் பக்கத்து வீட்டு அருள் அப்பா அதற்கு பள்ளி காலம் தொட்டு துணையாக இருக்கிறார். பள்ளி கால காதலி ஜென்னியாக ஸ்ரீ திவ்யா - சென்னையில் படிக்கும் மாணவியின் குறும்புகளோடு. பள்ளி குறித்த காதல் காட்டப்பட்டிருந்தாலும், தங்கள் பெற்றோரின் வார்த்தைக்கு ஜென்னி மதிப்பு கொடுத்து காதலை துறக்கும்போது ஈர்க்கிறார். ஆனால் அதே காதல் விஷ்ணு மனதில் ரணமாகிறது.

ஒரு விசயத்தை மறக்க இன்னொரு நல்ல விசயம் தேவை என்ற அடிப்படையில் ஜீவாவின் அப்பா அவனின் தீவிர கிரிக்கெட் பயிற்சிக்கு சம்மதிக்க, அதற்கு பிறகு வரும் கிரிக்கெட் வளர்ச்சி, பயிற்சி, கிரிக்கெட் விளையாடுபவர்களுக்குள் வரும் ஈகோ சண்டைகள், Team work, காதல், நட்பு, கலாய்ப்புகள்தான் பெரும்பாலான படம். சிரிப்பு மூட்ட சூரி.

கிரிக்கெட்டின் உச்ச கட்டத்தை அடைவதற்கு ஒவ்வொருவரும் கடக்க வேண்டிய பாதை மற்றும் Process சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது. அந்த உச்சத்தை அடைய ஜீவா மற்றும் மற்றொரு கிரிக்கெட்டர் ரஞ்சித் ஆகிய இருவருக்கும் தகுதி, திறமை இருந்தும், நம் நாட்டின் சாபக் கேடான சாதி அரசியல் இவர்களை தோற்கடிக்கிறது.'வாய்ப்பு வழங்கப்படாமலேயே இவர்கள் தோற்கும் நிலைமையும் வருகிறது.

பள்ளி மாணவனாக ஜீவாவை பார்ப்பது கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் படம் முழுக்க சிறப்பாக நடித்துள்ளார். இன்னொரு முறை சரியான படங்களை தேர்வு செய்து நடித்துள்ளதிலும் ஜெயித்துள்ளார். பள்ளி காதலியாக ஜீவாவை காதலிப்பதும், பின்னர் அவரை விட்டு விலக நினைப்பதும் என ஸ்ரீ திவ்யாவிடமும் சிறந்த நடிப்பு. ரஞ்சித்தாக வரும் லஷ்மண் நாராயண் கிரிக்கெட்டராகவே தெரிகிறார். தோற்கும்போது காட்டும் வலியில் ஈர்க்கிறார். அவர்களை தாண்டி ஜீவாவின் அப்பா, சார்லி, ரஞ்சித் நண்பர்கள், 'கதற கதற காதலிக்கும்' பி.பி.சேகர், சிறு வயது ஜீவா என அனைவருமே தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளார்கள்.


இமானின் இசையில் 'ஒவ்வொன்றாய் திருடுகிறாய்' மற்றும் 'ஒருத்தி மேலே' சிறப்பு. ஆனால் ஒன்று இளையராஜாவையும், மற்றொன்று பரத்வாஜையும் ஞாபகப்படுத்துகிறது.

மதியின் ஒளிப்பதிவு பாராட்டுக்குரியது. 'ஒவ்வொன்றாய் திருடுகிறாய்' பாடலில் வரும் மிக சாதாரண அமைவிடங்களை வித்தியாசமாய காட்டியது ஆகட்டும், கிரிக்கெட் போட்டிகளை படம் பிடித்தது ஆகட்டும், இல்லை கடைசியில் வரும் பிரம்மாண்ட 'IPL' போட்டி போன்ற ஒன்றை காட்டியதாகட்டும் மிக நிறைவான பணி.

சுசீந்திரன் - இப்படிபட்ட ஒரு கதை களத்தை தேர்வு செய்ததற்கும், துணிச்சலாக கிரிக்கெட்டில் நடக்கும் ஜாதி அரசியலை பேசியதற்கும் மனப்பூர்வ வாழ்த்துக்கள். உறவுகளை கையாள்வதில் அவர் ஒரு வித்தகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். முதலில் காட்டப்படும்பொழுது தேவையற்ற டாஸ்மாக காட்சியிலும் பின்னர் ஒரு நெகிழ்வை கொண்டுவருகிறார்.வாழ்த்துக்கள் சுசீந்திரன்.

நான் முதலில் சொன்னதுபோல தமிழ்நாட்டில் இருக்கும் அநேகமானவர்கள் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்புள்ளது. இந்த படத்தை நிச்சயம் பார்க்க வேண்டியவர்கள் பார்த்து இதனால் ஒரு சிறு மனமாற்றம் ஏற்பட்டாலும் அதுவும் ஒரு வெற்றியே.

0 comments:

Post a Comment