Friday, September 12, 2014

கந்தக பூமிக்கு நம் கைமாறு என்ன?

Share |

சேவை பெறும் உரிமை பைக் பயணத்தின் போது ஒரு நாள் சிவகாசியில் ஜெய்கணேஷின் நண்பர் சக்தி அறையில் தங்கினோம். எந்த ஒரு ஊரிலும் இரவு உறங்கும்போது தரை சூடாக, வானிலை வெக்கையாக இருந்தாலும், விடிகாலை வேலையில் வானிலை மாறி தரை கொஞ்சம் ஜில்லாகும், குறைந்தபட்சம் சூடு தணிந்திருக்கும்.  24 மணி நேரமும் தரையின் வெப்பம் குறையாத ஊராக சிவகாசி இருந்தது. இந்த பகுதியின் சீதோஷன நிலைக்கு ஏற்றவாறுதான் வெள்ளைக்காரன் இங்கு பட்டாசு தொழிலை ஆரம்பித்தான் என்று சக்தி காலை டீ அருந்தும்பொழுது சொன்னார்.

சிவகாசி - பட்டாசு, அச்சு (பிரிண்டிங் குறிப்பாக Offset Printing), தீப்பெட்டி மூன்றிற்கும் பெயர் போனது. அச்சு பணி, தீப்பெட்டி பணியை விட பட்டாசு நம் வாழ்வில் கலந்த ஒன்று. எவ்வளவு விலை ஏறினாலும், எவ்வளவு வயதானாலும் ஏதாவது ஒரு வகையான பட்டாசு நம் உள்ளத்தை கவர்ந்திருக்கும். பிற்காலத்தில் சுற்றுப்புறத்திற்காக பட்டாசு வெடிப்பதை நிறுத்தியவர்கள் கூட ஏதாவது ஒரு சமயம் சிவகாசியில் தயாரான பட்டாசுகளை பயன்படுத்தியவர்களாகத்தான் இருப்பார்கள். 

எந்தத்திசையிலும் சிவகாசிக்கு உள்ளே நுழையும்பொழுதும், சிவகாசியைவிட்டு வெளியேறும்பொழுதும் நம் கண்களில் பட்டாசு கடைகள் மட்டுமே நம் கண்ணிற்கு படும். தீபாவளியை ஒட்டி விற்பனை சரி. வருடம் முழுவதும்? அங்கிருக்கும் ஒவ்வொரு கடையும் ஏதாவது ஒரு வெளி மாநிலத்திற்கோ அல்லது வெளிநாட்டிற்கோ பட்டாசுகளை தொடர்ந்து ஏற்றுமதி செய்துவரும்.

அப்படிப்பட்ட சிவகாசியும், பட்டாசு தொழிலும் தவறான காரணங்களுக்காகவும் செய்திகளில் அடிபடுவதுண்டு. சாவு எண்ணிக்கையை பொறுத்து அவை உள்ளூர் செய்தியாகவோ இல்லை உலக செய்தியாகவோ மாறும். ஆனால் ஒன்று நிச்சயம். ஏதாவது ஒரு இடத்திலாவது தினம் ஒரு அசம்பாவிதம் பட்டாசு தொழிலில் நடந்து வருகிறது.



1991 ஆம் ஆண்டு நடந்த விபத்தில் 39 பேர் இறந்ததும், ஜூலை 2009ல் 40 பேர் இறந்ததும், 2010 ஆம் ஆண்டு தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய சென்ற 7 அரசு அதிகாரிகள் இறந்ததும், ஆகஸ்ட் 2011ஆம் ஆண்டு 7 பேர் இறந்ததும்,  செப் 2012 40 பேர் இறந்ததும் நம் மனதில் நிற்கும் பெரிய சம்பவங்கள். இதை தாண்டி எத்தனையோ ஆயிரக்கணக்கான மக்கள், சிறுவர்/சிறுமியர் தினம் தினம் இறந்தோ அல்லது காயத்தாலோ பாதிக்கப்படுகிறார்கள், 3 நாட்களுக்கு முன் காரிசேரி கிடங்கில் விபத்து ஏற்பட்டு இறந்த இருவர் உட்பட.

ஒவ்வொரு முறை பெரிய விபத்து ஏற்படும்பொழுதும் இது ஒரு விவாத பொருளாக பேசப்பட்டு, அரசு அதிரடியில் இறங்கி உடனே பல கிடங்குகளை மூடுவதும், சட்டத்திற்கு புறம்பாக தொழில் செய்தவர்களை கைது செய்வது, பல தொழிற்சாலைகளுக்கு தங்களின் 'நிலையை' உயர்த்த காலக்கெடு வழங்குவதும் நாம் எப்பொழுதும் பார்த்து வரும் ஒன்று. இவையாவும் சரியாக இருந்தால் விபத்து நடக்க வேண்டிய தேவையேயில்லையே. இல்லை ஒவ்வொரு விபத்திற்கு பிறகும் ஏதாவது ஒன்றிரண்டு அரிதான விசயங்கள் மாறியிருந்தால் இத்தனை உயிர்கள் இழக்க வேண்டிய தேவையில்லையே.

பின் என்னதான் பிரச்சனை?

1) சிவகாசியில் இருக்கும் ஒவ்வொருவரும் மேற்சொன்ன 3 தொழிலில் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட்டிருப்பார்கள். அந்த தொழிலை தங்கள் வீட்டில் கூட செய்து வருவார்கள். குறிப்பாக பட்டாசு தொழிலும், தீப்பெட்டி தொழிலும் குடிசை தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வரும். 

2) பாரம்பரியம் என்பதை மீறி இதில் இன்று பயிற்சி இல்லாத எத்தனையோ பேர் இந்த தொழிலில் ஈடுபடுகிறார்கள். பாதுகாப்பு என்ற ஒன்றே அறியாதவர்கள்.

3) உற்பத்தி நிலையங்களில் இருக்கும் ஒரே மேற்பார்வையாளரே பல கட்டங்களை(Stages) கவனிக்க வேண்டிய கட்டாயம்.

4) ஒரே இடத்தில் சந்தைக்கு செல்ல வேண்டிய பட்டாசுகள், பட்டாசு தயாரிக்க தேவையான மூலப் பொருள், வெடி மருந்துகள் யாவும் வைக்கப்படுகின்றன.

5) ஒரே இடத்தில் அதிக அளவில் வேலையாட்கள்.

இவை எல்லாவற்றையும் மீறிய இரண்டு உண்டு - 1.  'சட்டமற்ற நிலை' (Lawlessness). (சட்டங்கள் இருக்கு ஆனால் இல்லை போன்ற நிலை) 2. பட்டாசு தொழில் ஈடுபடுவோரின் திறமைகளை நவீன தொழிலாக மாற்ற முடியாமல் இருப்பது.  

இதற்கு என்னதான் தீர்வு ?

லியுயங் - சீனாவின், ஏன் உலகத்தின் சிவகாசி என்று கூட சொல்லலாம்.  ஒரு காலத்தில் சிவகாசி சந்திக்கும் அத்தனை பிரச்சனைகளையும் சந்தித்து வந்த ஊர். இன்று தன்னுள் எல்லா மாற்றங்களையும் புகுத்திக்கொண்டு, தொடர்ந்து வரும் மாற்றங்களை உள்வாங்க காத்திருக்கும் ஒரு ஊர்.

பட்டாசு தொழிலில் 1400 ஆண்டுகள் வரலாறு கொண்டது லியுயங். 1875 ஆம் ஆண்டுகளில் ஜப்பான், கொரியா, இந்தியா, ஈரான், ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு பட்டாசு ஏற்றுமதி செய்து வந்தது. 1990களில் ஏற்பட்ட விபத்துகள் ஆகியவையால் 1998 ஆம் ஆண்டு முதல் பல குறைபாடுகளை, குறிப்பாக தொழில்நுட்ப குறைபாடுகளை கண்டறிந்தது. அதற்கு பிறகு லியுயங் மேற்கொண்ட அதிரடி மாற்றங்கள்

1) தொழில்துறை ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு
2) 10,000 சட்டத்திற்கு புறம்பான தொழிற்சாலைகளுக்கு தடை
3) தனக்கான ஒரு பாதுகாப்பு நிலை (Standard) உருவாக்குதல்
4) உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் ஒத்துழைப்போடு சிறந்த பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் கொண்ட பட்டாசுகளை கண்டுபிடித்தல்.



மேற்சொன்ன மாற்றங்களின் வெளிப்பாடாக இன்றும் லியுயங் பட்டாசு தொழிற்சாலைகளில் நடந்துவருபவை :

1) ஒவ்வொரு உற்பத்தி பிரிவும் தனித்தனியாக இயங்குதல்
2) கட்டுமானங்களை அதற்கேற்றார்போல் வடிவமைத்தல்
3) தொடர் பாதுகாப்பு பயிற்சி
4) பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல்
5) தொடர் கண்காணிப்பு.

இவற்றையெல்லாம் பின்பற்றிய பிறகும் சீன பட்டாசுகளை குறைவான விலைக்கு அவர்களால் விற்க முடிகிறது.

நாம் எங்கிருந்து துவங்குவது என்பதுதான் முதல் மற்றும் முக்கியமான கேள்வி. பதிலும் அதுவே - முதலில் இருந்து துவங்க வேண்டும். சிவகாசியை "முழுமையாக சுத்தப்படுத்துதல்" என்ற ஆரம்பப்புள்ளியும், லியுயங்கிற்கு போட்டியாக சிவகாசியை உருவாக்குவோம் என்ற கடைசி புள்ளியும் இதனை சாத்தியப்படுத்தும்.

ஒரு வருடத்திற்கு சிவகாசி பட்டாசுகள் உருவாக்கும் வருவாய் - 1200 கோடி. தீப்பெட்டியும், அச்சும் உருவாக்கும் வருவாய் - 800 கோடி. கந்தக பூமி தன் உயிர்களை பலியாக்கி நம்மை குஷிப்படுத்துகிறது. நாம் என்ன கைமாறு செய்யப்போகிறோம்?

3 comments:

Yaathoramani.blogspot.com said...

ஆழமான விரிவான அருமையான அலசல்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

மொழி said...

மிக்க நன்றி திரு.ரமணி.

Muthukumaran said...

A signature campaign should be done and sent to CM cell

Post a Comment