Tuesday, September 2, 2014

கதை - 15

Share |
மதுரை எனக்கு புதிதில்லை என்றாலும் தாத்தனேரியின் உட்சாலைகளில் நான் இதுவரை சென்றதில்லை. கோரிப்பாளையத்தில் வெகு நேரம் பேருந்திற்காக காத்திருந்த பிறகுதான், அந்த நிறுத்தத்திலிருந்து ஷேர் ஆட்டோ மட்டுமே செல்லும் என்று தெரிந்துகொண்டேன்.

அருள்தாசபுரம் போகுமா?”

ஃபாத்திமா காலேஜ் வரைக்குமே போகும். நீங்க முன்னாடி உட்காருங்க சார்என்று டிரைவர் ஃபாத்திமா காலேஜ், ஃபாத்திமா காலேஜ் என் கூவினார். பின் இருக்கையிலும், அதற்கு கீழும் ஏற்கனவே மொத்தம் 6 பேர் அமர்ந்திருந்தார்கள்.

வண்டி கிளம்பியது.

அங்க பெரியசாமி கோனார் தெரு எங்க இருக்குன்னு தெரியுமா?”

அருள்தாசபுரத்துல இறக்கிவிடறேன். அங்க போய் கேளுங்க சார்

அன்று விநாயகர் சதுர்த்தி. நான் இறக்கிவிடப்பட்ட இடத்தில் இருந்த விநாயகர் சிலைக்கு பக்கத்தில் அன்னதானம் சிறப்பாக நடந்தது. விநாயகருக்கு காவலாக நின்ற ஒரு பெண் போலீசிடம், பெரிய கோனார் தெரு குறித்து கேட்டேன். அவர் அறிந்திருக்கவில்லை.

வேற யார்டயாவது கேளுங்கஎன்று சொல்லி முடிக்கும்முன் அங்கு வந்த இன்னொரு காவலர் விநாயகரின் சிலைக்கு பக்கத்தில் அமர்ந்து சட்டியில் ஏதோ பிசைந்துகொண்டிருந்த ஒருவரை காட்டி அவரிடம் கேட்க சொன்னார். அவர் வழி சொல்ல நான் அந்த இடத்தின் எதிர்திசை நோக்கி நடந்தேன்.

அது ஒரு பெரிய வீதியாக இருந்தது. வழியில் நின்ற இரண்டு இளைஞர்களிடம் வழி கேட்டேன். மேலும் அதே வீதியில் நடக்க சொன்னார்கள். நடந்தேன். கொஞ்ச தூரத்தில் இருந்த பலகை அய்யனார் முதல் தெருஎன்றது, அடுத்த தெரு, ‘அய்யனார் 2வது’. ஒரு வீதியில் இருந்து வெளியே வந்த பெண்மணி ஒருவரிடம் பெரிய கோனார் தெரு குறித்து கேட்டேன். நான் வந்த திசையில் இடது பக்கமாக சென்ற தெரு ஒன்றின் வழியாக போக சொன்னார்.

தங்கையிடமிருந்து அழைப்பு வந்தது. அங்கதான்மா போயிட்டு இருக்கேன். போயிட்டு கூப்பிடறேன்.

அந்த தெரு வழியாக சென்று மீண்டும் விசாரித்தேன். இடது பக்கம் தெருவாகவும், வலது பக்கம் வீடுகளாகவும் இருந்தது. முதல் இடது பக்க தெருவில் பெரிய கோனார் தெற்கு-வடக்கு தெரு என்றிருந்தது. நான் வந்த தெருவிலேயே நின்று மீண்டும் விசாரித்தேன். தெற்கு-வடக்கு என குறிக்கப்பட்டிருந்த தெருதான் 2வது வீதி என்றார்கள்.

ஒரு நான்கு வீடுகளுக்கு தள்ளி இருக்கும் ஒரு வீட்டில் மீண்டும் விசாரித்தேன். என்ன நம்பர் என்றான் வெளியே வந்த இளைஞன் ஒருவன்.

137 இங்க வராதே....இது முதல் தெரு, நீங்க பக்கத்தில் இருக்க தெருல போய் கேளுங்களேன்என்றான்.

மீண்டும் நான் வந்த தெருவுக்கு வந்தேன். அடுத்த இடது புற வீதிக்கு நடந்தேன். ஒரு சின்ன சந்து வந்தது. யோசித்துகொண்டிருக்கும் பொழுதே என் பின்னால் இருந்து ஒரு பெரியவர், “இந்த சந்துதான்...உள்ள போய் கேளுங்கஎன்றார். அந்த சந்து இன்னொரு வீதிக்கு என்னை இட்டு சென்றது. ஒரு பக்கம் நான் பார்த்த வீட்டு எண் 124கவும், அதன் எதிர் வீடு 142ஆகவும் இருந்தன. இன்னுமொரு 10 வீடுகளுக்கு மேல் இந்த வீதியில் இருக்கும். அப்பொழுது அவனை பிடித்துவிடலாம்.

129, 130, 131,132, 133, 134ல் அந்த வீதியின் வீடுகள் முடிந்து ஒரு சின்ன 4 முனை சந்திப்பிற்கு நான் வந்தேன். 4 பக்கமும் சென்று பார்த்தேன். 135 தென்படவில்லை. நேர் எதிரில் தன் பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்த ஒரு அம்மாவிடம் கேட்டேன். அவரும் என்னைப் போலவே சுற்றி சுற்றிப் பார்த்தார்.

என்ன பேர்?” என்றார்.

ரமேஷ். டிராவல்ஸ்-ல வேல பாக்குறாப்ல.

வண்டி ஓட்றார்..?”

இல்ல பஸ்-ல டிக்கெட் போட்டு ஏத்துற வேல..

என்னை 131 வீட்டை காண்பித்து அங்கு போய் கேட்க சொன்னார். அவுங்க வீட்ல வேந்தான் ஓட்டறாங்க.

நான் தேடி வந்தவன் வேன் ஓட்டுனர் இல்லை என்றாலும் விசாரிக்கலாம் என சென்றேன். அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.

4 முனை சந்திப்பிற்கே வந்தேன். அந்தம்மா அங்குதான் இருந்தார். என்ன அவருக்கும் தெரியலயா என்றார்?”

இடது புற சாலையிலேயே சென்றேன். விநாயகனே..வினை தீர்ப்பவனே...பாடல் மிகுந்த சத்தத்தோடு ஒலித்தது. வீதியின் கடைசியில் ஒரு பெட்டிக்கடை இருந்தது. ஒரு வயதானவர் இருந்தார். என்ன தம்பி பேரு?”

அவருக்கும் தெரிந்திருக்கவில்லை.

ஒரு பாடல் முடிந்து இன்னொரு பாடல் துவங்கியது. சத்தம் வந்த திசை நோக்கி பார்த்தேன். கோவில் பக்கத்தில்தான். அதுதான் இவ்வளவு சத்தம். எதிரே ஒரு பெரிய வீடு இருந்தது. அந்த சுவரை உற்றுப்பார்க்கையில் 137 என்பது மெலிதாக தெரிந்தது. பலர் வசிக்கும் ஒரு பெரிய வீடு அது. சின்னசின்னதாய் கீழே 5 வீடுகள். மேலே எத்தனை என தெரியவில்லை.

இடது பக்கம் இருந்த வீட்டில் மூடர் கூடம்படம் பார்த்துக்கொண்டு ஒருவர் படுத்திருந்தார். நான் இருமுறை அழைத்த பின்தான் என்னை பார்த்தார். எழுந்து அமர்ந்தார். வெளியே வரவில்லை.

இங்க ரமேஷ்னு...

இங்க அப்டி யாரும் இல்லையே....என்ன வீதி?”

நான் சொன்னேன்.

இல்ல...இது முதல் வீதி.....நீங்க 2 வது வீதிக்கு நேரா போகணும்.

வெளியே வந்து கடைகாரரிடம் விசாரித்தேன். அவருக்கும் தெரியவில்லை. ஆள் ஒல்லியா கறுப்பா இருப்பானுதானே சொன்னீங்க என மீண்டும் உறுதிபடுத்திக்கொண்டார். ஒரு சின்ன பெண் ஒருத்தி கடைக்கு வந்தாள். எங்களை கவனித்திருப்பாள் போல.

தாத்தா ரமேஷ்னு கறுப்பா ஒருத்தர் இருந்தார். அவரு இப்போ அந்த வீதில இருக்காருஎன்று வளைத்து கை காண்பித்தாள். தாத்தா எந்த பெண்ணிடம் அதுவா...அங்கேயா..” என பல கேள்விகள் கேட்ட பின், “தம்பி..நீங்க நேரா இந்த ரோடுல போங்க..அப்புறம் இடது புறமா திரும்புங்க. அங்க போய் 2ம் நம்பர் ரேசன் கடை எங்கன்னு கேளுங்க...அது பக்கத்துல இருக்கிற வெள்ளை வீடுதான் பாப்பா சொல்ற வீடு”.

மீண்டும் நடந்தேன். ரேசன் கடைக்கு முன் இருந்த ஒரு கடையில் சில இளைஞர்கள் இருந்தனர். அவர்களிடம் அவன் குறித்து விசாரித்தேன். முதலில் பிடிபடவில்லை அவர்களுக்கு. பின் அவர்களுல் ஒருவன் டேய், கோனார கேட்குறார்னு நினைக்கிறேன்என்றான். பின் அவர்கள் ஒரு 2 வீடுகள் தள்ளி இருக்கும் டீ கடையை காண்பித்து அங்கு சென்று கேட்க சொன்னார்கள்.

டீ கடையில் சுமாரான கூட்டம். விசாரித்தேன்.

டீ ஆத்திக்கொண்டே அவர் ரமேஷ் அப்படின்னு யாரும் இல்லையேஎன்றார். ட்ராவல்ஸ் விவரங்கள் சொன்னேன். அவன் முன் இருந்த முகவரி, வீடு அடையாளம் யாவும் சொன்னேன். திடீர் என, “மதுரையா?” என்றார்.

ஆமா...மதுரதான்...மதுர ரமேஷ்....அவன் ஊர் பேர சேர்த்து அப்படி வச்சிருக்கானு நெனச்சேன். அவன் பேரே மதுரயா..?”

சொல்லுங்க..என்ன விசயம்என்றார். அப்படியே போன் எடுத்தார்.

அவன தெரியுமா..எதும் சொந்தமா என்றேன்.

அவன் அண்ணன்தான் நான்”. என்றார். போன் அதற்குள் அடித்திருந்தார். டேய் மதுர. மதுர....” “ஒரே சத்தமா இருக்கு..ஒண்ணும் கேட்கல
மீண்டும் முயற்சித்தார். அவன் எடுக்கவில்லை. காதில் போனை வைத்துக்கொண்டு இடையில் நான் வந்த விசயம் கேட்டார். நான் சைகையில் போன் தொடர்ந்து முயற்சிக்குமாறு சொன்னேன். அவனை பிடிக்க முடியவில்லை.

வேற என்ன விசயம்..பணம்தான்...

எவ்வளவு?”

25,000....என்ட்ட வாங்கியிருந்தா பரவாயில்ல...பிராடு பய பொய் சொல்லி என் தங்கச்சிகிட்ட வாங்கியிருக்கான். போன் பண்ணா எடுக்கிறதில்ல
அவன் போன் எடுக்கவில்லை. நீங்க ட்ரை பண்றீங்களா?”

அவன் நிச்சயம் எடுக்கமாட்டான். இப்ப எங்க இருப்பான்?”

நீங்க சொல்லிதான் அவன் டிராவல்ஸ் இருக்கிறதே தெரியும்...இந்த கடைக்கு ஒரே ஒரு தடவ வந்திருக்கான். அதுவும் வேற ஒருத்தர கூட்டிகிட்டு வேற சோழியா...அவன் வீட்டுக்கு நான் அவன் பொண்டாட்டி வலகாப்புக்கு மட்டும் போனேன்.கொஞ்சம் இடைவெளி விட்டு இப்போ அது நடந்தே ஒரு வருடம் ஆச்சே. ஆனா வீடு இங்க நிச்சயமா வரல

வீடு நிச்சயம் இங்கில்லை எனவும், நான் முன்னர் பார்த்த வீடுதான் தான் கடைசியாக வலகாப்பிற்கு சென்றபோது பார்த்த்து எனவும் சொன்னார்.
அவன் அவரின் சொந்த தம்பிதானா என கேட்க நினைத்தேன். கேட்கவில்லை.

மீண்டும் அதே வீட்டிற்கு வந்தேன். தாத்தாவிடம் அவன் நிஜப் பெயர் சொன்னேன். அட மதுரயா......இந்த வீடுதான்.என்று உறுதி செய்தார்.

முன்னர் பார்த்த இடது புற வீட்டின் நபர் இப்பொழுது இல்லை. நேராக 4 வீடுகள் இருந்தன. இடது புற ஓரமான வீட்டை தட்டினேன். மதுரயா..?” என யோசித்தவர் ஓ....லாவண்யா வீடா?...இந்த அடுத்ததுக்கு, அடுத்த வீடு

ஆள் இல்லையா..?”

இல்ல உள்ள ஆள் இருக்காப்ல

க்ரில் கேட் திறந்திருந்தது. மெயின் டோர் மூடி இருந்தது. ஜன்னல் லேசாக திறந்திருந்தது. ஜன்னலை விலக்கி பார்த்தேன். ஸ்டீல் கட்டிலில் குப்புற படுத்துக்கொண்டு போன் பேசிக்கொண்டிருந்தான். ஜன்னல் கதவை பழைய நிலையிலேயே விட்டு, கதவை தட்டினேன். பாட்டு சத்தம் வேறு காதை கிழித்தது. 

3 முறை தட்டிய பிறகே கதவை திறந்தான். அதிர்ந்தான். உள்ளே நுழைந்தேன்.

நானாகவே கட்டிலின் பக்கத்தில் இருந்த ப்ளாஸ்டிக் சேரை இழுத்துபோட்டு அமர்ந்தேன்.

அவன் அதிர்ச்சி மீளவில்லை.

கொஞ்சம் தண்ணீர் கொண்டுவாங்க.என் தண்ணீர் என் பையில் இருந்தது.

கொண்டுவந்தான். கொஞ்சமாக குடித்தேன். கார்ப்பரேசன் தண்ணீர்.

அவனை முழுவதும் பார்த்தேன். ஒரு பழைய லுங்கி. 20 நாள் தாடி. மேல் சட்டை ஏதும் அணியாது ஒரு குடிகார பரதேசி போல காட்சியளித்தான்.

அப்புறம்..எப்படி இருக்க ரமேஷ்?”

சார்....நல்லா இருக்கேன்”. வேகமாக போன் எடுத்தான். பேசினான். பாப்பாவ தூக்கிட்டு வீட்டுக்கு வா. மெட்ராஸ்ல இருந்து பாக்க வந்திருக்காங்க

“..................”

பரவாயில்ல. எழுப்பி தூக்கிட்டுவா

போனை துண்டித்தான்.

எப்படி போகுது

அதான் சார்..ஆபீஸ் ஆரம்பிச்சேன். சரியா பண்ண முடியல.மூடியாச்சுஇழுத்து இழுத்து பேசினான். வெளியில் பாடல் சத்தம் வேறு உள்ளே அப்பட்டமாக கேட்டது.

வண்டி வச்சிருக்கியா..?”

இருக்கு சார்...மாப்ளகிட்ட கொடுத்துவச்சிருக்கேன்

பணம் என்னாச்சு?”

அவனுக்கு சரியாக கேட்கவில்லையா இல்லை கேட்காததுபோல் நடித்தானா என தெரியவில்லை.

பாப்பாவ தூக்கிட்டு வருவாங்க சார். இங்கதான் அவுங்க அம்மா வீடு”.என்று வெளியில் கைகாண்பித்தான்.

நான் எதுவும் பேசவில்லை. இடையில் தங்கையின் அழைப்பு. அங்கதான் இருக்கேன். கூப்பிடறேன்.மீண்டும் அவன் கதை சொல்ல துவங்கினான். நான் இடைமறித்தேன்.

பாப்பாவ தூக்கிட்டு பணம் கொண்டுவராங்களாஎன்றேன் சத்தமாக.

இல்ல சார்...பாப்பாவ உங்ககிட்ட காமிக்க....

நான் பாப்பாவ பாக்க வரல. உங்கிட்ட பணம் வாங்க வந்திருக்கேன்

எப்படி சார் திடீர்னு என்னால கொண்டுவர முடியும்? அதுவும் 25,000...சத்தியமா முடியாது சார். என்ன நம்பி யாரும் கொடுக்கமாட்டாங்க...

உனக்கு இழிச்சவாயி யாரும் மாட்டாமளா போயிடுவாங்க..? கிளம்பு. என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது....சட்டைய மாட்றா..

சார்....ஒரு 3 நாள் மட்டும் டைம் குடுங்க சார்..நிச்சயம் கொடுத்திடரேன்.

என்ன பார்த்தா உனக்கு எப்படி தெரியுது?”

அப்போ இங்க stay பண்ணி வாங்கிகங்க சார்..?”

டேய்..என்ன என்ன வேலைவெட்டி இல்லாதவன்னு நினைச்சியா..? நான் இதுவரைக்கும் ரொம்ப பொறுமையா போறேன். ஒரு பொம்பளபுள்ள்கிட்ட நீ காசுகேட்டதே மொதல்ல தப்பு. அத பேசக்கூடாதுன்னு நினைக்கிறேன். இந்த நிமிசம் வரைக்கும் உன் மரியாதையே கெடுக்ககூடாதுன்னு நினைக்கிறேன்...வேணாம்.

Pant மாற்றிக்கொண்டிருக்கும்போதே அவன் மனைவி குழந்தையுடன் வந்தார். மனைவியின் கழுத்தில் தாலி தவிர வேறொன்றுமில்லை.

வாங்க...என்ற புன்னகையுடன் குழந்தையை என்னிடம் காண்பித்தார்.

தூங்கிட்டு இருந்தானா..?”

ஆமா....

எழுப்பாம விட்ருக்கலாமே.... 

இல்ல..நீங்க வந்திருக்கீங்கன்னுதான்....பரவாயில்ல நைட் தூங்கிக்குவான்

நடக்க ஆரம்பிச்சுட்டானா..?”

இல்லன்ணே...முயற்சி பண்றான்...ஆனா இன்னும் முழுசா எந்திரிச்சு நிக்கல...

குழந்தை அவன் அப்பனுடன் விளையாடியது. அவன் பாக்கெட்டுக்குள் எதையோ தேடியது. பாருங்க எல்லார் பாக்கெட்டிலும் இந்த மாதிரிதான் கையவிட்டு எதையாவது எடுத்திடறான்என்றாள் மனைவி. அவன் கணவனுக்கு மட்டும் கேட்பதுபோல் ஏதோ கேட்டாள். கட்டிலில் கிடந்த 2 பத்து ரூபாய்களில் ஒரு 10 எடுத்து மனைவியிடம் கொடுத்தான். எங்கம்மா போற..?” என்றேன்.

கலர் வாங்கண்ணே....

அதெல்லாம் ஒண்ணும் வேணாம்...வேண்ணா டீ மட்டும் போட்டுகொடு

அப்போ பால் வாங்கிட்டு வரேன்என்று கிளம்பினாள்.

நாங்கள் இருவரும் பேசவில்லை. பாடல் சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. 2 நிமிடங்களில் அவன் மனைவி வந்தாள். கேஸ் அடுப்பு இல்லை. மண்ணெண்ணைய் அடுப்பில் டீ தயாரானது. மூவரும் குடித்தோம். அவன் மெல்ல பருகினான். அவனை அழைத்தேன். போயிட்டு வர எவ்வளவு நேரம் ஆகும்?” என்றேன். வேகமாக சட்டையை மாட்டினான். பதில் இல்லை.

சரிம்மா, நீ கிளம்பு....நான் வெளிய போகணும்.

ஏங்க...இன்னும் சாமி கும்பிடலையே...

கிளம்புன்னா..கிளம்பு....கேள்வி கேட்காத..

அவள் வேகமாக சென்று பின் கதவை சாத்தினாள்.

சாத்த வேண்டாம்....சார் இருப்பாரு...சார்..நீங்க டிவி பார்த்திட்டு இருங்க சார்.....குழந்தைய தூக்கிக்க.என்றான்.

நான் குழந்தையை தூக்கினேன். 

உங்க அம்மா வீடு எங்கம்மா...?” என்றேன் அவனை பார்த்துக்கொண்டே.

இங்க இருந்து 4 வீடு தள்ளிண்ணே”.

குழந்தையோட நான் கொஞ்சம் விளையாடிட்டு இருக்கேன். அழுதா நானே தூக்கிட்டு வரேன்....என்ன சரிதானே ரமேஷ்?” என்றேன். அவன் அதிர்ந்தான்.

அவன் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டது.

சார்....நான் சீக்கிரம் வந்திடரேன் சார்...

கவலைபடாம போயிட்டு வாங்க மதுர சார்என்றேன்.

குழந்தையை பார்த்துக்கொண்டே வெளியேறினான்.

குழந்தையை கட்டிலில் இறக்கினேன். இவனுக்கு யார் இவ்வளவு தொகையை தருவார்கள். இவன் மீண்டும் வீட்டிற்கு வருவான் என்பது என்ன நிச்சயம்? வீட்டை சுற்றி பார்த்தேன். கட்டில் இருந்த அந்த ஹால், அடுப்பு இருந்த சமையலறை, குளியலறை, கழிப்பறை. அவ்வளவே. கட்டிலின் பக்கம் ஒரு இரும்பு பீரோ. கதவை சாத்தினேன்.

பீரோவை திறக்கலாமா என் எண்ணினேன். கதவை மீண்டும் திறந்து ஒரு முறை பார்த்தேன். எனக்கு வீட்டை அடையாளபடுத்திய பக்கத்து வீட்டு அம்மா க்ரில் கேட்டை கடந்து சென்றார். கதவை மூடினேன். பீரோவை திறந்தேன். ஒரு நொடி கட்டிலை பார்த்தேன். கட்டிலின் கம்பியையும், சுவரையும் பிடித்து குழந்தை எழுந்து நின்றான். நான் சுதாரிப்பதற்குள் அடுத்த அடி எடுத்துவைக்க அவனை பிடிக்க ஓடினேன். நல்ல வேலையாக அவனை பிடித்துவிட்டேன். ஒரு துளி கண்ணீர் என் கண்களில் கோர்த்துக்கொண்டது. குழந்தை பயத்தில் உரைந்து போனது. சத்தமில்லை. என்னடா நீ, இப்படி கீழே விழ பார்க்கலாமா..?” என்றேன். பீரோவின் கதவுகள் மெல்ல திறந்து அந்த பீரோவின் கண்ணாடியில் என் முகம் தெரிந்தது. என்னை ஒரு வித பயத்தோடு குழந்தையும் பார்த்துக்கொண்டிருந்தது.


0 comments:

Post a Comment