Saturday, September 20, 2014

சிகரம் தொடு

Share |
தமிழ் திரைப்படங்கள் என்றால் 2 மணி நேரத்திற்கு அதிகமாக இருக்க வேண்டும் என்ற இலக்கணம் உடைக்கப்பட வேண்டும் என நினைக்கிறேன். 1 மணி நேரத்திற்குதான் தன்னிடம் கதை உள்ளது எனும்போது தேவையில்லாத நகைச்சுவை, பாடல்கள் ஆகியவை இடைச்செருகல்களாக தேவைப்படுகிறது. முதல் பாதியை எப்படியாவது ஓட்டிவிட்டு, Interval Block-ல் கதையை துவங்கிகொள்ளலாம் என்ற போக்கு பல படங்களில் தொடர்கிறது. ஆனால் முதல் பாதியில் இயக்குனர் நம்பும் காமெடி காட்சிகள் கைகொடுக்காத போது அவை மொத்த படத்திற்குமான ஒரு சறுக்கலாகவே இருக்கிறது. சத்யராஜ், விக்ரம் பிரபு, புதுமுகம் மோனல் கஜ்ஜார் ஆகியோர் நடித்து கடந்த வாரம் வெளியான 'சிகரம் தொடு' இந்த ரகமே.



முன்னாள் போலீசான, ஒரு போராட்டத்தை அடக்கும்பொழுது தன் ஒரு காலை இழந்த அப்பா, தன் மகனையும் போலீசாக உருவாக்கி தான் சாதிக்க நினைத்ததை மகன் மூலம் சாதிக்க துடிப்பதும், எந்த போலீஸ் வேலை தன் குடும்பத்தை சிதைத்ததோ, அந்த போலீஸ் வேலையில் எப்படியும் சேரக்கூடாது என்று மகன் முடிவெடுப்பதும்தான் ஒரு வரிக் கதை. ஆனால் அதை அப்பாவின் மனம் நோகாதவாறு செய்ய வேண்டும் என நாயகன் நினைக்கிறார். அவரின் 'லட்சியத்திற்கேற்ப' நாயகியும் அமைகிறார். அந்த லட்சிய குழப்பங்களில் சிறு பங்கு வகித்து, 2 பாடல்களுக்கும் வந்து போகிறார்.

ஆனால் எப்படியும் நாயகன் தன் அப்பாவிற்கு ஒரு பாதிப்பு ஏற்படும்பொழுது போலீசாக உருவாக வேண்டிய கட்டாயம் வரும் என்பது எளிதில் கணிக்ககூடிய கதைக்கரு. ( 'அன்புள்ள அப்பா' பாடல் இசையை கேட்டவர்களுக்கு அப்பா-மகன் அறிமுக காட்சியில் இருந்து வரும் இசையும் இதனை உறுதிப்படுத்தும்). அந்த பாதிப்பென்பது  ATM கொள்ளை ரூபத்தில் படத்தில் தொடர்ந்து வருகிறது.


ATM கொள்ளை குறித்து அறிவுப்பூர்வமான காட்சிகள் மட்டுமே படத்திற்கு பலம். முன்பு சொன்னது போல் முதல் பாதியில் காமெடியை கையில் எடுத்த சதீஷ் கடிக்கிறார். இரண்டாம் பாதியில் வரும் 'ஈரோடு' மகேஷ் எவ்வளவோ பரவாயில்லை. டாஸ்மாக கடை காட்டப்படாத படம் என்ற வகையில் ஆறுதல்.

விஜய் உலகநாதனின் ஒளிப்பதிவு மிகச் சிறப்பு - குறிப்பாக இந்தியா முழுக்க பயணித்து வரும் காட்சிகள் செம்ம. இமானின் இசையில் 'அன்புள்ள அப்பா' - யேசுதாசின் மென்மையான குரலில் 'பிடிக்குதே' சிறப்பு. 'டக்கு டக்கு' என்ற முதல் பாடல் காட்சிபடுத்திய விதம் வித்தியாசமாக இருந்தாலும், அந்த பாடலும், முதல் பாதியுமே எதற்கு என்ற கேள்வி எழுகிறது. முன்பு 'தூங்கா நகரம்' தந்த கவுரவ் இயக்கி நடித்துமிருக்கிறார்.

எல்லாம் சரி, இந்த படத்திற்கு 'சிகரம் தொடு'ன்னு எதுக்கு பெயர் வெச்சாங்க?

0 comments:

Post a Comment