இப்படி நடப்பது இது 2வது முறை. முதல் முறையும் அதே இடத்தில்தான் நடந்தது. அன்று நடந்தது மாதிரியே பொதுக் கூட்டத்தின் முடிவில் ஏதோ ஒரு கேள்விக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கும்பொழுது பாதியில் அப்படி ஆனது. இன்றும் பாதி பதிலில் அப்படி ஆனது. மிகக் குறைந்த நொடிகளே அப்படி இருந்ததால் அதனை யோசிப்பதற்கான நேரம் என சொல்ல முடியாது. யோசனை என்று இருந்திருந்தால் ‘வந்து..வந்து...’ என வாய் சொல்லிக்கொண்டேயிருந்திருக்கும்
“ஆம், உண்மைதான் ‘வந்து..வந்து’ என்று இழுப்பது ஒரு நல்ல பேச்சாளருக்கு அழகில்லை. அவர் பேச்சாளரே இல்லை. எப்படி நான் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் அனைத்திலும் பேச்சாளருக்கு அவர் பேசிய பிறகு கேள்வி-பதில் பகுதி இருக்கவேண்டுமோ அப்படித்தான் 'வந்து' பயன்படுத்துதல் கூடாது.”
ஆனால் அப்படி இழுக்காமல், எனக்கு நடந்தது மிக குறைந்த நொடிகள் மட்டும் இருந்ததில் ஒரு நன்மையும் இருந்தது. யாருக்கும் அது தெரியவில்லை. எனக்கு தெரிந்திருந்தாலும் புரியவில்லை.
தீவிரமாக யோசித்தேன். ஒற்றுமைகள் சரி. வேற்றுமைகள்..? முதல் தடவை நடந்தபோது இரவு 9 முதல் 10 மணிக்குள்....1 மணி நேரம்தான் பேச்சு. 9.30 தாண்டித்தான் நடந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் கேள்வி-பதில் நேரம்.
2வது தடவை 12 முதல் 12.30க்குள். அரை மணி நேரம்தான் பேச்சும், கேள்வி-பதிலும். அந்த இடைவெளியில் எப்பொழுது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்.
முதல் தடவை முக்கிய பேச்சாளர்கள் பேசிய பின்தான் நான் கடைசியாக பேசினேன். 2வது தடவை என்னைத் தவிர முக்கிய பேச்சாளர் யாரும் இல்லை. இல்லை அப்படித்தான் சொல்லிக்கொள்கிறார்கள்.
அது இருக்கட்டும். ஏன் அப்படி ஆனது? ஒரு சிகரெட் பற்ற வைத்தால் புரிய வாய்ப்புள்ளதா? எனக்கு அப்படி தோன்றவில்லை. அதைத் தவிர சிகரெட் புகைத்தும் வெகு நாளாகிவிட்டது.
மேலோட்டமாக பார்த்தால் அதனை நினைத்து நான் சிரிக்கலாம். கூட்டத்தில் கூட இது குறித்து பேசி, அதில் சில நன்மைகள் உண்டு என்று நகைச்சுவைக்கு சொல்லி கைத்தட்டல் வாங்கலாம். ஆனால் தீவிரமாக யோசித்தால்? அது தொடர்ந்திருந்தால்? நினைத்துப்பார்க்கவே பயமாக உள்ளது. அது தொடர்ந்திருந்தால், எங்கு நினைப்பார்ப்பது? அத்தோடு எல்லாம் காலி. வெகுகாலம் இல்லை. சில நிமிடங்கள் தொடர்ந்திருந்தாலே என் ஆட்டம் முடிந்திருக்கும்.
இதனை பற்றி யாரிடமாவது சொல்லலாம் என்றால் ஒரு பக்கம் பயம். எங்கே ஏதாவது தர்கா கூட்டி சென்று தாயத்தோ இல்லை பகவதி அம்மன் கோயில் கூட்டி சென்று பேயோட்டுவார்களோ என்ற பயம்.
இன்னொரு பக்கம் நாம் நகைப்புக்கு உள்ளாவாமோ என்ற நினைப்பு – ‘நடிக்காதடா’ என்ற நகைப்பு.
அது எந்த மாதிரி நிலை..? கஞ்சா அடித்து திரிவார்களே அந்த மாதிரி நிலையா..? கஞ்சா அடித்தால் கடைசியாக என்ன செய்துகொண்டிருந்தார்களோ அதைதான் செய்வார்கள் என கேள்விப்பட்டுள்ளேன். கடைசியாக சிரித்துக்கொண்டிருந்தால் சிரிப்பு, அழுகை வந்தால் அழுகை. உங்களிடம் சொல்வதில் என்ன? – நான் ஒரு முறை மரிஜூணா புகைத்துள்ளேன். நண்பர்கள் வீட்டில் விருந்து. விருந்து முடித்து அனைவரும் சுற்றி அமர்ந்து ஒரு பெரிய சிகரெட் எடுத்து பத்தவைத்து, ஒரு இழு இழுத்து அதற்கு அடுத்தவரிடத்தில் ‘pass’ செய்தார்கள். நானும் சிகரெட் என்று நினைத்து உறிஞ்சினேன். அடுத்தவரிடம் கொடுத்துவிட்டு இது என்ன என கேட்டேன். அப்பொழுதுதான் சொன்னார்கள். எல்லாம் ஒரு அனுபவம் என பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்த சுற்றில் நான் பங்கேற்கவில்லை. ஆனால் அன்று கஞ்சா குடித்த யாருக்கும் எனக்கு நடந்தது மாதிரி ஒன்றும் நடக்கவில்லை.
பின் எனக்கு ஏன் இப்படி நடந்தது? நடந்தது கூட பரவாயில்லை. இனி இது நடக்காமல் இருக்கும் என்று என்ன நிச்சயம். ஒரு முறை மட்டும் நடந்திருந்தால் பரவாயில்லை. இரண்டாம் முறையும் இப்படி நடக்கும்போதுதான் இதற்கான தீர்வு என்ன என நான் யோசிக்கிறேன்.
இதற்கு மருத்துவம் ஒரு தீர்வாக அமையலாம். ஆனால் நான் அதனை எப்படி விளக்குவேன்? தேவையில்லாமல் வேறு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டுவிட்டால்? அதுவும் வீட்டுக்கு தெரியாமல் எப்படி?
வீட்டிற்கு தெரிந்தால் கூட சமாளித்துவிடலாம். பொதுவில் தெரிந்துவிட்டால்? பின் எனக்கான கைத்தட்டல்? எனக்கான பாராட்டு? இல்லை. நிச்சயம் தெரியக்கூடாது. கைத்தட்டல்கள் இல்லை என்றால் கூட சமாளித்துவிடலாம். கல்லடி கிடைத்தால்? நமக்கு ஏதாவது ‘பட்டம்’ கட்டிவிட்டால்? இல்லை இதனை சரி செய்யாமல் இன்னொரு கூட்டம் இல்லை. யாராவது கூப்பிட்டால் ஏதாவது பதில் சொல்லி சமாளிக்கலாம். அங்கு சென்று அடிபடுவதை விட இது எவ்வளவோ மேல்.
யோசித்து யோசித்து பின் மண்டை வலிப்பது போல் உள்ளது. கொஞ்சம் தலை பயிற்சி செய்ய வேண்டும். தலையை இந்த பக்கமும் அந்த பக்கமும் மாற்றி, மாற்றி சுற்ற வேண்டும். இப்படித்தான் ஒரு முறை ஒரு மருத்துவர் யாருக்கோ சொல்லிக்கொடுத்ததை பார்த்தேன். நானும் இதனை அடிக்கடி செய்து பார்த்துள்ளேன். தலைக்கு ஒரு பயிற்சி. கை வலித்தால் ஒரு பயிற்சி. முதுகு வலிக்கு ஒரு பயிற்சி. எல்லா பிரச்சனைக்கும் ஒரு பயிற்சி. நானே எனக்குள் சிரித்துக்கொண்டேன். ஒரு யோசனையும் பிறந்தது. இவ்வளவு பிரச்சனைகளுக்கு பயிற்சி இருக்கும்பொழுது நம் பிரச்சனைக்கு பயிற்சி இருக்காதா? ஆனால் அப்படி ஒரு பயிற்சி உண்டா இல்லையா என எப்படி தெரிந்துகொள்வது? இணையம்.
ஆனால் என்ன என்று தேடுவேன்? புரியாத ஒரு பிரச்சனையை எப்படி விளக்குவேன்? பெருவிரல் நகம் வைத்து பற்களை நற நற என தேய்த்தேன். சுற்றும், முற்றும் பார்த்தேன். ஒன்றும் இல்லை. பின் மண்டை வலி ஜாஸ்தியானது. பயிற்சி துவக்கம்.
இந்த பக்கம் 10 முறை. அந்த பக்கம் 10 முறை. தூக்கம் வருவதுபோல் உள்ளது. எழுந்தபின் இது குறித்து யோசிக்கலாம்.
அவர் தூங்கிப்போனார். அவரை சுற்றிலும் எண்ணற்ற காகிதங்கள். ஒரு காகிதத்தில் ஒரு முடிவற்ற கவிதை. இன்னொரு காகிதத்தில் ஒரு நாடகத்திற்கான ஆரம்ப மேடை அலங்காரங்கள். இன்னொன்று சினிமா ‘script’என்ற ஆரம்பம் மட்டும். இன்னொரு காகிதத்தில் இந்த கதையின் தொடக்கம்.......
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
0 comments:
Post a Comment